சதி கோட்பாடுகளிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

இடதுபுறம் கேட் ஷெமிராணியும், வலதுபுறம் பலோமா ஷெமிராணியும் உள்ள ஒரு படம்
    • எழுதியவர், மரியானா ஸ்பிரிங்
    • பதவி, சமூக ஊடக ஆய்வுகள் செய்தியாளர், பிபிசி

பிரிட்டிஷ் சதித்திட்டக் கோட்பாட்டாளர் ஒருவரின் மகள் பலோமா ஷெமிராணி (Paloma Shemirani) இறப்பை பற்றிய விசாரணை, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போல இருந்தது.

விசாரணை நடந்தபோது, மருத்துவ உலகம் "சதித்திட்டப் பரப்பு உலக"த்துடன் மோதியது. தவறான மருத்துவத் தகவல்களை நம்பும் நபர்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை நீதிமன்றங்களில் கேள்வி கேட்டனர்.

கிழக்கு சஸ்ஸெக்ஸைச் (East Sussex) சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பட்டதாரியான பலோமா ஷெமிராணிக்கு, ஏழு மாதங்களுக்கு முன், நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா (non-Hodgkin lymphoma) என்ற புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

வழக்கமான சிகிச்சையைப் பெற்றால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. ஆனால் அவர் கீமோதெரபியை (Chemotherapy) நிராகரித்துவிட்டு, ஜூஸ் மற்றும் காபி எனிமாக்கள் (Coffee Enemas) போன்ற மாற்று முறைகளைத் தேர்ந்தெடுத்தார்.

பலோமாவின் இரட்டைச் சகோதரர் கேப்ரியல் (Gabriel), நீண்ட காலமாகவே தங்கள் தாயான கேட்டை (Kate) குற்றம் சாட்டி வருகிறார். கீமோதெரபியை நிராகரிப்பது என பலோமா எடுத்த முடிவுக்குக் கேட்டின் நம்பிக்கைகளே காரணம் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

வியாழக்கிழமை அன்று, மரண விசாரணை அதிகாரி கேத்தரின் வுட் (Catherine Wood), பலோமா தனது தாயின் நம்பிக்கைகள் மற்றும் குடும்ப நண்பர், அவரது தந்தை உட்பட மாற்று சிகிச்சையை ஆதரித்த மற்றவர்களின் கருத்துக்களால் "அதிகமாகப் பாதிக்கப்பட்டார்" என்று கூறினார்.

"பலோமாவின் மீது செலுத்தப்பட்ட செல்வாக்கு... அவரது மரணத்திற்கு அதிகமாகவே காரணமானது," என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.

மெகாஃபோன் மூலம் போராட்டக்காரர்களிடம் பேசும் கேட் ஷெமிராணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் செவிலியரான பலோமாவின் தாய் கேட் ஷெமிராணி, 2021-ல் தனது பணி உரிமத்தை இழந்தார்.

முன்னாள் செவிலியரான கேட் ஷெமிராணி, எக்ஸ் தளத்தில் 80,000 பின்தொடர்பவர்களைக் கொண்டவர். கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியதால், "பொதுமக்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியதற்காக," 2021-ல் நர்சிங் மற்றும் பேறுகால கவுன்சில் குழுவால் அவரது பணி உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தான் குழந்தையாக இருந்தபோது 9/11 தாக்குதல் "உள்ளே இருந்து நிகழ்த்தப்பட்டது" என்றும், அரச குடும்பத்தினர் உருவம் மாறும் பல்லிகள் (shape-shifting lizards) என்றும் வெளிப்படையான தவறான தகவல்களால் சூழப்பட்டிருந்ததாக கேப்ரியல் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கும் பலோமாவும் சுகாதாரம் பற்றிய தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாக கூறுகிறார்.

தனது தாயுடன் கடைசியாகப் பேசியபோது, "அவரை பொறுப்பாக்கப் போவதாக" சபதம் செய்ததாக கேப்ரியல் கூறுகிறார்.

