தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் - கட்சிக்குள் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ச.பிரசாந்த்.
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் சிக்கிய 3 பாஜக நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பல நாட்கள் கழித்த பிறகே இந்த நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட நிர்வாகிகளை களையெடுக்கும் பணியை தமிழ்நாடு பாஜக தொடங்கியுள்ளதா? மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழிசை பேட்டியால் சர்ச்சை
‘‘கட்சியில் எனக்கு வருத்தம் என்னவென்றால், சமீப காலமாக சமூகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.கவில் பொறுப்புகளில் உள்ளனர். இதைத் தவிர்த்து, கட்சியில் உண்மையில் கடுமையாக உழைக்கக் கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்,’’ என்று தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜன் சமீபத்தில் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்காக தமிழிசையை விமர்சித்து, பாஜக ஓபிசி பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கடந்த 19ம் தேதி திருச்சி சூர்யாவின் பதவி பறிக்கப்பட்டது.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பாஜக தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று விமர்சித்த அக்கட்சியில் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளராக இருந்த கல்யாணராமனும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், @TAMILISAIOFFICE/X
குற்றப் பின்னணி கொண்டவர்கள் நீக்கம்
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.கவில் பொறுப்புகளில் உள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இந்த நிலையில்தான், குற்ற வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் ஆ்கியோரை கட்சியில் இருந்து நீக்கி ஜூன் 23ம் தேதி தமிழ்நாடு பாஜக அறிவிப்பு வெளியிட்டது.
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், அகோரம் மும்பையில் மார்ச் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பாஸ்கரும் செந்திலரசனும் கடந்த மே மாதம் திருவாரூர் பா.ஜ.க முன்னாள் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் மதுசூதனனை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், X/BJP Tamilnadu
"பாஜகவில் நடைமுறைகளை மாற்றிவிட்டனர்"
தமிழ்நாடு பா.ஜ.கவில் பழைய நடைமுறைகளை மாற்றிவிட்டனர் என்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் பா.ஜ.கவில் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்.
"பத்திரிகையாளராக கமலாலயத்தில் 2009 காலகட்டத்தில் இணையதளம், ஒரே நாடு ஆகியவற்றில் பணிபுரிந்து இருக்கிறேன். அது இல.கணேசன் காலகட்டம். அப்போது, பா.ஜ.கவில் உறுப்பினர் ஆவதற்கே பலகட்ட நடைமுறைகள் இருந்தன. குற்றப்பின்னணி உள்ளோர் உறுப்பினர்கள் ஆக முடியாது.
இல. கணேசனுக்குப்பின் வந்த பொன்.ராதாகிருஷ்ணன் காலத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதன்பின் எல்லாம் மாறிவிட்டது. தற்போது, தமிழக பா.ஜ.கவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழிசையின் கருத்துக்குப் பிறகாவது குற்றப்பின்னணி கொண்டவர்களை கட்சியில் இருந்து அண்ணாமலை களைவார் என நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
‘அண்ணாமலையின் தாமதமான நடவடிக்கை’
‘‘தற்போது இரண்டு மாவட்டத்தலைவர் உள்பட 3 நிர்வாகிகளை அண்ணாமலை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்தும் தற்போது தான் அவர்களை நீக்க வேண்டுமென அண்ணாமலைக்கு தோன்றியதா? அவர் ‘ஜெட்’ வேகத்தில் கட்சியை வழிநடத்துவதற்கு இதுவா உதாரணம்?,’’ என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழிசை கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து தான், அண்ணாமலை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
"தனக்கு நெருக்கமானவர்கள் மீது அண்ணாமலை நடவடிக்கை எடுக்காமல் விடுகிறார். தனக்கு பிரச்னை என்று வரும் போது நெருக்கமானவர்களை கழற்றி விடுகிறார். அண்ணாமலையின் இது போன்ற மிகத் தாமதமான நடவடிக்கைகள் கட்சிக்கும் அவருக்கும் மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தாது" என்று அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் விளக்கம்
குற்றப் பின்னணி கொண்டவர்கள் மிகவும் தாமதமாகவே நீக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘பொறுப்பாளர்கள் மீது குற்றம்சாட்டு எழுந்தால், தகுந்த ஆதாரங்களை சேகரித்து விசாரித்து தான் கட்சியில் இருந்து நீக்குகிறோம். இது தாமதமான நடவடிக்கை என்று சொல்ல முடியாது,’’ என்று விளக்கம் அளித்தார்.
‘‘கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவோர் மீது அண்ணாமலை நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்சியின் வளர்ச்சிக்கு சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வருகிறார்,’’ என்று திருப்பதி நாராயணன் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












