சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், HANDOUT
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 14 நாட்களைக் கடந்து உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெறும் வரையில் போராட்டம் தொடர உள்ளதாக சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.
ஆனால், பணியிட சூழல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தொழிலாளர்களை மன்னிக்கப் போவதில்லை எனக் கூறுகிறது சாம்சங் இந்தியா.
ஐந்து மாதங்களைக் கடந்தும் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைவது ஏன்?

பிரச்னையின் தொடக்கம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, சி.ஐ.டி.யு தொழிற்சங்கப் பதிவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசின் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பலன் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம், போராட்டம், நள்ளிரவு கைது, வழக்குப் பதிவு என்று பிரச்னை நீண்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவித்தார்.
ஆனால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கப் பதிவுக்கு தொழிலாளர் நலத்துறை அனுமதி அளிக்காததால் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆறு வாரங்களில் முடிவை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை தொழிலாளர் நலத்துறை பதிவு செய்தது. இதன் பிறகே பல்வேறு பிரச்னைகள் தொடங்கியதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் (சிஐடியு) முத்துகுமார்.
பிப்ரவரி 4, 5 ஆகிய தேதிகளில் சி.ஐ.டியு தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள மூன்று தொழிலாளர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.
இதை எதிர்த்துக் கடந்த 14 நாட்களுக்கும் மேலாக சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, சாம்சங் இந்தியா ஆலையின் அருகிலுள்ள வெள்ளை கேட் மேம்பாலம் அருகே ஊழியர்களில் இன்னொரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று பேர் இடைநீக்கம் - காரணம் என்ன?

பட மூலாதாரம், HANDOUT
போராட்டம் முடிந்து பணிக்குத் திரும்பிய ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா (சிஐடியு) தொழிற்சங்கத் தலைவர் முத்துகுமார்.
சிஐடியு அமைப்பில் இணைந்துள்ள ஊழியர்களை அதிலிருந்து வெளியேறுமாறும் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிலாளர் குழுவில் (Workers committee) சேருமாறும் கட்டாயப்படுத்துவதாக முத்துகுமார் கூறுகிறார்.
"இதற்கு உடன்படாத தொழிலாளர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்குகின்றனர். அவ்வாறு 30க்கும் மேற்பட்டோரை வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்" என்கிறார் முத்துகுமார்.
இதன் தொடர்ச்சியாக, சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குணசேகரன், தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் தேவன், துணைச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
"நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரைப் பார்க்க விரும்பியதற்காக குணசேகரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால், முறையாக நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. மூவர் இடைநீக்கத்துக்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை" எனக் கூறுகிறார் முத்துகுமார்.
பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் சாம்சங் இந்தியா நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் முத்துகுமார் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

பட மூலாதாரம், @TRBRajaa/X
சாம்சங் இந்தியா நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இரு தரப்பிலும், "போராட்டத்துக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. ஊதிய உயர்வு தொடர்பாக விரைவில் பேசி முடிக்க வேண்டும்" என முடிவு செய்யப்பட்டது.
"ஆனால் இவை எதையும் சாம்சங் இந்தியா நிர்வாகம் கடைபிடிக்கவில்லை. ஆனால், நிறுவனமே ஏற்படுத்தியுள்ள தொழிலாளர் குழுவுடன் ஒப்பந்தம் போடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறுகிறார் முத்துகுமார்.
இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறையில் சி.ஐ.டி.யு அமைப்பினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கடந்த சில வாரங்களில் மூன்று முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், HANDOUT
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 19) சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் ஆகியோருடன் துறையின் கூடுதல் ஆணையர் உள்பட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "நாங்கள் அனைவரும் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம். பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என்றோம். ஆனால், நிர்வாகம் அதை ஏற்கவில்லை. மேலும் 18 பேரை பணியிடை நீக்கம் செய்ய உள்ளதாகக் கூறினர். நாங்களும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனக் கூறிவிட்டோம்" என்கிறார் முத்துகுமார்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தரப்பில், "போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு மற்றவர்கள் வேலை பார்க்கட்டும். பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளான மூன்று பேர் மட்டும் நான்கு நாட்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்லட்டும்' என அறிவுறுத்தினர். ஆனால் இதை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்கவில்லை" எனக் கூறுகிறார் முத்துக்குமார்.
"ஊழியர்களுடன் குறைந்தபட்ச உடன்படிக்கைக்குக்கூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் போராட்டத்தால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கேட்டபோது, "இதைச் சரிசெய்வதற்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து சாம்சங் இந்தியாவில் வேலைகள் நடந்து வருகின்றன. இது சட்டவிரோத உற்பத்தி என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்" எனக் கூறினார்.
வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 20) காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு உற்பத்திப் பிரிவில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். "அப்போது நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை" என்றார் முத்துகுமார்.
இதற்கு பிபிசி தமிழுக்குப் பதில் அளித்துள்ள சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர், "தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இன்று (பிப்ரவரி 20) மீண்டும் சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் தொழில் அமைதியை சீர்குலைக்க முயன்றனர். இதுபோன்ற நடவடிக்கையை ஏற்க முடியாது" எனக் கூறியுள்ளார்.
சாம்சங் இந்தியா நிறுவனம் சொல்வது என்ன?

பணியிடை நீக்க நடவடிக்கை, உள்ளிருப்புப் போராட்டம், பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி ஆகியவை குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்திடம் பிபிசி தமிழ் கேள்விகளை எழுப்பியது.
இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பாளர் விரிவான விளக்கம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தொழிலாளர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையைத் தீர்ப்பதில் சாம்சங் இந்தியா நிறுவனம் உறுதியாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
தொழிற்சாலையின் அமைதி மற்றும் பணியிட பாதுகாப்பு ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் சில தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஒருபோதும் மன்னிக்காது எனவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், "சாம்சங் இந்தியா நிறுவனத்தின் கொள்கைகளை அனைத்து ஊழியர்களும் கடைபிடிப்பது முக்கியம். அதை மீறுபவர்கள், உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடத்தைப் பராமரிப்பதே எங்களின் முன்னுரிமையாக உள்ளது" என்றும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சாம்சங் இந்தியாவில் உற்பத்தி தடையின்றி இருக்கும்போது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வணிகம் செய்வதை எளிதாக்குமாறு மாநில அரசின் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் எனவும் சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக சி.ஐ.டி.யு கூறும் புகார், ஒப்பந்த ஊழியர்களை வைத்து நடக்கும் பணிகள் ஆகியவை தொடர்பாக எந்த விளக்கத்தையும் சாம்சங் இந்தியா நிறுவனம் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












