புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரு மகள்கள் கொலையா? பிபிசி கள ஆய்வு

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், ALTAF

படக்குறிப்பு, ஃபாரூக் தனது மனைவி புர்கா அணியாததால் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வெளிக்கதவில் தொங்கவிடப்பட்டிருந்த கனமான திரையை அகற்றிவிட்டு அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், ஒரு பெரிய குழி கண்ணில் படுகிறது.

ஓர் அறையில் பழைய கட்டில் உள்ளது. மற்றொரு அறையில் இரண்டு கயிற்றுக் கட்டில்களில் படுக்கைகள் விரிக்கப்பட்டுள்ளன. ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும் எரிவாயு அடுப்பும், அதன் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும் அந்த அறையே அந்த வீட்டின் சமையலறையாகவும் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

இந்த வீட்டின் இருபுறமும் உயரமான கட்டடங்கள் உள்ளன. நடுவில் ஒரு திறந்தவெளி முற்றம் உள்ளது. அங்குள்ள மண் அடுப்பு பல நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் குளிர்ந்து கிடக்கிறது.

இதே வீட்டில்தான், கழிவறைக்கு எதிரே தோண்டப்பட்டிருந்த குழியில் இருந்து டிசம்பர் 16-ஆம் தேதி ஷாம்லி நகர போலீசார் மூன்று சடலங்களை மீட்டனர்.

தாஹிரா மற்றும் அவரது இரண்டு சிறு வயது மகள்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில், அவரது கணவர் ஃபாரூக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காந்த்லா பகுதியில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கர்ஹி தௌலத் கிராமம் இந்த படுகொலைக்குப் பிறகு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

அக்கம் பக்கத்தினர், கைது செய்யப்பட்ட ஃபாரூக்கின் வாக்குமூலம் மற்றும் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசிய போது, திருமணத்திற்குப் பிறகு தாஹிராவின் வாழ்க்கை அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது தெரியவந்தது.

அவர் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே சென்றதில்லை; உறவினர்கள், அண்டை வீட்டார் அல்லது தெரிந்தவர்களுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "தனது மனைவி புர்கா அணியாமல் பொதுப் போக்குவரத்து மூலம் தனது தாய் வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்ததாகவும், அதுவே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்ட ஃபாரூக் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்" என்றார்.

ஃபாரூக்கின் தாயார் அஸ்காரி கூறுகையில், தனது மகனுக்கு அவரது மனைவியை யாராவது பார்ப்பதோ அல்லது பேசுவதோ பிடிக்காது என்றும், அவரை எப்போதும் கடும் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தாஹிரா மற்றும் பாரூக்குக்கு ஐந்து குழந்தைகள் - மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள். மூத்த மகளுக்கு 14-15 வயது. இவர்களது ஐந்து குழந்தைகளும் ஒருபோதும் பள்ளிக்கும் சென்றதில்லை, மதரசாவுக்கும் சென்றதில்லை.

நடந்தது என்ன?

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், ALTAF

படக்குறிப்பு, காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், ஃபாரூக் தனது மனைவி தாஹிரா புர்கா அணியாமல் பொதுப் போக்குவரத்தில் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றதால், அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் கூற்றுப்படி, டிசம்பர் 9-10 இடையிலான இரவில் ஃபாரூக் தனது மனைவி தாஹிரா, மூத்த மகள் மற்றும் இளைய மகளைக் கொலை செய்து, பின்னர் உடல்களை வீட்டில் ஏற்கெனவே தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்துள்ளார். மூத்த மகளுக்கு 14-15 வயதும், இளைய மகளுக்கு 6-7 வயதும் இருக்கும்.

காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "மனைவி தாஹிரா புர்கா அணியாமல் பேருந்தில் தாய் வீட்டுக்குச் சென்றதால் ஃபாரூக் கடும் கோபமடைந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்" என்றார்.

உயிருடன் இருக்கும் மற்ற மூன்று குழந்தைகள் மற்றும் ஃபாரூக்கின் குடும்பத்தினர் கூறுகையில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தாஹிராவுக்கும் ஃபாரூக்குக்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தாஹிரா திடீரென புர்கா அணியாமல் தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு, அவர் வீட்டின் வாசலைத் தாண்டி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியது அதுவே முதல் முறை.

"தாஹிரா ஒருபோதும் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. தாய் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தால், ஃபாரூக் ஒரு தொழிலாளியாக இருந்தபோதிலும் கார் வாடகைக்கு எடுப்பார். அவர் ஒருபோதும் பேருந்தில் ஏறியதில்லை. ஆனால் அன்றைய தினம் கோபத்தில் புர்கா அணியாமல் தாஹிரா வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்" என்று காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்.

போலீசாரின் கூற்றுப்படி, ஃபாரூக் இதைத் தனது மனைவியின் கீழ்ப்படியாமையாகக் கருதினார்.

நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "அவர் முழுமையாகத் திட்டமிட்டு, சட்டவிரோத ஆயுதங்களை வாங்கி, வீட்டில் தொழிலாளர்களை வைத்து குழி தோண்டி, பின்னர் கொலை செய்யும் நோக்கத்தோடு மனைவியைத் தாய் வீட்டில் இருந்து திரும்ப அழைத்துள்ளார்" என்றார்.

காவல் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, "விசாரணையில் ஃபாரூக் கூறுகையில், தனது நோக்கம் மனைவியைக் கொல்வது மட்டுமே என்றும், ஆனால் மகள்கள் விழித்துக்கொண்டதால் அவர்களையும் கொன்றதாக தெரிவித்துள்ளார்."

போலீஸ் விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் மூவரின் உடல்களையும் துணியால் சுற்றி குழியில் தள்ளி, அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை சிமெண்ட் தளம் போட்டு நிரந்தரமாக மறைத்தது தெரியவந்தது.

உயிருடன் உள்ள மற்ற குழந்தைகள் தாயைப் பற்றிக் கேட்டபோது, அவர் வேறு ஒரு வாடகை அறையில் வசிப்பதாகப் பொய் கூறியுள்ளார்.

ஃபாரூக்கின் உறவினர்களின் கூற்றுப்படி, அந்த மூன்று குழந்தைகளும் தாயையும் சகோதரிகளையும் பற்றிக் கேட்டபோது, அவர் வேறு ஒரு வாடகை அறையில் வசிப்பதாகப் பாரூக் பொய் கூறியுள்ளார்.

12 வயதுக்கு உட்பட்ட அந்த மூன்று குழந்தைகளும் இரண்டு-மூன்று நாட்கள் ஹோட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவைச் சாப்பிட்டனர்.

பின்னர் வீட்டை ஒட்டியுள்ள மற்றொரு வீட்டில் வசிக்கும் தனது தாத்தா-பாட்டியிடம், தாயும் சகோதரிகளும் வீட்டில் இல்லாத தகவலைத் தெரிவித்தனர்.

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், ALTAF

படக்குறிப்பு, ஃபாரூக் தனது மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்து, அவர்களின் உடல்களைத் தனது வீட்டுக்குள் புதைத்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஃபாரூக்கின் தாயார் அஸ்காரி கூறுகையில், "அப்பாதான் அம்மாவையும் சகோதரியையும் எங்கோ அனுப்பிவிட்டதாகக் குழந்தைகள் கூறினார்கள். நாங்கள் அவரிடம் கேட்டபோது, அவர்கள் வாடகை அறையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவர் துணிகளுக்குத் தீ வைத்தபோதுதான் எங்களுக்குச் சந்தேகம் வந்தது" என்றார்.

தனது பேத்திகள் மற்றும் மருமகள் காணாமல் போன பிறகு ஃபாரூக்கின் தந்தை தாவூத் உள்ளூர் காவல்நிலையத்தில் சென்று தனது மகனின் மீதே சந்தேகம் தெரிவித்தார்.

காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "ஃபாரூக் முதலில் போலீசாரைத் திசைதிருப்பினார். ஆனால் பின்னர் அவர் அடையாளம் காட்டிய இடத்திலிருந்தே டிசம்பர் 16 மாலை வீட்டின் குழியிலிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் அறையிலிருந்து மீட்கப்பட்டன" என்றார்.

போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவத்தில் வேறு யாருடைய பங்களிப்பும் இருப்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் கைப்பற்றவில்லை.