கேட் ஷெமிராணியைப் பொறுத்தவரை, கீமோதெரபியை நிராகரிக்கும் முடிவைப் பலோமா முழுவதுமாகத் தானே எடுத்ததாகவும், என்.எச்.எஸ் (NHS) மற்றும் மருத்துவர்களே பலோமாவின் மரணத்திற்குப் பொறுப்பு என்று கூறி நிரூபிக்கப்படாத பல்வேறு கோட்பாடுகளை அவர் தொடர்ந்து ஆதரித்து வருகிறார். பலோமாவின் தந்தை ஃபாராமர்ஸ் ஷெமிராணி (Faramarz Shemirani) மரண விசாரணை அதிகாரியின் நீதிமன்றத்திலும் இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தார்.

விசாரணையின் போதும் சரி, எனது ஆய்வுக்காக நான் அவரைத் தொடர்பு கொண்டபோதும் சரி, பலோமாவின் முடிவுகளிலும், இறுதியில் அவர் உயிரை இழந்ததிலும் தனது நம்பிக்கைகளோ அல்லது நடத்தைகளோ ஒரு பங்கையும் வகிக்கவில்லை என்று கேட் தொடர்ந்து நிராகரித்தார். விசாரணை முடிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு நான் கேட்டபோது, அவரோ அல்லது ஃபாராமர்ஸோ பதிலளிக்கவில்லை.

ஒரு பாலத்தின் முன் புன்னகைக்கும் பலோமா ஷெமிராணி
படக்குறிப்பு, பலோமா ஷெமிராணி கடந்த ஆண்டு ஜூலையில் தனது 23 வயதில் இறந்தார்

நேற்று, மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளித்தார்: "திருமதி ஷெமிராணி தனது மகளின் மீது காட்டிய அக்கறையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அது சட்டவிரோதமான கொலை அல்ல என்று நான் கண்டறிந்தேன்."

"பலோமாவுக்கு ஆதரவளிக்கப்பட்டு, அவர் தனது நோயறிதலை ஏற்றுக்கொண்டு, கீமோதெரபியைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டிருந்தால், அவர் அத்திட்டத்தைப் பின்பற்றியிருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால், இது பெற்றோர்கள் கொண்டுள்ள சதித்திட்டக் கோட்பாடுகளின் (இவை உண்மையான அக்கறைகளுக்கு அப்பால் நீண்டு செல்கின்றன) செல்வாக்கு மற்றும் தாக்கம், பெரியவர்களாக வளர்ந்த குழந்தைகள் உட்பட, குழந்தைகள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பரந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மிகவும் தீவிரமான நிகழ்வுகளில் குழந்தைகளைப் பாதுகாக்க, பெற்றோர் தங்கள் சொந்த நம்பிக்கைகளின்படி குழந்தையை வளர்க்கும் சுதந்திரத்திற்கும், குழந்தைப் பாதுகாப்புக்கும் இடையே எங்கே எல்லையை வகுக்க வேண்டும்?

தவறான தகவல்களின் 'பெரும் உயர்வு'

பலோமாவுக்கு என்ன நடந்தது என்று நான் முதலில் விசாரிக்கத் தொடங்கியதிலிருந்தே, தங்கள் சொந்த உறவினர்கள் தவறான மருத்துவத் தகவல்களின் அடிப்படையில் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களிடமிருந்து டஜன் கணக்கான செய்திகளைப் பெற்றுள்ளேன்.

தடுப்பூசி பற்றிய நம்பிக்கையின்மை காரணமாக தங்கள் இளம் பேரக்குழந்தைகளுக்குச் சில நோய்களுக்குத் தடுப்பூசி போடப்படாமல் இருப்பது குறித்துக் கவலை கொண்ட பல தாத்தா பாட்டிகளிடமிருந்தும் செய்திகள் வந்தன.

ஓரு பாட்டி, தங்கள் மகள் எம்எம்ஆர் (MMR) தடுப்பூசியைப் பற்றி பயம் காரணமாக, பேரக்குழந்தைக்குத் தடுப்பூசி போட மறுப்பதாகக் கூறி, ஆலோசனைக் கோரி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

கேள்வி எழுப்பியபோது, அவரது மகள் தனது முடிவை மாற்ற மறுத்து, சமூக ஊடகங்களில் இருந்து வந்த போலி அறிவியல் தகவல்களைப் திருப்பி அனுப்பினார்.

தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லாவுக்கு எதிராகப் பாதுகாக்கும் எம்எம்ஆர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சமீபத்தில் மருத்துவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரிட்டனில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,911 ஆகும், இது 2012-க்குப் பிறகு ஆண்டுதோறும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு இதுவரை 700-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிவர்பூலில் தட்டம்மை நோய் தொற்றிய ஒரு குழந்தை இறந்தது.

மருத்துவ நிபுணர்கள், மருத்துவ எதிர்ப்புச் சதித்திட்டக் கோட்பாடுகள் மிகவும் பரவலாகிவிட்டதாக எச்சரித்துள்ளனர்.

" சமூக ஊடகங்களில் தவறான தகவல்களின் பெரும் உயர்வுக்கு கோவிட் வழிவகுத்தது என்று நான் நினைக்கிறேன், மேலும் விஞ்ஞானிகள் அதைப் பற்றிய உண்மையைச் சரிபார்க்கும் முன்பே, அல்லது அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பே அது வேகம் பெற்றது," என்று முன்னாள் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் லிஸ் ஓ'ரியார்டன் (Liz O'Riordan) கூறுகிறார். "மருத்துவத் தொழிலின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது."

அதன் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்பது அவரது பார்வை.

"தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் தட்டம்மையால் இறக்கின்றன. சிறுவர்கள் பொன்னுக்கு வீங்கி தொற்று காரணமாக மலட்டுத்தன்மை அடைகின்றனர். குடும்பங்கள் மருத்துவர்களை நம்பாமல் வளரும் - அவர்கள் பரிசோதனைகளுக்குச் செல்ல மாட்டார்கள்... இதனால் புற்றுநோய்கள் தாமதமாகக் கண்டறியப்பட்டு, மீண்டும் வரும் அபாயம் அதிகரிக்கும்," என்று அவர் வாதிடுகிறார்.

"[குழந்தைகள்] தங்கள் பெற்றோர் பேசும் உரையாடல்களைக் கேட்பார்கள்... உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நீங்கள் நம்பும் நபர்களிடமிருந்து தகவல்களைக் கேட்பது ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களிடமிருந்து கேட்பதை விட மிகவும் நம்பக்கூடியதாக தோன்றும்," என்கிறார்.

அதிகம் பாதிக்கப்படக்கூடிய வயது குழுக்கள்

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லிஸ் ஓ'ரியார்டன், சுகாதாரம் பற்றிய தவறான தகவல்களை ஆன்லைனில் அடிக்கடி அம்பலப்படுத்துகிறார்.

தங்கள் உறவினர்களின் நம்பிக்கைகள் குறித்துக் கவலை தெரிவித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய பலர், அந்த நம்பிக்கைகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க முயன்றதாகவும், ஆனால் அந்தத் தவறான தகவல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்ததாகவும் விளக்கினர்.

இது ஒரு பொதுவான பிரச்சனை: மருத்துவப் பொய்களைப் பரப்புபவர்களின் தகவல்கள் அல்லது நோக்கங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன.

வாழ்த்து அட்டை மற்றும் பூங்கொத்தை வைத்திருக்கும் பலோமா ஷெமிராணி
படக்குறிப்பு, சதித்திட்டக் கோட்பாடுகளை அல்லது தவறான தகவல்களை வயதானவரகளை விட 35 வயதிற்குட்பட்டவர்கள் அதிகம் நம்புகிறார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தவறான தகவல்களைப் பரப்புவோரின் பலமே பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சதிதிட்ட கோட்பாடுகளை ஆய்வு செய்யும், பாத் பல்கலைக்கழகத்தின் (University of Bath) மூத்த விரிவுரையாளர் திமோதி ஹில் (Dr Timothy Hill) எச்சரிக்கிறார். அவர் அதை, "புதியவர்களை இந்த வட்டத்திற்குள் கொண்டுவரத் தயாராக உள்ள, பெரிய ஆன்லைன் மற்றும் நேரில் பழகும் சமூகம்" என விவரிக்கிறார்.

ஒரு விஷயத்தைப் பற்றிய தகவலைத் தேடுவது கூடச் சில சமயங்களில் மக்களை அந்தச் சமூகத்திற்கு இட்டுச் செல்லும். "[மக்கள்] தங்கள் பெற்றோர் சொல்வதை ஆதரிக்கும் அல்காரிதத்தால் தூண்டப்பட்ட ஒரு வலைக்குள் சிக்கிவிடுகிறார்கள்," என்று ஓ'ரியார்டன் கூறுகிறார்.

இதன் விளைவாக, எல்லா வகையான மக்களும் தவறான தகவல்களை நம்புவதற்கு அல்லது கருத்தில் கொள்ளும் வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 3,80,000 பேரின் கணக்கெடுப்புத் தரவுகளை ஆய்வு செய்த, கடந்த ஆண்டு அரசியல் உளவியல் (Political Psychology) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 35 வயதிற்குட்பட்டவர்கள் வயதானவர்களை விடச் சதித்திட்டக் கோட்பாடுகளை நம்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.

"அவர்கள் பெரும்பாலும் குறைந்த சுயமரியாதையை அனுபவிக்கிறார்கள், அரசியலில் இருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கிறார்கள், மேலும் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு சவால் விடும் வழக்கத்திற்கு மாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது," என்று ஹில் கூறுகிறார்.

பெற்றோரை நம்புவதா அல்லது அரசை நம்புவதா?

கோட்பாட்டளவில், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தையின் நலன் குறித்து எந்தவொரு வயதுவந்தவரும் உள்ளூர் அதிகாரியிடம் கவலை தெரிவிக்கலாம், பெற்றோர் நம்பிக்கைகளால் ஒரு குழந்தை பாதிக்கப்படுவதாகக் கவலை இருந்தாலும் அது பொருந்தும்.

அதன்பிறகு, அந்தக் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக முடிவு செய்யப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க குடும்ப நீதிமன்றத்தில் உத்தரவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், உண்மையில், தலையீட்டிற்கான வரம்பு அதிகமாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் என்னிடம் கூறுகிறார்கள்.

"எங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாதீர்கள்" என்று ஒரு பதாகையை ஏந்திய போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், SOPA Images/LightRocket via Getty Images

படக்குறிப்பு, பிரிட்டனில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் சட்டம் எதுவும் இல்லை.

குடும்ப வழக்கறிஞரான ரேச்சல் ஃப்ரோஸ்ட்-ஸ்மித் (Rachel Frost-Smith), ஒரு இளம் குழந்தை மற்றும் தாயின் தடுப்பூசிக்கு எதிரான நம்பிக்கைகள் தொடர்பான ஒரு வழக்கை நினைவுகூருகிறார்.

குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான தகவலை அதன் தந்தைக்கு (ஃப்ரோஸ்ட்-ஸ்மித் அவர் சார்பில் ஆஜரானார்) வழங்க அந்தத் தாய் தயக்கம் காட்டினார். சில தடுப்பூசிகளைப் பற்றித் தனது சந்தேகப் பார்வையை நியாயப்படுத்த அவர் தந்தைக்குச் சமூக ஊடகங்களில் இருந்து காணொளிகளைக் காட்டியிருந்தார்.

"இந்தக் காணொளிகள் அனைத்தும் சதித்திட்டக் கோட்பாட்டுக் வகையைச் சேர்ந்தவை, இதில் தடுப்பூசிகள் ஆட்டிஸத்தை (Autism) ஏற்படுத்துகின்றன என்று கூறும் காணொளியும் அடங்கும்," என்று ஃப்ரோஸ்ட்-ஸ்மித் நினைவு கூருகிறார்.

குழந்தைக்குப் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் போடலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், பிரிட்டனில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் சட்டம் எதுவும் இல்லை - எனவே இரண்டு பெற்றோர்களும் ஒரு குழந்தைக்குத் தடுப்பூசி போட விரும்பவில்லை என்று ஒப்புக்கொண்டால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை.

மேலும், அந்தக் குழந்தைக்கு 18 வயதாகும் போது நிலைமை இன்னும் சிக்கலாகிறது.

கேப்ரியல் ஷெமிராணி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பலோமாவின் சகோதரர் கேப்ரியல் ஷெமிராணி, தான் குழந்தையாக இருந்தபோது வெளிப்படையான தவறான தகவல்களால் சூழப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.

பலோமா தனது தாயுடன் வீட்டில் வசித்து வந்தபோது ஒரு சமூகப் பணியாளரிடம் பேசியதாகவும், தனது விஷயத்தில் சமூகச் சேவைகள் தலையிட வேண்டாம் என்று அவர் பிடிவாதமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. பலோமாவை சமூகசேவைகள் துறை நேரில் சந்திக்காதது குறித்துத் தான் ஏமாற்றமடைந்ததாக கூறி அவரது சகோதரர் கேப்ரியல் கவலைகளை எழுப்பியிருந்தார்,

சமூகப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், பெரியவர்களைப் பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்பதில் வரையறைகள் உள்ளன என்று ஃப்ரோஸ்ட்-ஸ்மித் கூறுகிறார். இதில், "மற்றவர்களுக்கு 'மோசமான' முடிவுகளாகத் தோன்றினாலும், அத்தகைய முடிவுகளை எடுக்கும் திறன்" கொண்டவர்களும் அடங்குவர்.

சட்டத்தை மாற்றுவது: ஒரு விவாதம்

சில நிபுணர்களால் முன்வைக்கப்படும் ஒரு தீர்வு, சட்டத்தை மாற்றுவது ஆகும்.

பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தின் (University of Bedfordshire) சமூகப் பணிப் பேராசிரியரான மைக்கேல் பிரஸ்டன்-ஷூட் (Michael Preston-Shoot), பிரிட்டனில் சட்டத்தை மாற்றுவதன் மூலம், சமூகப் பணியாளர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல், ஒருவரைத் தனியாக நேர்காணல் செய்ய வாரண்ட் பெறுவது சாத்தியமாகும் என்று வாதிடுகிறார். இது ஏற்கனவே வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் நடைமுறையில் உள்ளது.

"துரதிர்ஷ்டவசமாக, யாரோ ஒருவர் குறுக்கிடுவதால், மருத்துவர்கள் தனிநபர்களைச் சென்றடைய முடியாத பல உதாரணங்கள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், பாலிசி எக்ஸ்சேஞ்ச் (Policy Exchange) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான இயன் மான்ஸ்ஃபீல்ட் (Iain Mansfield), எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகிறார்.

"இந்த 'தவறான தகவல்' என்ற வார்த்தை அந்தச் சமநிலையை மிகவும் ஆபத்தான திசையில், பெற்றோரிடமிருந்து விலகி அரசுக்குச் சாதகமாகத் திருப்பப் பயன்படுத்தப்படலாம் என்று நான் நினைக்கிறேன். இப்போது நாம் அரசை நம்பினாலும், எதிர்காலத்தில் அது சரியாகச் செயல்படாமல் போகலாம்."

"இது உண்மையில் தவறான தகவல் என்பதை யார் வரையறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு கொண்டு செல்கிறது," என்று அவர் தொடர்கிறார். "அந்த அதிகாரத்தை நீங்கள் யாருக்குக் கொடுக்கிறீர்கள்? அதை அரசுக்கு கொடுக்க விரும்புகிறீர்களா? ஒரு பெரிய நிறுவனத்திற்கோ அல்லது ஒரு தனிப்பட்ட பில்லியனருக்கோ கொடுக்க விரும்புகிறீர்களா?"

"இங்கே நாம் பெற்றோரை நம்பும் வகையில் தவறுகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்."

'உண்மை கவர்ச்சியானதோ அல்லது உற்சாகமானதோ அல்ல'

அப்படியானால், சமூக ஊடகத் தளங்கள் எவ்வளவு பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.

2023-ல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act), சட்டவிரோத உள்ளடக்கத்தை நீக்கவும், குழந்தைகளை தீங்கு விளைவிக்கும் இடுகைகளிலிருந்து பாதுகாக்கவும் முக்கியச் சமூக ஊடக நிறுவனங்களைக் கட்டாயப்படுத்துகிறது. ஆனால், தீங்கு விளைவிக்கக்கூடியதாகக் கருதப்படும் சட்டப்பூர்வ உள்ளடக்கத்தைக் கையாள்வதில் இது தெளிவாக இல்லை.

சமூக ஊடக ஒழுங்குமுறையை சுற்றியும் சிக்கலான சூழல் நிலவுகிறது. இது எக்ஸ் தளத்திற்கும் பொருந்தும். எக்ஸ் தளத்தில், ஈலோன் மஸ்க் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மிதப்படுத்தல் (moderation) விதிகளை மாற்றியுள்ளார்.

"உண்மை கவர்ச்சியானதோ அல்லது உற்சாகமானதோ அல்ல என்பதால், அந்த கூச்சலுக்கு மேலே வர முடியாது, மேலும் பெரும்பாலான மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இதை எதிர்கொள்ள நேரமோ அல்லது திறமையோ இல்லை," என்று லிஸ் ஓ'ரியார்டன் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, தற்போதைய சமூக ஊடக ஒழுங்குமுறைகள் போதாது. இருப்பினும், எது பாதுகாப்பானது என்பதைத் தீர்மானிக்கச் சமூக ஊடக நிறுவனங்களை அதிகமாக நம்பும் விதமாக விதிகளை மாற்றுவது குறித்து மான்ஸ்ஃபீல்ட் மீண்டும் எச்சரிக்கிறார்.

"பெரிய நிறுவனங்கள் அவை யாருக்கு சொந்தமானதாக இருந்தாலும், எது தவறான தகவல் என்பதையும், எதை நாம் தணிக்கை செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று கூறுவது குறித்து நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்."

அப்படியானால், அரசு அல்லது கார்ப்பரேட் அளவில் ஒழுங்குமுறையை ஈடுபடுத்தாமல், பயனர்கள் உண்மையைத் தாங்களாகவே சிறப்பாகத் தீர்மானிக்கத் தேவையானவற்றை வழங்குவதே தீர்வாக இருக்க முடியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அபாயச் சிக்னல்களைக் கண்டறியக் கற்றுக்கொள்வது

"ஆன்லைனில் அவர்கள் பார்க்கும் மருத்துவக் கூற்றுக்களை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி உண்மையைச் சரிபார்ப்பது, சுயமாக சிந்திப்பது, அவர்கள் பார்க்கும் அல்லது கேட்கும் அனைத்தையும் நம்பக்கூடாது என்று குழந்தைகளுக்குப் பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும்," என்று ஓ'ரியார்டன் வாதிடுகிறார்.

அவர், குழந்தைகள் அபாயச் சிக்னல்களை அடையாளம் காணவும், "தங்கள் பெற்றோர்கள் சொல்வதைக் கேள்வி கேட்கும் தைரியத்தை அவர்களுக்கு அளிக்கவும்" வேண்டும் என்கிறார்.

இவை அனைத்தும் கேப்ரியல் அனுபவித்ததாக கூறுவதற்கும் பொருந்துகிறது.

அவரைப் பொறுத்தவரை, "தனிமைப்படுத்துவதான் சதித்திட்டக் கோட்பாடுகளின் உயிர்நாடி" ஆகும். மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து வீட்டிலிருந்து விலகி இருந்தபோது, "மக்கள் கருத்து வேறுபாடு கொண்டதால், [தனது] நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று அவர் கூறினார்.

கேட் ஷெமிராணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் மகளின் மரணத்திற்கு மருத்துவ ஊழியர்களே காரணம் என்று கேட் ஷெமிராணி குற்றம் சாட்டினார்.

விசாரணை முடிவுக்கு முன்னதாக நேர்காணலுக்கான எனது கோரிக்கைகளுக்கு கேட் ஷெமிராணியோ அல்லது ஃபாராமர்ஸ் ஷெமிராணியோ பதிலளிக்கவில்லை.

"உறுதிப்படுத்தப்பட்ட நோயறிதல் அல்லது சட்டப்பூர்வ சம்மதம் இல்லாமல் வழங்கப்பட்ட மருத்துவத் தலையீடுகளின் விளைவாகப் பலோமா இறந்தார்" என்பதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக அவர்கள் முன்பு பிபிசிக்கு எழுதியிருந்தனர். இந்தக் கூற்றுக்களை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் பிபிசி காணவில்லை.

இருப்பினும், கேப்ரியல் தனது இரட்டைச் சகோதரியின் மரண விசாரணையை விழிப்புணர்வுக்கான ஒரு அழைப்பாகப் பார்க்கிறார். சதித்திட்டக் கோட்பாடுகளை நம்பும் பெற்றோர்களை உடைய நபர்களை சமூகம் நீண்ட காலமாகவே கைவிட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார்.

"நாம் ஒரு சமூகமாகச் சதித்திட்டக் கோட்பாட்டாளர்களைச் சர்க்கஸ் விலங்குகளைப் போல சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்," என்று அவர் வாதிடுகிறார், ஏனெனில் அவர்கள் "தீங்கு விளைவிக்காதவர்கள்" அல்ல.

"சதித்திட்டக் கோட்பாட்டாளராக மாறுவதற்கான பாதை நீங்கள் நினைப்பதை விடக் குறைவானது என்பதையும் நாம் உணர வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.