மாஞ்சோலை எஸ்டேட்: சுரண்டல்கள், அடக்குமுறைகள் நிறைந்த சோக வரலாறு

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான அழகுக்கு பின்னால் இருக்கும் சோகக்கதைகள் குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. மேலை நாடுகளில் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் எந்த அளவு அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்களோ அதை விட அதிக சுரண்டல்களையும் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
1941 முதல் 1965 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்த பி.எச். டேனியல் எழுதிய “ரெட் டீ” எனும் நாவலில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் இருந்து வால்பாறை தேயிலைத் தோட்டங்களுக்கு பணிபுரியச் சென்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சந்தித்த சுரண்டல்களையும் அவலங்களையும் விவரிக்கிறார்.
அந்த நூலைப் படித்துவிட்டு தேயிலைத் தோட்டங்களைப் பார்க்கும்போது, அதன் இயல்பான அழகை இரசிக்க முடியாது. தொழிலாளர்கள் சந்தித்த கொடுமைகளும் அடக்குமுறைகளுமே நம் நினைவுக்கு வரும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கும் அத்தகைய சோகக் கதைகளும் ஆறாத வடுக்களும் உண்டு. ஆனால், அதற்குக் காரணம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் என்றால், அல்ல.
1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது காவல்துறை நடத்திய தடியடி காரணமாகவும், அதிலிருந்து தப்பிக்க தாமிரபரணி ஆற்றில் குதித்ததாலும் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 24 ஆண்டுகள் ஆன பின்பும் கூட இங்குள்ள மக்களால் அதை மறக்க முடியவில்லை.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன?

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
மாஞ்சோலையில் வாழ்க்கை
“மாஞ்சோலை எஸ்டேட் என்பது நாடோடிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இடம் போல. இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமில்லை, உடலில் தெம்புள்ள வரை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து, நிர்வாகம் கொடுக்கும் குறைவான கூலியில் சிறிய தொழிலாளர் குடியிருப்புகளில் வாழ்க்கையை நடத்தி, தலைமுறை தலைமுறையாக உழைத்துக் கொட்டிய பிறகு, ஒரு நாள் பணி ஓய்வு என்ற பெயரில் இந்த இடத்தை விட்டு அனுப்பி விடுவார்கள்.
அப்படி வெளியேறும் மக்களுக்கு சொந்த ஊரும் இருக்காது, சொந்தமாக வீடும் இருக்காது” என்கிறார் இருதயமேரி.
இவர் 45 ஆண்டுகள் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மாஞ்சோலை பகுதியின் முதல் பெண் தேயிலைத் தோட்ட சூப்பர்வைசர் என்பது குறிப்பிடத்தக்கது.
“எனது குடும்பத்தில் என்னுடன் சேர்த்து 8 பிள்ளைகள், நான் தான் மூத்த பெண். அப்பா இறந்த பின், குடும்பத்தை சமாளிக்க 14 வயதில் “அரை ரேட்” எனப்படும் 1 ரூபாய் 18 பைசா தினக்கூலிக்கு தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது பதினெட்டாம் வயதில் 3 ரூபாய் 50 பைசா பெறும் நிரந்தரத் தொழிலாளியாக மாறினேன்.
தேயிலை சீசனின் போது ஒரு நாளுக்கு சுமார் 100 முதல் 125 கிலோ வரையிலான தேயிலையை கூட பறித்ததுண்டு. ஆனால் கூலியில் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது. 40 ஆண்டுகள் கழித்து சூப்பர்வைசராக பதவி உயர்வு பெற்ற பின், எனக்கு தினக்கூலி 90 ரூபாயாக உயர்த்தப்பட்டது, மற்ற தொழிலாளிகளுக்கு அப்போது 76 ரூபாய் வழங்கப்பட்டது” என்கிறார் இருதயமேரி.
தோட்டங்களில் வேலை செய்தபோது தான் எதிர்கொண்ட கஷ்டங்களைக் குறித்து தொடர்ந்து பேசுகையில், “வருடம் முழுவதும் மழை பொழியும், தேயிலைத் தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாக இருக்கும். அதில் எக்கச்சக்கமான அட்டைப்பூச்சிகள் நெளியும். உணவுச் சட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் அட்டைகள் மொய்த்து விடும். அதைப் பார்த்தால் சாப்பிடவே மனம் வராது.
பல நாட்கள் பட்டினியோடு வேலை பார்த்த அனுபவம் உண்டு. தோட்டத்திலிருந்து குடியிருப்புகளுக்குச் செல்லும்போது, காட்டு விலங்குகளின் ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்”.

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
“1999 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது எஸ்டேட் பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு நடந்தே சென்றோம். அந்த போராட்டத்தால் நாங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். அது எங்கள் வாழ்க்கையின் இருண்ட காலம். அதை நினைத்தால் இப்போதும் மனம் பதறுகிறது”, என்கிறார் இருதயமேரி.
தான் பட்ட கஷ்டங்களை தனது பிள்ளைகள் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் இருதயமேரி. “இங்கு பள்ளிப் படிப்பை மட்டும் முடித்துவிட்டு அல்லது பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு தேயிலைத் தோட்ட வேலைக்கு செல்பவர்களே அதிகம். எனக்கு 4 பிள்ளைகள், கல்வி மட்டுமே அவர்களுக்கான ஒரே தீர்வு என்பதில் நான் தெளிவாக இருந்தேன். ஒருநாளும் அவர்களை தேயிலைத் தோட்ட வேலைக்குச் செல்ல நான் அனுமதித்ததில்லை.
நானும் என் கணவரும் பல இடங்களில் கடன் வாங்கித் தான் எங்கள் பிள்ளைகள் நால்வரையும் படிக்க வைத்தோம். இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்” என்று கூறும் இருதயமேரி, ஓய்வு பெற்ற பின் தனது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார்.
“45 வருடங்கள் வேலை பார்த்து, ஒரு சூப்பர்வைசராக ஓய்வு பெற்றும் கூட தற்போது எனது ஓய்வூதியம் மாதம் 1034 ரூபாய் மட்டுமே. என் பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதால் எனக்கு கவலை இல்லை. ஆனால், தனது வாழ்நாள் முழுவதும் தேயிலைத் தோட்டமே கதி எனக்கிடந்த மக்கள் இந்த சொற்ப ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு, தங்க இடமும் கூட இல்லாமல் என்ன செய்ய முடியும்” என வேதனைப்படுகிறார் இருதய மேரி.

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
மறக்க முடியாத போராட்ட இரவுகள்
“போராட்டக் காலங்களின் போது, அதற்கு முன்னர் காவல் நிலையம் என்பதையே பார்த்திராத மாஞ்சோலைக்குள் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். எங்கள் வீடுகளுக்குக் கூட செல்ல முடியாமல், காடுகளிலும் பாறை இடுக்குகளிலும் ஒளிந்து கிடந்தோம். பசியாலும், குளிராலும் தவித்த குழந்தைகளோடு, அட்டைக் கடிகளில் பயத்தோடு கழித்த இரவுகளை ஒருநாளும் மறக்க முடியாது”, என கூறுகிறார் மாஞ்சோலையின் ஊத்து பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின். இவர் தற்போது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
அவர் தொடர்ந்து பேசிய போது, “இங்குள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய 45 கிலோமீட்டர் தூர மலைப்பாதையை 4 மணிநேரம் பயணம் செய்து கடக்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகளுக்காக நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்”
“பல அதிகாரிகளிடம் மனு கொடுத்து பார்த்து விட்டேன். எந்த பலனும் இல்லை. தேயிலை எஸ்டேட் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் என்பதால் பலரும் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்திலும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையிலும் இருக்கிறார்கள். இந்த மக்களுக்கான நியாயமான இழப்பீட்டையும் வேலைவாய்ப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறுகிறார் ஸ்டாலின்.
மாஞ்சோலையின் தற்போதைய நிலை
“12.02.1929 அன்று, சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான வனத்தில், 8373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) நிறுவனம். ஜமீன் நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு, அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தற்போது வரையிலும் தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. ஆனால் 28.02.2018 அன்று, எஸ்டேட் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வனம் ’காப்புக்காடாக’ (Reserve Forest) அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து வனத்துறைக்கும் பி.பி.டி.சி நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல் அதிகரித்து விட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மாஞ்சோலையை சேர்ந்த அப்பாவி மக்களே”, எனக் கூறுகிறார் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
மாஞ்சோலை, நாலுமுக்கு பகுதியில் பிறந்து வளர்ந்த இராபர்ட் சந்திரகுமார், தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மாஞ்சோலை மக்களின் நலனுக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார் இவர்.
“இரு தரப்புக்கும் இடையிலான மோதல் பல ஆண்டுகளாகவே இருக்கிறது. மொத்தம் உள்ள 74,000 ஏக்கரில் வெறும் 1000 ஏக்கர் மட்டுமே தேயிலைத் தோட்டம். அவையும் இந்த மக்களும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து எனக் கூறுகிறது வனத்துறை. ஆனால் இந்த வனத்திற்குப் பாதுகாப்பே இந்த மக்கள் தான். இவர்களுக்கு தெரியாமல் அந்நியர்கள் எவரும் நுழைந்து இங்கு எதுவும் செய்ய முடியாது”
“வனத்துறை தரப்பிலிருந்து தரப்படும் தொடர் அழுத்தம் மற்றும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் குத்தகை காலம் முடியும் முன்பே மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் என இங்குள்ள மக்கள் அஞ்சுகிறார்கள்.
அப்படி நடந்தால் இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நிலை என்ன என்பதைக் குறித்து யாரும் யோசித்ததாக தெரியவில்லை. சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்” எனக் கூறும் அவர், இதற்கான தீர்வையும் முன் வைக்கிறார்.

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்
"தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்"
“உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பி பருகப்படும் ஒரு பானம் தேநீர். எனவே நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்துக்கு (டான்டீ) சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல, மாஞ்சோலை எஸ்டேட் பகுதி தேயிலைத் தோட்டங்களையும் அரசு எடுத்து, இதை தொடர்ந்து நடத்த வேண்டும். இதுவே இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்” என கூறி முடித்தார் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
கால் நூற்றாண்டு கடந்து பின்பும் கூட மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களின் போராட்டங்களுக்கு இன்னும் முழுமையாக விடை கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. கானகத்தில் வாழும் தங்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












