ஹிட்லர் ஆட்சியில் பறிபோன பெரும் செல்வத்தை வெளிப்படுத்திய 'பழைய சூட்கேஸ்'

- எழுதியவர், சார்லி நார்த்காட் மற்றும் பென் மில்னே
படுக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் தொடங்கியது அந்த பயணம்.
அது 2009 ஆம் ஆண்டு.
ஆண்டனி ஈஸ்டனின் தந்தை பீட்டர் மிகச் சமீபத்தில் தான் மரணமடைந்திருந்தார்.
தந்தையின் சொத்துகளை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆண்டனி, ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் லிமிங்டன் என்ற நகரில் உள்ள தந்தையின் பழைய வீட்டில், ஒரு சிறிய பழுப்பு நிற தோல் சூட்கேஸைக் கண்டுபிடித்தார்.
அந்த சூட்கேஸுக்குள் ஜெர்மன் காசோலைகள், புகைப்பட ஆல்பங்கள், அவரது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைப் பதிவு செய்த குறிப்புகள் நிறைந்த உறைகள் மற்றும் ஒரு பிறப்புச் சான்றிதழ் ஆகியவை காணப்பட்டன.
தான் ஒரு "ஆங்கிலேயர்" என்றும், ஆங்கிலிகன் என்றும் கூறிவந்த பீட்டர் ரோட்ரிக் ஈஸ்டன், உண்மையில் போருக்கு முந்தைய ஜெர்மனியில் பெர்லினில் வாழ்ந்த, பணக்கார யூத குடும்பத்தைச் சேர்ந்த பீட்டர் ஹான்ஸ் ருடால்ஃப் ஐஸ்னர் ஆவார்.

பட மூலாதாரம், Charlie Northcott/BBC
தந்தையின் பின்னணி குறித்து அவ்வபோது கேள்விபட்டிருந்தாலும் , அந்த சூட்கேஸில் இருந்த ஆவணங்கள் ஆண்டனிக்கு முற்றிலும் தெரியாத ஒரு கடந்த காலத்தைப் பற்றி வெளிப்படுத்தின.
அந்தக் கண்டுபிடிப்பு, அவரை பத்து ஆண்டுகள் நீண்ட ஒரு பயணத்திற்குள் இட்டுச் சென்றது. அதில், இன அழிப்பால் சிதைந்த குடும்பத்தையும், பில்லியன்கணக்கான பவுண்டு மதிப்புள்ள செல்வம் காணாமல் போனதையும், நாஜி ஆட்சிக்காலத்தில் திருடப்பட்ட கலைப் படைப்புகள் மற்றும் சொத்துகள் பற்றிய உண்மைகளையும் ஆண்டனி கண்டறிந்தார் .
அந்த சூட்கேஸுக்குள் இருந்த கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் பீட்டரின் சிறு வயது வாழ்க்கையை எடுத்துக் காட்டின.
மெர்சிடீஸ் கார்கள், பணியாட்கள் நிறைந்த மாளிகைகள், தேவதைகளின் படங்களால் செதுக்கப்பட்ட அலங்கார படிக்கட்டுகள் கொண்ட மாளிகை ஆகியவற்றை அவர் கண்டார்.
இவை அனைத்தும் லண்டனில் ஆண்டனி அனுபவித்த எளிய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
அவை ஒருபுறம் இருக்க, ஆண்டனி கண்டெடுத்த ஒரு புகைப்படம் வேறொன்றையும் வெளிப்படுத்தியது. அதில் 12 வயது பீட்டர் ஐஸ்னர், நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருக்கிறார்,
தூரத்தில் ஒரு நாஜி கொடி அசைந்துகொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Antony Easton
"அது எனக்கு கடந்த காலத்திலிருந்து நீட்டப்பட்ட ஒரு கையாக தோன்றியது," என்கிறார் ஆண்டனி.
அவரது தந்தை அமைதியான மனிதராக இருந்தாலும் அடிக்கடி கோபப்படுபவர் என்றும் ஆண்டனி கூறுகிறார்.
அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசவே மாட்டார் என்றும் அவரது ஜெர்மன் உச்சரிப்பு குறித்து யாராவது கேட்டால் உடனே உரையாடலை நிறுத்திவிடுவார் என்றும் ஆண்டனி பகிர்ந்து கொண்டார்.
"அவர் மற்றவர்களைப் போல இல்லை என்பதற்கான சில அடையாளங்கள் இருந்தன. அவரைச் சுற்றியிருந்த உலகில் எப்போதும் ஒரு இருள், ஒரு மர்மம் இருந்தது"என்று நினைவுகூர்கிறார் ஆண்டனி.
மகத்தான செல்வம்
ஆண்டனியின் குடும்ப வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான அடுத்த தடயமாக ஒரு கலைப் படைப்பு அமைந்தது.
ஜெர்மன் மொழியை நன்கு அறிந்த ஒரு நண்பரின் உதவியை நாடிய ஆண்டனி, 'ஹான்ஷே வெர்கே' (Hahn'sche Werke) எனப்படும் நிறுவனத்தைப் பற்றி ஆராயச் சொன்னார். அந்த பெயர் சூட்கேஸில் இருந்த பல ஆவணங்களில் காணப்பட்டது. சில நாட்களில் அந்த நண்பர் இணையத்தில் தேடி, ஆண்டனிக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பினார்.
அந்த புகைப்படத்தில் ஒரு பெரிய எஃகுத் தொழிற்சாலையைச் சித்தரித்த ஓவியம் ஒன்று காணப்பட்டது. அது அந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என தோன்றியது.
அந்த ஓவியத்தில், உருகிய உலோகம் கன்வேயர் பெல்ட்டில் பிரகாசமாய் பாய்கிறது, அதைச் சுற்றி தீவிரமாக வேலைசெய்யும் தொழிலாளர்களின் முகங்கள் ஒளிர்கின்றன.
இது, போரை நோக்கி விரைந்து கொண்டிருந்த ஜெர்மனியின் தொழில்துறை சக்தியையும் ஆற்றலையும் பிரதிபலிக்கும் காட்சி.
1910 ஆம் ஆண்டு ஓவியர் ஹான்ஸ் பலுஷெக் வரைந்த அந்த ஓவியம் 'ஐசன்வால்ஸ்வெர்க்' (Eisenwalzwerk – இரும்பு ஆலை) எனப்பட்டது.
அது ஹென்ரிச் ஐஸ்னர் என்பவருக்குச் சொந்தமானது.
அவர் ஹான்ஷே வெர்கே எஃகு நிறுவனத்தை மத்திய ஐரோப்பாவின் மிகப் பெரிய, நவீன தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
சூட்கேஸில் இருந்த ஆவணங்களின்படி, அந்த ஹென்ரிச் தான் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தா என்பது தெரிய வந்தது.

பட மூலாதாரம், Antony Easton
பின்னர் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்படி, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹென்ரிச் ஜெர்மனியின் தொழிலதிபர்களில் ஒருவராக, இன்றுள்ள பல பில்லியனர்களுக்குச் சமமானவராக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது நிறுவனம் குழாய் வடிவ எஃகு தயாரித்தது. அதன் தொழிற்சாலைகள் ஜெர்மனி, போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் பரவியிருந்தன.
ஹென்ரிச்சும் அவரது மனைவி ஓல்காவும், பெர்லினிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் பல சொத்துகளை வைத்திருந்தனர்.
அவற்றில் ஒன்று நகர மையத்தில் உள்ள ஆறு மாடி மாளிகை. அது பளிங்கு தரைகளும், வெள்ளை நிற முகப்பும் கொண்ட அழகிய கட்டடமாக இருந்தது.
1900களின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படத்தில், தொப்பையுடனும் , மீசையுடனும் ஹென்ரிச் காணப்படுகிறார். அதில் அவர் கருப்பு உடை அணிந்துள்ளார்.
அவருக்கு அருகில் ஓல்கா அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு அழகான தலைப்பாகையை அணிந்து, அரச குடும்பத்தைச் சேர்ந்தவரைப் போல காட்சியளிக்கிறார்.

பட மூலாதாரம், Antony Easton
1918இல் ஹென்ரிச் இறந்த போது, தனது நிறுவன பங்குகளையும் தனிப்பட்ட செல்வத்தையும், முதலாம் உலகப் போரில் போராடி திரும்பிய தனது மகன் ருடால்ஃப் என்பவரிடம் விட்டுச் சென்றார்.
அந்தப் போர் மனித குலத்திற்கு பேரழிவாக இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் ஹான்ஷே வெர்கே வளர்ச்சியடைந்து, ஜெர்மன் ராணுவத்தின் எஃகு தேவையை பூர்த்தி செய்தது.
போருக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்தையும் ருடால்ஃபும் அவரது குடும்பமும் திறம்பட சமாளித்தனர்.
ஆனால், சில ஆண்டுகள் கழித்து அந்தப் பெரும் செல்வம் நழுவிப்போனது.
அதன் பின் நிகழ்ந்த மாற்றம்
ஆண்டனி கண்டெடுத்த சூட்கேஸில் இருந்த குறிப்புகளில், அவரது தந்தை பீட்டர், தன்னுடைய சிறுவயதில் அவருடைய பெற்றோருக்கிடையேயான உரையாடல்களை மறைமுகமாகக் கேட்டதும், நாஜி அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களையும் நினைவுகூர்ந்திருந்தார். அந்த காலத்தில், அடால்ஃப் ஹிட்லரும் அவரது ஆதரவாளர்களும், முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியுற்றதற்கும், பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும், யூதர்களைக் குற்றம் சாட்டினர்.
ருடால்ஃப் ஐஸ்னர், தனது நிறுவனத்தை நாஜி ஆட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றினால் தான் குடும்பம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார்.
சில காலம் இது நன்மை பயப்பதை போல் தோன்றியது.
ஆனால், யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் தீவிரமடைந்ததும், சுற்றிலும் சிக்கல்களும் வன்முறைகளும் அதிகரித்ததும், அவர் தன்னுடைய நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினார்.
1938-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், நாஜி அரசு ஹான்ஷே வெர்கே நிறுவனத்தை குறிவைத்தது.
அதிகாரிகளின் கடும் அழுத்தத்தின் கீழ், யூதர்களுக்குச் சொந்தமான அந்த நிறுவனத்தை மிகக் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்நிறுவனம் , நாஜி ஆதரவாளராக இருந்த தலைமை நிர்வாகி வில்ஹெல்ம் ஜாங்கன் தலைமையிலான மன்னெஸ்மேன் (Mannesmann) எனும் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
"அபகரிக்கப்பட்ட அந்தப் பெரும் செல்வத்தையும், அதன் இன்றைய மதிப்பையும் கணக்கிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது"என்று நாஜி பில்லியனர்கள் (Nazi Billionaires) என்ற புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் டி ஜாங் கூறுகிறார்.
அந்த நூல், நாஜி ஆட்சிக்காலத்தில் யூத வணிகங்களை எவ்வாறு சூறையாடப்பட்டன என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
பின்னர், 2000ஆம் ஆண்டு, வோடஃபோன் (Vodafone) நிறுவனம் மன்னெஸ்மேனை 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் கையகப்படுத்தியது.
அந்த நேரத்தில் இது உலகின் மிகப் பெரிய வணிக ஒப்பந்தமாக இருந்தது.
அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட தொழில்துறை சொத்துகளில், குறைந்தபட்சம் ஒரு பகுதி ஐஸ்னர் குடும்பத்தின் நிறுவனத்திலிருந்து வந்தவையாக இருந்திருக்கலாம்.
