மகாராஷ்டிரா: கொலையுண்ட காதலன் உடலை 'மணந்த' காதலி - என்ன நடந்தது?

மகாராஷ்டிரா
    • எழுதியவர், முஸ்தான் மிர்ஸா
    • பதவி, பிபிசி மராத்திக்காக

(இந்தச் சம்பவத்தின் சில விவரங்கள் உங்களைச் சங்கடப்படுத்தலாம்)

மகாராஷ்டிராவின் நாந்தேட் நகரின் ஜூனாகாட் (ஜூனா கஞ்ச்) பகுதியில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது. காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காதலியின் குடும்பத்தினர், காதலனை கொலை செய்துள்ளனர் என காவல்துறை கூறுகிறது.

சக்ஷம் தாடே (வயது 20) மற்றும் ஆச்சல் மாமீட்வார் (வயது 21) ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். சக்ஷம் தாடே தலித் சமூகத்தை சேர்ந்தவர். சாதி காரணமாக ஆச்சலின் குடும்பத்தினர் இந்தக் காதலை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

சக்ஷம் கொலையான பிறகு, அவரது காதலியான ஆச்சல், அவரது சடலத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டார். பின்னர், தனது நெற்றியிலும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசிக் கொண்டு, இனி தான் சக்ஷமின் வீட்டிலேயேதான் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

"என்னுடைய காதலன் இறந்தும் ஜெயித்துவிட்டார், ஆனால், என்னுடைய பெற்றோர் அவரைக் கொன்றும் தோற்றுவிட்டனர்," என்று அவர் பின்னர் கூறினார்.

"நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் காதகுக்கு என் வீட்டினர் எதிர்த்தனர்," என்று ஆச்சல் தெரிவித்தார்.

ஆச்சல் ஊடகங்களிடம் தனது நிலையை விளக்கினார். அப்போது அவர், "சக்ஷம் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார், அதன் பிறகு என்னுடைய குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து மிரட்டினர். வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் எனது குடும்பத்தினர் சக்ஷமை வஞ்சக வலையில் சிக்கிவைத்து பிடித்துத் தாக்கி கொலை செய்தனர்," என்றார்.

ஆச்சலின் தந்தை கஜானன் மாமீட்வார், சகோதரர்கள் சாஹில் மற்றும் ஹிமேஷ் ஆகியோர் சக்ஷமை கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் ஏற்கெனவே குற்றப் பின்னணி இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா

கொலைக்கு முன் நடந்த மிரட்டல்

கொலை நடப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, ஆச்சலின் தாயார் ஜெயஸ்ரீ மாமீட்வார், சக்ஷமின் வீட்டுக்குச் சென்று வெளிப்படையாக மிரட்டிச் சென்றதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்தனர்.

"சக்ஷமும் நானும் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தோம். ஆனால், என் குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை. சக்ஷம் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அவனைக் கொல்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது. என்னையும் மிரட்டினார்கள். எனது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும் தூக்கு தண்டனை அளியுங்கள். இந்தக் கொலை சாதி மற்றும் வெறுப்பால் செய்யப்பட்டது," என்று ஆச்சல் ஊடகங்களிடம் கூறினார்.

"சக்ஷம் இப்போது இல்லை, ஆனால் நான் இன்னும் அவர் மீது காதல் வைத்திருக்கிறேன். நான் அவர் வீட்டில்தான் இருப்பேன்," என ஆச்சல் மேலும் கூறினார்.

சக்ஷமின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கஜானன் மாமீட்வார் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

12 மணி நேரத்திற்குள் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆச்சலின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் அல்லது வழக்கறிஞர்களின் கருத்தைப் பெற பிபிசி மராத்தி முயற்சித்தது, ஆனால் இதுவரை அவர்களின் கருத்தை அறிய முடியவில்லை.

மகாராஷ்டிரா

"கடந்த மூன்று வருடங்களாக சக்ஷம் தாடேவுடன் எனக்குக் காதல் இருந்தது. என் வீட்டினருக்கு அது பிடிக்கவில்லை. அதனால்தான், அவர்கள் அவரைக் கொலை செய்துவிட்டனர்," என்றார் ஆச்சல்.

"நாங்கள் காதலித்தோம், ஆனால் அவரது சாதி வேறாக இருந்ததால் என் தந்தைக்கு அது பிடிக்கவில்லை. நீ வேறு யாருடனும் பேசு, நான் உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், ஆனால் இவனுடன் பேசுவதை நிறுத்து, என்று அவர்கள் சொன்னார்கள்," என்று ஆச்சல் கூறினார்.

காவல்துறை என்ன சொன்னது?

மகாராஷ்டிரா
படக்குறிப்பு, பிரசாந்த் ஷிண்டே

முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடும்போது, குற்றம் செய்த பிறகு அவர்கள் பர்வனியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

குற்றம் சாட்டப்பட்ட கஜானன் மாமீட்வார் (வயது 45) மற்றும் சாஹில் மாமீட்வார் (வயது 25) ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

நாந்தேட் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஷிண்டே அளித்த தகவலின்படி, "சக்ஷம் தாடே (20 வயது) என்ற இளைஞன் தாக்கப்பட்டுக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது."

"இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஜெயஸ்ரீ மதன்சிங் தாக்கூர், கஜானன் மாமீட்வார், சாஹில் மாமீட்வார், ஹிமேஷ் மாமீட்வார், சோமேஷ் சுபாஷ் லக்கே, வேதாந்த் அசோக் குண்டேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு