உருளைக்கிழங்கால் இரு மாநிலங்களில் அரசியல் சிக்கல் - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி நிருபர், கொல்கத்தாவில் இருந்து
மேற்கு வங்கத்தின் உணவு வகைகளில் உருளைக்கிழங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொல்கத்தாவின் பிரியாணி, பிற அசைவ அல்லது சைவ உணவுகளில் உருளைக்கிழங்கு பெருமளவில் இடம்பெறுகிறது.
அது 'புச்கா' அதாவது பானி பூரி, உருளைக்கிழங்கு பக்கோடா அல்லது 'ஆலு போஸ்தோ' (உருளைக்கிழங்கு கசகசா குருமா ) என எதுவாக இருந்தாலும், மேற்கு வங்கத்தின் உணவுகளில் உருளைக்கிழங்கு இல்லை என்றால் அந்த உணவுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றே சொல்லலாம்.
பிரியாணியில் கூட உருளைக்கிழங்கு சேர்க்கப்படும் ஒரே நகரம் கொல்கத்தாதான். கொல்கத்தா பிரியாணியை ஆன்லைனில் யாராவது ஆர்டர் செய்தால் அதில் கண்டிப்பாக ஒரு உருளைக்கிழங்காவது இருக்கும்.
உணவு விநியோக தளங்களில் பிரியாணிக்கு ஆர்டர் கொடுக்கும்போது அதில் இன்னொரு உருளைக்கிழங்கு வேண்டுமா என்பதற்கான ஆப்ஷனும் வரும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிரியாணியில் ஒரு கூடுதல் உருளைக்கிழங்கு போடுவதற்கு என்ன விலை வாங்குகிறார்கள் என்று உங்களால் யூகிக்க முடியுமா? வெவ்வேறு உணவகங்கள் அதற்கு வெவ்வேறு விலைகளைத் நிர்ணயிக்கின்றன. பிரியாணியில் கூடுதலாக ஒரு உருளைக்கிழங்கு வைக்க சிலர் 30 ரூபாயும், சிலர் 50 ரூபாய் வரையிலும் கூட வசூலிக்கின்றனர்.
இந்த உருளைக்கிழங்கு கிழக்கு இந்தியாவின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அண்டை மாநிலங்களான ஒடிஷா, அசாம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படும் உருளைக்கிழங்கு சரக்குகளுக்கு மேற்கு வங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த 15 நாட்களாக அமலில் உள்ளது.
கிலோவுக்கு 50 ரூபாயைத் தாண்டிய உருளைக்கிழங்கின் விலை

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் உருளைக்கிழங்கு விலை விண்ணைத் தொடத் தொடங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
பொதுவாக இந்த பருவத்தில் உருளைக்கிழங்கின் விலை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக இருக்கும். ஆனால் திடீரென அதன் விலை உயர்ந்து 50 ரூபாயை எட்டிவிட்டது என்று அரசு தெரிவித்தது.
அரசின் இந்த முடிவைத்தொடர்ந்து ஒடிஷா, அசாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து 'மேற்கு வங்க முற்போக்கு உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்கம்' காலவரையற்ற போராட்டத்தை துவக்கியது. மாநில அரசின் தலையீட்டை அடுத்து அது வாபஸ் பெறப்பட்டது.
மேற்கு வங்க அரசின் இந்த முடிவால் ஜார்கண்ட் மற்றும் ஒடிஷா போன்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் சத்தீஸ்கரிலும் உருளைக்கிழங்கு விலையில் இதேநிலைதான்.

பட மூலாதாரம், Getty Images
இம்மாதம் 2ஆம் தேதி ஒடிஷா அரசு, தலைமைச் செயலகத்தில் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது.
தற்போது உருளைக்கிழங்கு கிலோ 35 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று இந்தக் கூட்டத்தில் ஒடிஷா உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பாத்ரா கூறினார்.
ஒடிஷா இனி ஒருபோதும் மேற்கு வங்கத்திலிருந்து உருளைக்கிழங்கை வாங்காது என்று கூட்டத்திற்குப் பிறகு பாத்ரா அறிவித்தார். முன்னதாக ஜூலை 27ஆம் தேதி நடந்த நிதி ஆயோக் (NITI Ayog) கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த விஷயம் குறித்து விவாதித்தார்.
இதுதவிர உருளைக்கிழங்கு விநியோகத்தை மீண்டும் துவக்கவேண்டும் என்று கோரி முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கும் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை.
ஒடிஷா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக சாடியபோது, உருளைக்கிழங்கு அரசியல் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளதை பார்க்க முடிகிறது.
ஒடிஷா மாநிலம் உருளைக்கிழங்கிற்கு மேற்கு வங்கத்தையும், வெங்காயத்திற்கு மகாராஷ்டிராவையும் முழுமையாக நம்பியிருப்பதாக சட்டப்பேரவையில் பேசிய பாத்ரா தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உத்தரப் பிரதேசத்தில் இருந்து உருளைக்கிழங்கை வாங்கி, மேற்கு வங்கம் மீதான சார்ப்பை குறைக்க ஒடிஷா அரசு முயற்சிப்பதாகக்’ கூறினார்.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் 30 சதவிகித உருளைக்கிழங்கு இங்குதான் விளைகிறது. மேற்கு வங்கம் 22.97 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மாநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 110 ட்சம் டன் உருளைக்கிழங்கு விளைவிக்கப்படுகிறது என்று மேற்கு வங்க விவசாயத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 5 லட்சம் டன் பயன்படுத்தப்படுகிறது. வடக்கு தினாஜ்பூர், கூச் பிஹார், ஹூக்ளி, கிழக்கு பர்த்வான், பாங்குரா, பீர்பும் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் உருளைக்கிழங்கு அதிகம் விளைகிறது.
உருளைக்கிழங்கு விலை விண்ணைத் தொடத் தொடங்கியதால் தான் மாநிலத்திற்கு வெளியே உருளைக்கிழங்கை அனுப்புவதை அரசு தடை செய்துள்ளது என்று மேற்கு வங்க வேளாண் அமைச்சர் பைச்சாராம் மான்னா, பிபிசியிடம் தெரிவித்தார்.
“மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு விளைகிறது. அப்படி இருந்தும் இங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அரசின் மீது கேள்விகள் எழ ஆரம்பித்தன. எனவே உள்ளூர் சில்லறை சந்தையில் உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்தும் வரை மாநிலத்திற்கு வெளியே விற்பனை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று முடிவு செய்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கதில் தற்போது 606 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அங்கு 40 லட்சம் டன் உருளைக்கிழங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு முழுவதையும் இங்கு பயன்படுத்த முடியாது. அதனால் அது மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது என்று மேற்கு வங்க முற்போக்கு உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலாளர் லாலு முகர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் சந்தையில் உருளைக்கிழங்கு விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், பிற மாநிலங்களுக்கு அனுப்பி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது என்றார் அவர்.
உருளைக்கிழங்குளை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எப்போது நீக்கப்படும் என்ற பிபிசியின் கேள்விக்கு மேற்கு வங்க வேளாண் அமைச்சர் பதில் அளிக்கவில்லை.
மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகளில் உள்ள உருளைக்கிழங்கு மழை காரணமாக அழுகும். இதனால் மொத்த வியாபாரிகளுக்கு நிச்சயம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒடிஷாவின் உணவு மற்றும் வேளாண் அமைச்சர் கிருஷ்ண பாத்ராவின் அறிக்கையை செய்தி முகமை பிடிஐ வெளியிட்டுள்ளது.
"மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறோம், படிப்படியாக உத்தரப் பிரதேசத்திலிருந்தே கொள்முதல் செய்யும் திட்டத்தை உருவாக்குவோம்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
“மேற்கு வங்க காவல்துறையும், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களும் ஒடிஷாவின் மொத்த வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள். வங்காளத்தில் இருந்து உருளைக்கிழங்கு வாங்குவதால் அவர்கள் நம்மை ப்ளாக்மெயில் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












