11 முஸ்லிம்கள் எரித்துக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் உள்பட அனைவரையும் விடுவித்த குஜராத் நீதிமன்றம்

குஜராத் மாநிலத்தின் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உள்பட அனைவரையும் ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ மாயா கோட்னானி, பஜ்ரங் தளம் முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் படேல், பாஜக தலைவர் வல்லப் படேல் உள்ளிட்டோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கொலை, கலவரம், சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் குற்றச்சதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, நரோடா கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
நரோடா பாட்டியா கலவர வழக்கில் மாயாபெஹன் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மொத்தம் 86 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் 17 பேர் இறந்தனர்.
குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒன்பது வழக்குகளில் நரோடா கிராம படுகொலை வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கின் விசாரணை 14 ஆண்டுகளுக்கு முன்பு 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.
2002இல் நடந்த கோத்ரா கலவரம் மற்றும் வன்முறைக்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்ட மற்ற முக்கிய வழக்குகளில் நரோடா பாட்டியா, குல்பர்க் சொசைட்டி வழக்குகள், ஆடே, சர்தார்புரா வழக்குகள் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கே.பக்ஷி இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்ததாக அறிவித்து தனது தீர்ப்பை ஒத்திவைத்தார்.
நரோடா கிராம வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு வெளியே உள்ளூர் ஊடகங்களுடன் பேசுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருப்தி தெரிவித்தார்.
"நீதிமன்றம் அதன் தீர்ப்புக்கான எந்த காரணத்தையும் வெளியிடவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. எங்களுக்கு நீதியின் மீது நம்பிக்கை இருந்தது," என்று அவர் கூறினார்.
"எனது கட்சிக்காரர்கள் சார்பில் 7,719 பக்க வாதங்களை முன்வைத்தேன். அனைவரும் நிரபராதிகள் என்று ஆரம்பம் முதல் எடுத்துரைத்தேன். குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏன் ஏற்கக் கூடாது என்பதை விரிவாக விளக்கினேன்," என்று அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
நரோடா கிராம படுகொலை வழக்கு

பட மூலாதாரம், Getty Images
சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ஒன்பது வழக்குகளில் நரோடா கிராம வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கின் விசாரணை 14 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 2009 இல் தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 69 பேரில், அப்போதைய பாஜக அரசின் முன்னாள் அமைச்சர் மாயாபெகன் கோட்னானி, பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி, விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேல், பாஜக தலைவர் வல்லப் படேல் உள்ளிட்டோரின் பெயர்கள் முக்கியமாக இடம் பெற்றிருந்தன. அவர்கள் மீது கொலை, கலவரம், சட்டவிரோத கூட்டம் மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தீர்ப்பு வெளியான பிறகு பிபிசி குஜராத்தியிடம் பேசிய அரசு வழக்கறிஞர் கௌரங் வியாஸ், "நாங்கள் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். இந்த வழக்கில் மொத்தம் 86 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதில் 17 பேர் இறந்துவிட்டனர், ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுபான்மை சமூகத்தின் மத இடங்களை சேதப்படுத்தினர், அந்த இடங்களை கொள்ளையடித்ததுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கும் தீ வைத்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. நடந்த சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர்," என்று கெளரங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 27, 2002 அன்று, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 மற்றும் எஸ்-7 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள் உயிரிழந்தனர். அப்போது குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2002 பிப்ரவரி 28 அன்று நரோடா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாயாபெஹன் கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 6 பேர், நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களாக இருந்தனர்.
இந்த வழக்கில் மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இருப்பினும், பாபு பஜ்ரங்கியின் தண்டனையில் மாற்றம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் 187 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், 57 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை 13 ஆண்டுகளாக ஆறு நீதிபதிகள் வெவ்வேறு காலகட்டங்களில் விசாரித்து வந்தனர்.
மாயா கோத்னானி
குஜராத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோதி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் மாயா கோட்னானி. நரோடா கிராம வன்முறைக்கு முந்தைய நாள் மாயா, ஒரு கும்பலைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
2012 ஆம் ஆண்டில், ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 32 பேர் வன்முறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நரோடா மீது தாக்குதல் நடந்த அன்று காலை குஜராத் சட்டசபையில் தான் இருந்ததாக மாயா கோட்னானி தனது வாதத்தில் கூறினார்.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று, கோத்ரா ரயில் படுகொலையில் கொல்லப்பட்ட கரசேவகர்களின் உடல்களைப் பார்க்க சிவில் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதே நேரம் நேரில் கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் நரோடா கலவரத்தின் போது கோட்னானி அங்கு இருந்ததாகவும், கலவரத்துக்கு அவரே காரணம் என்றும் கூறினர்.
அமித் ஷா சாட்சியம்

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய உள்துறை அமைச்சரும் அன்றைய மாநில உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாயா கோட்னானியின் தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜரானார். பிப்ரவரி 28ஆம் தேதி காலை 7:15 மணியளவில், குஜராத் சட்டசபை நடவடிக்கைகள் காலை 8:30 மணிக்கு தொடங்கவிருந்ததால், தாம் புறப்பட்டுச் சென்றதாக அவர் கூறினார். குஜராத் சட்டசபையில் காலை 8.40 மணிக்கு மாயா கோட்னானியை தாம் பார்த்ததாக அமித் ஷா வாக்குமூலம் பதிவு செய்தார்.
மாயா கோட்னானி சட்டசபையை விட்டு வெளியேறி சோலா சிவில் மருத்துவமனையை அடைவதற்கு முன்பு அவர் எங்கிருந்தார் என்று தனக்குத் தெரியாது என்றும் பிப்ரவரி 28ஆம் தேதி காலை 11 மணி முதல் 11:30 மணி வரை மருத்துவமனையில் அவரைப் பார்த்ததாகவும் அமித் ஷா நீதிமன்றத்தில் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், நரோடா படுகொலை வழக்கில் மாயா கோட்னானி மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க முடியாததால், குஜராத் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












