'இலவசங்கள்': தமிழ்நாடு போல பலன் அடைந்த ஒடிஷாவின் பின்தங்கிய பகுதி - பிபிசி கள நிலவரம்

- எழுதியவர், ஃபைசல் முகமது அலி
- பதவி, பிபிசி செய்தியாளர், ஒடிஷாவின் நுவாபாடாவில் இருந்து
- நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று காலாஹாண்டி
- ஒடிஷாவில் உள்ள காலாஹாண்டியின் மக்கள் தொகை சுமார் 16 லட்சம்.
- மக்கள்தொகையில் கால் பகுதியினர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
- ஒடிஷா அரசு மாநிலத்தில் சுமார் 60 ஏழை நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறுகிறது.
- மாநிலத்தில் பிஜு மக்கள் சுகாதார திட்டம் அமலில் உள்ளது. ஆயுஷ்மான் பாரத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை
- ஒடிஷா அரசு தனது வருவாயில் 23 சதவிகிதத்தை மானியங்களுக்காக செலவிடுகிறது.
- ஆந்திர பிரதேச அரசு தனது வருவாயில் 30 சதவிகிதத்தை மானியங்களுக்காக செலவிடுகிறது.
- பஞ்சாபில் மானியச்செலவு, வருவாயில் 45 சதவிகிதத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் அரசு 28 சதவிகித வருவாயை மானியத்திற்கு செலவிடுகிறது.
- நாட்டில் மானியம் வழங்கும் முதல் ஐந்து மாநிலங்களில் ஒடிஷாவும் உள்ளது.
- பிரதமர் மோதி ‘ரேவடி(இலவச)கலாசாரத்தை’ சாடி வருகிறார்.
- இலவச பொருட்களை விநியோகிப்பதால் மாநிலங்களின் கஜானா காலியாகி வருகிறது என்கிறார் மோதி.
- இலவச கலாசாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில காலமாக 'இலவச கலாசாரம்' பற்றிய விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோதி ஆரம்பித்து வைத்தார். இலவச பொருட்களை வழங்குவது மாநிலங்களின் கஜானாவை காலியாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.
ஆனால், மக்கள் நல திட்டங்களை இலவச கலாசாரம் என்று கூறுவது சரியல்ல என்று பல மாநில அரசுகள் வாதிடுகின்றன.
தமிழ்நாட்டிலும் பல்வேறு காலகட்டங்களில் இலவசங்கள் தேர்தல் காலங்களில் அறிவிக்கப்பட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் அவற்றை நிறைவேற்றவும் செய்துள்ளன.
இந்தநிலையில், அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்கும் கலாசாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றும் விசாரணையின் கீழ் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மாநில அரசு நீண்ட காலமாக மக்களுக்கு இலவச உதவிகளை வழங்கி வரும் நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் ஒடிஷாவின் காலாஹாண்டியின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கமேலா ஒரு பிடி சோறுக்காக ஏங்கி இருந்தது, ஆறு வயது சிறுமி ஒருவர் அவளது பெற்றோரால் சில நூறு ரூபாய்காகவும், பதினான்கு வயதான பனிதா ஒரு சேலை மற்றும் 40 ரூபாய்க்காகவும் விற்கப்பட்ட பயங்கரமான, வெட்கக்கேடான உண்மையையும் காலாஹாண்டி இன்னும் மறக்கவில்லை.
தாய் கமெலா பட்டினியால் இறந்தபோது ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்த குந்தர்நாயக் இப்போது ஒரு குழந்தையின் தந்தை.

"அப்போது நான் மிகவும் சிறியவன். அம்மா இறந்துவிட்டார், ஆனால் அது எனக்குத் தெரியாது. நான் அறையில் அம்மா-அம்மா என்று அழுது கொண்டிருந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 4-5 மணிக்கு ஊர் மக்கள் திரும்பி வந்தபோது அம்மா இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. பதினைந்து நாட்களாக அவர் எதுவும் சாப்பிடாமல் இருந்தார். வெறும் தேநீர் மட்டுமே சாப்பிட்டு வந்தார்,” என்று அந்த நாளை அவர் நினைவுகூர்ந்தார்.
இது போன்ற ஒரு கதை ஒடிஷாவின் மேற்கிலுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படுகிறது. ஆனால் இவை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பழமையானவை.
"பட்டினி சாவுகள் பற்றிய செய்தி இப்போது காலாஹாண்டியில் இருந்து வருவதில்லை" என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ரபிதாஸ்.

'பிஜு உறுதியான வீட்டுத்திட்டத்தின் கீழ் சுபாரி புட்டேல் இந்த வீட்டைப் பெற்றுள்ளார்.
இருப்பினும் அவர் இன்னும் தனது பழைய குடிசையில்தான் வாழ்கிறார். அதற்குள் நுழைய நன்கு குனிந்து செல்ல வேண்டி உள்ளது. தகர டப்பாக்களால் தயார் செய்யப்பட்ட கதவுக்குள் நுழைந்து இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் அறை முடிகிறது. சாக்கு துணியின் அதே நான்கு சுவர்களுக்குள் சுபாரி புட்டேலின் வாழ்நாள் சேமிப்பு உள்ளது.
செங்கற்கள் மீது நிறுத்தபட்ட கயிற்றுகட்டில், கயிற்றில் தொங்கும் இரண்டு புடவைகள், ரவிக்கைகள், மூலையில் வைக்கப்பட்ட இரண்டு பைகள் மற்றும் படுக்கை. அதற்கு அருகில் ஒரு கேஸ்சிலிண்டர் .
“மகனின் நோய் பல வருடங்களாக நீடித்தது. வீடு கட்ட அரசிடம் இருந்து வந்த பணம் அதில் செலவானது. ஆனாலும் மகன் பிழைக்கவில்லை. நானும் என் கணவரும் மும்பை சென்று வேலை பார்த்து பணம் சேமித்து வீட்டை கட்டலாம் என்று நினைத்தோம். வீட்டைக் கட்டி முடிக்கவில்லை என்றால் பிரச்சனைகள் வரும் என்று அதிகாரி சொன்னார். ஆனால் விதியை யாரால் மாற்ற முடியும். மும்பைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பிறகு என் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்,” என்று சுபாரி தெரிவித்தார்.
இப்பகுதியைச் சேர்ந்த பலர் வீடுகள், பாலங்கள், சாலைகள் கட்டும் பணிக்காக மும்பைக்கு செல்கின்றனர்.

திட்டங்களின் பலன்களை யார் பெறுகிறார்கள்?
ஹயால் கிராமத்திற்குத் திரும்பிய பிறகு, மாநில அரசு மூலமாக சுபாரிக்கு 20,000 ரூபாய் கிடைத்தது. கணவரை இழந்த பெண்ணுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அறையில் கிடக்கும் கேஸ் சிலிண்டர் பற்றி கேட்டால், “இது கிடைத்தது. ஆனால் இதற்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் ஆகிறது... இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கும்?" என்று சுபாரி வினவுகிறார்.
எந்த திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் கிடைத்தது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் அது நரேந்திர மோதியால் கொடுக்கப்பட்டது என்பது அவருக்கு தெரியும்.
சுபாரி புட்டேலுடனான உரையாடலின்போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களிடம் வந்தனர்.
84 வயதான ஹரிபுட்டேல் மற்றும் அவரது மனைவி சுசீலாபுட்டேல் இதில் அடங்குவார்கள். கடந்த ஆண்டு முதல் தங்களுக்கு தலா ஐநூறு ரூபாய் முதுமைக்கால ஓய்வூதியம் கிடைக்க தொடங்கியுள்ளது என்றும் அப்போது முதல் வேலைக்கு செல்ல அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். உணவுக்காக ஒரு நபருக்கு ஐந்து கிலோ அரிசியும் அவர்களுக்கு கிடைக்கிறது.
தங்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தும் அவர்கள் தங்களை கவனிப்பதில்லை என்றும், இந்தப் பணமும் அரிசியும் கிடைக்கவில்லை என்றால், 'பிச்சையெடுத்துத்தான் சாப்பிட வேண்டும்' என்றும் ஹரி புட்டேல் கூறுகிறார்.
'இந்த பணத்தால் எண்ணெய், சோப்பு மற்றும் பிற பொருட்களை வாங்குகிறேன்' என்று கூறுகிறார் பால்மதி என்ற மற்றொரு பெண்மணி.
சுசீலா புட்டேலுக்கு அரசின் திட்டங்கள் குறித்து நன்கு தெரிந்துள்ளது. அரசு இப்போது நிறைய தருகிறது, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறது, புத்தகங்கள், உடைகள், மதிய உணவு கிடைக்கிறது. கர்ப்பிணிகளுக்கு உணவுக்காக பணம் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
'ரேவடி கலாசாரம்' குறித்தும், பொதுமக்களுக்கு இலவசமாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ள கருத்துகள், ஒருவேளை இங்கு சென்றடையவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் அவரது வார்த்தைகளில் மரியாதைக்குரிய உணர்வு இருக்கிறது.
பால்மதி, ஹரி புட்டேல், ருத்ர புட்டேல் என கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் பலர், ஐநூறு ரூபாய் குறைவாக இருப்பதாகவும் அதை உயர்த்தும்படியும் கோருகிறார்கள். இப்படிப் பணம் விநியோகிக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்களே என்று கிராமக் கோயில் அருகே நின்றிருந்த சுமித்ரா புட்டேலிடம் சொன்னபோது, ' ஏன் கொடுக்கப்படக்கூடாது” என்று அவர் கோபமாகக் கேட்கிறார்.
ஜூலை மாதம் உத்தர பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில், 'இலவச பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களின் இந்த சிந்தனையை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். நாட்டின் அரசியலில் இருந்து இலவச கலாசாரம் அகற்றப்பட வேண்டும்,”என்று கூறினார்.

ஒரு காலத்தில் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அரசை நடத்திய நவீன் பட்நாயக் அரசு, இப்போதும் பல விஷயங்களில் நரேந்திர மோதி அரசை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கிறது. அது ஒடிஷாவில் நான்கு டஜனுக்கும் அதிகமான பொது நலன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒடிஷாவை பற்றி சொல்லும்போது, பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவது ஓர் அரசுத் திட்டம் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
ஆனால் பிரதமர் மோதியின் இலவச கலாசாரம் பற்றிய பேச்சுக்களுக்கு பிறகு நடந்து வரும் விவாதங்களில் ஒடிஷா பற்றி குறிப்பிடப்படுவதில்லை.
ஊடக விவாதங்களில் கூட பெரும்பாலான கவனம் ஆம் ஆத்மி கட்சியை நோக்கியே உள்ளது. நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத் தேர்தலில் 'ஆம் ஆத்மி' கட்சி முக்கியப் போட்டியாளராக வர்ணிக்கப்படுகிறது.
கெரியார் என்ற பகுதி, ஹயால் கிராமத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ளது. கெரியார், நுவாபாடா மாவட்டத்தில் உள்ளது. மனைவி சோனியா காந்தியுடன் பிரதமர் ராஜீவ் காந்தி இந்தப்பகுதியில் சுற்றுப்பயணமும் செய்துள்ளார். ’பனிதா விற்பனை' போன்ற இந்தப் பகுதியில் எண்பதுகளில் நடந்த பல நிகழ்வுகள் நாட்டையே உலுக்கின.
சுபாஸ்ரீ ஹன்ஸ், கெரியாரில் உள்ள எவாஞ்சலிகல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுகாதார திட்டங்களின் தாக்கம்

சுபஸ்ரீயின் காலில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டது. பின்னர் நடக்கக்கூட முடியாத அளவுக்கு ஆனது. பிறகு அவர் அரசு மருத்துவமனையில் இருந்து இங்கு பரிந்துரைக்கப்பட்டார். அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது அவர் ஓரிரு நாட்களில் வீட்டிற்கு திரும்பிவிடுவார்.
ஆபரேஷன் செலவுகள் குறித்து சுபாஸ்ரீயிடம் கேட்டபோது, 'என்னிடம் பிஜு ஜன்தா கார்டு (ஹெல்த் கார்டு) இருந்தது. பணம் எதுவும் செலவாகவில்லை' என்று சொன்னார்.
கெரியார் சப்-டிவிஷன் மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் ரஜித் குமார் ரௌத், “அரசு மருத்துவமனையில் ஒரு நோய்க்கான சிகிச்சை கிடைக்கவில்லை, சாத்தியமில்லை என்று நாங்கள் நினைத்தால், அதை நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கிறோம். தேவைப்பட்டால், நோயாளியை மாநிலத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கும் அனுப்ப முடியும்." என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ்வரும் 96 லட்சம் குடும்பங்கள் சிகிச்சை பெறக்கூடிய 200 மருத்துவமனைகள் நாடு முழுவதிலும் உள்ளன என்று அரசின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பெண்களுக்கு10 லட்சம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சை வசதிகள் கிடைக்கும். இதற்காக மாதந்தோறும் 165 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 133 மருந்துகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் இலவசமாகக் கிடைப்பதாக உள்ளூர் மக்கள் பலர் எங்களிடம் கூறுகின்றனர். தொடக்க காலத்தில், இத்திட்டத்தின் கீழ் ஐநூறுக்கும் மேற்பட்ட மருந்துகள் வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்தது.
2012ல் இலவச மருந்து திட்டத்தை மத்திய அரசும் அறிவித்தது. ஆனால் மூன்று ஆண்டுகளாகியும் பட்ஜெட்டில் இதற்கான தொகை ஒதுக்கப்படவில்லை.
எவாஞ்சலிக்கல் மிஷன் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நிதிஷ் செளத்ரி "நாங்கள் இங்கு அளிக்கும் சிகிச்சைக்கு செலவு மிகவும் குறைவு. சுகாதார திட்டத்தின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் நிலம், வீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் அல்லது சிகிச்சை கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்,” என்றார்.
ஒவ்வொரு மாதமும் 100 முதல் 150 நோயாளிகள் மிஷன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் சிகிச்சை அரசின் சுகாதாரத் திட்டத்தால் சாத்தியமாகிறது.
போலங்ககீரின் ஹயால் கிராமத்தில் இருந்து காண்டாபாஞ்சி நகருக்குத் திரும்பும் வழியில் வயல்களுக்கு நடுவில் இருக்கிறது, வெளிப்பூச்சு இல்லாமல் கட்டப்பட்டுள்ள அஞ்சனா புட்டேலின் உறுதியான வீடு.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அஞ்சனா புட்டேலின் மாமனாரின் கார்டில் (ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்) செலவழிக்கக்கூடிய தொகை முடிவடைந்துவிட்டதால், அவருக்கு இனி தனியார் மருத்துவமனையில் கீமோதெரபி செய்ய முடியாது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமலில் இல்லை

நாட்டில், மத்திய அரசின் பொது சுகாதாரத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ அமல்படுத்தப்படாத ஒரே மாநிலம் ஒடிஷா மட்டுமே.
அந்தத் திட்டமும் இருந்திருந்தால் மக்களுக்கு இரட்டிப்புப் பலன் கிடைத்திருக்கும் என்று மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரிகு பக்ஸிபாத்ரா கூறுகிறார்.
நவீன் பட்நாயக் அரசு பொதுநலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசியல் செய்து வருவதாக பிரிகு பக்ஸிபாத்ரா குற்றம்சாட்டுகிறார்.
“மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது தவிர, மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி மாநிலத்தில் அவை அமல் செய்யப்படுகின்றன. பிஜு அல்லது நவீன் பெயரில் அவை தொடங்கப்படுகின்றன. குடிநீர்த் திட்டம் மற்றும் மின்சார திட்டங்களில் இவை செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
”ஒடிஷாவில், பொது நலத்திட்டங்களும் அரசியலும் ஒரு வகையான கூட்டாளிகளாக மாறிவிட்டன. அதன் ஒரே நோக்கம் வாக்குகள் மட்டுமே,” என்கிறார் அவர்.
"அவர்கள் விரும்பினால் இதை அரசியல் என்று சொல்லலாம். அது அவர்களுடைய சிந்தனை. எங்களைப் பொறுத்தவரை இது அவசியம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய சுகாதாரத் திட்டம் ஆறு லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கிறது. நாங்கள் அதை முன்னோக்கி கொண்டு சென்று ’பிஜு ஸ்வஸ்த்ய கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் மேலும் 36 லட்சத்துக்கும். அதிகமான குடும்பங்களை இணைத்துள்ளோம்,” என்று பிஜூ ஜனதா தள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லெனின் மொஹந்தி கூறினார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மாநில அரசின் சுகாதாரத் திட்டத்தின் பலனைப் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சுகாதார செலவிற்கு தகுதி பெறுகின்றனர்.

“மற்ற பொது நலத் திட்டங்களிலும் அதிகபட்ச மக்களுக்கு பலன்களை வழங்க முயற்சித்தோம். உதாரணமாக உணவு உரிமையின் கீழ் நாங்கள் நடத்தி வரும் அரிசி வழங்கும் திட்டத்தில் மேலும் இருபத்தைந்து லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்று லெனின் மொகந்தி கூறுகிறார்.
பிஜேடி செய்தித் தொடர்பாளர்,’ மிஷன் சக்தி’ பற்றியும் குறிப்பிடுகிறார். இதன் கீழ் பெண்கள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க அவர்களுக்கு பல வாய்ப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்தகைய பயனாளிகளின் எண்ணிக்கை எண்பது லட்சம் என்று லெனின் மொஹந்தி கூறுகிறார்.
பெண்கள் சுயஉதவி குழுக்களை பூத் (வாக்கெடுப்பு) மற்றும் வாக்கு மேலாண்மைக்கு ஆளும் பிஜேடி அரசு பயன்படுத்துகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் முழக்கமே என்று Orgus என்ற ஒடியா மற்றும் ஆங்கில செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ஜெனா கருதுகிறார்.
பெண்கள் சுயஅதிகாரத்திற்கு என்ன செய்யப்படுகிறது?

இரண்டு சகோதரிகள் சுஜாதா மஞ்சரி தாபா, மம்தா மஞ்சரி தாபா மற்றும் சில பெண்கள் விஸ்வ மா பகவதி சுய உதவிக் குழுவில் (SHG) உறுப்பினர்களாக உள்ளனர். சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் யார் முன்னாலும் கையை நீட்ட அவசியமில்லை, ஆண்களால் அதிகம் பேச முடிவதில்லை என்கிறார் சுஜாதா மஞ்சரி.
மாநிலத்தில் மின் கட்டணம் வசூலிப்பது, மதிய உணவு, பள்ளிக்கு சீருடைகள் வழங்குவது மற்றும் குளம் துார்வாரும் பணிகள் கூட, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன் பட்நாயக்கிற்கு பெண்கள் பெரும் ஆதரவாளர்களாக உள்ளனர் என்று கவிஞரும் எழுத்தாளருமான கேதர் மிஷ்ரா கூறுகிறார்.
2000வது ஆண்டு மார்ச் மாதம் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நவீன் பட்நாயக், மாநிலத்தின் ஏழைகளுக்கு, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைத் தொடங்கினார். எட்டு வருட அரசியல் கூட்டாளியான பாஜகவிடமிருந்து அவர் பிரிய முடிவு செய்த நேரம் அது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான கந்தமால் கலவரத்திற்குப் பிறகு நவீன் பட்நாயக் பாஜகவிடமிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் பிபிஎல் குடும்பங்களுக்கு 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் பல மக்கள் நலத் திட்டங்கள் மாநிலத்தில் தொடங்கப்பட்டு, அவை தொடர்கின்றன.

'பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடனே, மக்கள் தன் பின்னால் வருவதற்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதனால்தான் ஒடிஷாவில் அதுவரை இல்லாத இரண்டு ரூபாய் அரிசி திட்டம் தொடங்கப்பட்டது. ஒடிஷாவில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் உள்ளனர்.
அதுவரை காங்கிரஸுடன் இருந்தவர்கள் நவீன் நோக்கித் திரும்பினர்,” என்று அரசியல் ஆய்வாளர் ரபி தாஸ் கூறினார்.
ஏழை குடும்பங்களுக்கு 2 ரூபாய் வீதம் மாநில அரசால் வழங்கப்பட்ட அரிசியை, கிலோவுக்கு 1 ரூபாய்க்கு மாற்றும் முயற்சியை முதல்வர் நவீன் பட்நாயக், 2013 பிப்ரவரியில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பிபிஎல் பிரிவைத் தவிர, எஸ்சி-எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சலுகைகள் விரிவு படுத்தப்பட்டன.
தனது வாக்கு வங்கியை அதிகரிக்க அரிசியைப் பயன்படுத்தும் வித்தையை அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் இருந்து நவீன் பட்நாயக் கற்றுக்கொண்டார் என்று பலர் நம்புகிறார்கள். சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் ஒரு காலத்தில் ரேஷன் விநியோகத்தில் (பிடிஎஸ்) மகத்தான முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததற்காக ’சாவல் வாலே பாபா ’( அரிசி வழங்குபவர்) என்று அழைக்கப்பட்டார்.
2008 சத்தீஸ்கர் தேர்தலில் அரிசி ஒரு முக்கிய விஷயமாக இருந்தது மற்றும் ரமன் சிங் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.
பலவிதமான விலை விகிதங்களை ரத்து செய்து, ஒரே விலையை அமல்படுத்தியதன் மூலம் PDS இல் இருந்த ஊழல் பெருமளவு குறைக்கப்பட்டது என்கிறார் ஒடிஷாவில் உணவுத் துறையில் பணிபுரியும் ஆர்வலர் சமித் பாண்டா.
டிஜிட்டல் மயமாக்கலால் ஏற்படும் தடை
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் ஊழலுக்கு ஒரு முக்கிய காரணம் பயனாளியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும். திட்டம் அதிக அளவு மக்களை சென்றடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் தடையாக உள்ளது என்று ராஜ் கிஷோர் மிஷ்ரா கூறுகிறார்.
"ஒடிஷா மட்டுமில்ல, போன் கனெக்டிவிட்டி என்பதே இல்லாத பல பகுதிகள் நாட்டில் உள்ளன. அங்கு ஏழ்மை நிலையில் மக்கள் உள்ளனர். அவர்களிடம் போன் மற்றும் தேவையான எல்லா ஆவணங்களும் இருக்கும் என்று நினைப்பது தவறு,” என்கிறார் உணவு உரிமை தொடர்பான உச்சநீதிமன்ற குழுவில் ஒடிஷாவை சேர்ந்த ஆலோசகராக இருந்த ராஜ்குமார் மிஷ்ரா.
ஒரு திட்டத்தில் இவ்வளவு பேர்தான் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற போக்கு தவறு என்று கூறும் ராஜ் குமார் மிஷ்ரா, 'பலவீனமானவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். அரசியல் ஆதாயங்களுக்காக தனக்கு ஆதரவு தருபவர்களை இதில் சேர்க்கும் போட்டிதான் நடக்கிறது,”என்கிறார் அவர்.
ஒடிஷாவில், திருநங்கைகள், திருமணமாகாத பெண்கள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற, பொதுவாக திட்டங்களின் வரம்புக்கு வெளியே இருக்கும் குழுக்களை இணைக்கும் விதமாக மாநில அரசு, திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது.
இது ஓர் அரசியல் வித்தையாகவும் பார்க்கப்படுகிறது என்று சமித் பாண்டா கூறுகிறார்.
2014ல் நாடு முழுவதும் மோதி அலை வீசியபோது, மாநிலத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் நவீன் பட்நாயக்கின் பிஜேடி வெற்றி பெற்றது. கடந்த பொதுத் தேர்தலில் (2019) பிஜேடிக்கு 12 இடங்கள் கிடைத்தன. ஆனால் சட்டப்பேரவையில் 113 இடங்களை அது கைப்பற்றியது. மொத்தமுள்ள 147 இடங்களில் பாஜகவுக்கு வெறும் 23 இடங்களே கிடைத்தன.
ஆனால், கடந்த தேர்தலை விட பாஜகவின் வாக்கு சதவிகிதம் சுமார் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது நவீன் பட்நாயக் தொடர்ந்து இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார் என்று ரபி தாஸ் கூறுகிறார். முதலாவது இயற்கை பேரிடர். இரண்டாவது பஞ்சம் மற்றும் பட்டினி.
”கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருக்கும் முதல்வருக்கு, சூழ்நிலையும் உதவிகரமாக இருந்துள்ளது. 2001-02ம் ஆண்டில் மாநில பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை நிலவியது. சுமார் 2800 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. முன்னாள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தைக் கூட சரியான நேரத்தில் விநியோகிக்க முடியவில்லை. பின்னர் 2003-04 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் கனிமங்களின் விலை உயர்ந்தது. அதன் பிறகு மாநிலத்தில் தொழில்களும் வர ஆரம்பித்தன,” என்று நவீன் பட்நாயக் அரசில் நிதியமைச்சராக இருந்த பஞ்சானந்த் கானுங்கோ கூறினார்.
பஞ்சானந்த் கானுங்கோ சில ஆண்டுகளுக்கு முன்பு பிஜேடியில் இருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

காலாஹாண்டி, பஞ்சம் மற்றும் பசியிலிருந்து மீண்டு விட்டதா?
“நிதி வந்த பிறகு, மாநிலத்தில் நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது நல்ல விஷயம். ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒருவரை எளிய மருந்துகளின் உதவியுடன் எவ்வளவு காலம்தான் வாழ வைக்க முடியும் என்று முன்னாள் நிதி அமைச்சர் வினவுகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி தன் அறிக்கை ஒன்றில், கடந்த மூன்று ஆண்டுகளில் மானியச் சுமை மிக வேகமாக அதிகரித்த மாநிலங்களில் ஒன்றாக ஒடிஷாவை விவரித்தது. இருப்பினும் பல அளவுருக்களில் மாநிலத்தின் நிதி நிலைமை, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
”இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அதிக கடன் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலைமை எழும் சாத்தியம் இருக்கக்கூடிய மாநிலங்களின் மீது கவனம் செலுத்தும் முயற்சியே இந்தப்பகுப்பாய்வு,” என்று 2022, ஜூன் 16 தேதியிட்ட ' State Finances- A risk analysis’ என்ற அறிக்கையில்,’ ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்கனவே அரசுகளின் வருமானம் குறைந்துள்ளதாகவும், வரி வசூலில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மறுபுறம், மாநிலங்களின் தேவையற்ற இலவசங்களால் அவற்றின் நிதிச் சுமை அதிகரித்தது என்றும் இது புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் ரிஸர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த அறிக்கை குறித்து பல மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
கேரளாவின் முன்னாள் நிதியமைச்சர் இந்த அறிக்கை தொலைநோக்கு பார்வையற்றது என்று கூறினார். எல்லா மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு மீதும் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதே நேரம் ஜிஎஸ்டியில் மாநிலங்களின் பங்கை மத்திய அரசு சரியாக அளிக்கவில்லை என்றும் ராஜஸ்தான் கூறியது.
செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அஷாக் கேலோட்டின் நிதி ஆலோசகர் சன்யம் லோதா, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி போன்ற முடிவுகளே இந்த முழுச் சூழலுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
எழும் கேள்விகள்

கிலோவுக்கு ஒரு ரூபாயில், ஒரு நபருக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கி பசியை மறைக்க அரசு முயற்சிக்கிறது என்று ஆக்ஸ்ஃபாம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய பொருளாதார நிபுணர் பிரவாஸ் மிஷ்ரா கூறுகிறார்.
”ஐந்து கிலோ அரிசியால் பட்டினி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான சத்து அரிசியால் மட்டுமே கிடைக்காது. ஒரு ரூபாயில் அரிசி கொடுத்து பசியின் மீது ஒரு போர்வை விரிக்கப்பட்டுள்ளது. பசி கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அது முடிவுக்கு வரவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
வறுமையின் பல பரிமாண அளவுருக்களின் அடிப்படையில் ஒடிஷா ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்று NITI ஆயோக் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அறிக்கையை தயாரிப்பதில் ஊட்டச்சத்து, குடிநீர், சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் போன்ற அளவுருக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அளவிடப்படுகின்றன. இந்த குறியீட்டின் அடிப்படையில், பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிக மோசமான நிலை உள்ளது. மறுபுறம், கேரளா, கோவா, சிக்கிம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறந்த மாநிலங்களின் கீழ் உள்ளன.
”எல்லாமே திட்டங்களின் மேல் விடப்பட்டுள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு போன்ற பிற அடிப்படை பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. எனவே, எங்கள் பகுதியில் இருந்து மக்கள் இப்போதும் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஏனெனில் இங்கு வேலை இல்லை,” என்கிறார் கெரியாரைச் சேர்ந்த பாஜக தலைவர் யதுமணி பாணிக்ரஹி.
இரவு பத்து மணிக்கு, திருப்பதி செல்லும் ரயிலுக்காக காண்டாபஞ்சி ரயில் நிலையத்தில் டஜன் கணக்கான மக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
போலாங்கிர் மற்றும் அருகிலுள்ள பிற மாவட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ள இந்த கிராம மக்கள், ஆந்திராவின் பல்வேறு இடங்களில் செங்கல் சூளைகளில் வேலைக்காக செல்கின்றனர்.
காலையில் சென்னை செல்லும் ரயிலுக்காக காத்திருக்கும் சந்தோஷ் நாயக்கையும், கௌரவ் புய்யாவையும் சந்தித்தோம். கடனை அடைக்க வேண்டும் என்பதால் கெளரவ் புய்யா போகிறார். டிராக்டர் ஓட்ட அங்கு மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் போலாங்கிரில் இருக்கும்போது அதே வேலைக்கு ஐயாயிரத்திற்கு மேல் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்று சந்தோஷ் கூறுகிறார்.
