திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

திருப்பரங்குன்றம், தீபம், உயர் நீதிமன்றம், தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கிடையே தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என கூறி மனுதாரர் தரப்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அவமதிப்பு வழக்கின் விசாரணை வருகின்ற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் கூறியதாக லைவ் லா செய்தி தெரிவிக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவையிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரருடன் திருப்பரங்குன்றம் சென்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) தளபதி சார்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா செய்தி கூறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனு தொடர்பாக தலைமை நீதிபதி முன்பு கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

அப்போது அவரச வழக்காக மனுவை பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்றும் மனு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்ததாக லைவ் லா கூறுகிறது.

முதல் உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடு

இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஜி.ஆர் சுவாமிநாதன் முதலில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தர்கா நிர்வாகம் சார்பிலும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் இதனால் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து டிசம்பர் 12-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததாகவும் லைவ் லா செய்தி கூறுகிறது.

திருப்பரங்குன்றம், தீபம், உயர் நீதிமன்றம், தமிழ்நாடு

பட மூலாதாரம், hcmadras.tn.gov.in

படக்குறிப்பு, நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன்

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

இந்த நிலையில் மக்களவையில் இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தால் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து குடிமக்களும் கவலையில் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் யார் தீபத்தை ஏற்றுவது என்பதுதான் பிரச்னை. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்றுவதா அல்லது பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவர் ஏற்றுவதா என்பதுதான்" என்றார்.

இதனைத் தொடர்த்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்த விவகாரம் பற்றி பேசினார், "மதுரையில் திமுக அரசு மக்கள் வழிபடுவதை தடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் அங்கு சென்றவர்களை கைது செய்து அராஜகப் போக்கில் திமுக அரசும், காவல்துறையும் மக்களின் வழிபடும் உரிமைமை தடுத்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றாமல் வழிபட செய்பவர்களை கைது செய்து வருகிறது. திமுக அரசு அரசியலுக்காக இவ்வாறு செய்து வருகிறது." என்றார்.

'தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்க பாஜக முயல்கிறது' - எம்.பி கனிமொழி

கனிமொழி

பட மூலாதாரம், DMK/TWITTER

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (கோப்புப் படம்)

"திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இன்று (டிசம்பர் 5) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, "கார்த்திகை தீபம் என்பது திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து ஏற்றபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை முறையாகச் செய்கிறார்கள்."

"அப்படியிருக்க, ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட, எந்த மதத்திற்கும் சம்மந்தம் இல்லாத ஒரு நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே எழுப்பப்பட்டது" என்று கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அரசை மீறி ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளார் என்றும் கனிமொழி கூறினார்.

"இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள்" என்றார்.

மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்" என்று கூறினார் கனிமொழி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர், வழக்கும் தொடந்தனர்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதி வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் போராட்டக்காரர்கள், தடுப்புகளைத் தாண்டி மலைக்கு ஏற முயன்றனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்நிலையில், கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி மனுதாரர்களில் ஒருவரான இராம ரவிக்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் இராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எப் (CISF) வீரர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டிசம்பர் 3-ஆம் தேதி மாலை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் காவல்துறை இதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகரக் காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசுத் தரப்பின் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நேற்று (டிசம்பர் 4) தள்ளுபடி செய்தது.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கைத் தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும், அதற்குக் காவல் ஆணையர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

எனினும் அப்போதும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்தது.

திருப்பரங்குன்றத்தில் இன்று என்ன நிலவரம்?
படக்குறிப்பு, திருப்பரங்குன்றத்தில் இன்று குவிக்கப்பட்ட காவல்துறை

அரசு மறுத்தது ஏன்?

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தபோது அதற்கான காரணங்களையும் தெரிவித்தது.

"நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தைவிட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னை" எனவும் "மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை" என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்திருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு