உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையாதது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தன் உடலில் ஏன் இவ்வளவு கொழுப்பு சேர்கிறது என்பதை அங்கிதா யாதவால் (புனைப் பெயர்) புரிந்துகொள்ளமுடியவில்லை.
உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி, உடற்பயிற்சி செய்தாலும் அவரது உடல் எடை அதிகரித்துக் கொண்டிருந்தது.
மருத்துவர்களும் அதை உடல் பருமன் என்றே கூறினார்கள். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அவர், பெண்கள் மத்தியில் அதிகம் காணப்படும் லிபெடிமா எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இது அங்கிதாவின் கதை மட்டுமல்ல. லட்சக்கணக்கான பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுகூட அவர்களுக்கு தெரியாது.
லிபெடிமா பெண்களுக்கு உடல்ரீதியான சவால்களை தருவது மட்டுமல்லாமல், மனச்சோர்வையும் ஏற்படுத்தக் கூடும்.
இந்தியாவில் லிபெடிமாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறித்து நம்பகமான தரவுகள் இல்லை, ஆனால் அமெரிக்க மருத்துவ மையமான கிளீவ்லாந்து கிளினிக், உலகளவில் சுமார் 11 சதவீத பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.
லிபெடிமா என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
லிபெடிமா என்பது படிப்படியாக வளரும் ஒரு நோயாகும். இதில் உடலின் கீழ்ப் பகுதியில் குறிப்பாக இடுப்பு, தொடைகள், மற்றும் கால்களில் அசாதாரணமான வகையில் கொழுப்பு சேர்க்கை நிகழ்கிறது.
சில நேரங்களில் கைகளிலும் கொழுப்பு சேரலாம்.பெரும்பாலும் லிபெடிமாவை உடல் பருமனாக தவறாக நினைக்கின்றனர், ஆனால் அது அப்படியல்ல.
"லிபெடிமா பெரும்பாலும் உடல் பருமனாகவோ அல்லது மிகையான எடையாகவோ தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், சாதாரண உடல் நிறை குறியீட்டைக் (Body Mass Index) கொண்ட பெண்களும் லிபெடிமாவால் பாதிக்கப்படலாம்," என டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையின் மருத்துவத் துறை இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் அல்பனா ரைசாதா, பிபிசியிடம் கூறினார்.
லிபெடிமா பெரும்பாலும் உடல் பருமன், லிம்ஃபெடிமா(lymphedema), அல்லது செல்லுலைட்டிஸ் என்று தவறாக கருதப்படுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இந்த மூன்று நிலைகளிலும் உடல் உறுப்புகள் பருமனாகத் தொடங்கினாலும், லிபெடிமா இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு நோயாகும்.
இந்த மூன்று நோய்களை கண்டறிவதில் மருத்துவர்களிடையே கூட குழப்பம் நிலவுகிறது. இதனால்தான் லிபெடிமா ஆரம்பத்திலேயே கண்டறியப்படுவதில்லை.
1940களிலிருந்தே மருத்துவர்களுக்கு லிபெடிமா பற்றி தெரியும்.
ஆனால், பல தசாப்தங்களாக மருத்துவ சமூகம் உடலில் சமமற்ற கொழுப்பு சேர்க்கை அறிகுறி குறித்து பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
கடந்த 15 ஆண்டுகளாத்தான் இது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
"உலக சுகாதார அமைப்பு (WHO) இதை 2019ஆம் ஆண்டு தனித்துவமான நோயாக அங்கீகரித்தது."
இதனால் மருத்துவர்கள் மற்றும் பொது மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளும் இதுவரை மிகக் குறைவாகவே இருந்தன.
அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
முழங்கால்கள், மூட்டுகள், மற்றும் கெண்டைக்காலில் தொடர்ந்து வலி இருப்பது லிபெடிமாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
தொடைகள் மற்றும் இடுப்பில் சமமற்ற மற்றும் கடினமான கொழுப்பு சேர்க்கை, அங்கு தொடும்போது வலி அல்லது எரிச்சல், கைகள் மற்றும் கால்கள் விரைவில் களைப்படைதல், லேசான காயத்திற்கு கூட தழும்புகள் ஏற்படுதல் – இவையெல்லாம் இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
உடலின் கீழ்ப் பகுதியில் சுலபமாக கீறல்கள் அல்லது தடிப்புகள் ஏற்படும் போக்கு இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். கைகள் மற்றும் அவற்றின் பின்புறங்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதும் லிபெடிமா ஏற்படும் அபாயத்தை குறிக்கலாம்.
முழு உடலுடன் ஒப்பிடும்போது சில பகுதிகள் அளவுக்கு அதிகமாக பருமனாகி வருகின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். மேலும், மனநிலையை கவனிப்பது முக்கியம். உணர்வு ரீதியான மன அழுத்தம் மற்றும் திடீரென தன்னம்பிக்கை குறைவது ஆகியவையும் இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
நோய் படிப்படியாக தீவிரமடையும் போது உடலின் கீழ்ப் பகுதி உறுப்புகள் வேகமாக பருமனாகி, வடிவமிழக்கத் தொடங்குகின்றன. நிலைமை மோசமாகும்போது, நோயாளிகளுக்கு நகர்வது கூட கடினமாகிறது. இந்தக் காலகட்டத்தில் வலி இருப்பது பொதுவானது.
லிபெடிமா ஏற்பட காரணம் என்ன?

லிபெடிமா ஏற்படுவதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை.
ஆனால், உடலின் இணைப்பு திசுக்கள் மற்றும் நிணநீர் அமைப்பு (லிம்ஃபாடிக் அமைப்பு) ஆகியவை பாதிக்கப்படும் நிலை இது என மருத்துவர்கள் சொல்கின்றனர்.
மருத்துவர்களின் கருத்துப்படி, இது மரபணு நோயாக இருக்கலாம். அதாவது, குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், அடுத்த தலைமுறையும் இதனால் பாதிக்கப்படும்.
இதைத் தவிர பதின்ம வயதிலிருந்து இளமைப் பருவத்திற்கு நுழையும்போது பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஏற்றத்தாழ்வுகள் லிபெடிமாவிற்கு காரணமாகலாம்.
" ஹார்மோன் மாற்றங்களின் போது பெண்களுக்கு இந்த வகையான நோய் ஏற்படும் அபாயம் அதிகபட்சமாக உள்ளது. இளமைப் பருவத்தில் நுழையும்போதும், கர்ப்ப காலத்திலும், அல்லது மாதவிடாய் நின்ற பிறகும் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த நேரத்தில் லிபெடிமாவின் அபாயம் அதிகரிக்கிறது," என டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளரான மருத்துவர் யோகேஷ் குஷ்வாஹா சொல்கிறார்.
மரபணு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை இந்த நோயின் காரணங்களாக இருக்கலாம் என்று மருத்துவர் ரைசாதாவும் கூறுகிறார்.
ஆனால், உடலில் உள்ள நிணநீர் அமைப்பில் (லிம்ஃபாடிக் அமைப்பு) வடிகால் கோளாறு ஏற்படுவதும் இந்த நோய்க்கு காரணமாகலாம்.

பெண்களின் மனநலத்தில் தாக்கம்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை குறைவு ஏற்படலாம், மேலும் அவர்கள் மன சோர்வுக்கு ஆளாகலாம்.
"பொதுவாக 35 முதல் 45-50 வயது வரை உள்ள பெண்கள் லிபெடிமாவால் பாதிக்கப்படுகின்றனர். அதே காலக்கட்டத்தில் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதே நேரத்தில் நடுத்தர வயது வாழ்க்கையும் தொடங்குகிறது. இந்த அனைத்து நிலைமைகளும் ஒன்றிணைந்து பெண்களுக்கு கடுமையான மன சோர்வை ஏற்படுத்துகின்றன," என மருத்துவர் அல்பனா ரைசாதா சொல்கிறார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட அங்கிதா யாதவ், "நான் கண்ணாடியில் என்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் இது பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் இப்போது நான் வெளியே செல்ல முயற்சிப்பது கூட இல்லை," என கூறுகிறார்.
பெண்கள் தாங்கள் பருமனாவதற்கு தங்களையே குற்றம் சாட்டத் தொடங்குவதாக மருத்துவர் ரைசாதா சொல்கிறார். அவர்கள் உணவுக் கட்டுப்பாடு, யோகா, உடற்பயிற்சிக் கூடம் என எல்லாவற்றையும் முயற்சித்திருப்பர், ஆனால் எந்த மாற்றமும் ஏற்படாது.

பட மூலாதாரம், Bee Davies
சிகிச்சை என்ன?
இந்த நோயின் மிகவும் துரதிர்ஷ்டவசமான அம்சம் இது உடல் பருமனால் ஏற்படுவது அல்ல என மருத்துவர் ரைசாதா கூறுகிறார்.
அப்படியிருந்திருந்தால், கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள், உடற்பயிற்சி, அல்லது உணவுக் கட்டுப்பாடு மூலம் இதை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் ரைசாதா.
இது இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, எனவே இதற்கு மருந்துகளும் முறையாக உருவாக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
"இதற்கு அறுவை சிகிச்சைதான் சிகிச்சையாக உள்ளது, ஆனால் இதுவும் மிகவும் வெற்றிகரமாக இல்லை. பேரியாட்ரிக், மறுக்கட்டமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் உதவலாம். ஆனால், இந்த சிகிச்சைகள் மிகவும் செலவு மிக்கவை மற்றும் இந்தியாவில் மிகக் குறைவான இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன," எனவும் மருத்துவர் ரைசாதா கூறுகிறார்.
சமீப காலங்களில் லிபோசக்ஷன் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. கொழுப்பை உருவாக்கும் லிபெடிமா உடலிலிருந்து ஒரு சிறப்பான வழியில் வெளியேற்றும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும்,
இந்த முறையில், பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிய கீறல்கள் மூலம் ஒரு சிறப்பு திரவம் (இன்ஃபில்ட்ரேஷன் சொல்யூஷன்) உடலில் செலுத்தப்படுகிறது.
இந்த திரவம் திசுக்களை தளர்த்தி, கொழுப்பு செல்களை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
இத்தகைய அறுவை சிகிச்சை பொதுவாக லிபெடிமா அதிகம் முன்னேறிய நிலைகளில் மட்டுமே செய்யப்படுகிறது.
மேனுவல் லிம்ஃப் ட்ரெயினேஜ் தெரபியும் இதை கட்டுப்படுத்த உதவலாம். இது நிணநீர் திரவத்தை வெளியேற்றி வீக்கத்தை குறைக்க உதவும் ஒரு வகையான மென்மையான மசாஜ் ஆகும்.
அழுத்தம் தரும் ஆடைகளும் இந்த நோயில் உதவியாக இருக்கலாம். இவை உடலுக்கு அழுத்தம் அளித்து வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு ஆடைகளாகும்.
இந்த நோய் குறித்து உலகளவில் ஆராய்ச்சி இப்போது தீவிரமடைந்துள்ளது, மேலும் மருந்துகள் உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதுவரை எந்தவொரு பயனுள்ள மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