சந்தோஷ் நாயக்கும் அவரது மனைவியும் முகவரிடமிருந்து நபருக்கு தலா 30,000 ரூபாயையும் முன்பணமாக பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் அதே அளவு பணம் சம்பாதித்தபிறகு தாங்கள் திரும்பப்போவதாகவும், ஜூன் மாதத்திற்குள் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் இடப்பெயர்வு இன்னும் தொடர்கிறது. எனவே அரசு திட்டங்கள் எந்த நன்மையையும் தரவில்லையா என்று இப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றம் பற்றி பல தசாப்தங்களாக உன்னிப்பாக கண்காணித்து வரும் பிஷ்ணு ஷர்மாவிடம் கேட்டோம்.
"முன்பெல்லாம் யாராவது வந்து வேலைக்கு அழைத்துச் செல்ல மாட்டார்களா என்று வாரக்கணக்கில் ஸ்டேஷன் முன் காத்திருப்பார்கள். எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு நாட்களுக்குப் போக வேண்டும், எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தொழிலாளர்கள் பேரம்பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு முன்பணமும் கிடைக்கிறது,” என்று காண்டாபாஞ்சியில் புத்தகங்கள் நிரம்பிய தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த பிஷ்ணு ஷர்மா தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு

இது துன்பம் காரணமாக ஏற்படும் இடப்பெயர்வு அல்ல என்று அவர் கூறுகிறார். இருப்பினும் பிரவாஸ் மிஷ்ரா இதை துன்ப இடம்பெயர்வு என்றே கருதுகிறார். இங்கு வேலை இல்லை, அதனால்தான் மக்கள் வெளியேறுகிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரு சிறந்த வாழ்க்கைக்காக புலம்பெயர்தல் நடப்பதாக ராஜ்கிஷோர் மிஷ்ரா கூறுகிறார்.
இலவச கலாசாரம் என்ற விவாதத்திற்குள் தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் வந்துவிட்ட நிலையில் விஷயம் வெகுதூரம் செல்லும் என்றே தோன்றுகிறது. ஆயினும் மக்கள் நலத்திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்று இது பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ள வரலாற்றாசிரியர், ஃபனிந்தம் தேவ் எச்சரிக்கிறார்.
"வெளியில் இருந்து பார்க்கும்போது இது இலவசம் என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அருகில் சென்று பார்த்தால் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. காலாஹாண்டி அல்லது நுவாபாடாவைப் போன்ற பகுதிகளில் பெருமளவு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் மீண்டும் பசியால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படக்கூடிய இருபது முதல் முப்பது சதவிகிதம் பேர் இங்கு வாழ்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஒடிஷாவில் ஏழை மக்களுக்கு உதவுவதாக கூறப்படும் சுமார் 60 சிறிய மற்றும் பெரிய திட்டங்கள் உள்ளன. இருப்பினும் ஒரு நபருக்கு எல்லா திட்டங்களின் பலனும் ஒரே நேரத்தில் கிடைக்காது. ஆனாலும் கூட ஒட்டுமொத்த கல்வி இயக்கம், விவசாய உதவித்திட்டம், தாய்மை திட்டம், பிஜு மக்கள் சுகாதார திட்டம் மற்றும் பிஜு உறுதியான வீட்டு திட்டம் ஆகியவற்றின் விளைவை பார்க்க முடிகிறது.
ஜார்க்கண்ட், கேரளா, ஒடிஷா, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச மானியப் பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், 2019 நிதியாண்டின் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 7.8 சதவிகிதம் மானியத்திற்காக செலவிடப்பட்டது. இது 2021-22ல் 11.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இவை தவிர குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதத்துக்கும் மேல் மானியங்களுக்காக செலவிடுகின்றன.
ஒடிஷா அரசு தனது வருவாயில் 23 சதவிகிதத்தை மானியத்திற்காக செலவிடுகிறது. ஆந்திரப் பிரதேச அரசு தனது வருவாயில் 30 சதவிகிதத்தை மானியமாகச் செலவிடுகிறது. பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தினால் பஞ்சாபில் மானியச் செலவு வருவாயில் 45 சதவிகிதத்தை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் மாநில அரசு தனது வருவாயில் 28 சதவிகிதத்தை மானியங்களுக்காக செலவிடுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












