முதல் விக்கெட்டுக்காக கொண்டாடப்படும் அர்ஜூன் டெண்டுல்கரின் பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
அர்ஜூன் ‘டெண்டுல்கர்’…
கிரிக்கெட் உலகில் தனக்கென அடையாளத்தை ஓர் உருவாக்கும்வரை அர்ஜூனுக்கு “டெண்டுல்கர்” என்ற பெயர் சுமையாக, அழுத்தமாக மாறலாம்.
கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் மகன், ‘பிராட்மேன்’ என்ற பெயர் தனக்கு பெரிய அழுத்தத்தை தருகிறது என்று கூறி கடந்த 1972ல் தனது பெயரை “பிராட்சன்” என்று மாற்றிக்கொண்டதையும் இங்கு நினைவுக்கூர வேண்டும்.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஐ.பி.எல். விக்கெட்டை வீழ்த்தினார்.
ஹைதரபாத்தில் நடந்த ஐ.பி.எல். டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்திருந்தது.
இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், 5 ரன்கள் விட்டுக்கொடுத்து, புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை சாய்த்தார். ஐ.பி.எல். தொடரில் தனது முதல் விக்கெட்டை எடுத்து, மும்பை அணிக்கு வெற்றியையும் அர்ஜூன் பெற்றுக்கொடுத்தார்.
எதுவும் நடக்கலாம்
ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகும் ஏராளமான இளம் வீரர்கள் தங்கள் முதல் விக்கெட்டை வீழ்த்தும்போது கொண்டாடப்படாதபோது, ஏன் அர்ஜூன் மட்டும் பேசுபொருளாக மாறிவிட்டார். காரணம், அவரின் பெயருக்கு பின் இருக்கும் டெண்டுல்கர் என்ற வார்த்தையின் ஈர்ப்பு, கவனம்தான் பேசப்படுகிறது.
புவனேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்தியது பெரியசாதனையா?, அவரென்ன பேட்ஸ்மேனா?, இதை பெரிதாகப் பேசுகிறீர்களே! என்றெல்லாம், அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச்சு குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இதுவரை நடந்த ஐ.பி.எல். டி20 தொடரையும் போன்று இல்லாமல் இந்த ஐ.பி.எல். டி20 தொடர் சற்று வேறுபட்டு அமைந்திருக்கிறது. கடைசி ஓவர், கடைசி பந்துவரை போட்டியின் முடிவை கணிக்க முடியாத வகையில், அடையாளம் தெரியாத இளம் வீரர்கள் திடீரென ஹீரோவாகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால், புவனேஷ்வர் குமார் பௌலர் மட்டுமல்ல பேட்டிங்கிலும் சில போட்டிகளில் கணிசமான ரன்களை விளாசியவர். அவரது விக்கெட்டைதான் அர்ஜூன் சாய்த்திருக்கிறார்.

பட மூலாதாரம், BCCI/IPL
சிறப்புக் கவனம்
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் பெற்ற வெற்றியை காட்டிலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் எடுத்த முதல் விக்கெட் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகியுள்ளது. இதன் மூலம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.
அதாவது கடந்த 2008-09ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணிக்காக ஆடிய புவனேஷ்வர் குமார், மும்பை அணிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கரை டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தார். முதல் தரக் கிரிக்கெட்டில், சச்சின் டெண்டுல்கரை டக்அவுட்டில் வெளியேற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றிருந்தார்.
தனது தந்தை சச்சின் டெண்டுல்கரை முதல் தரப் போட்டியில் டக்அவுட் செய்த புவனேஷ்வர் குமார் விக்கெட்டை வீழ்த்தி அர்ஜூன் டெண்டுல்கர் தனது ஐ.பி.எல். முதல் விக்கெட்டாக மாற்றிக்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் பயணம்
புலிக்கு பிறந்தது பூனையாகிவிடக்கூடாது என்பதில் சச்சின் மிகுந்து கவனம் செலுத்தி, ஒவ்வொரு அடியாக தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரை சிறு வயதிலிருந்து நகர்த்தினார்.
“நெபோடிசம்” என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதாவது தகுதியில்லாதவர்களை, உறவுமுறை, நட்புமுறையில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுவருவதாகும்.
தனது மகன் இந்த பேச்சுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரின் திறமையை மெருகேற்றும் விஷயத்தில் சச்சின் அதிகமான ஈடுபாடு செலுத்தினார் என்கின்றனர் கிரிக்கெட் கூர்நோக்கர்கள்.
சச்சின் டெண்டுல்கர் தனது 16-வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் களம் கண்டுவிட்டார். ஆனால், அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 23வயதில்தான் ஐ.பி.எல். தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றியதும் கவனிக்கத்தக்கது.
மும்பையில் பிறந்து வளர்ந்து, கிரிக்கெட் பயிற்சி எடுத்த அர்ஜுன் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கோவா அணி சார்பில் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஏனென்றால், மும்பை அணியில் இடம் பெற்று விளையாடுவதைவிட, மும்பை அணிக்கு எதிராக ஆடி, பேட்டிங்கில் ஸ்கோர் செய்தாலோ அல்லது பந்துவீசி விக்கெட் வீழ்த்தினாலோ அது பிசிசிஐ தேர்வாளர்களால் கவனிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் மும்பை அணியில் இடம் பெறுவதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இந்த போட்டிகளில் முந்தி மும்பை அணியில் இடம் பெறுவதைவிட, மும்பை அணிக்கு எதிராக ஆடி, எளிதாக தேசிய அணியின் கதவுகளைத் தட்டிவிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
காரணம், உள்நாட்டு கிரிக்கெட் அணிகளில் மும்பை அணி வலிமையானதாகும். அந்த அணிக்கு எதிராக அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் ஸ்கோர் செய்தாலோ அல்லது விக்கெட் வீழ்த்தினாலோ அது நிச்சயம் தேசிய அணியின் கதவுகள் திறப்பதற்கு சாவியாக அமையக்கூடும்.

பட மூலாதாரம், BCCI/IPL
அடையாளம்
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் அர்ஜுனுக்கு இடம் கிடைத்தது. அப்போதுதான் முதல்முறையாக கிரிக்கெட் ரசிகர்கள் அர்ஜுன் குறித்த செய்தியால் புருவம் உயர்த்தினார்கள். ஆனால், அர்ஜுனுக்கு ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு அவருக்கு கைகூடவில்லை.
2021 ஜனவரியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாட மும்பையின் அணியில் இடம் கிடைத்தது. தனது முதல் போட்டியில் பந்துவீச மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் மும்பை அணி அர்ஜுனை எடுத்தது. ஆனால் காயம் காரணமாக இடம் கிடைக்கவில்லை. 2022 சீசனிலும் பிளெயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மும்பைக்கு பதிலாக கோவா அணிக்கு விளையாட முடிவெடுத்தார் .தனது தேசிய அறிமுகத்துக்கான தொடக்க அடியை கோவா அணியில் இருந்தே அர்ஜூன் தொடங்கினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடந்த ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் சதம் அடித்து, 120 ரன்களில் ஆட்டமிழந்ததே உள்ளூர் போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.
கிரிக் இன்ஃபோ தளத்தின் தரவுகளின் படி, அர்ஜூன் டெண்டுல்கர் இதுவரை 7 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 223 ரன்கள் சேர்த்துள்ளார், 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும். ஏ லெவல் போட்டிகளில் 7 ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். இதில் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் பிடித்து மொத்தமாக 21 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் ஒரு போட்டியிலும் ஆட்டமிழக்கவில்லை.
இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளராக, கீழ்வரிசை பேட்ஸ்மேனாக அர்ஜூன் டெண்டுல்கர் தன்னை கிரிக்கெட்டில் அடையாளப்படுத்தி வருகிறார். இதுவரை நடந்த முதல்தரப் போட்டிகள், ஏ-லெவல் போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
யுவராஜ் சிங்கின் தந்தையிடம் பயிற்சி
அர்ஜூன் பெரிய அளவில் தனது திறமையை வெளிக்காட்ட தவறியநிலையில், கடந்த ஆண்டு யுவராஜ் சிங்கின் தந்தை, யோகராஜ் சிங் தான் அர்ஜூனுக்கு பயிற்சியளித்தார்.
சச்சின் தனது மகனுக்கு யுவராஜ் சிங் தந்தை பயிற்சியளிக்க வேண்டும் என யுவராஜ்சிங்கிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தனது தந்தையிடம் பேசியிருக்கிறார் யுவராஜ் சிங்.
தன் மகன் தொலைபேசியில் இதைச் சொன்னபோது தன்னால் சச்சினின் கோரிக்கையை தட்டமுடியவில்லை என யோக்ராஜ் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
டெண்டுல்கர் தனக்கு மகன் போன்றவர் என்றும், ஆனால் தான் பயிற்சியளிக்கும்போது எந்தவித வெளிப்புற தலையீடும் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்றும், சுதந்திரமாக செயல்படுவேன் என்றும் யுவராஜிடம் அப்போது யோக்ராஜ் கூறியிருக்கிறார் .
சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரி மைதானத்தில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு 15 நாட்களுக்கும் மேலாக யோகராஜ் சிங் பயிற்சி அளித்தார்.
அப்போது அர்ஜூன் டெண்டுல்கரின் திறமையைப் பார்த்து யோகராஜ் மிகுந்த பெருமிதம் அடைந்துள்ளார். அர்ஜூனின் செயல்திறன், கவனம், பொறுமை, விடாமுயற்சி ஆகியவையும், அவரின் நுணுக்கமான பேட்டிங் திறமையும் தன்னை கவர்ந்துவிட்டதாக யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
யோகராஜ் சிங் பெருமையுடன் அர்ஜுன் குறித்து கூறுகையில் “ யுவராஜ் சிங்கை நினைவூட்டும் வகையில் அர்ஜூன் டெண்டுல்கர் இருக்கிறார். அர்ஜூன் பந்துவீச்சாளராக இருப்பதைவிட பேட்ஸ்மேனாக ஜொலிப்பார். அற்புதமான, அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேனாக வருவார். யுவராஜ் சிங்கும் இதேபோன்றுதான் பேட்டிங் செய்வார். சச்சின் டெண்டுல்கர் பெயரை இந்த உலகம் நினைவில் வைப்பதைப் போல் ஒருநாள் அர்ஜூன் டெண்டுல்கர் பெயரையும் உலகம் நினைவில் வைக்கும்” என புகழாரம் சூட்டினார்.
அர்ஜூனுக்கு பேட்டிங்கில் அதிகமான ஈடுபாடு இருப்பதைக் யோகராஜ் கண்டறிந்து கிரிக்கெட் உலகிற்கு தெரியப்படுத்தினார்.
இந்த பயிற்சிக்கு பின்னரே ரஞ்சியில் அர்ஜுன் சதம் விளாசினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிடைத்த 'வாய்ப்புகள்'
அர்ஜூனுக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்திய அணிக்கு வலைப்பந்துவீச்சாளராக அர்ஜூன் அழைத்துச் செல்லப்பட்டார், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் அர்ஜூன் பயிற்சி எடுத்தார், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜாகீர் கான் பயிற்சியிலும், நியூஸிலாந்து வேகப்புயல் ஷேன் பாண்ட் பயிற்சியிலும் அர்ஜூன் இருந்தார். இதுபோன்ற ஜாம்பவான்கள் மேற்பார்வையில் பயிற்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக ஐபிஎல்லில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கியபோது இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசினார், பின்னர் இறுதி ஓவர் வீச அழைக்கப்பட்டார். ஆனால், ஏறக்குறைய மும்பை இந்தியன்ஸ் வெற்றி உறுதியாகிவிட்டநிலையில், களத்தில் வலுவான பேட்ஸ்மேன்கள் இல்லாத சூழலில் அர்ஜூனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2021-ல் இருந்தியே அர்ஜுன் இருந்தாலும், ப்ளேயிங் லெவனில் இந்த முறைதான் அர்ஜூனுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
அர்ஜூன் குறித்து மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஒருமுறை கூறுகையில் “ அர்ஜூன் இன்னும் கடினமாக பயிற்சி பெற வேண்டும். மும்பை போன்ற அணிக்காக விளையாடும்போது, ப்ளேயிங் லெவனில் விளையாடுவது முக்கியமானது.
பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அர்ஜூன் தனக்கென இடத்தையும் அடையாளத்தையும் பெற முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
குழப்பம் இருக்கிறதா
அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங் ஆல்ரவுண்டரா, பௌலிங் ஆல்ரவுண்டரா, பேட்ஸ்மேனா அல்லது முழு நேர பந்து வீச்சாளரா என்பதை தனது திறன் மூலம் வெளிப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்.
ஐ.பி.எல். தொடரில் கடந்த இரு போட்டிகளில் அர்ஜூனுக்கு பந்துவீசுவதற்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைத்த நிலையில் இன்னும் பேட்டிங்கிற்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்போதுதான் அர்ஜூன் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தக் கூடும்.
கேப்டன் எனும் சிற்பி
ரவி சாஸ்திரி இந்தியக் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராகத்தான் அறிமுகமாகினார். ஆனால், இங்கிலாந்து தொடரில் ரவி சாஸ்திரியை ஓபனிங் பேட்ஸ்மேனாக சுனில் கவாஸ்கர் களமிறக்கி பரிசோதித்தார். தான் ஓபனிங் இறங்கிய முதல் போட்டியிலேயே ரவி சாஸ்திரி 66 ரன்கள் சேர்த்தார். அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் இரட்டை சதம், மேற்கி இந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சதம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் என ரவி சாஸ்திரியின் கிரிக்கெட் வாழ்க்கை கவாஸ்கரால் மாற்றப்பட்டது.
பந்துவீச்சாளராக நுழைந்த ரவி சாஸ்திரி, தொடக்க ஆட்டக்காரராக தன்னை நிரூபித்துக்கொண்டார். அதேபோன்று இளம் வீரர்களை ஒரு கேப்டன் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை திசைமாறும். இனிவரும் போட்டியில் அர்ஜூனுக்கு பேட்டிங்கிலும் வாய்ப்பு வழங்கி அவரை பரிசோதிக்க வேண்டும்.
ஜாம்பவான்களின் மகன்கள்
பொதுவாக இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களின் மகன்கள் ஜொலித்தது இல்லை என்ற மரபு இருந்து வருகிறது. சுனில் கவாஸ்கர், ரோஜர் பின்னி போன்றவர்களின் மகன்கள், என்ன காரணத்தினாலோ ஜொலிக்கவில்லை.
இதைவிட, ஊடகத்தின் வெளிச்சம், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற அழுத்தம் அர்ஜூனுக்கு மறைமுகமான அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் இந்த மறைமுக அழுத்தத்தில் இருந்து தன்னை விலக்கி, பந்துவீச்சாளராக அல்லது பேட்ஸ்மேனாக அல்லது ஆல்ரவுண்டராக இதில் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்தப் போகிறார் என்பதில்தான் அவரின் வெற்றி அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












