தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை முடிவு - இன்றைய முக்கிய செய்திகள்

தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் இன்று (23/02/2025) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்த செய்தியின்படி, 2020-ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2-வது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, ராமேசுவரம் மீனவர்களின் 31 படகுகள், புதுக்கோட்டை மீனவர்களின் 14 படகுகள், கன்னியாகுமரி மீனவர்களின் 8 படகுகள், நாகை மீனவர்களின் 3 படகுகள், காரைக்கால் மீனவர்களின் 5 படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விட உள்ளதாக இலங்கை நீரியல் வளத் துறை தெரிவித்துள்ளது.
- தெலங்கானா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - சிக்கிகொண்ட 8 தொழிலாளர்கள்
- காஷ் படேல் எஃப்பிஐ தலைவராக பதவியேற்பு - டிரம்ப் எதிர்ப்பாளர்கள் இவருக்கு அஞ்சுவது ஏன்?
- கோலிவுட்: பல வருடங்களாக தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?
- உலகெங்கும் அமெரிக்கா தங்கத்தை வாங்கிக் குவிப்பது ஏன்? தட்டுப்பாடு ஏற்படுமா? இந்தியாவில் என்ன பாதிப்பு?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு பதில் அளித்து வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தடுத்து நிறுத்தி, தங்களது படகுகளை மீட்டுத் தந்து, வாழ்வாதாரத்தைப் பாதுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் - ஆணுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை
புதுச்சேரியைச் சேர்ந்த 31 வயது நபருக்கு, 16 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அவரை மணம் புரிந்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எம்.டி.சுமதி, அந்த ஆணுக்கு ரூ.20 ஆயிரத்தை அபராதமாகவும் அறிவித்துள்ளார்.
இந்த திருமணத்தை நடத்தி வைத்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அந்த நபரின் பெற்றோருக்கும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நால்வருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
16 வயதே ஆன அப்பெண்ணுக்கும் அந்த நபருக்கும் விக்கிரவாண்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.
தகவல் அறிந்த திருக்கானூர் காவல்துறையினர் போக்ஸோ சட்டம் பிரிவு 6, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (3), குழந்தை திருமண தடைச்சட்டம் பிரிவு 9-ன் கீழ் அந்த ஆண் மீது வழக்கு பதிவு செய்தனர்.
குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவெடுக்கும் - செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்தது மனநிறைவை தருகிறது. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்காக அவரது பாணியில் கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் 3 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான்காவது கட்ட பயணத்தை விரைவில் துவங்க உள்ளேன். காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. அதனால் கருத்துகளை கூற அனைவருக்கும் உரிமை உள்ளது.
எனக்கு எதிராக கூறப்படும் புகார்கள் குறித்து கட்சி தலைமை விசாரித்து உரிய முடிவெடுக்கும். இதுபோன்ற புகார்களால் நான் மேலும் ஊக்கம் பெறுவேன். கட்சி பணியை இன்னும் தீவிரப்படுத்துவேன்," என்று அவர் கூறியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Facebook
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், விண்வெளித் தொழில் நிறுவனத்துக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் கிராம மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்ததாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்த செய்தியின்படி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே கூடல் நகர், அமராபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள், நிலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகக் துறை சார்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைப்பதற்கு ஆதியாக்குறிச்சி ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதியாக்குறிச்சியில் விண்வெளி பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி பஜாரில் வியாபாரிகள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றதாக அந்த செய்தி கூறுகிறது.
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுன்டர்
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.
மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அருண என்ற 32 வயதானவர் மற்றையவர் மட்டக்குளி, மோதரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்னர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறுகையில், "21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸாரால் துரத்திச் சென்று கைது செய்யப்பட்டனர்." என்றார்.

பட மூலாதாரம், virakesari
மேலும் தொடர்ந்த அவர், "கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக, சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஏனைய ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த பகுதிக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்றனர். பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்." என்று கூறியதாக வீரகேசரி இணையதள செய்தி தெரிவிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












