ஹெச்-1பி விசா: திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு கனடா ஒரு மாற்றாக இருக்குமா?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், நதின் யூசிஃப்
- பதவி, மூத்த செய்தியாளர், கனடா
திறமையான பணியாளர்களுக்கு அமெரிக்கா வழங்கும் மிகவும் பிரபலமான விசாவுக்கான கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்த்தியுள்ளதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும், அதன் கதவுகளைத் திறக்கவும் கனடாவை வழக்கறிஞர்களும், வணிக நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அமெரிக்காவுக்கு மாற்றாக வடக்கு நோக்கிப் பார்ப்பவர்கள், கனடாவின் குடிவரவு முறையிலும் அதற்கே உரிய சவால்கள் இருப்பதை அறியக்கூடும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் H-1B விசா மாற்றங்களால் வாய்ப்புகளை இழந்த திறமையான பணியாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் விடுக்கப்பட்ட இந்த அழைப்பின் மீது, கனடாவின் பிரதமர் மார்க் கார்னி கவனம் செலுத்துவது போல் தெரிகிறது.
திங்கட்கிழமை நியூயார்க் நகரில் வெளியுறவு கவுன்சிலில் ஆற்றிய உரையில், கனடாவின் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். அதற்குப் பிறகு, "துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
"உங்கள் விசா கொள்கையை நீங்கள் மாற்றுகிறீர்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார். "ஒருவேளை அவர்களில் ஒருவரையோ இருவரையோ நாம் தக்கவைத்துக் கொள்ளலாம்."
புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என கடந்த வார இறுதியில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, வெளிநாட்டுப் பணியாளர்களைச் சட்டப்பூர்வமாகப் பணியமர்த்த நீண்ட காலமாக இந்தத் திட்டத்தைச் சார்ந்துள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்கத் தரவுகளின்படி, 2019-ல் மொத்த H-1B விண்ணப்பதாரர்களில் ஒரு சதவிகிதம் கனடியர்கள் இருந்தனர்.
H-1B விசாவுடன் அமெரிக்காவில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இந்த நடவடிக்கை சட்டரீதியான சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இந்த மாற்றங்கள், அந்த நாட்டில் வேலை தேடும் உயர்கல்வி கற்ற வெளிநாட்டினருக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் சமீபத்தில் பட்டம் பெற்று நீண்ட காலம் தங்கி, பணியாற்ற விரும்பிய சர்வதேசப் பட்டதாரிகள்தான் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கனடாவுக்கான வாய்ப்பா?
அவர்கள் இப்போது வேறு இடங்களைத் தேடுவதால், "கனடா அரசு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு" என்று கனடாவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் எவன் கிரீன் கூறினார்.
கனடா கவனம் செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுப்பவர் அவர் மட்டுமல்ல.
கனடாவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் லாப நோக்கற்ற அமைப்பான 'பில்டு கனடா', திங்கட்கிழமை ஒரு செயற்குறிப்பை வெளியிட்டது. H-1B விசா மாற்றங்களால் வாய்ப்புகளை இழந்த பணியாளர்கள் கனடாவில் குடியேற அதிகம் வாய்ப்பிருப்பதால், கனடா "வேகமாகச் செயல்பட" வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
"லட்சக்கணக்கான மிகவும் திறமையான மற்றும் அதிக ஊதியம் பெறும் H-1B நிபுணர்கள் இப்போது ஒரு புதிய இடத்தைத் தேடுகிறார்கள்," என்று அந்த செயற்குறிப்பு கூறியது.
"கனடா, அதன் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், ஒத்த நேர மண்டலங்கள், அமெரிக்காவுக்கு அருகாமை மற்றும் உயர் தரமான வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்டு, அவர்களுக்கு இயல்பான இலக்காக உள்ளது."

பட மூலாதாரம், Getty Images
தேசிய பொருளாதார ஆய்வு நிறுவனத்துக்காக 2020-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, திறமையான பணியாளர்களுக்கான குடிவரவைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளை எதிர்கொள்ளும்போது, அமெரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் திறமையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள மற்ற இடங்களைத் தேடுகின்றன என்று கூறுகிறது. பெரும்பாலும் அவை இந்தியா, சீனா மற்றும் கனடாவைத் தேர்ந்தெடுக்கின்றன.
பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, விசாவின் எண்ணிக்கையை 70% குறைத்த 2004 H-1B கட்டுப்பாடுகளை ஆராய்ந்தது.
அமெரிக்காவில் தங்களுக்கு தேவைப்பட்ட அதே திறமையான குடியேறிகளை நிறுவனங்கள் கனடாவில் பணியமர்த்தியதை அந்த ஆய்வு கண்டறிந்தது. அந்த நேரத்தில் இருந்த கனடாவின் குடிவரவுக் கொள்கைகள் பணியாளர்களை அங்கு மாற்றுவதை எளிதாக்கியது என்று அந்த ஆய்வு கூறியது.
H-1B விசா வைத்திருப்பவர்களும் கனடாவை மாற்றாக கருதுவது ஏன்?
H-1B விசா வைத்திருப்பவர்களும் கனடாவை ஒரு மாற்றாகக் கருதுகிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
2023-ல், கனடா அரசாங்கம், அமெரிக்காவை மையமாகக் கொண்ட H-1B வைத்திருப்பவர்கள் மூன்று வருட வேலை அனுமதி (வொர்க் பெர்மிட்) பெற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 10,000 பேர் விண்ணப்பித்ததால், 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பங்கள் மூடப்பட்டன.
அவர்களில் எத்தனை பேர் கனடாவுக்கு இடம் மாறியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கால்கேரியை சேர்ந்த வழக்கறிஞர் மார்க் ஹோல்தே, தனது சில வாடிக்கையாளர்கள் H-1B விசாக்களைப் புதுப்பிக்க முடியாமல் போன பிறகு கனடாவுக்குச் சென்றதாகக் கூறினார்.
"இந்த நபர்களுக்கு வேறு மாற்று இருக்கவில்லை," என்று ஹோல்தே பிபிசி-யிடம் கூறினார். இருப்பினும், கனடாவில் உள்ள பலர் இப்போது நிரந்தர வசிப்பிடத்தைப் (பெர்மனெனட் ரெசிடென்சி) பெறுவதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும், நாட்டில் அவர்களின் எதிர்கால நிலை நிச்சயமற்றதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நிபுணர் மிகால் ஸ்குடேருட், திறமையான பணியாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற கனடா இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றும், அதில் குடிவரவு முறையை முழுமையாக மாற்றியமைப்பதும் அடங்கும் என்றும் எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கனடா என்ன செய்ய வேண்டும்?
"கனடாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என்பது உறுதி, ஆனால் அந்தச் சாத்தியம் என்ன என்பதை நாம் மிகைப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன்," என்று வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்குடேருட் கூறினார்.
கனடா சமீபத்திய ஆண்டுகளில் குடிவரவைக் குறைத்துள்ளதாகவும், அதன் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் குறித்து அரசியல் போராட்டம் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பழமைவாத எதிர்க்கட்சி, கனடியர்களைப் பணியமர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வாதிட்டு, திட்டத்தை ரத்து செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டம் தொழில்துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பப் பணியாளர்களைக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக குறைந்த திறமை வாய்ந்த பணியாளர்கள் அல்லது பருவ கால தொழில்களில் உள்ள பணியாளர்களை ஈர்க்கிறது.
"கனடா அமெரிக்காவை விட மிகவும் கணிக்கக்கூடியதாகத் தெரியவில்லை," என்று ஸ்குடேருட் கூறினார். "திறமையாளர்களை ஈர்க்க முயற்சிக்கும்போது அது ஒரு சிக்கலாகும்."
அமெரிக்காவைப் போன்ற அதே ஊதியக் கட்டமைப்பு கனடாவில் இல்லை என்றும், சராசரியாக ஊதியங்கள் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், கனடா முயற்சி செய்யக்கூடாது என்று இது அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார். H-1B திட்டம் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஸ்குடேருட் கூறினார். குறிப்பாக, உயர்தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைப் பொறுத்தவரை அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்கிறார் அவர்.

அமெரிக்காவில் உள்ள H-1B விசா மாற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க ஐஆர்சிசி செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். இருப்பினும், திறமையான பணியாளர்களுக்கான 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' திட்டம் மற்றும் தற்காலிக வேலை அனுமதியை விரைவுபடுத்தும் 'குளோபல் ஸ்கில்ஸ் ஸ்ட்ராடஜி' திட்டம் போன்ற, வெளிநாட்டு பணியாளர்கள் கனடாவுக்கு வர நிறுவனங்கள் பின்பற்ற வாய்ப்புள்ள பல வழிகளை அவர் குறிப்பிட்டார்.
"உலகின் மிக அறிவார்ந்த மற்றும் சிறந்தவர்களை ஈர்ப்பதற்கு ஐஆர்சிசி புதிய தீர்வுகளைத் தொடர்ந்து அடையாளம் காண்கிறது" என்று செய்தித் தொடர்பாளர் மேத்யூ க்ரூபோவிச் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












