கனடாவில் இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பது ஏன்?

கனடா கொடியுடன் விசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
    • எழுதியவர், குர்ஜோத் சிங்
    • பதவி, பிபிசி பஞ்சாபி

கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகமாகி இருக்கிறது.

கனடாவின் குடிவரவுத் துறை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் இது தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் 2025-இல் முடிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 74% நிராகரிக்கப்பட்டுள்ளன.

2023 (27%) மற்றும் 2024 (23%) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிராகரிப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

2023-இல் 2,22,540 இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-இல் இந்த எண்ணிக்கை 94,590 ஆகக் குறைந்தது.

2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெறும் 9,955 இந்திய விண்ணப்பதாரர்களின் மாணவர் விசாவிற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கனடா மாணவர் விசா ஒதுக்கீட்டைக் குறைத்து, விதிகளை இறுக்கியதின் தாக்கம் இந்திய மாணவர்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

அதேவேளை, கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

அந்த துறையின் கூற்றுப்படி ஆகஸ்ட் 2025-இல், 3,920 இந்தியர்கள் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர், ஆகஸ்ட் 2023-இல் இந்த எண்ணிக்கை 19,175 ஆக இருந்தது.

ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலப்பகுதியில் இந்திய விண்ணப்பதாரர்களுக்கான சராசரி நிராகரிப்பு விகிதம் 71% ஆக உள்ளது.

இதே காலகட்டத்தில் உலகளாவிய சராசரி விகிதம் 58% ஆகும்.

உலக அளவில் மொத்த விண்ணப்பங்களின் சராசரி நிராகரிப்பு விகிதம் 2023 இல் 40% ஆக இருந்தது, அது 2024 இல் 52% ஆக அதிகரித்தது.

குடிவரவுத் துறை ஆகஸ்ட் வரையிலான தரவுகளை மட்டுமே வழங்கியுள்ளது.

கனடா 2023-இல் மொத்தம் 5,15,475 மாணவர் விசாக்களை (Study Permits) அங்கீகரித்தது. இதில் 2,22,540 பேர் இந்தியர்கள் ஆவர்.

2025-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மொத்தம் 87,995 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9,955 இந்தியர்கள் ஆவர்.

கனடா மாணவர் விசா

இந்திய மாணவர்கள் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம்?

இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரிப்பது குறித்து பிபிசிக்கு அளித்த பதிலில், கனடாவின் குடிவரவுத் துறை, "கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச மாணவர்கள் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களால் ஒப்புதல் விகிதம் குறைந்திருக்கலாம்," என்று கூறியுள்ளது.

"இந்த மாற்றங்களில் கல்லூரிகள் மாணவர்களின் அனுமதி கடிதங்களை IRCC (குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா) மூலம் உறுதிப்படுத்துவது மற்றும் மாணவர்கள் கனடா வரத் தேவையான நிதியைக் கோரும் அளவை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்."

2024 ஆம் ஆண்டின் இறுதியில் மாணவர் நேரடித் திட்டம் (Student Direct Stream) நீக்கப்பட்ட போது இந்திய விண்ணப்பதாரர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரித்ததாகவும் குடிவரவுத் துறை கூறியுள்ளது.

தரவுகளின்படி, நவம்பர் 2024-இல் இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் 31% ஆக இருந்தது.

டிசம்பர் 2024-இல் இது 56% ஆக அதிகரித்தது மற்றும் ஜனவரி 2025-இல் 71% ஆக உயர்ந்தது.

அனைத்து மாணவர் விசா விண்ணப்பங்களும் சமமாக மதிப்பிடப்படுகின்றன என்றும், விண்ணப்பதாரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அத்துறை கூறியுள்ளது.

2025-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து குடிவரவுத் துறை தகவல் அளித்துள்ளது.

கனடா மாணவர் விசா

நிராகரிப்புக்கான காரணங்கள்

  • R216(1)(b) - கனடாவிற்குச் செல்வதற்கான நோக்கம் தெளிவாக இல்லாதது
  • R220(a) - விண்ணப்பதாரரிடம் போதிய நிதி (Funds) இல்லாமை
  • R216 பிரிவில் வராத பிற காரணங்கள்.

குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் பிரிவு 216 மாணவர் விசாக்கள் பற்றியது.

கனடா மற்றும் இந்திய மாணவர்கள்

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவிற்குச் சென்றுள்ளனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கனடாவில் நிரந்தர குடியேறுவதற்கான பாதை எளிதாக இருந்ததால், கடந்த காலத்தில் மாணவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால், சமீபத்திய மாதங்களில் கனடாவில் குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற கனடியப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் குடிவரவு பிரச்னை முக்கியத் தேர்தல் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது.

கனடா நவம்பர் 5-ஆம் தேதி வெளியிட்ட குடிவரவு இலக்குகளின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா ஒதுக்கீடு 3,05,900 இலிருந்து 1,55,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

கனடா மாணவர் விசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்திய தூதரகம் கூறியது என்ன?

இந்திய மாணவர்களின் 'நிராகரிப்பு விகிதங்கள்' குறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், "இந்தியர்களின் மாணவர் விசா நிராகரிக்கப்படுவது தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. விசா வழங்குவது கனடிய அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதுகுறித்து இந்திய தூதரகம் கருத்து தெரிவிக்க முடியாது," என்று கூறியுள்ளது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் மீண்டும் சீரமைக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் குடிவரவு விதி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

அக்டோபர் மாதம், கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

செப்டம்பர் 2023-இல், அப்போதைய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஏஜெண்ட்களின் பங்களிப்பு இருப்பதாக குற்றம் சாட்டிய பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின.

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று இந்திய அரசாங்கம் கூறியது.

'மோசடி வழக்குகளால் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன'

டொரன்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிப் பேராசிரியராக இருக்கும் உஷா ஜார்ஜ், புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.

இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்குக் காரணம், கனடா மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியதுதான் என்று அவர் கருதுகிறார்.

"ராஜ்ஜிய உறவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் மாணவர் விசா பிரச்னை ஆகியவற்றை இரண்டு இணையான பிரச்னைகளாக நான் பார்க்கிறேன். இவை சற்றே தொடர்புடையவையாக இருக்கலாம், ஆனால் கனடிய குடிவரவு அரசியல் தலையீடின்றி செயல்படுகிறது," என்று பேராசிரியர் உஷா ஜார்ஜ் கூறுகிறார்.

"முன்னர் கனடாவில் 'படி, வேலை செய், தங்கு' என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது குடிவரவின் நோக்கம், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, மோசடியைக் கையாள்வது மற்றும் குடிவரவு முறையில் மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவது ஆகும்," என்று குறிப்பிடுகிறார்.

சர்வதேச மாணவர்களின் பயணம் கனடாவில் எப்படி இருந்தது?

கனடா மாணவர் விசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஃபிரேசர் வேலி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சத்விந்தர் கவுர் பெயின்ஸ், இது கனடாவின் குடிவரவுக் கொள்கையில் ஒரு போக்கை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவிற்குள் நுழைய மாணவர் விசா ஒரு சட்டப்பூர்வ வழியாகப் பிரபலமடைந்தது என்று அவர் கூறுகிறார்.

"இந்த வழியில் கனடாவை அடைந்த குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பலருக்கும், இங்கு யாரையும் தெரியாது, அதாவது அவர்களுக்கு எந்தவொரு ஆதரவு அமைப்பும் இல்லை. இங்கு தங்கள் இடத்தைப் பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது மற்றும் இனவெறி போன்ற சிக்கல்களையும் எதிர்கொண்டனர்."

"பெரும்பாலான மாணவர்கள் ஒரு பட்டம் பெறச் சேர்வதற்குப் பதிலாக 1 அல்லது 2 ஆண்டு படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்தனர். சில சமயங்களில் பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்தன, ஆனால் கனடாவிற்கு வர இந்த மாணவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டபூர்வமான வழி இது."

"அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் கனடிய பல்கலைக்கழகங்களுக்கு வந்தனர், அவர்களில் பலர் தரமான கல்வியைப் பெற முடியவில்லை. எனவே, குடிவரவுக் கொள்கைகளுடன் பல்கலைக் கழகங்களும் பொறுப்பேற்க வேண்டும்."

கனடாவில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் முன்பு போல் இல்லை என்றும், தற்போது கனடிய பொருளாதாரம் இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'அதிக நிராகரிப்பு விகிதம் கவலை தருகிறது'

கனடாவில் குடிவரவுத் துறையில் பணிபுரியும் ரத்தன்தீப் சிங் கூறுகையில், "இந்த அதிக நிராகரிப்பு விகிதம் கவலை அளிக்கிறது. இது கனடாவில் படிக்க விரும்பும் பஞ்சாபி அல்லது பிற இடங்களைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்," என்றார்.

இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் மாணவர் விசாவைச் சுற்றி ஒரு பொருளாதாரம் உருவானதாகவும், இந்த வீழ்ச்சியால் அது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு