அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் விக்கெட்; 'வெளிநாட்டு உதவியால்' ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

193 ரன்கள் இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 178 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெற்றியைப் பெற்றுத் தர அந்த அணியின் வெளிநாட்டு வீரர்கள் கணிசமாக உதவினர்.

அந்த அணி 192 ரன்கள் சேர்க்க கடைசி வரை களத்தில் இருந்து உதவினார் கேமரூன் கிரீன். பந்துவீச்சிலும் 4 ஓவர் வீசி 29 ரன்கள் விட்டு கொடுத்ததுடன் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரமின் விக்கெட்டை முக்கியமான தருணத்தில் வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மும்பையின் இம்பாக்ட் பிளேயராக உள்ளே வந்த மெரிடித், நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்களை கொடுத்து 2 விக்கெடுகளை வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு உதவினார்.

மற்றொரு வெளிநாட்டு வீரரான பெஹ்ரன்டோர்ஃப் மும்பையின் பவுலிங் அட்டாக்கில் முக்கிய பங்கு வகித்தார். 12 ரன்னுக்குள் சன்ரைசர்ஸ் அணியின் 2 விக்கெட்டை வீழ்த்திய இவர், 4 ஓவர் வீசி 37 ரன்னை விட்டுக் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 4 முக்கிய கேட்சை பிடித்து அந்த அணி வெற்றி பெற உதவியாக இருந்தார் டிம் டேவிட். இதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் வெற்றியை உறுதி செய்ய சன்ரைசர்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தரை ரன் அவுட்டாக்கினார்.

6000 ரன்களை கடந்த ரோகித் சர்மா

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியின் போது ஓய்வில் இருந்ததால் கேப்டன் பொறுப்பை ஏற்காத ரோகித் சர்மா, இந்த போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

பேட்டிங் செய்ய மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினார்கள். ஹைதராபாத் அணிக்காக பவுலிங் அட்டாக்கை தொடங்கினார் புவனேஷ்வர் குமார்.

மூன்றாவது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை தனது பேட்டால் தண்டித்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் ஹாட்ரிக் பவுண்டரிகளாக மாற்றினார் ரோகித்.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார் ரோகித் சர்மா.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

ஐபிஎல் தொடரில் தனது 232வது ஆட்டத்தை விளையாடும் ரோகித் சர்மா இந்த சாதனையை செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் மட்டுமே இதுவரை 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

தொடர்ந்து இஷான் கிஷனுடன் சேர்ந்து ரன்களை குவித்து வந்த ரோகித்தை வெளியேற்றினார் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

முன்னதாக 5வது ஓவரை வீச நடராஜன் வந்த போது, அந்த ஓவரில் இரண்டு ஃபோர்களை அடித்தார் ரோகித். ஆனால் அதே ஓவரிலேயே நடராஜன் பந்தில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார் ரோகித் சர்மா. 18 பந்துகளில் 28 ரன்களுடன் அவரது இன்னிங்சிஸ் முடிவுக்கு வந்தது.

நிதானத்தை கடைபிடித்த மும்பை அணி

6வது ஓவரில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை லெக் சைடில் இஷான் கிஷன் தூக்கி அடித்தார். ஆனால் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹைதராபாத் அணி தவறவிட்டது

விக்கெட்டை நோக்கி ஓடி வந்த மயாங்க் அகர்வால் கடினமான அந்த கேட்சை தவறவிட்டார்.

கேமரூன் கிரீனுடன் இணைந்து விளையாடிய இஷான் கிஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

5வது ஓவரில் ரோகித் சர்மாவின் விக்கெட் வீழ்ந்த பிறகு 9வது ஓவர் வரை இருவரும் இணைந்து சிங்கிள் மூலமாக மட்டுமே ரன்களை சேர்த்தனர். இந்த ஓவர்களில் மும்பை அணி இரண்டு பந்துகளை மட்டுமே எல்லைக் கோட்டை நோக்கி அனுப்பியது. இதனால் அந்த அணியின் ரன்ரேட் 7.5 ஆக இருந்து வந்தது.

விக்கெட்டை இழக்காமல் ஆட வேண்டும் என்று கவனத்துடன் ஆடியது இஷான் கிஷன் - கிரீன் ஜோடி. பத்தாவது ஓவரில் இஷான் கிஷன் அடித்த பந்து டாப் எட்ஜானது. ஆனால் யாரும் இல்லாத இடத்தில் பந்து விழுந்ததால் மீண்டும் ஒருமுறை சேவ் ஆனார் இஷான்.

10 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை குவித்தது.

பார்ட்னர்ஷிப்பை உடைத்த சன்ரைசர்ஸ்

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

மும்பை இந்தியன்ஸ் அணி நிதானமாக விளையாடினாலும் அதன் விக்கெட்டுகளை ஹைதராபாத் அணியால் வீழ்த்த முடியாமல் இருந்தது.

சீரான வேகத்தில் ரன்களை குவித்த இந்த ஜோடியை 12வது ஓவரில் பிரித்தார் ஜேன்சன். மிட் ஆஃப் திசையில் இஷான் கிஷன் அடித்த பந்தை அபாரமாக பிடித்தார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம். 31 பந்துகளில் 38 ரன்களுடன் இஷான் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வந்தவுடன் ஒரு சிக்ஸை பறக்க விட்டார். ஆனால் ஜேன்சனின் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை டைவ் அடித்து ஒரு கையால் கேட்ச் பிடித்தார் மார்க்ரம். 'எங்கே அடித்தாலும் அங்கே நான் இருப்பேன்' என்பது போல மும்பை அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை கேட்ச் பிடித்தார் மார்க்ரம்.

டெத் ஓவர்களில் மும்பை அணி

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

மும்பை அணியின் முதல் 3 விக்கெட்டுகளும் பெரிய ஸ்கோரை சேர்க்காமல் வெளியேறிய நிலையில், அந்த அணிக்கு ஒரு நல்ல ஓவர் அமையவேயில்லை.

15வது ஓவரில் அந்த குறையை திலக் வர்மாவும், கேமரூன் கிரீனும் தீர்த்து வைத்தனர். ஜேன்சன் வீசிய அந்த ஓவரில் 2 ஃபோர், 2 சிக்ஸை மும்பை இந்தியன்ஸ் அடித்ததன் மூலம் 21 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் மும்பை அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் மும்பை அணி 150 ரன்களை கடந்தது.

ஆனால் ஹைதராபாத் பவுலர்கள் இந்த ஹார்மோனியை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. 17வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், திலக் வர்மாவை வெளியேற்றினார். 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்த திலக் வர்மாவின் அற்புதமான இன்னிங்சிஸ் அத்துடன் முடிவுக்கு வந்தது.

மும்பைக்காக தொடர்ந்து களத்தில் இருந்த கிரீன், அரைசதத்தை பதிவு செய்தார். நடராஜன் வீசிய 18வது ஓவரில் 4,4,4,6 என அடுத்தடுத்து பந்தை பவுண்டரி லைனுக்கு விரட்டி அடித்தார் கிரீன்.

கடைசி ஒவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் இரண்டு ஃபோர் அடிக்க அந்த அணியின் ஸ்கோர் 190ஐ கடந்தது.

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கடைசி வரை களத்தில் நின்ற கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டும், ஜேன்சன் 2 விக்கெட்டும், நடராஜன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

விக்கெட்டுகளை பறிகொடுத்த சன்ரைசர்ஸ்

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

193 ரன்களை இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கை தொடங்கியது. அந்த அணிக்காக ஹாரி புரூக்கும், மயாங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் ஓவரை வீச உள்ளே வந்தார் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர்.

சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தது மும்பை அணி. பெஹ்ரன்டோர்ஃப் வீசிய இரண்டாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரரான ஹாரி புரூக் 9 ரன்னில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து பெஹ்ரன்டோர்ஃப் வீசிய அடுத்த ஓவரில் ராகுல் திரிபாதி அவுட்டானர். 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியை மீட்க மயாங்க் அகர்வாலும், மார்க்ரமும் இணைந்தனர்.

ஆனால் மும்பை அணியின் பவுலிங் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க இருவரும் தடுமாறினர். 6 ஓவர் முடிவில் பவர்பிளே முடியும் போது சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து இருந்தது.

அந்த அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 151 ரன் தேவைப்பட்ட நிலையில், ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க சன்ரைசர்ஸ் அணி போராடியது.

மார்க்ரமும், மயாங்க் அகர்வாலும் இணைந்து அந்த வேலையை செய்யத் தொடங்கிய நேரத்தில் 9வது ஒவரில் இந்த ஜோடியை பிரித்தார் கிரீன்.

