திருப்பரங்குன்றம் மலைக்கும் சமண மதத்திற்கும் என்ன தொடர்பு?

திருப்பரங்குன்றம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ஒரு தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று நடந்துவருகிறது. இந்த வழக்கு டிசம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமணர்கள் வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்தனர் என்றும் அவர்களால் உருவானதே இந்தத் தூண் என்றும் குறிப்பிட்டார்.

உண்மையில் மதுரைக்கும் சமணத்திற்கும் எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது? சமணர்கள் எப்போது மதுரைக்கு வந்தனர்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சில நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதி 1954ல் பதிப்பிக்கப்பட்ட 'சமணமும் தமிழும்' நூல் சமணர்கள் தமிழ்நாட்டுக்கு குறிப்பாக மதுரைக்கு வந்தது குறித்து விவரிக்கிறது. அதாவது, மகாவீரரின் காலத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பின் சமணர்களின் தலைவராக பத்திரபாகு முனிவர் இருந்த காலத்தில்தான் சமணம் தமிழகத்திற்கு வந்ததாக அந்த நூல் குறிப்பிடுகிறது.

"இந்த பத்திரபாகு முனிவர் மௌரிய அரசனான சந்திரகுப்தனுக்கு மத குருவாக இருந்தார். 12 ஆண்டுகள் மகத நாட்டில் வறட்சி ஏற்படப் போவதை அறிந்த பத்திரபாகு முனிவர், மன்னரிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டு, தன்னைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களுடன் தென்திசை நோக்கிப் புறப்பட்டார்." என குறிப்பிடுகிறது அந்த நூல்.

மைசூர் நாட்டை அடைந்த அவர்கள், தற்போது சரவணபெலகுல என்று அழைக்கப்படும் இடத்தை வந்தடைந்தனர் என்றும் பத்திரபாகு முனிவர் தம் சீடர்களில் ஒருவரான விசாக முனிவரை அனுப்பி தென்னாட்டில் சமண மதத்தைப் பரப்பச் சொன்னார் என கூறுகிறது அந்த நூல்.

"மதுரை மாவட்டத்தில் காணப்படும் பிராமி கல்வெட்டுகள் சமணரால் எழுதப்பட்டவை என்றும் தொல்லியல் துறை கூறுகிறது என்பதால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சமணம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கக் கூடும்" என்கிறது அந்த நூல்.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதி 1954ல் பதிப்பிக்கப்பட்ட 'சமணமும் தமிழும்' நூல்

பட மூலாதாரம், Samanamum Tamizhum

படக்குறிப்பு, மயிலை சீனி. வேங்கடசாமி எழுதி 1954ல் பதிப்பிக்கப்பட்ட 'சமணமும் தமிழும்' நூலின் அட்டைப்படம்

இதே கருத்தையே மாநில தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ. சாந்தலிங்கம் எழுதிய 'மதுரையில் சமணம்' நூலும் கூறுகிறது.

"விசாகாச்சாரியார் என்னும் சமணத் துறவியின் தலைமையில் ஒரு குழுவினர் கொங்கு நாடு வழியாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வந்து தங்கினர். இவர்கள் தங்கிப் பணியாற்றுவதற்கும் மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழ்வதற்கும் ஏற்ற மலை வாழிடங்கள் மதுரைப் பகுதியில் மிகுதியாக இருந்ததால் மதுரைப் பகுதியின் பல பகுதிகளில் தங்கி அவர்கள் சமயப் பணிகளை மேற்கொண்டனர். கி.மு. 300ஆம் ஆண்டுவாக்கில் இத்தகைய குடியேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு மதுரைப் பகுதியில் உள்ள பல குகைகளும் பிராமி கல்வெட்டுகளும் சான்றுகளாக நிற்கின்றன" என்கிறது அந்த நூல்.

அதேபோல, திருப்பரங்குன்றத்திற்கும் சமணத்திற்கும் இடையிலான தொடர்பையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. சங்க காலத்தில் மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் சமணத் துறவியர் தங்கி பணியாற்றுவதற்காக பல கற்படுகைகளை சங்க கால பாண்டிய மன்னர்களும் வணிகர்களும் செய்து கொடுத்ததாக இந்தப் புத்தகம் கூறுகிறது. இது மாதிரியான படுகைகள் மாங்குளம், அரிட்டாபட்டி, திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, கொங்கர்புளியங்குளம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் காணப்படுகின்றன.

மதுரையைச் சுற்றி அமைந்துள்ள எட்டு மலைகளிலும் மலைக்கு ஆயிரம் பேர் என எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்திருந்ததாக சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார். ஆயிரம் என்பதை குறிப்பிட்ட தொகையாகக் கொள்ளக்கூடாது என்றும் அது பெருந்தொகையானவர்கள் என்பதையே குறிப்பதாகவும் கூறுகிறார் அவர். சில செய்யுள்களை மேற்கோள்காட்டி, திருப்பரங்குன்றம், யானை மலை, பசுமலை, அழகர் மலை ஆகியவை இந்த எண்பெரும் குன்றங்களில் அடக்கம் என்கிறார் அவர்.

தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ. சாந்தலிங்கம் எழுதிய 'மதுரையில் சமணம்' நூலின் அட்டைப்படம்

பட மூலாதாரம், Madurayil Samanam

படக்குறிப்பு, தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ. சாந்தலிங்கம் எழுதிய 'மதுரையில் சமணம்' நூலின் அட்டைப்படம்

"களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த பாண்டிய வம்சத்தின் முதல் அரசன் கடுங்கோன். இந்த மரபின் நான்காவது அரசனாக இருந்தவன் அரிகேசரி மாறவர்மன். கூன் பாண்டியன் என்ற நின்ற சீர் நெடுமாறன் என வரலாற்றில் குறிப்பிடப்படும் அரசன் இவன்தான். இவன் சமண மதத்தைப் பின்பற்றியதாகவும் இவனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயை ஞானசம்பந்தர் குணப்படுத்தி, அவனை சைவ சமயத்தை சார்ந்தவனாக்கினார் என தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன." என்கிறது அந்த நூல்.

இந்தக் காலகட்டத்தில் சமண மதத்திற்கும் சைவ மதத்திற்கும் மோதல்கள் ஏற்பட்டன என்றும் அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் தோல்வியடைந்த சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதாக பெரிய புராணம் கூறுவதாக அந்த நூல் குறிப்பிடுகிறது.

ஆனால், எண்ணாயிரம் சமணர்கள் இதுபோல கழுவேற்றியிருக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார் சொ. சாந்தலிங்கம். கூன் பாண்டியனின் காலத்தில் சைவ சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் ஏற்பட்ட மோதலில் சமணம் ஒரு சிறிய பின்னடைவைச் சந்தித்திருக்கலாம் என்றாலும் அடுத்த அரை நூற்றாண்டில், மீண்டும் பழைய செல்வாக்கைப் பெற்றது என்கிறார் அவர்.

திருப்பரங்குன்றத்திற்கும் சமண மதத்திற்கும் உள்ள தொடர்பு

திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை நான்கு இடங்களில் சமண சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மலையின் மேற்குப் பகுதியில் உள்ள குகையில் பத்து கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு சில தமிழ் பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவை, இந்த கற்படுகைகளைச் செய்து கொடுத்தவர்கள் குறித்த செய்திகளைத் தருகின்றன. மலையின் பின்புறத்தில் ஒரு சுனை அமைந்திருக்கிறது. இதற்கு அருகில் உள்ள பாறையில் மூன்று சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒன்று மகாவீரருடையது. மற்றொன்று பார்சுவநாதருடையது. மூன்றாவது சிற்பம் பாகுபலி எனப்படும் கோமதீஸ்வருடையது.

மலையின் மேற்பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள சுனையை ஒட்டிய மலைப்பாறையில், இரண்டு புடைப்புச் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று பார்சுவநாதருடையது. மற்றொன்று பாகுபலியினுடையது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரை - சமணம் தொடர்பை காட்டும் சின்னங்கள்

இதேபோல, மதுரைக்கு அருகில் உள்ள அழகர் மலை, திருவாதவூர், கீழக்குயில்குடி, கீழவளவு, கருங்காலக்குடி, வரிச்சியூர், ஆனைமலை போன்ற மலைகளிலும் சமணர் படுகைகளோ, தமிழ் பிராமி எழுத்துகளோ, சமணச் சிற்பங்களோ காணப்படுகின்றன.

மதுரை நகரைச் சுற்றியுள்ள பல மலைகள் சமண மதத்தோடு பெரும் தொடர்புடையவை என்பதை தற்போதும் அங்குள்ள சிற்பங்களின் மூலம் அறிய முடியும். மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள மாங்குளத்திற்கு அருகில் உள்ள ஓவா மலையில் சமணம் தொடர்பான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

"தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சமணம் சார்ந்த கல்வெட்டுகளில் இவையே காலத்தால் முந்தியவை" என்கிறார் சொ. சாந்தலிங்கம். இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறார் அவர்.

அதேபோல, "மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள அரிட்டாபட்டி என்ற ஊரில் அமைந்திருக்கும் கழிஞ்சமலையில் உள்ள குகையில் ஒரு சமணர் படுகை காணப்படுகிறது. இங்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதே பகுதியில், குகைக்குச் சற்றுத்தள்ளி முக்குடை அண்ணலின் ஒரு சிற்பம் காணப்படுகிறது. கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பத்தை ஆதிநாதரின் சிற்பமாகவும் சிலர் கருதுவதாக" கூறுகிறார் சொ. சாந்தலிங்கம்.

'மதுரையில் சமணம்', 'சமணமும் தமிழும்' ஆகிய இரு நூல்களும் திருப்பரங்குன்றம் குறித்துப் பேசினாலும், அங்குள்ள தூண் குறித்த எந்தத் தகவலும் இந்த நூல்களில் இல்லை.

சொ. சாந்தலிங்கத்திடம் இது குறித்துக் கேட்டபோது, "சமணர்களைப் பொறுத்தவரை விளக்கு ஏற்றுவதற்கு முன்பே உணவருந்தி விடுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று மட்டும் தெரிவித்தார்.

இதுவரை நடந்தது என்ன?

  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
  • ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
  • இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
  • அதன்படி, டிசம்பர் 3, மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
  • இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
  • ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.
  • இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
  • இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
  • இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
  • அதேசமயம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
  • இந்த வழக்கு டிசம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமணர்கள் வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்தனர் என்றும் அவர்களால் உருவானதே இந்தத் தூண் என்றும் குறிப்பிட்டார். இது மீண்டும் விவாதங்களை எழுப்பியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு