சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட்: தீட்சிதர்கள் - விசிகவினர் இடையே என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாடியதை வீடியோ எடுத்த நபரைத் தாக்கியதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கோவில் வளாகத்திற்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டை தீட்சிதர்கள் மறுத்துள்ளனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்மையில் நடந்தது என்ன?

கோவிலுக்குள் கிரிக்கெட்டா?
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்திற்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் வீடியோ எடுத்ததால், தன்னை தீட்சிதர்கள் சேர்ந்து தாக்கியதாக சிதம்பரம் காவல் நிலையத்தில் வல்லம்படுகையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தினசரி இரவு 10 மணியளவில் அடைக்கப்படும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை பகுதி செயலாளராக உள்ள இளையராஜா, அக்டோபர் 8ஆம் தேதியன்று இரவு 9.10 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
அன்று கோவில் வளாகத்தில் என்ன நடந்தது என்று பிபிசி தமிழிடம் இளையராஜா பேசினார்.
“அன்றிரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றேன். கோவிலுக்குள் ஆயிரம் கால் மண்டபத்தின் அருகில் நடந்து செல்லும்போது எனது காலுக்கடியில் பந்து ஒன்று வந்து விழுந்தது. அங்கு பார்த்தபோது, தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அதை என்னுடைய செல்போனில் படமெடுத்தேன்,” என்று இளையராஜா விவரித்தார்.
இதையடுத்து சில தீட்சிதர்கள் தன்னைச் சுற்றி வளைத்து திட்டியதாகவும், செல்போனை பறித்துக்கொண்டு விரட்டி அடித்ததாகவும் தன்னுடைய புகார் மனுவில் இளையராஜா தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் தாக்கியதில் காயமடைந்ததாகவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
தீட்சிதர்களை கண்டித்து ஆர்பாட்டம்

இளையராஜா புகார் அளித்த மறுநாள், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மேலவீதியில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், தெய்வீக பக்தர்கள் பேரவையின் தலைவருமான ஜெமினி என்.ராதா, "பல்லவ, சேர ,சோழ, பாண்டிய, நாயக்கர் மன்னர்கள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட, உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தற்போது கிரிக்கெட் மைதானமாக மாறியிருப்பது வேதனையாக உள்ளது. இப்போது ஆகம விதி என்ன ஆனது என்று தீட்சிதர்கள்தான் கூற வேண்டும்,” என்றார்.
சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
தீட்சிதர்கள் விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை படமெடுத்த நபரை தீட்சிதர்கள் யாரும் தாக்கவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய சிதம்பரம் நடராஜர் கோவில் அறங்காவலர்களில் ஒருவரான பைரவதாசர் ஐயப்ப தீட்சிதர் தெரிவித்தார்.
''இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மன்னார்குடி உள்ளிட்ட பல கோவில்களில் பூங்காக்கள் உள்ளன. அங்கு வரும் குழந்தைகள் பூங்காவில் விளையாடுகின்றனர். சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள், இங்குள்ள சிறிய பகுதிக்குள் வசித்து வருகிறோம். அதனால் இங்குள்ள குழந்தைகள் உள்பட யாரும் வெளியில் எங்கும் விளையாட செல்வதில்லை'' என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “இங்கு கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுபவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்ட நபர்கள். கூட்டம் இல்லாத தனியான ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அப்போது அனுமதி இல்லாமல் போட்டோ எடுத்ததை கேள்வி எழுப்பியுள்ளனர்'' என்கிறார் அவர்
கிரிக்கெட் விளையாடிய நபர்கள் செல்போனை பறித்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுவது உண்மையில்லை என்று அவர் கூறுகிறார்.
''அனுமதி இல்லாமல் செல்போனில் புகைப்படம் எடுத்த நபரை எதிர்த்து கேள்வி மட்டுமே அவர்கள் கேட்டனர்'' என்று கூறுகிறார், பைரவதாசர் ஐயப்ப தீட்சிதர்.
இந்த விவகாரத்தை காழ்புணர்ச்சியுடன் பெரிதாக்க சிலர் முயல்வதாக அவர் கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அனைவருக்கும் உடற்பயிற்சி வேண்டும். கோவில் கருவறையில் யாரும் விளையாடவில்லை, கோவில் வளாகத்தில்தான் விளையாடினார்கள. சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்தத் தவறும் இல்லை'' என்று தெரிவித்தார்.
சிதம்பரம் கோவிலில் கிரிக்கெட் விளையாடிய போது படமெடுத்த இளையராஜா தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சிதம்பரம் நகர காவல் நிலைய அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காவல் உதவி ஆய்வாளர், ''இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை செய்யப்படுகிறது. செல்போன் பறிமுதல், தாக்குதல் தொடுத்தது தொடர்பாக ஐந்து தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படமெடுத்த செல்போனை ஆய்வு செய்து வருகிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