அடித்து விளையாடத் தொடங்கிய மார்க்ரம், கேமரூன் கிரீனின் ஸ்லோபால் மூலமாக கேட்ச் கொடுத்து அவுட்டானர். 22 ரன்களுடன் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே அபிஷேக் சர்மாவும் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றார்.

பியூஸ் சாவ்லாவின் சுழலில் சிக்கி அவர் 1 ரன்னில் வெளியேறினார்.

'கிளாசிக்' கிளாசன்

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

ஹைதராபாத் அணியை சரிவில் இருந்து மீட்க மயாங்க் அகர்வாலுடன் களம் கண்டார் தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசன்.

வெற்றி பெற சராசரியாக ஒரு ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த இரண்டு பேரும் பொறுப்புடன் ஆடினார்கள். மெதுவாக கிடைத்த வாய்ப்புகளை பவுண்டரியை நோக்கி அடித்து விளையாடி வந்தனர்.

14வது ஓவரை வீச பியூஸ் சாவ்லா வந்தவுடன் தனது மட்டையை வேகமாக சுழற்றத் தொடங்கினார் கிளாசன். அதுவரை மைதானத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ரசிகர்கள் தங்கள் அணியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த நிலையில், கிளாசன் அவர்களின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துத்தார்.

பியூஸ் சாவ்லாவின் அந்த ஓவரில் இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் நபராக இருப்பார் என்று மும்பை அணி கவலை கொண்டது.

அதிரடியை தொடர்ந்த கிளாசனின் விக்கெட்டை அதே ஓவரில் தனது அனுபவத்தால் வீழ்த்தி மும்பையை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார் பியூஸ் சாவ்லா.

கிளாசன் கொடுத்த கடினமான கேட்சை தவறு ஏதும் செய்யாமல் அட்டகாசமாக பிடித்து மும்பைக்கு உதவினார் டிம் டேவிட். 16 பந்துகளில் 36 ரன்களுடன் வெவிலியன் திரும்பினார் கிளாசன்.

வெற்றிக்காக போராடிய சன்ரைசர்ஸ்

ஐபிஎல், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், BCCI/ IPL

கிளாசனின் விக்கெட்டை இழந்த அடுத்த ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயாங்க் அகர்வாலின் விக்கெட்டை மும்பையின் இம்பாக்ட் பிளேயர் வீழ்த்தினார்.

மும்பை அணிக்காக பவுலிங்கில் இம்பாக்டை உருவாக்க வந்திருந்த மெரிடித், மயாங்கின் விக்கெட்டை எடுத்தார். 48 ரன்னில் மயாங்க் அகர்வால் வெளியேற சன்ரைசர்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து இருந்தது.

அந்த அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்ல இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார் அப்துல் சமத். அவருடன் இணைந்த ஜேன்சன் சில பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் ஜேன்சனும் அதிக நேரம் களத்தில் நிற்கவில்லை.

மெரிடித்தின் பந்தை மேலே அடித்து ஜேன்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மீண்டும் விக்கெட்டாக மாற்ற உதவினார் டிம் டேவிட். இந்த இன்னிங்சிஸ் டிம் டேவிட் பிடித்த நான்காவது கேட்ச் இதுவாகும்.

அடுத்து வாஷிங்டன் சுந்தரும் டிம் டேவிட்டால் ரன் அவுட் செய்யப்பட ஹைதராபாத் அணி தோல்வி பாதையில் தவழத் தொடங்கியது.

19வது ஓவரில் களத்தில் இருந்த புவனேஷ்வர் குமாரும், அப்துல் சமத்தும் வெற்றிக்கு தேவையான ஹிட் ஷாட்களை அடிக்க முடியாமல் தடுமாறினர்.

12 பந்துகளில் 24 ரன் தேவைப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு 19வது ஓவரில் வெறும் 4 ரன் மட்டுமே கிடைத்தது.

20வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அந்த ஓவரின் தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் அணியின் இம்பாக்ட் பிளேயர் அப்துல் சமத் ரன் அவுட்டானார்.

இம்பாக்ட் எதுவும் உருவாக்க முடியாமல் 12 பந்துகளில் 9 ரன்னுடன் அவர் வெளியேறினார்.

10வது விக்கெட்டாக புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியை ஆல் அவுட் ஆக்கியது மும்பை அணி.

அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

இறுதியில் 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு சன் ரைசர்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: