ரிக்ஷா ஓட்டுபவர் முதல் சிறுவியாபாரி வரை - டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்த 8 பேர் யார்?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், பிரேரணா
- பதவி, பிபிசி
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் என டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உயிரிழந்த எட்டு பேர் யார் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிக்ஷா மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களாக உள்ளனர். சிலருக்கு செங்கோட்டை பகுதியில் வணிகம் உள்ளது, மற்ற சிலர் வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
மொஹ்சின் மாலிக், 28 வயது

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை பூர்வீகமாகக் கொண்ட மொஹ்சின் கடந்த சில வருடங்களாக டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்தார். செங்கோட்டை பகுதியில் மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷா (இ-ரிக்ஷா) வாகனத்தை இயக்கி வந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை மாலை வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தார். சம்பவத்திற்குப் பிறகு வந்த காவல்துறையினர் சாலையில் கிடந்த அவரின் செல்போனை மீட்டுள்ளனர். அவரைத் தேடி வந்த குடும்பத்தினர் லோக் நாயக் மருத்துவமனைக்கு (எல்என்ஜேபி) செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
நள்ளிரவு 12:30 மணிக்கு மருத்துவர்கள் மொஹ்சினின் இறப்பை அவரின் குடும்பத்தினரிடம் உறுதிபடுத்தினர். நாங்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். மொஹ்சினின் சகோதரி அழுதவாறே அந்த இடத்திலிருந்து வெளியே வந்தார்.

"என் சகோதரன் சென்றுவிட்டான், இனி அவனின் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவனின் மனைவியிடம் நான் எப்படி கூறுவேன்?" என்றவாறு கதறி அழுதார்.
அழுதவாறே மயங்கிய அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். மொஹ்சினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவரின் தாய் சாஜிதா, "இந்தச் சம்பவம் பற்றிய செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த உடன் எனது இளைய மருமகள் (மொஹ்சினின் மனைவி) அவனுக்கு அழைக்கத் தொடங்கினார். எந்த தகவலும் இல்லாத நிலையில் எனது மகளும் சிலரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனுக்கு இரண்டு இளம் குழந்தைகள் உள்ளனர்." என்றார்.
தினேஷ் மிஸ்ரா, 35 வயது

தினேஷ் மிஸ்ரா என்பவர் டெல்லியின் சாவ்ரி பஸாரில் உள்ள திருமண அழைப்பிதழ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 35 வயதான இவர் உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தியை பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆனால் கடந்த 15 வருடங்களாக டெல்லியில் வசித்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
ஐஏஎன்எஸ் செய்தி முகமையிடம் பேசிய அவரின் சகோதரர் குட்டு மிஸ்ரா, "நான் அவனை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தேன். 8 மணிக்கு ஒருமுறையும் 11:15 மணிக்கு ஒருமுறையும் அழைத்தேன். இரண்டாவது முறை ஒருவர் அழைப்பை எடுத்து லோக் நாயக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வருமாறு தெரிவித்தார். நான் 12 மணிக்கு அங்கே சென்றபோது உள்ளே அனுமதிக்கப்படவில்லை." என்றார்.
நீண்ட நேரம் போராடிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகக் கூறும் அவர் தனது சகோதரர் பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றார். அதிகாலை 03:30 மணிக்கு பிணவறைக்குச் செல்லுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்த தனது சகோதரரின் உடலைக் கண்டார்.
முகமது ஜும்மன், 39 வயது

பிகாரை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஜும்மனின் குடும்பம் கடந்த சில வருடங்களாக டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் வசித்து வருகிறது. இவரும் செங்கோட்டை பகுதியில் இ-ரிக்ஷா வாகனம் ஓட்டி சம்பாதித்து வந்தார்.
சம்பவம் நடந்த அன்று அந்த இடத்திற்கு அருகில் இருந்துள்ளார். அவருடைய இளைய சகோதரரின் மனைவி பிபிசியிடம் பேசுகையில், "நாங்கள் இரவு முழுவதும் அவரைத் தேடினோம். செவ்வாய்கிழமை மதியம் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே உடல்களை அடையாளம் காணுமாறு எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த உடலும் அடையாளம் காணக்கூடிய நிலையில் இல்லை. ஜும்மனின் உடைகளை வைத்து தான் அவரை அடையாளம் கண்டோம். அவரின் உடலில் தலையும் காலும் இல்லாமல் சிதைந்த நிலையில் இருந்தது." என்றார்.
ஜும்மனின் மனைவி மற்றும் அவரின் ஐந்து குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்தனர். அவர்கள் யாரும் பேசக்கூடிய நிலையில் இல்லை.
நோமன், 22 வயது

உத்தரப் பிரதேச மாநிலம் ஷம்லியின் ஜிஞ்சனாவைச் சேர்ந்த 22 வயதான நோமன் அங்கு அழகு சாதன கடை ஒன்றை நடத்தி வந்தார்.
நவம்பம் 10-ஆம் தேதி மாலை அவரின் கடைக்காக சில பொருட்கள் வாங்க டெல்லிக்கு வந்துள்ளார். அவரின் சகோதரர் அமனும் அங்கு இருந்துள்ளார்.
அவரின் குடும்பம் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "அவர் காரை நிறுத்துவிட்டு சாலையை கடக்கும்போது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதில் அவர் மாட்டிக் கொண்டார். நோமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அமன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார்." என்றனர்.
அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி கோரியுள்ள நோமனின் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
லோகேஷ் அகர்வால், 55 வயது

டெல்லி வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் லோகேஷ் அகர்வாலும் ஒருவர். அவருக்கு 55 வயதாகிறது. அவரின் உறவினர் சந்தீப் அகர்வால் கடந்த இரண்டு தினங்களாக நம்முடன் தொடர்பில் இருக்கிறார். சம்பவம் நடந்த நாளன்று இரவு 10 மணிக்கு மருத்துவமனையில் அவரைச் சந்தித்தோம். அப்போது லோகேஷின் இறப்பு பற்றிய செய்தி உறுதி செய்யப்படவில்லை.
நள்ளிரவு 02:30 மணிக்கு மருத்துவமனை நிர்வாகம் அவரை பிணவறைக்குச் சென்று லோகேஷின் உடலை அடையாளம் காணுமாறு தெரிவித்துள்ளது.
அந்த இரவின் அனுபவத்தை பிபிசி ஹிந்தியிடம் விவரித்து பேசிய அவர், "நான் முதலில் பிணவறைக்குச் சென்றபோது அங்கிருந்தவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. இரு காவலர்கள் எனக்கு உதவினர். அங்கே பல உடல்கள் இருந்தன. ஒவ்வொரு உடலின் மீதிருந்த விரிப்பை அகற்றி அடையாளம் காணத் தொடங்கினேன். பெரும்பாலான உடல்கள் முகத்தை வைத்து அடையாளம் காணக்கூடிய நிலையில் இல்லை. லோகேஷின் ஆடையை வைத்து தான் அவனை அடையாளம் காண முடிந்தது. இன்று அவனுடைய இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இது எங்களுக்கு மிகவும் கடினமான காலகட்டம், நாங்கள் இந்த துக்கத்திலிருந்து எப்படி மீள்வோம் எனத் தெரியவில்லை." என்றார்.

லோகேஷ் அகர்வால் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள ஹசன்பூரைச் சேர்ந்தவர். சம்பவம் நடந்த அன்று டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வருகிறபோது அவரின் குடும்பத்தைச் சேர்ந்த அசோக் குமாரிடம் பேசியுள்ளார்.
கடுமையான போக்குவரத்து நெரிசலால் தன்னை சாந்த்னி சௌக் பகுதியில் சந்திக்குமாறு லோகேஷிடம் கூறியுள்ளார் அசோக். அவர்கள் அங்கே சந்தித்தனர். ஆனால் இந்த விபத்து இருவரின் உயிரையும் பறித்துள்ளது.
அசோக் குமார், 35 வயது

பட மூலாதாரம், BBC/तारिक़ अज़ीम
அசோக் குமார் டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றினார். 35 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அவரின் சகோதரர் தேவேந்திர குமார் ஐஏஎன்எஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், "அசோக் அவரின் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரின் குடும்பத்தினர் அம்ரோஹாவில் உள்ளனர்." என்றார்.
அம்ரோஹாவில் உள்ள பிபிசி நிருபர் தாரின் அஸீம், லோகேஷ் அகர்வாலும் அசோக்கும் நண்பர்கள் எனத் தெரிவித்தார். லோகேஷ் உரக்கடை ஒன்றை நடத்தி வந்ததாகவும் அசோக் பேருந்து நடத்துனராக இருந்ததாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரின் குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பங்கஜ் சாஹ்னி, 22 வயது

தனியார் கார் ஓட்டுநரான பங்கஜ்-க்கு 22 வயது ஆகிறது. பிகாரின் சமஸ்திபூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த 15 வருடங்களாக டெல்லியில் அவரின் தந்தையுடன் வசித்து வருகிறார்.
நவம்பம் 10-ஆம் தேதி பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தவர், செல்கின்ற வழியில் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
சமஸ்திபூரைச் சேர்ந்த உள்ளூர் நிருபர் ஒருவர் பங்கஜ்க்கு திருமணமாகவில்லை எனத் தெரிவித்தார். சமஸ்திபூரில் உள்ள அவரது வீட்டில் துக்கமான சூழ்நிலை நிலவியது. அவரின் இறுதிச் சடங்கு டெல்லியில் அவர் தந்தையின் முன்னிலையில் நடத்தப்பட்டது.
அமர் கடாரியா, 34 வயது

அமர் கடாரியா டெல்லியில் உள்ள ஸ்ரீனிவாசபுரியில் அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செங்கோட்டை பகுதியில் மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
அமர் கடாரியாவின் குடும்பத்திடம் பேச பிபிசி நிருபர் இஷாத்ரிதா லாஹிரி அவரின் வீட்டிற்குச் சென்றார்.
அமரின் தந்தை ஜக்தீஷ் கடாரியா பிபிசியிடம் பேசுகையில், "அமர் அப்போது தான் வீட்டை விட்டுச் சென்றான். அடுத்து என்ன நடந்தது என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். பத்து நிமிடங்களுக்கு முன்பு தான் என்னிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அழைத்தபோது மறுபுறத்தில் ஒரு பெண் குரல் கேட்டது. காவல்துறை அதிகாரியான அவர் அமரின் செல்போன் சாலையில் கிடந்ததாகத் தெரிவித்தார். எங்களை எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார்." என்றார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே பல மணி நேரம் காத்துக் கிடந்ததாகவும் ஆனால் அவரின் மகன் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் அமரின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகத்தின் நடைமுறை பற்றி கேள்வி எழுப்பிய அவர், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவை பார்த்துக் கொள்வது தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது என்றார்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி கார் வெடிப்பு பற்றிய செய்தி வந்த உடனே டெல்லி முதல்வரும், மத்திய உள்துறை அமைச்சரும் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தனர். இது நடந்தபோது இரவு 9 மணி இருக்கும்.
மருத்துவமனைக்கு வெளியே பாதிக்கப்பட்ட உறவினர்களைச் சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக் கூறிய பலரை நாங்கள் கண்டோம். அவசர சிகிச்சை பிரிவுக்கு உள்ளே 30, 40 பேர் தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கண்டுபிடிக்க காத்திருந்தனர்.
இத்தகைய தீவிரமான சூழ்நிலைகளில் நோயாளிகளுக்கு சிறப்பான மற்றும் விரைவான சிகிச்சை வழங்குவதே தங்களின் முன்னுரிமை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












