ஐபிஎல் ப்ளே ஆஃப்பில் 4வது இடம் யாருக்கு கிடைக்க வாய்ப்பு? - ‘கோதா’வில் ஆர்சிபி, மும்பை, ராஜஸ்தான்

ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பு

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடக்கும் போட்டிகளுடன் லீக் சுற்று முடிந்து, அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்று தொடங்க உள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்க இருக்கும் நிலையில் அதில் 3 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், 2வது இடத்தில் சிஎஸ்கே மற்றும் 3வது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், 4வது இடத்தைப் பிடிக்கப் போவது எந்த அணி என்பது இன்று நடக்கும் இரு லீக் ஆட்டங்களின் முடிவில் தெரிந்துவிடும். ஆர்சிபி, மும்பை, மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே 4வது இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் 4வது இடத்தைப் பிடிக்க எந்த அணிக்கு வாய்ப்புகள், சாத்தியங்கள் அதிகம் என்று இதில் பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(13 ஆட்டங்கள், 14 புள்ளிகள்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஆட்டங்களில், 7 வெற்றிகளைப் பெற்று 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டிலும் பிளஸ் 180 என வலுவாக இருக்கிறது.

அதேநேரம், மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட்டில் மைனஸ் 128ஆக இருப்பது சற்று பின்னடைவாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றை முடித்து 14 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் பிளஸ் 148 என்ற நிலையில் சாதகமான நிலையில் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறது.

ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், BCCI/IPL

ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளுக்கு இன்று நடக்கும் ஆட்டங்கள் இரு அணிகளுக்கும் அதிமுக்கியமானவை. இதில் எந்த அணி தோற்றாலும், வெளியேறும். ஆதலால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.

இன்று பிற்பகலில் நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. இரவு நடக்கும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது. இதில் குஜராத் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தில் இடம் பெற்றுவிட்டது. இதில் தோற்றாலும் அந்த அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதேநேரம், ஆர்சிபிக்கு வெற்றிக் கட்டாயம் தேவை.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெல்லும் பட்சத்தில் 16 புள்ளிகள் பெறும். ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் மும்பையைவிட உயர்வாக இருக்கும் ஆர்சிபி, இன்னும் புள்ளிகளை அதிகரிக்கும்.

அதேநேரம் ஆர்சிபி அணி தோற்று, மும்பை இந்தியன்ஸ் அணி வென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் ஆர்சிபி தொடரிலிருந்து வெளியேறும்.

ஒருவேளை ஆர்சிபி-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு, ஆட்டம் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டால், மும்பை அணி சாதாரண வெற்றி பெற்றாலே அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்றுவிடும்.

ஆதலால் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

இதில் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறுவதற்கு ஆர்சிபி அணிக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. எப்படியென்றால்...

ஆர்சிபி அணியைவிட ரன்ரேட்டில் சிறப்பான இடத்தில் இருக்க சன்ரைசர்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி இன்று பிற்பகல் ஆட்டத்தில் வெல்வது அவசியம். ஒருவேளை மும்பை அணி 79 ரன்கள் வித்தியாசமோ அல்லது அதற்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலோ சன்ரைசர்ஸ் அணியை வென்றால்கூட அது ஆர்சிபிக்கு தான் சாதகமாகும்.

ஏனென்றால், கடைசி லீக்கில் ஆர்சிபிதான் விளையாடுகிறது. எத்தனை ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம், எத்தனை ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும், எதிரணியை எத்தனை ஓவர்களில் சுருட்ட வேண்டும் என்ற தெளிவான கணக்கீடு, மும்பை அணியின் ஆட்டம் முடிந்தவுடன் ஆர்சிபிக்கு தெரிந்துவிடும் அதற்கு ஏற்றாற்போல், ஆர்சிபி தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டு ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்கலாம்.

ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பு

பட மூலாதாரம், BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் (13 ஆட்டங்கள், 14 புள்ளிகள்)

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 14 புள்ளிகளுடன் இருக்கிறது. ஆனால், ரன்ரேட்டில் மைனஸ் 128 என்று இருப்பது மும்பைக்கு பெரும் பின்னடைவு. இந்த ரன்ரேட்டை பிளஸுக்கு உயர்த்தவும், ஆர்சிபியைவிட உயர்வான இடத்துக்குச் செல்லவும் மும்பைக்கு மெகா வெற்றி தேவைப்படும்.

இன்று பிற்பகல் வான்ஹடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கட்டாயம் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இடம்பெற முடியும்.

ஒருவேளை ஆர்சிபியும் வென்று, மும்பை அணியும் வென்றால், இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் இருக்கும். அந்தச் சூழலில் நிகர ரன்ரேட் பார்க்கப்பட்டு ரன்ரேட் சிறப்பாக இருக்கும் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடம் கிடைக்கும்.

ஒருவேளை ஆர்சிபி அணி தோற்றால், மும்பை அணி சாதாரணமான வெற்றி பெற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும். அதேநேரம், மும்பை அணி தோற்றால், ஆர்சிபி அணிக்கு ப்ளே ஆஃப் கிடைக்கும்.

மும்பை, சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மழை குறிக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், ஆர்சிபி அணிக்கு சாதாரண வெற்றி இருந்தாலே போதுமானது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

அவ்வாறு ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, மும்பை அணிக்கு ஒருபுள்ளி கிடைத்த நிலையில், ஆர்சிபி தோற்றால், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடும்.

ஒருவேளை மும்பை அணி, ஆர்சிபி அணிகள் பங்கேற்கும் ஆட்டம் ஏதாவது காரணத்தால் ரத்து செய்யப்பட்டாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும்.

இன்று பிற்பகல் நடக்கும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி மிகப்பெரிய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், அந்த ரன்ரேட்டையும் அடித்துக் காலி செய்ய, எத்தனை ரன்கள் தேவை, எவ்வளவு ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும் என்ற கணக்கீடு ஆர்சிபிக்கு கிடைத்துவிடும் என்பது அந்த அணிக்குச் சாதகமானது. ஆர்சிபியின் வெற்றியைத் தடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி மனது வைத்தால்தான் நடக்கும்.

ஐபிஎல் பிளே ஆப் வாய்ப்பு

பட மூலாதாரம், BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் (14 ஆட்டங்கள் 14 புள்ளிகள்)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுகளை முடித்து, 14 புள்ளிகளுடன் உள்ளது. நிகர ரன்ரேட் பிளஸ் 148 என்ற நிலையில் 6வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 7வது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது, மும்பை, ஆர்சிபி அணிகளின் தோல்வியில்தான் இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு அணி வென்று, மற்றொரு அணி தோற்றாலும் ராஜஸ்தான் வெளியேறிவிடும்.

ஒருவேளை ஆர்சிபி, மும்பை தோற்று, மூன்று அணிகளும் 14 புள்ளிகள் என்ற நிலை ஏற்பட்டால், நிகர ரன்ரேட் அடிப்படையில் மோசமாக இருக்கும் மும்பை அணி தானாகவே வெளியேறும். அப்போது ஆர்சிபிக்கும், ராஜஸ்தானுக்கும் மட்டுமே போட்டி இருக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். அது குஜராத் டைட்டன்ஸ் அணி மனது வைத்தால்தான் சாத்தியமாகும். எப்படியென்றால், ஆர்சிபி முதலில் பேட் செய்து 180 ரன்கள் சேர்க்கும்பட்சத்தில், அந்த இலக்கை டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அல்லது அதற்கு முன்பாக சேஸிங் செய்தால் ஆர்சிபி ரன்ரேட் குறையும்.

ஆர்சிபி அணி முதலில் ஃபீல்டிங் செய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி 180 ரன்கள் சேர்க்க வேண்டும், ஆர்சிபி அணியை சேஸிங் செய்யவிடாமல் 174 ரன்கள் அல்லது அதற்கும் குறைவான ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.

இவ்வாறு நடந்தால், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் குறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: