கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமை மாலை கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலைமைச்சர் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்." என தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் புதன்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு கிகுந்த வேதனையடைந்தேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலாஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












