இரான் வழியே இந்தியாவுக்கு டிரம்ப் அடுத்த நெருக்கடி - சாபஹாரில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, இரானின் சாபஹார் துறைமுகத்தை இயக்குபவர்களுக்கு எதிராக செப்டம்பர் 29 முதல் தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு, அந்த துறைமுகத்தில் ஒரு முக்கிய முனையத்தை கட்டி வரும் இந்தியாவையும் நேரடியாக பாதிக்கக்கூடும்.
இரானின் தெற்குப் பகுதியில், சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்தியா மற்றும் இரான் இணைந்து மேம்படுத்தும் ஒரு முக்கிய திட்டமாகும்.
மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி, அமெரிக்காவின் இந்த முடிவை 'இந்தியாவுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை' என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய கொள்கைகளால் சீனா பயனடைகிறது என்றும், அதற்கான விலையை இந்தியா கொடுக்க நேரும் என்றும் செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட் இந்தத் தகவலை வழங்கியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாபஹாரில் வேலை செய்வதற்கு 2018 இல் வழங்கப்பட்ட விலக்கை திரும்பப் பெறுவது, இரானை தனிமைப்படுத்தும் அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தியின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட், 2018 இல் ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட விலக்கை ரத்து செய்வதாக அறிவித்தார்.
"இரான் சுதந்திரம் மற்றும் அணு ஆயுதப் பரவல் எதிர்ப்புச் சட்டத்தின் (IFCA) கீழ் ஆப்கானிஸ்தான் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விலக்கை வெளியுறவுத்துறை செயலாளர் ரத்து செய்துள்ளார்" என்று தாமஸ் பிகோட் கூறினார்.
"இந்த முடிவு செப்டம்பர் 29, 2025 முதல் அமலுக்கு வரும். இது செயல்படுத்தப்பட்ட பிறகு, சாபஹார் துறைமுகத்தை இயக்குபவர்கள் அல்லது ஐஎப்ஃசிஏ (IFCA) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டவர்கள்"என்று கூறுகிறது இந்த அறிவிப்பு.
இந்தியாவுக்கு பின்னடைவா ?

பட மூலாதாரம், Getty Images
சாபஹார் துறைமுகத் திட்டத்தில் பில்லியன் கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ள இந்தியாவுக்கு, அமெரிக்காவின் இந்த முடிவு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தியா இதை தனது 'இணைப்பு ராஜ்ஜீயத்தின்' முக்கிய அங்கமாகக் காண்கிறது.
ஓமன் வளைகுடாவில் உள்ள இந்த துறைமுகத்தில், இந்தியா இரானுடன் இணைந்து ஒரு முனையத்தை அமைத்து வருகிறது.
கடந்த 2024 மே 13 அன்று, துறைமுகத்தை இயக்குவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் ஒரு துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும் முதலாவது அனுபவமாகவும் இது அமைந்துள்ளது.
இந்தியப் பொருட்கள் பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவைச் சாலை மற்றும் ரயில் திட்டமான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (ஐஎன்சிடிசி-INCTC) மூலம் அடையும் வகையில், 2003 ஆம் ஆண்டில் சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா முன்மொழிந்தது.
ஐஎன்சிடிசி (INCTC) என்பது இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட 7,200 கி.மீ நீளமுள்ள பல-மாதிரி போக்குவரத்து திட்டமாகும்.
ஆனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளால் துறைமுகத்தின் வளர்ச்சி மந்தமானது.
இரானை தனிமைப்படுத்தும் உத்தியா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தம், இந்தியன் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட், இரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
இது, 2016-இல் கையெழுத்தான ஆரம்ப ஒப்பந்தத்திற்கு பதிலாக வந்த புதிய ஒப்பந்தமாகும்.
அதன் கீழ், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை இயக்கி வந்தது.
2018-இல், சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கு அமெரிக்கா தடைகளிலிருந்து விலக்கு அளித்தது. இதன் நோக்கம், ஆப்கானிஸ்தான் இரானிய பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து இறக்குமதி செய்ய வழிவகை செய்வதுதான். அப்போது அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தன.
2023-இல், இந்தியா 20,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. 2021-இல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லிகளை இரானுக்கு வழங்கியது.
ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின் கீழ், இந்த விலக்கு இப்போது ரத்து செய்யப்படுகிறது.
இந்தியாவிற்கு சாபஹார் துறைமுகம் எவ்வளவு முக்கியமானது?

பட மூலாதாரம், Indiaportsgloballimited
சர்வதேச வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு (INSTC) இரானின் சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானது. இந்த வழித்தடம், இந்தியாவுக்கு ஐரோப்பாவை எளிதில் அடைய உதவுவதுடன், இரான் மற்றும் ரஷ்யாவிற்கும் பலனளிக்கிறது.
இந்த துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா–இரான் 2003 இல் ஒப்பந்தம் செய்தன. பின்னர் 2016 இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரானுக்குப் பயணம் செய்தபோது, அந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
2019 இல், முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் பாகிஸ்தானை தவிர்த்து, சாபஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவிற்கு வந்தன.
ஆனால், டெல்லியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியா–ஐரோப்பா–மத்திய கிழக்கு வர்த்தக வழித்தட ஒப்பந்தம் எட்டப்பட்டபோது, அந்த புதிய வழித்தடம் உருவானால் சாபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையும், மேலும் இது இரானுக்கு அவமானமாகும் எனக் கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் இந்தியா–இரான் இடையே சாபஹார் துறைமுகம் குறித்த முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டதால், அதன் முக்கியத்துவம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.
குவாதர் துறைமுகத்துக்கு சாபஹார் சவாலாக உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இரான் எல்லைக்கு அருகில் உள்ள குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மேம்படுத்தி வருகின்றன. இதற்கு போட்டியாக இந்தியா, இரான், ஆப்கானிஸ்தான் இணைப்பை வலுப்படுத்தும் சாபஹார் துறைமுகம் பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதில் சாபஹார் துறைமுகம் இந்தியாவுக்கு முக்கிய ஆயுதமாக அமையும்.
குவாதர் துறைமுகம் சாபஹார் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக சுமார் 400 கி.மீ தொலைவில் மட்டுமே உள்ளது; கடல் வழியாக இந்த தூரம் வெறும் 100 கி.மீ தான்.
இந்தத் துறைமுகம் இந்தியாவின் உத்தி சார்ந்த மற்றும் ராஜ்ஜீய நலன்களுக்கு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் நேரடி தொடர்பு குறைந்துவிட்டது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
தேவைப்பட்டால், சாபஹார் வழியாக இந்தியா இப்போது காபூலை அடைய முடியும், மேலும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகமும் அதிகரிக்கக்கூடும்.
நிபுணர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் முடிவு குறித்து உத்தி சார்ந்த நிபுணர் பிரம்மா செல்லானி கடும் கவலை தெரிவித்துள்ளார்.
"டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததற்கு பின், இந்தியா இயக்கும் சாபஹார் துறைமுகத்திற்கான 2018 தடை விலக்கை ரத்து செய்துள்ளது. இது இந்தியாவுக்கு எதிரான தண்டனை " என்று அவர் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"சாபஹார் துறைமுகம் ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவிற்கான இந்தியாவின் வர்த்தக நுழைவாயில். அதேசமயம், பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்துக்கு (இது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதி) எதிரான இந்தியாவின் உத்தி சார்ந்த பதிலடியும் கூட. ஆனால் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த முயலும் நேரத்தில் இந்தியா தண்டிக்கப்படுகிறது," என்றார்.
மேலும், "டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு இணங்க, இந்தியா தனது சொந்த நலன்களை ஒதுக்கி, இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியது. இதனால் சீனா பெரிதும் பயனடைந்தது. உலகிலேயே மலிவான இரானிய கச்சா எண்ணெயை கிட்டத்தட்ட தனியாக வாங்கியது. இதனால் சீனாவின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பட்டது. இந்தியா தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்தது. உண்மையில், டிரம்பின் "அதிகபட்ச அழுத்தம்" எனும் கொள்கையின் விளைவாக சீனாவே நன்மை பெறுகிறது, இந்தியா அதற்கான விலையைக் கொடுக்கிறது," என்றும் செல்லானி குறிப்பிட்டிருந்தார்.

சாபஹர் விலக்கு முடிவுக்கு வந்தது குறித்து தெற்காசிய விவகார நிபுணர் மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "இரான் தொடர்பான விலக்குகளை டிரம்ப் நிர்வாகம் திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது. இது, இந்தியாவின் சாபஹார் துறைமுகத் திட்டத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது இந்தியாவுக்கு உத்தி சார்ந்த பின்னடைவை ஏற்படுத்தும். சாபஹார் இந்தியாவின் இணைப்புத் திட்டங்களில் முக்கியமான ஒன்று. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவை அடைய அது உதவுகிறது"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












