சம்பள பாக்கி கேட்டு 5 வயது சிறுவனை கடத்திய அசாம் தொழிலாளர்கள் - கோவையில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Annur Police
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
'தங்களின் ஐந்து வயது மகனைக் காணவில்லை' என அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்-பர்வீன் தம்பதி கோவை, அன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது டிசம்பர் 25-ஆம் தேதி நேரம் மாலை 7.30 மணி.
'சம்பள பாக்கியைத் தரவில்லை' எனக் கூறி மகனைக் கடத்தியதோடு தனது செல்போனையும் சிலர் எடுத்துச் சென்றுவிட்டதாக டிசம்பர் 25-ஆம் தேதி அளித்த புகார் மனுவில் இம்ரான் கூறியிருந்தார்.
"குழந்தைக் கடத்தல் என்றவுடன் எங்களுக்குப் பதற்றம் ஏற்பட்டது. கேரள போலீசின் உதவியோடு புகார் கொடுத்த மூன்று மணிநேரத்திலேயே சிறுவனை மீட்டுவிட்டோம்" என்கிறார், அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வம்.
இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் குழந்தைக் கடத்தல் மற்றும் திருட்டு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தெலுங்குபாளையத்தில் இயந்திர உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தினசரி 600 ரூபாய் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தனியார் நிறுவனமே தங்கும் வசதியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
"இந்த தொழிற்சாலையில் அசாமைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். அசாமைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் இங்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்கிறார் அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வம்.
இவர்களுக்கான மாத சம்பளத்தை அவர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்களிடமே நிறுவன உரிமையாளர் கொடுத்து வந்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தப் பணத்தில் தினசரி 50 ரூபாய் என்ற வீதத்தில் கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை தொழிலாளர்களுக்குக் கொடுப்பதை ஒப்பந்ததாரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சொரிபுல் என்ற நபர் தன்னுடன் கோக்ரஜார் (Kokrajhar) பகுதியில் வசிக்கும் சிலரை வேலைக்கு அழைத்து வந்துள்ளார். இவரது அண்ணன் இம்ரான் மற்றும் அண்ணன் மனைவி பர்வீன் ஆகியோரும் இதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
கடத்தலின் பின்னணி

பட மூலாதாரம், Annur Police
"தனது ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட நான்கு பேரை சொரிபுல் வேலைக்குக் கூட்டி வந்துள்ளார். இவர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொழிற்சாலையில் வேலை பார்த்துள்ளனர்" எனக் கூறுகிறார், அன்னூர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வம்.
"இவர்கள் வேலை பார்த்ததற்கு சம்பளப் பணமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை சொரிபுல் தர வேண்டி இருந்துள்ளது. அது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக கைதான நபர் தெரிவித்துள்ளார்." எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தனக்குக் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி அசாமுக்கு சொரிபுல் சென்றுவிட்டார். அங்கும் நேரடியாக சொரிபுல்லை சந்தித்து நான்கு பேரும் பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து பணத்தை வாங்க முடியவில்லை.
"சொரிபுல் பணம் தராமல் ஏமாற்றுவதாக அவரது அண்ணன் இம்ரானிடம் சிறுவன் உள்பட நான்கு பேரும் கூறியுள்ளனர். 'அவன் வாங்கிய பணத்தை நான் எப்படி தர முடியும்?' என இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இம்ரானை பழிவாங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்" என்கிறார், காவல் ஆய்வாளர் செல்வம்.
இம்ரானும் அவர் மனைவியும் நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தங்களின் ஐந்து வயது மகனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
செல்போன் டவர்... சிசிடிவி படங்கள்
இந்தநிலையில், டிசம்பர் 25-ஆம் தேதி மதியம், 'பானிபூரி சாப்பிடப் போகலாம்' எனக் கூறி ஐந்து வயது சிறுவனை 17 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் கடத்திச் சென்றுள்ளனர். இருவரும் நன்கு பழக்கமானவர்கள் என்பதால் அவர்களுடன் சிறுவன் சென்றுள்ளார்.
"போகும்போது இம்ரானின் செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளனர். இவர்களில் அன்வர் அலி என்ற 18 வயது நபரும் இருந்துள்ளார். அவர் தொழிற்சாலையில் வேலை பார்க்கவில்லை. கடத்தல் திட்டத்துக்கு உதவி செய்வதற்காக அசாமில் இருந்து வந்துள்ளார்," என்கிறார், காவல் ஆய்வாளர் செல்வம்.
மாலை 5 மணி வரையில் சிறுவன் வராததால் நிறுவனத்தின் மேலாளரிடம் இம்ரான் புகார் அளித்துள்ளார். அவர்கள் அன்னூர் காவல்நிலையம் சென்று புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Annur Police
"சிறுவன் கடத்தப்பட்ட பிறகு இம்ரானுக்கு அவர்கள் போன் செய்து பேசியுள்ளனர். ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொடுத்துவிட்டு பையனைக் கூட்டிச் செல்லுமாறு மிரட்டியுள்ளனர். பேசி முடித்த உடன் செல்போனை அணைத்து வைத்துள்ளனர்," எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் செல்வம்.
45 நிமிடங்களுக்கு ஒருமுறை செல்போன் அழைப்பு வந்து கொண்டிருந்ததால் அதன் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர். "பாலக்காடு ரயில் நிலையம் அருகே சிக்னல் காட்டியது. நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபரின் படங்கள் கிடைத்தன." என்கிறார் அவர்.
தொடர்ந்து, சிறுவனின் படம் மற்றும் மற்ற நபரின் படங்களை பாலக்காடு போலீசாருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக அன்னூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட சிறுவன்
இந்த வழக்கில் காவல்துறை இரண்டு குழுவாகப் பிரிந்து தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது. இடையில் இம்ரானுக்கு போன் செய்த நபர்கள், 'உன் தம்பியால் எனக்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டுவிட்டது. உன் மகன் வேண்டும் என்றால் பணம் கொண்டு வா' எனக் கூறியுள்ளனர்.
அதற்கு, 'என்னால் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஏற்பாடு செய்து தர முடியும்' என இம்ரான் கூறியுள்ளார். "கடத்தப்பட்ட சிறுவனுடன் அவர்கள் நகர்ந்து கொண்டே இருந்துள்ளனர். ஒரே இடத்தில் அவர்கள் இல்லை," என்கிறார், காவல் ஆய்வாளர் செல்வம்.
"நாங்கள் சென்று சேருவதற்கு 2 கி.மீ முன்னரே பாலக்காட்டில் வைத்து சிறுவனை கேரள போலீஸ் மீட்டது. அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். செல்போனை வைத்து அவர்களையும் தேடிக் கண்டுபிடித்தோம்," என்கிறார் அவர்.
இரவு 11 மணிக்கு முன்னதாக கடத்தப்பட்ட சிறுவனை போலீஸ் குழு மீட்டுள்ளது. கைதான சிறுவனுக்கு 17 வயது என்பதால் அவரைக் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்றொரு நபரான அன்வர் அலியை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவர் மீதும் குழந்தைக் கடத்தல், செல்போன் திருட்டு ஆகிய இரு பிரிவுகளில் அன்னூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை தொழிற்சாலை நிர்வாகத்துக்கு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புலம்பெயர் தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்பட அவர்களின் பின்னணியை ஆராய்ந்து வேலை தருமாறு கூறியுள்ளோம். சம்பளத்தை நேரடியாக தொழிலாளிக்கு கொடுக்குமாறும் நிறுவன உரிமையாளரிடம் அறிவுறுத்தியுள்ளோம்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் செல்வம்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறைக்கும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். "சிறுவனுக்கு தாய்மொழி தவிர வேறு மொழிகள் தெரியாது. அங்கேயே விட்டுவிட்டு ஓடிப் போயிருந்தாலும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். செல்போன் எண்ணை பின்தொடர்ந்ததால் சிறுவனை மீட்க முடிந்தது" என்கிறார், காவல் ஆய்வாளர் செல்வம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