ஹான்ஷே வெர்கே கலைக்கப்பட்டதும், அதன் நிர்வாக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதும், ஐஸ்னர் குடும்பம் தப்பி ஓட வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. ஆனால், 1937க்குள், ஜெர்மனியை விட்டு வெளியேற முயன்ற எந்த யூதரும் தங்களுடைய சொத்துகளில் 92% வரை அரசுக்கு ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
இதை ரீச்ஃப்லூக்ஸ்டுயர் (Reichsfluchtsteuer) அல்லது ' புலம்பெயர்வோரின் சொத்துகள் மீதான வரி' என்று அழைத்தனர்.
இதனால், ஐஸ்னர் குடும்பம் தங்களிடம் எஞ்சியிருந்த செல்வத்தையும் இழக்க நேரிட்டது.
ஒப்பந்தம்
இந்த நெருக்கடியின் உச்சத்தில், மார்ட்டின் ஹார்டிக் என்ற ஒருவரின் பெயர், ஐஸ்னர் குடும்பத்தினரிடையே அடிக்கடி ஒலித்தது.
பெர்லினில் உள்ள ஆவணங்களின்படி, அவர் ஒரு பொருளாதார நிபுணரும் வரி ஆலோசகரும் ஆவார்.
1930களில் , ஹார்டிக்கின் பெயர் ஐஸ்னர் குடும்பத்தின் விருந்தினர் புத்தகத்தில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றது.
அதில் அவர், அவர்களது தாராளமான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார்.
யூதர் அல்லாத ஹார்டிக், நாஜிகள் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யத் திட்டமிட்டிருந்த சூழலில் அந்தக் குடும்பத்துக்கு ஒரு தீர்வை முன்வைத்ததை போல தெரிகிறது. ஐஸ்னர் குடும்பம், தங்களின் தனிப்பட்ட செல்வத்தின் முக்கியமான பகுதிகளை அதாவது பல சொத்துகளை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதன் மூலம், அவர்கள் யூதர்களை குறிவைக்கும் நாஜி சட்டங்களிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க முடிந்தது.

பட மூலாதாரம், Antony Easton
ஆண்டனியின் தாத்தாவும் பாட்டியும் ஹார்டிக் ஒருநாள் அந்தச் சொத்துகளை திருப்பித் தருவார் என்று நினைத்திருக்க வேண்டும் என ஆண்டனி கருதுகிறார்.
ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
ஹார்டிக், அந்தச் சொத்துகளை நிரந்தரமாக தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார்.
பிபிசி, ஜெர்மனியின் ஆவணக் காப்பகங்களில் இருந்து அசல் விற்பனை ஆவணங்களின் நகல்களை கண்டுபிடித்து, அவற்றை மூன்று சுயாதீன நிபுணர்களிடம் பகிர்ந்தது.
மூவரும் இதை ஒருமனதாக "கட்டாய விற்பனை" (Forced Sale) செய்யப்பட்டிருக்கிறது என முடிவு செய்தனர்.
நாஜி ஆட்சிக்காலத்தில் யூதர்களின் சொத்துகள் அபகரிக்கப்பட்ட விதத்தை விவரிக்கப் பயன்படும் பொதுவான சொல்லாக இது கருதப்படுகிறது.
பல தலைமுறைகளாகக் கட்டியெழுப்பிய பெரும் செல்வத்தை இழந்தபோதிலும் ஆண்டனியின் தாத்தா, பாட்டி, மற்றும் தந்தை 1938 இல் ஜெர்மனியை விட்டு தப்பிக்க முடிந்தது.
பீட்டரின் சூட்கேஸில் இருந்த ரயில் டிக்கெட்டுகள், பொருட்கள், ஹோட்டல் விளம்பரங்கள் ஆகியவை ஆண்டனிக்கு அவர்களின் தப்பிச்சென்ற பயணத்தை மீண்டும் பின்தொடர உதவின.
அவர்கள் முதலில் செக்கோஸ்லோவாகியாவிற்கும், பின்னர் போலந்திற்கும் சென்றனர். அதன் பிறகு, 1939 ஜூலை மாதத்தில், பிரிட்டனுக்குச் சென்ற கப்பல் ஒன்றில் ஏறியுள்ளனர்.

பட மூலாதாரம், Charlie Northcott/BBC
பில்லியன் பவுண்டு மதிப்புள்ள சொத்துகளை இழந்திருந்தாலும், அந்த குடும்பம் அதிர்ஷ்டசாலிகளுள் ஒன்றாக இருந்தது. ஏனெனில், அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, நாஜி வதை முகாம்களில் கொல்லப்பட்டனர்.
ருடால்ஃப் 1945ஆம் ஆண்டு இறந்தார். இரண்டாம் உலகப்போரின் பெரும்பகுதியை, பல ஜெர்மன் அகதிகளைப் போலவே அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளால் மேன் தீவில் சிறை வைக்கப்பட்ட நிலையிலேயே கழித்தார்.
ஹார்டிக்ஸ் குடும்பத்தினருடனான சந்திப்பு
ஐஸ்னர் குடும்பத்தினர் இழந்த செல்வத்திற்கும், மார்ட்டின் ஹார்டிக்கிற்கும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதே ஆண்டனியின் அடுத்த இலக்காக இருந்தது.
அதற்காக, அவர் ஒரு அனுபவமிக்க புலனாய்வாளரான யானா ஸ்லாவோவாவை நியமித்தார்.
எந்த சொத்து திருடப்பட்டது, அது எப்படிக் கைமாறியது, இன்று அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான் அவரது பணி.
சில வாரங்களுக்குள், ஐஸ்னர் குடும்பத்துடன் தொடர்புடைய ஏராளமான ஆவணங்களை யானா கண்டுபிடித்தார். அவற்றில் அவர்களது சொத்துகள், பொருட்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் பற்றிய விவரங்களும் இருந்தன.
அவர், ஆண்டனி தொடக்கத்தில் கண்டுபிடித்த அந்தப் புகழ்பெற்ற ஓவியமான ஐசன்வால்ஸ்வெர்க் (Eisenwalzwerk) இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்தார்.
அது தற்போது பெர்லினில் உள்ள ப்ரோஹான் அருங்காட்சியகத்தின் (Brohan Museum) சேகரிப்பில் இருந்தது.
ஆனால் அந்த ஓவியத்தை மீட்டெடுப்பதற்கான முதல்கட்ட முயற்சிகள் சிக்கல்களை எதிர்கொண்டன.
அதன் விற்பனை நாஜி துன்புறுத்தலுடன் தொடர்புடையது என்பதை நிரூபிக்க முடியுமா?
அது சட்டப்பூர்வமாக பலமுறை கைமாறி, இறுதியில் அருங்காட்சியகத்துக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என அவர் எப்படி உறுதியாகக் கூற முடியும் ? போன்ற கேள்விகள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டன.
யானா, அந்த ஓவியம் விற்கப்பட்ட காலத்திலிருந்தே அருங்காட்சியகத்துக்கும் ஒரு கலைப்பொருள் வியாபாரிக்கும் இடையேயான கடிதத் தொடர்புகளை கண்டுபிடித்தார்.
அது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அந்த கலைப்பொருள் வியாபாரி, அந்த ஓவியத்தை ஐஸ்னர் குடும்பத்தின் பழைய வீடுகளில் ஒன்றிலிருந்து விற்றிருந்தார்.
அந்த வீடு 1938 ஆம் ஆண்டு மார்ட்டின் ஹார்டிக் கையகப்படுத்தியது.
ஹார்டிக் தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்தார்.
பெர்லின் வீழ்ச்சியின் போது சேதமடைந்த அந்த வீட்டை மீண்டும் சீரமைத்த அவர், 1965 இல் மரணமடைந்தார்.
ஹார்டிக்கின் மரணத்திற்குப் பிறகு, அந்த சொத்து அவரது மகளுக்குச் சென்றது.
அவரது மகள் இப்போது என்பது வயதைக் கடந்துவிட்டார்.
2014 ஆம் ஆண்டு, அவர் அந்த வீட்டை தனது பிள்ளைகளுக்கு பரிசாக அளித்து,
ஒரு கிராமப்புற குடிசையில் குடியேறினார்.
அங்கே தான், அவர் ஆண்டனியையும் யானாவையும் சந்தித்தார்.
அந்த வயதான பெண்மணி அவர்களுக்கு தேநீரும் கேக்கும் தயார் செய்திருந்தார்.
அவர்கள் அவற்றை அவரது தந்தையின் உருவப்படத்தின் கீழ் அமர்ந்து சாப்பிட்டனர்.
அவர் அடர்த்தியான விளிம்புள்ள கண்ணாடி அணிந்த, எண்ணெய் தடவிய தலைமுடியுடன், கருப்பு கோட் அணிந்த, மெலிந்த முகமுடைய மனிதர்.
அந்த ஓவியம் 1945 இல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வரையப்பட்டதாகும்.
ஆனால், மார்ட்டின் ஹார்டிக்கின் மகளிடம் இருந்த கதை, ஆண்டனியும் யானாவும் எதிர்பார்த்ததிலிருந்து முழுமையாக மாறுபட்டது.
தன் தந்தை எப்போதும் நாஜிக்களை எதிர்ப்பவராகவும், ஐஸ்னர் குடும்பத்தை இன அழிப்பில் இருந்து காப்பாற்ற உதவியவர் என்றும் அவர்களிடம் அவர் சொன்னார் .
"நீங்கள் இங்கே தங்க கூடாது. கிரேட் பிரிட்டனுக்கு, லண்டனுக்குச் செல்லுங்கள்" என்றும் ஐஸ்னர் குடும்பத்தினரை அவர் வற்புறுத்தியதாகவும் ஹார்டிக்கின் மகள் கூறினார்.
அவருடைய தந்தை, ஓவியங்களை சட்டகங்களிலிருந்து எடுத்து, துணிகளுக்கு இடையில் மறைத்து ஜெர்மனியில் இருந்து வெளியே கடத்த உதவியதாகவும் தன்னிடம் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
1938 ஆம் ஆண்டு ஐஸ்னர்ஸிடமிருந்து அவரது குடும்பத்தினர் கையகப்படுத்திய சொத்துகள் பற்றி கேட்டபோது, அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டவை என்று அவர் கூறினார்.
"அவை அனைத்தும் சட்டப்படி வாங்கப்பட்டவை. என் அப்பா இரண்டு வீடுகளை முறையாக, சட்டபூர்வமாக வாங்கினார். எதுவும் தவறாக இருக்கக்கூடாது என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருந்தார்"என்று அவர் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Antony Easton
ஆனால் ஹார்டிக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், தங்களது மூதாதையர் ஐஸ்னர் குடும்பத்தைச் சுரண்டியிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற கருத்துக்கு இடமளித்தனர்.
மார்ட்டின் ஹார்டிக்கின் கொள்ளுப் பேரனான வின்சென்டுக்கு தற்போது 20 வயதுக்கு மேல் ஆகிறது.
வின்சென்ட் தச்சு தொழிலில் பயிற்சி பெற்று வருகிறார்.
ஆண்டனியின் தாத்தா, பாட்டி ஒருகாலத்தில் வாழ்ந்த அதே வீட்டில் தான் அவர் இப்போது வசிக்கிறார்.
அந்த வீட்டிற்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருக்கலாம் என்று வின்சென்ட் ஒப்புக்கொண்டார்.
"நான் ஒரு கட்டத்தில் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். எங்கள் குடும்பம் இந்த அழகான வீட்டில் வாழ்வது எப்படி சாத்தியமானது? என்று யோசிப்பேன்.
"அப்போது சூழ்நிலைகள் எப்படி இருந்திருக்கும்? என என்னை நானே அவ்வப்போது கேள்வி கேட்டுக் கொள்வேன்"என்கிறார் வின்சென்ட்.
ஆண்டனியின் யூத குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை அறிந்தபின், 'ஐஸ்னர் குடும்பம் தங்களது சொத்துகளை என் கொள்ளுத்தாத்தாவிடம் ஒப்படைக்கும் போது, அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்' என்று வின்சென்ட் கூறினார்.
'இது பணத்தைப் பற்றியது அல்ல'
தனது தாத்தா பாட்டியின் சொத்துகளுக்கு இழப்பீடு கோரி வழக்குத் தொடர ஆண்டனிக்கு இனி வழியில்லை.
அவரது பாட்டி ஹில்டெகார்ட், 1950களில் அந்தச் சொத்துகளை மீட்டெடுக்க முயன்றார். ஆனால், மார்ட்டின் ஹார்டிக் சட்டரீதியாக எதிர்த்ததும், அவர் வழக்கைத் தொடராமல் பின்வாங்கினார்.
முன்னாள் மேற்கு ஜெர்மனியில், நாஜி துன்புறுத்தலுக்கு ஆளான யூதர்கள், அவர்களது சொத்துகளை மீட்கும் காலவரம்பும் இப்போது முடிந்துவிட்டது.
ஆனால், ஐஸ்னர் குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்ட கலைப்பொருட்களை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில்,பெர்லினில் உள்ள ப்ரோஹான் அருங்காட்சியகம் (Brohan Museum),ஹென்ரிச் ஐஸ்னரின் சந்ததியினருக்கு ஐசன்வால்ஸ்வெர்க் ஓவியத்தை திருப்பித் தரும் எண்ணம் இருப்பதாக ஆண்டனியிடம் தெரிவித்தது. இச்செயல்முறை இன்னும் நடைபெற்று வருவதால், அருங்காட்சியகம் பிபிசிக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்திலிருந்து இன்னொரு ஓவியம் ஆண்டனிக்குத் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் உள்ள மூன்றாவது கலைப்பொருள் குறித்து உரிமை கோரும் செயல்முறையும் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆண்டனியின் விசாரணையில், ஒரு முக்கிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கெஸ்டபோவால் (Gestapo) தயாரிக்கப்பட்ட பட்டியல் ஒன்று உள்ளது. அதில், அவரது உறவினர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பிட்ட கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் குறித்த விபரங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனால், எதிர்காலத்தில் இன்னும் சில சொத்துகளை மீட்டெடுக்க அவரது குடும்பத்தாருக்கு வாய்ப்பு உள்ளது.
"நான் எப்போதும் இழப்பீட்டை பொருள், பணம், சொத்து என்ற வகையில் பார்க்கவில்லை. இது மக்களைப் பற்றியது. அவர்களின் வாழ்க்கை, மரபு, நினைவுகள் பற்றியது"என்கிறார் ஆண்டனி.
தனது குடும்ப வரலாற்றை ஆராய்ந்ததன் மூலம், அவர் தந்தை, தாத்தா, பாட்டி யார் என்பதையும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற உண்மையையும் ஆண்டனியால் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

பட மூலாதாரம், Antony Easton
1939இல் பீட்டர் பிரிட்டனுக்குப் பயணித்தபோது 'ஐஸ்னர்' என்ற பெயர் மறைந்திருந்தாலும், இன்று அது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. ஆண்டனியின் கொள்ளுப் பேரன் காஸ்பியன், ஆகஸ்ட் 2024இல் பிறந்தார்.
அவருக்கு நடுப்பெயராக 'ஐஸ்னர்' வைக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பத்தை கௌரவிக்க தனது மருமகள் எடுத்த முடிவு தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக ஆண்டனி கூறுகிறார்.
"காஸ்பியன் இருக்கும் வரை, அந்த பெயரும் உயிருடன் இருக்கும். அது ஒரு சுவாரஸ்யமான நடுப்பெயராக உள்ளதே, அதற்குப் பின்னால் உள்ள கதை என்ன?' என மக்கள் ஒருநாள் கேட்பார்கள்" என்கிறார் ஆண்டனி.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












