ஹரியாணா: காங்கிரஸ் தோல்வியை தொடர்ந்து பாஜக ஜிலேபியை டிரெண்டாக்குவது ஏன்?

ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜக ஆதரவாளர்கள் ஜிலேபியுடன் கொண்டாடினர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜக ஆதரவாளர்கள் ஜிலேபியுடன் கொண்டாடினர்

ஹரியாணாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) அன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியாணாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாகத் தோன்றியது.

பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை குறித்துப் பேசப்பட்டதாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டதாலும் தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் ஒரு கட்டத்தில் திடீரென நிலைமை மாறி, பாஜக முன்னிலை பெற்றது. அதன் பிறகு காங்கிரஸை விட பாஜக பின்தங்கவில்லை.

ஹரியாணா சட்டப்பேரவை 90 தொகுதிகளைக் கொண்டது. இதில், பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஹரியாணாவில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததால் அக்கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்து வெற்றி தங்களுக்குத்தான் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடகங்களில் முன்பு தெரிவித்த கருத்துகள் குறித்து சிலர் கிண்டல் செய்தனர். இதன் அடிப்படையில் ஜிலேபி விவகாரம் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் டிரெண்டானது.

ஹரியாணாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, ஜிலேபியை முன்னிறுத்தி ஹரியாணாவில் வேலைவாய்ப்பு பிரச்னை குறித்த கேள்விகளை எழுப்பினார்.

ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக ஹரியாணாவில் அக்கட்சி தோல்வி அடைந்தது. அதன் பிறகு, ஜிலேபி விவகாரம் சமூக ஊடகங்களில் டிரெண்டாக தொடங்கியது.

ஜிலேபி விவகாரம் எப்படி தொடங்கியது?

மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஹரியாணாவில் கட்சியின் வெற்றியை காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஜிலேபி தயாரித்து கொண்டாடினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜிலேபி தயாரித்து வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தபோது, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "ராம்-ராம் ஹரியாணா. ஜிலேபி தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டனர்.

காங்கிரஸூக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படிப் பதிவிட்டனர். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெறுவது தெளிவாகத் தெரிய வந்தபோது பாஜக கட்சியினர் மத்தியில் உற்சாகமான சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக "ராம்-ராம் ஹரியானா. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால் 'மதுரம் ஜி' (கோஹானாவில் இருந்து) உங்கள் ஜிலேபி, கடாய், கடை, நெய், தானியங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்," என்று ஹரியாணா பாஜக பதிவிட்டது.

பாஜக பிரமுகர் நரேந்திர சலூஜா ஒரு வீடியோவை பகிர்ந்து, "மத்திய பிரதேச காங்கிரஸே அதன் தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்கிறது. ராகுல் காந்தியின் ஜிலேபி தொழிற்சாலை பற்றிய கருத்து நாடு முழுவதும் கேலி செய்யப்பட்டு வருகிறது. இதைக் கேலி செய்வதை காங்கிரஸ் கட்சியினராலேயே நிறுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவில், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஜிலேபி தயாரிப்பது போல் இருந்தது. மாலையில் ஜிலேபி ஆர்டர் செய்ததற்கான ரசீது படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “ராகுல் காந்தி, ஜிலேபியை எப்படி ருசித்தீர்கள்?” என்று ஆந்திர பாஜக கட்சி குறிப்பிட்டிருந்தது.

“ஹரியாணாவில் பாஜக 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன்," என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றல் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை ஜிலேபியுடன் தொடர்புபடுத்தி கேலி செய்வது போன்ற மீம்ஸ்-ஐ ஒருவர் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் எழுந்த கிண்டல்கள்

ஹரியாணாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஜிலேபி சாப்பிட்டார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹரியாணாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு சமூக ஊடக பயனர்கள் பலர் தங்களது பதிலைத் தெரிவித்துள்ளனர்.

ராகுல் ஷெகாவத் என்ற சமூக ஊடக பயனர் ஒருவர் ஜிலேபியின் படத்தைப் பகிர்ந்து, "பிரதமர் மோதி அக்டோபர் 8ஆம் தேதியை ஜிலேபி தினமாக அறிவிக்க வேண்டும். ஹரியாணா தேர்தல் போக்குகளுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜிலேபியின் பெயரால் கிண்டல் செய்யப்படுகிறார்" என்று பதிவிட்டார்.

சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவு வெளியான தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தால் ஜிலேபியை வாங்கியதாகக் கூறினர்.

"நண்பர்களே, ஜிலேபியை ஆர்டர் செய்யுங்கள். ஹரியாணாவில் காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலை வகிக்கிறது, நாம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளோம். ஜம்மு காஷ்மீரிலும் ஆட்சி அமைக்கிறோம்," என்று வழக்கறிஞர் மும்தாஜ் என்ற பயனர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், முடிவுகளில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, சமூக ஊடக பயனர்கள் அதை கிண்டல் செய்யத் தொடங்கினர். பிரதமர் மோதி ஜிலேபி சாப்பிடுவது போன்ற AI உருவாக்கிய படத்தை ஒரு பயனர் பதிவிட்டு, "பிரதமர் மோதி ஹரியாணா தேர்தலை ஜிலேபி சாப்பிட்டபடி ரசிக்கிறார்" என்று பதிவிட்டுள்ளர்.

ஒரு பயனர் ஜிலேபியின் படத்தைப் பதிவிட்டு, "இந்தத் தேர்தலின் வெற்றியாளர் ஜிலேபிதான்," என்று பதிவிட்டார். மற்றொரு பயனர் ஜிலேபியின் படத்தை பதிவிட்டு, "ஜிலேபியும் காவி நிறத்தில் இருப்பதால் அதுவும் அதன் விஸ்வாசத்தை காட்டுகிறது", என்று பதிவிட்டார்.

ஹரியாணா தேர்தலில் ஜிலேபி விவாதப் பொருளானது எப்படி?

கோஹானா பேரணியின்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடா ராகுல் காந்திக்கு மேடையில் மதுரம் கடையின் ஜிலேபியை பரிசளித்தார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கோஹானா பேரணியின்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடா ராகுல் காந்திக்கு மேடையில் மதுரம் கடையின் ஜிலேபியை பரிசளித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோஹானா பேரணியின்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்திர சிங் ஹூடா ராகுல் காந்திக்கு மேடையில் மதுரம் கடையின் ஜிலேபியை பரிசளித்தார்.

அதன் சுவையைப் பாராட்டிய ராகுல், அதன் ஏற்றுமதி குறித்தும் பேசினார். அந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டது.

"பிரியங்காவுக்கு ஜிலேபி பிடிக்கும். இதைச் சாப்பிட்டுவிட்டு, 'இன்று என் வாழ்வின் சிறந்த ஜிலேபியை சாப்பிட்டுவிட்டேன். உனக்கும் இதைக் கொண்டு வருகிறேன்' என்று மெசேஜ் செய்தேன்," என்று ராகுல் கூறியிருந்தார்.

மேலும் அதில், "ஹரியாணாவை சேர்ந்தவர்களின் ரத்தமும் வியர்வையும் கலந்துள்ளது. இந்த ஜிலேபியை இந்தியா முழுவதும் அனுப்ப வேண்டும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் இதை அனுப்ப வேண்டும்," என்று ராகுல் கூறுகிறார்.

இதை சாக்காக வைத்து, வேலைவாய்ப்பு பிரச்னை குறித்துப் பேசிய ராகுல், "இதன் மூலம் மக்களுக்கு வேலை கிடைக்கும். ஆயிரக்கணக்கானோர் ஜிலேபி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்ய முடியும்" என்றார்.

அப்போது அவர் தொழிற்சாலையில் ஜிலேபி தயாரிப்பதாகக் கூறியதை வைத்து பாஜக ஆதரவாளர்கள் அவரைக் கேலி செய்தனர், அது தொடர்பாகப் பல மீம்ஸ்களும் பகிரப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)