ரத்தன் டாடாவின் முன்னோர்கள் யார்? டாடா குடும்பத்தின் பின்னணி என்ன?

ரத்தன் டாடாவின் முழுப் பெயர் ரத்தன் நவல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்தன் டாடாவின் முழுப் பெயர் ரத்தன் நவல் டாடா

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் அக்டோபர் 9ஆம் தேதி காலமானார்.

ரத்தன் டாடா தொழில்துறை உலகில் முக்கியமான ஒரு பெயர், அந்தப் பெயருக்கான மரபு அழிக்க முடியாததாக மாறிவிட்டது.

டாடா குழுமம் இன்று மட்டுமல்ல, பல்லாண்டுகளாக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரத்தன் டாடா அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கம். ரத்தன் டாடாவை மட்டுமின்றி அவரது முழு குடும்பத்தைப் பற்றியும் இங்கு தெரிந்துகொள்வோம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜாம்ஷெட்ஜி நௌஷிர்வாஞ்சி டாடா (1839-1904)

இன்றைய டாடா குழுமம் 1870ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி நௌஷிர்வாஞ்சி டாடாவால் நிறுவப்பட்டது.

இவர் நௌஷிர்வாஞ்சி டாடா மற்றும் கவாஸ்ஜி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ஜவுளி, மின்சாரம், அறிவியல், எஃகு, விருந்தோம்பல் துறைகளில் இவர் முதலீடு செய்தார்.

ஜாம்ஷெட்ஜி டாடா, ஹிராபாய் டபூவை மணந்தார். இவர்களுக்கு டோராப்ஜி டாடா, துன்பாய் டாடா, ரத்தன்ஜி டாடா என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜாம்ஷெட்ஜி நௌஷிர்வாஞ்சி டாடா

சர் டோராப்ஜி டாடா (1839-1904)

சர் டோராப்ஜி டாடா, ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன். சர் டோராப்ஜி டாடா, அவரது சகோதரர் சர் ரத்தன்ஜி டாடாவுடன் சேர்ந்து, டாடா அறக்கட்டளை மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு அடித்தளமிட்டார்.

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாடா குடும்பத்தின் குடும்பப் புகைப்படம்

அவர் பிப்ரவரி 14, 1898 அன்று லேடி மெஹர்பாய் டாடாவை மணந்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இவரது தொழில்துறை பங்களிப்பிற்காக 1910ஆம் ஆண்டில் சர் டோராப்ஜி டாடாவுக்கு நைட் (Knight) பட்டம் வழங்கப்பட்டது.

சர் டோராப்ஜி டாடா 1920ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தனது சொந்த செலவில் இந்திய வீரர்களை அனுப்பி வைத்தார்.

லேடி மெஹர்பாய் டாடா (1879- 1931)

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லேடி மெஹர்பாய் டாடா

லேடி மெஹர்பாய் டாடா சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.

டாடா அறக்கட்டளையின் கூற்றுப்படி, டாடா நிறுவனம் நெருக்கடியில் இருந்தபோது, அவர் தனது விலைமதிப்பற்ற வைரங்களை அடமானம் வைத்து டாடா நிறுவனத்தைக் கடனில் இருந்து காப்பாற்றினார்.

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை இயற்றுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார் என்று டாடா அறக்கட்டளை கூறுகிறது. இந்தச் சட்டம் 1929ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது சாரதா சட்டம் (Sharda Act) என்று அழைக்கப்படுகிறது.

டாடா அறக்கட்டளைகளின் கூற்றுப்படி, அரசு இந்தச் சட்டத்தை உருவாக்கும்போது, லேடி மெஹர்பாய் டாடா ஆலோசனை வழங்கியதோடு மட்டுமின்றி, இந்தச் சட்டத்தை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பிரபலப்படுத்தவும் அவர் முயற்சிகளை எடுத்தார்.

சர் ரத்தன்ஜி டாடா (1871-1918)

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

ரத்தன் டாடாவின் தாத்தாவின் பெயர் சர் ரத்தன்ஜி டாடா. இவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் இரண்டாவது மகன். இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்தன. இவரது முதல் திருமணம் லேடி நவாஜ்பாயுடன் நடந்தது.

சர் ரத்தன்ஜி டாடா 1928 முதல் 1932 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். சர் ரத்தன்ஜி டாடாவுக்கும் நவாஜ்பாய்க்கும் குழந்தைகள் இல்லை.

அவர்கள் இருவரும் ரத்தன் டாடாவின் தந்தையான நவல் டாடாவை தத்தெடுத்தனர். சர் ரத்தன்ஜி டாடா, சுசேன் பிரையர் என்ற பிரெஞ்சு பெண்ணை இரண்டாவது முறையாக மணந்தார்.

இந்த இரண்டாவது திருமணத்தில் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா. பின்னாளில் அவர் ஜேஆர்டி டாடா என்று பிரபலமானார்.

லேடி நவாஜ்பாய் டாடா (1877 - 1965)

லேடி நவாஜ்பாய், சர் ரத்தன்ஜி டாடாவின் முதல் மனைவி மற்றும் ரத்தன் டாடாவின் பாட்டி ஆவார். இவர் 1925இல், டாடா சன்ஸ் வாரியத்தின் முதல் பெண் இயக்குநர் ஆனார்.

‘ரத்தன் டாடா அறக்கட்டளையின்’ தலைவராக அவர் பதவியேற்றதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கான திறன் மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கினார். இது 1926ஆம் ஆண்டு ரத்தன் டாடா கழகமாக மாற்றப்பட்டது.

டாடா அறக்கட்டளையின் கூற்றுப்படி, லேடி நவாஜ்பாய் தனது வாழ்நாளில் பல வீடுகளை நன்கொடையாக அளித்துள்ளார்.

நவல் டாடா (1904- 1989)

நவல் டாடா, சர் ரத்தன்ஜி டாடா மற்றும் லேடி நவாஜ்பாயின் வளர்ப்பு மகனும், ரத்தன் டாடாவின் தந்தையும் ஆவார்.

நவல் டாடாவும் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். அவரது முதல் மனைவியின் பெயர் சூனி டாடா. அவரது இரண்டாவது மனைவி சிமோன் டனோயர் என்ற சுவிஸ் பெண்.

நவல் டாடா மற்றும் அவரது முதல் மனைவி சூனி டாடாவுக்கு ரத்தன், ஜிம்மி என இரண்டு மகன்கள் இருந்தனர்.

நவல் டாடாவுக்கும் அவரது இரண்டாவது மனைவி சிமோன் டனோயருக்கும் ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் நோயல் டாடா.

நவல் 1930ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் தொழிலாளர் நலனுக்காக அதிகம் வேலை செய்தார் மற்றும் ‘ரத்தன் டாடா அறக்கட்டளையை’ நிர்வகித்தார்.

நவல் டாடா, 1946ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.

ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (1904 - 1993)

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

பட மூலாதாரம், Tata Memorial Archive

படக்குறிப்பு, ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (ஜேஆர்டி)

ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (ஜேஆர்டி), சர் ரத்தன்ஜி டாடா, சுசேன் பிரையர் ஆகியோரின் மகன்.

ஜேஆர்டி-க்கு நெருக்கமானவர்கள் அவரை (Jeh) என்றுதான் அழைப்பார்கள்.

ஜேஆர்டி 1925ஆம் ஆண்டில், டாடா குழுமத்தின் ஒரு பயிற்சி ஊழியராகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.

ஜே.ஆர்.டி.தான் விமானம் ஓட்டுவதற்கு பைலட் உரிமம் பெற்ற முதல் இந்திய குடிமகன்.

‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற நிறுவனத்தை 1932ஆம் ஆண்டில், ஜேஆர்டி நிறுவினார், அது பின்னாளில் ‘ஏர் இந்தியா’ என அறியப்பட்டது.

ரத்தன் டாடா (1937- 2024)

ஜாம்ஷெட்ஜி டாடா முதல் ரத்தன் டாடா வரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்தன் டாடா ஒரு பிரபலமான தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் தனது எளிமைக்காகவும் அறியப்பட்டார்

ரத்தன் டாடாவின் முழுப் பெயர் ரத்தன் நவல் டாடா. அவர் நவல் டாடா மற்றும் சூனி டாடாவின் மகன்.

அவர் 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று பிறந்தார். பெற்றோர் விவாகரத்து செய்யும்போது ரத்தனுக்கு 10 வயதுதான்.

ரத்தனுக்கு 18 வயதாகும்போது, ​​அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிஸ் பெண்ணை மணந்தார். அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்ஷெட்ஜி ஜிஜீபாயை மணந்தார்.

ரத்தன் அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார். 1962ஆம் ஆண்டில், ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

ரத்தன் டாடா ஒரு பிரபலமான தொழிலதிபர் மட்டுமல்ல, அவர் தனது எளிமைக்காகவும் அறியப்பட்டார்.

ஜிம்மி நவல் டாடா

நவல் டாடா மற்றும் சூனி டாடாவின் மகனும், ரத்தன் டாடாவின் இளைய சகோதரருமான ஜிம்மி டாடா ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்.

மும்பை, கொலாபாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசிக்கிறார்.

டாடா குழுமத்தில் அவருக்கும் பங்கு உள்ளது. ரத்தன் டாடாவை போலவே அவருக்கும் திருமணம் ஆகவில்லை.

நோயல் டாடா

நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயல் டாடா, 40 ஆண்டுகளாக டாடா குழுமத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்

நோயல் டாடா, நவல் டாடா மற்றும் சிமோன் டாடாவின் மகன் மற்றும் ரத்தன் நவல் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

'தி இந்து' நாளிதழ் செய்தியின்படி, “நோயல் டாடா தற்போது டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், ட்ரெண்ட் (Trent), வோல்டாஸ் (Voltas), டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.”

“டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார்.”

நோயல் டாடா, 40 ஆண்டுகளாக டாடா குழுமத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ‘சர் ரத்தன் டாடா அறக்கட்டளை’ மற்றும் ‘சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின்’ அறங்காவலராகவும் உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)