ஜனாதிபதி ரணில் தேர்தல் பற்றி நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட காரணம் என்ன?

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்துவதை ஒத்தி வைக்குமாறு கோரி, முன்னாள் ராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 11ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதியரசர்கள் இந்த தீர்மானத்தை எட்டியிருந்தனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்க கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்திருந்தார்.
எனினும், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதில் காணப்படுகின்ற சர்ச்சை மற்றும் தேர்தலுக்கான பணத்தை நிதி அமைச்சு வழங்காமை ஆகிய காரணங்களினால் தேர்தலை நடத்துவதில் இடையூறுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தேர்தல் தொடர்பிலான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்றைய தினம் நடத்தப்படும் வழக்கின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னரே தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஏக்கநாயக்க தெரிவித்திருந்தார்.
தேர்தலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை - ஜனாதிபதி தெரிவிப்பு
''தேர்தலை பிற்போடவில்லை. பிற்போடுவதற்கு தேர்தல் ஒன்று இல்லை" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தியே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''முதலில் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பிலும், இந்த நிலையில் தேர்தலை நடத்த பணம் இல்லாமை தொடர்பிலும், இந்த சந்தர்ப்பத்தில் இது பொருளாதாரத்திற்கு சரியில்லை எனவும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5000திற்கு குறைத்தவுடன் தேர்தலை நடத்துமாறும் நான் டிசம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தேன்." என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கூறுகின்றார்.
''நாம் அறிந்த விதத்தில், தற்போது வரை தேர்தலுக்கான தேதி ஒன்று தீர்மானிக்கப்படவில்லை. அதிகாரபூர்வமான தேர்தல் தேதி ஒன்று கிடையாது. சிலர் மார்ச் 9ம் தேதி தொடர்பில் பேசுகின்றார்கள். 9ம் தேதி தொடர்பில் என்னால் ஒன்றும் கூற முடியாது. தேர்தலை நடத்துமாறு சட்டபூர்வமான அறிவிப்பொன்று நாம் அறிந்த விதத்தில் கிடையாது. ஆணைக்குழுவிலுள்ள 3 உறுப்பினர்களின் பெரும்பான்மை காணப்பட வேண்டும். நான் ஜனவரி 20ம் தேதி பத்திரிகையில் வந்த செய்தியொன்றை வாசிக்கின்றேன். தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் எம்.எம்.மொகமட் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் தீர்மானத்தை எடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவிலுள்ள ஏனைய 3 ஆணையாளர்களை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்புக் கொண்டு அவர்களிடம் அனுமதியை பெற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இருவர் மாத்திரமே தீர்மானத்தை எடுத்துள்ளனர். 3 பேரிடம் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளனர். அந்த 3 பேரிடம் கேட்டால், அவர்கள் இந்த நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள். வேண்டுமென்றால், அதற்கான சாட்சியங்களையும் நான் கொண்டு வந்து தருகின்றேன். அப்படியென்றால், தேர்தலை நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போது நிதி எம்மிடம் கிடையாது. தேர்தலை பிற்போடுவதற்கான தேவை எமக்கு இல்லை. இதனை நிறுத்துவதற்கான தேவையும் எமக்கு கிடையாது. தற்போது நிதி இல்லை. அதேபோன்று, தற்போது தேர்தல் ஒன்றும் கிடையாது. தேர்தலை நடத்த பணம் இல்லை. பணம் இருந்தாலும் தேர்தல் இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் ஏன் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்?
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தீர்மானமிக்க தீர்ப்பொன்று இலங்கை உயர்நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்த ரணில் விக்ரமசிங்க தேர்தல் தொடர்பில் இவ்வாறான கருத்தை இன்றைய தினத்திலேயே மேற்கொண்டமை பலருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த கேள்விகளுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜாவிடம் நாம் பதிலை வினவினோம்.
''சட்டவிரோதமான முறையில் அறிவிக்கப்பட்ட தேர்தல் என ரணில் சொல்கின்றார். ஆனால், அதனை அவர் இன்று ஏன் அறிவிக்கின்றார் என்று கேட்டால், உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஆராயப்படும் போது, நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றமும் தன்னிடம் உள்ளது என்பதை காட்டுவதே அவரின் நோக்கமான இருக்கும் என்பதே தெளிவான கருத்தாக தெரிகின்றது. நாடாளுமன்றமும், நிறைவேற்று அதிகாரமும் ஒரே நேர் கோட்டியில் நிற்கின்றோம். இதனை நீதித்துறை ஆராய வேண்டும் என்ற மறைமுக செய்தியையே ரணில் சொல்லியிருக்கின்றார். சட்டபூர்வமற்ற தேர்தல் அறிவிப்பு என இப்போது சொல்கின்றார்.
அப்படி சொல்கின்ற ரணில், ஏன் ஏற்கனவே தேர்தலுக்கான தேதி அறிவித்த போதே, அல்லது கட்டுப்பணம் செலுத்தும் போதே அல்லது பிரசாரங்களை வேட்பாளர்கள் ஆரம்பித்திருக்கும் போதே அல்லது குறிப்பிட்டளவு வாக்குசீட்டுக்கள் அச்சிட்ட போதே ஏன் அவர் இதனை சொல்லவில்லை. இவர் நிறைவேற்று அதிகாரம் உள்ளவர். அதனை அப்போது அறிவித்திருக்கலாம். அப்போது சொல்லாமல், இன்று சொல்வதற்கான காரணம், தேர்தல் சம்பந்தமான மனு ஆராயப்படும் போது, அரசாங்கம், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டை அறிவிப்பதே அவரின் ஒரே நோக்கமாக காணப்பட்டது. ரணில் இன்று சொல்லிய அனைத்து விடயங்களிலும், ஒன்று கூட நிராகரிக்க முடியாத தரவுகளாக இருக்கின்றன" என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

ஏன் இந்த விடயங்களை சட்ட மாஅதிபரின் ஊடாக, நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவில்லை என, பிபிசி தமிழ், ஊடகவியலாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவியது.
''அவர் சட்ட மாஅதிபரின் ஊடாக நீதிமன்றத்திற்கு இந்த விடயங்களை கொண்டு சேர்த்திருந்தால், அவர் இதனை இன்று இங்கு சொல்லியிருக்க மாட்டார். சட்ட மாஅதிபரின் ஊடாக ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன் என இன்று சொல்லியிருப்பார். சட்ட மாஅதிபரின் ஊடாக சொல்ல வேண்டிய தேவை இவருக்கு இல்லை ஏனெனில், நாட்டில் நிதி இல்லை என ஏற்கனவே இவர் அறிவித்துள்ளார். அது தான் இவரின் ஒரே முடிவு. ஆனால், நிதி இல்லாதது மட்டும் அல்ல. வேறு வேறு காரணங்களும் இருக்கின்றன. ஆனால் இன்று சொல்ல வேண்டிய காரணம், இந்த மனு மீதான விசாரணை இன்று எடுக்கப்பட்டு, தீர்ப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இன்று மக்கள் மத்தியில் இருந்தது. அந்த மக்களுக்கு இவர் கொடுக்கும் பதில் இது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்துக்கொண்டு, நாடாளுமன்ற அதிகாரத்தையும், நிறைவேற்று அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு இதனை சொல்லிய பிறகு, நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பொன்றை வழங்கினால், அது பெரிய வரலாறாக மாறிவிடும். உயர்நீதிமன்றம் நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களின் நிலைமையை பார்த்தே முடிவெடுக்கும். உயர்நீதிமன்றம் மக்கள் நலனை பார்க்கும். ரணில் ஒரு வார்த்தையை பயன்படுத்துகின்றார். அரசியலமைப்பை பாதுகாத்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என கூறுகின்றார்.
அது தான் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்ததானது, ரணில் விக்ரமசிங்கவின் அழுத்தத்திற்கு இல்லாமல் இருக்கலாம். சுயாதீனமான முடிவாக இருக்க வேண்டும். ஆனால்,உயர்நீதிமன்றத்திற்கு ஒரு செய்தியை ரணில் இன்று சொல்லியிருக்கின்றார். நீதித்துறைகளின் காதுகளுக்கு எட்டும் வகையில் பலவந்தமான ஒரு கருத்துருவாக்கத்தை ரணில் இன்று உண்டு பண்ணினார். இதனால், மேலும் ஆராய வேண்டும் என்ற முடிவை உயர்நீதிமன்றம் எடுத்துள்ளது. ரணில் இன்று இந்த உரையை நிகழ்த்தாது இருந்திருந்தால், சில சந்தர்ப்பங்களில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்" என ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