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இருப்பினும், ஹோட்டலில் ரொட்டி தயாரிக்கும் வேலை செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்த ஃபாரூக், யாரால் ஈர்க்கப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், "நாங்கள் யாரையும் சந்தேகிக்கவில்லை, ஆனால் ஃபாரூக்கின் சிந்தனை ஏன் இப்படி மாறியது என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவர் தனது மனைவிக்கு மட்டுமல்ல, தனது மகள்களுக்கும் அவர்களின் உரிமைகளை மறுத்திருக்கிறார்," என்றார்.

விசாரணையில் ஃபாரூக் தனது மனைவி அல்லது குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கூட எடுக்கவில்லை என்பதும், எந்த அரசு சலுகைகளையும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

ஃபாரூக்கின் தாயார் அஸ்காரி கூறுகையில், "மூத்த மகளுக்கு மிகச் சிறு வயதிலேயே நாங்கள்தான் ஆதார் அட்டை எடுத்திருந்தோம். ஃபாரூக் ஒருபோதும் யாருக்கும் எந்த ஆவணத்தையும் எடுக்கவில்லை" என்றார்.

வீட்டுக்கு வெளியே தாஹிராவை யாரும் பார்த்ததில்லை

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், PARAS JAIN

படக்குறிப்பு, தாஹிராவின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஃபாரூக்கின் தாய் அஸ்காரி கூற்றுப்படி, அவருடைய மருமகள் தாஹிரா தன்னுடைய வீட்டை விட்டு வெளியே சென்றதில்லை, எந்த துக்க அல்லது சுப காரியங்களிலும் பங்கேற்க சென்றதில்லை.

அஸ்காரி கூறுகையில், "தன் மனைவியை யாரேனும் பார்ப்பது என் மகனுக்கு பிடிக்காது, அவருக்கென தனியே வாழ்க்கை இருப்பதால் நாங்களும் எதுவும் சொல்லவில்லை. இதில் என் மருமகளுக்கும் எந்த பிரச்னையும் இருந்ததில்லை; அதுகுறித்து அவர் எங்களிடம் குறை சொன்னதில்லை." என்றார்.

ஃபாரூக்கின் சகோதரி கூற்றுப்படி, கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளில் தாஹிராவின் முகத்தை தான் ஒருமுறை கூட பார்த்ததில்லை என்றார்.

அண்டை வீட்டை சேர்ந்த மற்றொரு நபர், வீட்டுக்கு வெளியே அல்லது வாசலில், மாடியில் அல்லது தெருவில் என எங்கும் தான் தாஹிராவை பார்த்ததில்லை என்றார்.

அவர் கூறுகையில், "தாஹிரா இறந்தபிறகு அவருடைய உடலைதான் பார்த்தோம். இந்த கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் கேளுங்கள், வீட்டுக்கு வெளியே தாஹிராவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர் எப்போதும் வீட்டுக்கு வெளியே வந்ததில்லை, ஆனால் அவரின் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடியிருக்கின்றனர்." என்றார்.

தாஹிரா கட்டாயமாக புர்கா அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர். ஆனால், முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் இது பொதுவான வழக்கம் அல்ல. பெரும்பாலான பெண்கள் புர்கா அணியாமல் வெளியே செல்வதை சௌகரியமாகவே கருதுகின்றனர்.

புர்கா அணிந்திருந்த இளம்பெண்கள் இருவரிடம் பேசியபோது, "புர்கா அணிய வேண்டுமா, இல்லையா என்பது உங்களின் விருப்பம் தான், நாங்கள் வயல்களிலும் வேலைக்கு செல்கிறோம்." என்றார்.

எனினும், இங்கு கல்லூரி செல்லும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

தாஹிராவின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "இதில் சிறிது பிற்போக்குத்தனம் உள்ளது, ஆனால் இப்போது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இளம் பெண்கள் கூட படிக்கின்றனர்." என்றார்.

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், ALTAF

படக்குறிப்பு, ஃபாரூக்கின் தாய் கூறுகையில், தனது மருமகள் வீட்டை விட்டு வெளியே சென்றதே இல்லை, அதனால் தான் ஃபாரூக்கின் வீட்டுக்கும் சென்றதில்லை என்று கூறினார்.

மேற்கு உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது பொதுவான வழக்கமாக உள்ளது.

பெண்கள் பர்தா அணிவது குறித்து ஃபாரூக்கின் அண்டைவீட்டார் கூறுகையில், "இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண் கிராமத்தை விட்டு வெளியேறும் போது, அவர்கள் நிச்சயமாக புர்கா அணிவார்கள். ஆனால், புர்கா தொடர்பாக எந்த கட்டுப்பாடும் இல்லை. பல பெண்கள் புர்கா அணிவதில்லை. புர்கா அணியாமலேயே வயல்களில் வேலைக்கு செல்வார்கள். என் வீட்டிலேயே, பெண்கள் புர்கா அணிவதில்லை." என்றார்.

கிராமத்தில் நடந்த திருமணம் ஒன்றின் போது எடுக்கப்பட்ட, தாஹிராவின் ஒரு பக்கம் தெரியும் விதத்திலான புகைப்படத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தவிர, தாஹிரா இருந்ததற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களையும் காவல்துறையினர் கண்டறியவில்லை.

இந்த புகைப்படத்தில் தங்கள் தாயை தாஹிராவின் குழந்தைகளாலேயே உறுதியாக கண்டறிய முடியவில்லை.

புகைப்படத்தில் இருப்பது தங்கள் தாய் அல்ல என அவருடைய மகளும் மகனும் தெரிவித்தனர், மற்றொரு மகன் இது தன் தாயுடையது என உறுதியாக கூறுகிறார்.

தன் மருமகளின் முகத்தை நினைவில் வைத்திருக்கும் அஸ்காரி, அந்த புகைப்படத்தில் இருப்பது தாஹிரா தான் என்றும் அருகில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது அது எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

தாஹிராவுக்கு 35-36 வயது இருக்கும். இளம் வயதிலேயே அவருக்கு திருமணமாகிவிட்டது, அதற்கு பின் அவருடைய முழு வாழ்க்கையும் இரு அறைகள் கொண்ட வீட்டிலேயே சிறைப்பட்டது.

அஸ்காரி கூறுகையில், "தாஹிராவுக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் என் மகன் தான் உடைகளை வாங்குவார்; அவர் மார்க்கெட்டை கூட ஒருபோதும் பார்த்ததில்லை." என்றார்.

பள்ளி செல்ல ஆசைப்பட்ட குழந்தைகள்

புர்கா அணியாததால் மனைவி கொலை, உத்தரபிரதசம், இந்தியா, முஸ்லிம்

பட மூலாதாரம், ALTAF

படக்குறிப்பு, ஃபாரூக்கின் குழந்தைகளில் யாரும் பள்ளிக்குச் சென்றதில்லை.

ஃபாரூக் தன்னுடைய மனைவி மற்றும் இரு மகள்களை கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ளார்.

மீதமுள்ள இரு மகன்கள் மற்றும் மகள் தனியே உள்ளனர்.

ஃபாரூக்கின் குழந்தைகள் பள்ளி அல்லது மதரசாவுக்கு சென்றதில்லை, ஆனால் அவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

தன்னுடைய அம்மாவுக்காக ஜெப மாலையுடன் அவரின் மகள் பிரார்த்திக்கிறார்.

பள்ளி செல்வாயா என கேட்டபோது தலையசைக்கிறார், அவருடைய முகம் பிரகாசமடைகிறது. அவருடைய தாய் குறித்து கேட்டபோது, அவருடைய முகம் மீண்டும் வெளிறிவிடுகிறது.

பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டு பேசிய அச்சிறுமி, "எனக்கு படிக்க வேண்டும் என விருப்பம். நான் பள்ளி செல்ல வேண்டும் என அம்மா விரும்பினார், ஆனால் அப்பா அதற்கு அனுமதிக்கவில்லை. பள்ளியில் சேர்க்குமாறு மாமா ஒருமுறை கூறியபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்." என்றார்.

ஃபாரூக்கின் மற்ற இரு மகன்களும் (சிறார்) வேலைக்கு செல்கின்றனர், மற்றவர்கள் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் கூற்றுப்படி, பள்ளிக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என தாஹிரா கூறும் போதெல்லாம் வீட்டில் வாக்குவாதம் ஏற்படும்.

தற்போது அக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான முயற்சியை நிர்வாகம் எடுத்துவருகிறது.

காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர பிரதாப் கூறுகையில், "குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அரசாங்க வசதிகளை வழங்க நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் நலக்குழு இதுகுறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு