கொரோனா காலத்தில் வேலை இழந்த ஐ.டி. ஊழியர் சமையல் தொழில் மூலம் வாழ்வில் மீண்டது எப்படி?

- எழுதியவர், மான்சி தேஷ்பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
7 ஜூலை, 2022. அமிதாவின் வாழ்வில் மறக்க முடியாத நாள். எம்சிஏ படித்துள்ள அமிதா ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் அன்றைய தினமும் வேலை செய்வதற்காக தனது கணினியை திறந்தவருக்கு மெயில் ஒன்று வந்திருந்தது.
மூத்த அதிகாரி ஒருவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருடைய சக ஊழியர்கள் யாருக்கும் இத்தகைய மெயில் அனுப்பப்படவில்லை. கொரோனா தொற்றின் முதல் அலை பரவிய நேரம் அது. பலரும் தங்கள் வாழ்க்கையின் முதல் பொதுமுடக்கத்தை எதிர்கொண்டிருந்தனர்.
மெயிலில் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சந்திப்பும் தொடங்கியது.
“ஹாய், ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தைகளுடன் சந்திப்பு தொடங்கியது. பின்னர், நாளையில் இருந்து நீங்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று என்னுடைய மூத்த அதிகாரி கூறினார். முதலில் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரிடம் மீண்டும் கூறும்படி தெரிவித்தேன். பொருளாதார மந்தநிலை காரணமாக நான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவரது சொல் என்னை அதிர்ச்சியடைய செய்தது” என்று பழைய நினைவுகளை குறிப்பிடுகிறார் அமிதா பசல்கர்.

தனது வேலை போய்விட்டது என்பதை நினைத்து அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அமிதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார். ஓராண்டு முன்புதான் அமிதாவும் அவரது கணவர் மனோகர் பசல்கரும் இணைந்து வங்கி கடனில் புதிதாக வீடு வாங்கி இருந்தனர். அதன் மாத தவணையும் தொடங்கியிருந்தது.
அமிதாவின் மகனுக்கு அப்போது ஒரு வயதுதான் ஆகியிருந்தது. மனோகரும் ஐடி துறையில் தான் பணியாற்றுகிறார். இருவரது சம்பளத்தையும் கணக்கிட்டு பல்வேறு திட்டங்களை அமிதா தீட்டியிருந்தார்.
ஆனால், திடீரென வேலை போனதால் அவரது திட்டங்கள் அனைத்தும் குலைந்துபோயின.
“நான் வேலையை இழந்ததால், மொத்த பாரமும் என் கணவரின் தோள்களின் மீது விழுந்தது. இருவரது ஊதியத்தையும் கணக்கில் வைத்து நாங்கள் பல்வேறு திட்டங்களை தீட்டிருந்த நிலையில், அனைத்தும் ஒரு நொடியில் நிலைகுலைந்துபோயின. அந்த நேரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். எனது மேல் அதிகாரி உடனான சந்திப்புக்கு பிறகு நான் கதறி அழுதேன். என் வீட்டில் இருந்த அனைவருமே இது முடிவு அல்ல என்று கூறினார்கள். ஆனாலும், தொடக்கத்தில் இந்த அதிர்ச்சி கடுமையாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுமே இந்த அதிர்ச்சியுடனேயே கழிந்தது” என்று தெரிவித்தார் அமிதா.
கைக் கொடுத்த சமையல்
இரண்டு, மூன்று நாட்களில் அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல வெளியே வரத் தொடங்கிய அமிதா, வேலை போனதை நினைத்து கவலைப்படாமல் அடுத்தது என்ன என்பது குறித்து யோசிக்க தொடங்கினார்.
“ நான் சமையல் செய்து உணவு டெலிவரி செய்யலாம் என்று இருக்கிறேன். யாராவது உணவு தேவை என்று கூறினால் அவர்கள் வீட்டுக்கு சென்று டெலிவரி செய்கிறேன். இது தொடர்பாக உங்கள் ஹவுசிங் சொசைட்டி குரூப்பில் மெசேஜ் போடுங்க என்று அமிதா என்னிடம் சொன்னார்.
நானும் அவர் சொன்னதை செய்தேன். அமிதாவுக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும். அவரிடம் கைப்பக்குவம் உள்ளது. எந்த உணவையும் மிக ருசியாக செய்வார். குரூப்பில் மெசேஜ் போட்டதும் சில ஆர்டர்கள் கிடைத்தன. அது கொரோனா நேரம் என்பதால் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்தனர். எனவே, உணவுகள் தயாராக கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் தேவையாக இருந்தது ” என்கிறார் அமிதாவின் கணவன் மனோகர் பசல்கர்.

வேலைபோன அதிர்ச்சியில் இருந்து மீண்ட அமிதா, தொழில் தொடர்பான தனது முதல் அடியை எடுத்து வைத்தார். உணவை சமைத்து பெட்டியில் வைத்து வீடுகளில் விற்பனை செய்யத் தொடங்கினார்.
“எனது அம்மா உணவகம் நடத்துவார். அதனால், சின்ன வயதில் இருந்தே நானும் என் சகோதரரும் அவருக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம். நான் மாவை பிசைவேன். பள்ளி, கல்லூரி முடிந்ததும் இந்த வேலையை செய்து வந்தேன். அதனால் அந்த வேலை எனக்கு கடினமாக இருக்கவில்லை.
என்னால் உணவு சமைத்து விற்பனை செய்ய முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, என்ன ஆனாலும் பரவாயில்லை இந்த தொழிலை செய்வது என்று முடிவு செய்தேன். எந்த வேலையும் பெரியது, சிறியது என்று இல்லை. எந்த வேலையையும் நான் கேவலமாக நினைக்கவில்லை. எனவே, நான் வீட்டிலேயே உணவு சமைத்து டெலிவரி செய்யும் தொழிலை தொடங்கினேன்” என்று அமிதா கூறுகிறார்.
படிப்படியாக அவருக்கு ஆர்டர்கள் பெருகத் தொடங்கின. அந்த நேரத்தில் கொரோனா 2வது அலையும் வந்தது. நாளொன்றுக்கு அமிதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 40 முதல் 50 ஆர்டர்கள் வரை வந்தன. இதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும் அவர் உணவு விநியோகம் செய்து வந்தனர்.
பண்டிகை காலங்களில் உணவு டெலிவரியோடு சேர்த்து பல்வேறு பண்டங்களை டெலிவரி செய்யவும் தொடங்கினார். உதாரணமாக, கணபதி-கௌரி பண்டிகையின் போது, ஊறுகாய் மோதகம், பூரணம் போல்யா போன்ற உணவு பொருட்களையும் ஆர்டர் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

அதற்கான வரவேற்பு அதிகரித்தது. தீபாவளிக்கு தின்பண்டங்கள், சங்கராந்திக்கு இனிப்பு போலி போன்றவற்றை அவர் தயாரித்து விநியோகிக்கத் தொடங்கினார்.
“லாக்டவுனின் போது என் தந்தைக்கும் வேலை பறிபோனது. அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. மருந்துக்கு பணம் தேவைப்பட்டதால், என் அம்மாவும் என்னோடு சேர்ந்து உணவு விநியோகம் செய்யத் தொடங்கினார். இருவரும் இணைந்து உணவு சமைக்க தொடங்கினோம். உணவை சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அது குறித்து அடுத்தவர்களிடம் கூறினர். இதனால் எங்கள் தொழில் வளர்ச்சி பெறத் தொடங்கியது ” என்று அமிதா பெருமிதத்துடன் கூறினார்.
தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்
அமிதா தற்போது சிவன்ஷ் ஃபுட்ஸ் என்ற பெயரில் உணவு தொழிலை நடத்தி வருகிறார். மேலும், இது தற்போது அவரது குடும்பத் தொழிலாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே அவரது அம்மாவும் அமிதாவும் சில உணவு பதார்த்தங்களை சமைத்து வந்தனர். மேலும் தொழிலை பெருக்க புதிதாக சில உணவு வகைகளையும் சமைக்க கற்றுக்கொண்டனர்.
வீட்டில் சிலருக்கு உணவு சமைப்பது என்பது வேறு, அதுவே அதிக நபர்களுக்கு உணவு சமைப்பது என்பது வேறு. இதற்காக அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
“ வீட்டில் நான் இனிப்புகள் செய்தாலும் அனரசா செய்து பழக்கம் இல்லை. என் மாமியார்தான் அதை செய்வார். எங்களுக்கு தீபாவளிக்கு இனிப்பு பதார்த்தம் செய்யும் ஆர்டர் கிடைத்ததையடுத்து நான் அனரசா செய்ய கற்றுக்கொண்டேன். தற்போது நான் அற்புதமாக அனரசா செய்கிறேன் ” என்று அமிதாவின் அம்மா சர்மிளா ராவுத் தெரிவித்தார்.

தனக்கு முதன்முதலாக பெரிய அளவில் ஆர்டர் கிடைத்தது தொடர்பாக அமிதா பேசும்போது, “ கணபதி பண்டிகையின்போது 100 மோதகம் டெலிவரி செய்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. காலை 5 மணிக்கே எழுந்து மோதகம் செய்ய தொடங்குவோம். 30 முதல் 40 மோதகம் செய்தோம், ஆனால் அவை உதிர்ந்துபோயின. இறுதியாக அதனை சரியாக செய்ய கற்றுக்கொண்டோம். அதுதான் முதல் அனுபவம். தற்போது எங்களுக்கு அது பழக்கமாகி விட்டது. 100 முதல் 200 மோதகம் வேண்டும் என்று யாராவது கூறினாலும் நான் கவலைப்படுவதில்லை. கேக், பாஸ்தா கேக், பிளம் கேக் போன்றவற்றையும் செய்ய கற்றுக்கொண்டேன். ” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.
மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன்
சில மாதங்களுக்கு முன்பு அமிதாவுக்கு மீண்டும் ஐடி வேலை கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் அவர் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தியிருந்தார். அப்போதும் தனக்கு ஏற்ற வேலைக்காக அவர் காத்திருந்தார். மீண்டும் வேலை கிடைத்ததால், அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து அமிதா பேசுகையில், “வேலை மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கிறது. முதலில் வீட்டில் இருந்து செய்வதுபோல் எனது வேலை இருந்தது. அதனால், வேலையை பார்த்துக்கொண்டே தொழிலையும் கவனித்து வந்தேன். தற்போது என் ப்ராஜக்ட் மாறிவிட்டது. இதனால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மீத நாட்கள் வீட்டில் இருப்பதால் வேலையையும் தொழிலையும் பார்த்துகொள்ள முடிகிறது ” என்கிறார்.
வேலையும் தொழிலும்
உறுதியான, கடினமான உழைப்பு மூலமாக அமிதாவும் அவரது குடும்பத்தினரும் கூட்டு முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் நிறையவற்றை தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
வார நாட்களில் உணவு விநியோகம் செய்ய ஆர்டர் கிடைத்தால், அலுவலக வேலையோடு உணவை தயாரிப்பது, அதனை பொட்டலம் கட்டுவது, விநியோகம் செய்வது போன்றவற்றை அவர்கள் பார்த்துகொள்ள வேண்டியிருக்கும்.
வார இறுதிநாட்களில் அலுவலக வேலை இல்லையென்றாலும் உணவு விநியோகத்திற்கு அவர்கள் உழைக்க வேண்டும். எனவே, அவர்களின் குடும்பத்தினர் எப்போதுமே ஓய்வின்றி உழைக்கின்றனர்.
“ என் மகன் சிறுவனாக இருக்கிறான். அவனுக்காக நான் நேரம் செலவிடுவதே இல்லை. வார நாட்களில் அவன் என் அம்மாவோடு இருப்பான். வார விடுமுறை நாட்களில் ஏதாவது ஆர்டர் வந்தால் அதற்கு நேரம் செலவிட வேண்டும். எனவே, என் மகனோடு நேரத்தை செலவிட முடியாது. வார விடுமுறையின்போது வெளியே சென்று மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். ஆனால், நேரம் கிடைப்பதில்லை.
தொழிலில் கவனம் செலுத்துவதால் வீட்டு நிகழ்ச்சிகளை கொண்டாட முடியவில்லை. ஆனாலும், இப்போது கடுமையாக உழைத்தால் எதிர்காலத்தில் நன்றாக இருப்போம் என்று நான் எண்ணுகிறேன். இந்த தொழில் என் வேட்கையாக மாறிவிட்டது. அதனால், இதனை மேலும் பெரிதாக செய்ய விரும்புகிறேன் ” என்று கூறுகிறார் அமிதா.

குடும்பத்தினரின் உதவி எந்தளவு முக்கியமாக இருந்தது?
தொழில், வேலை, வீட்டு வேலை , குழந்தையை பார்த்துகொள்வது என அத்தனையையும் எப்படி செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, குடும்பத்தினரின் உதவி இல்லாமல் இது எதுவுமே சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார்.
“குடும்பத்தினர் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். நானும் என் அம்மாவும் சமையல் செய்தால், என் கணவரும் சகோதரரும் அப்பாவும் கூட இருந்து உதவிகளை செய்வார்கள். பொட்டலம் போடுவது விநியோகம் செய்வது போன்றவற்றை என் கணவரும் என் சகோதரரும் பார்த்துக் கொள்வார்கள். சில நேரங்களில் எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். அப்போது வீட்டு வேலைகளை என் கணவர் பார்த்துக்கொள்வார். இத்தகைய ஆதரவு இல்லாமல், இவற்றை செய்ய முடியாது ” என அமிதா தெரிவித்தார்.
வீட்டு வேலைகளில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் என்று அமிதாவின் கணவர் மனோகரும் கூறுகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,“ ஒரே நபரால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது. அமிதா, அவரது அம்மாவின் கடின உழைப்பை நாங்கள் பார்க்கிறோம். தொடக்கத்தில் இருந்தே வீட்டு வேலையில் நான் உதவி செய்து வருகிறேன். எனவே, என்னால் முடிந்த வேலைகளை நான் செய்கிறேன் ” என்று குறிப்பிட்டார்.
தொழிலை விரிவுபடுத்த கனவு
2022 ஆம் ஆண்டில், அமிதாவும் அவரது குடும்பத்தினரும் இந்தத் தொழிலின் மூலம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதித்தனர். தற்போது வியாபாரம் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை பெற்றுள்ளதால், படிப்படியாக விரிவுபடுத்துவது அவர்களின் கனவாக உள்ளது.
“நாங்கள் சில சில்லறை விற்பனையாளர்களிடம் பேசி வருகிறோம். பருவகாலத்திற்குப் பதிலாக ஆண்டு முழுவதும் எப்படி உணவை வழங்குவது என்று நாங்கள் யோசித்து வருகிறோம். ஒரு சிறிய இடத்தைப் பார்த்து சில பெண்களை வேலைக்கு அமர்த்தினால், அது சாத்தியமாகும். எனினும் எங்கள் வேலையையும் பொறுப்புகளையும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியுமா என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்” என்று மனோகர் பசல்கர் யோசனையோடு தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












