பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி - டிரம்பின் புதிய உத்தரவால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

மருந்துகளுக்கு 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், வியாழக்கிழமை அன்று புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தனது ட்ரூத் சோசியல் வலைதள பக்கத்தில் கனரக லாரிகள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனரக வாகனங்களுக்கு 50% சமையலறை அலமாரி மற்றும் குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படுகிறது.

அமெரிக்க சந்தைக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்திய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்கனவே 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா.

டிரம்ப் சொன்னது என்ன?

சமையலறை அலமாரிகள், குளியலறை பொருட்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

"வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து விதமான பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது" என தனது ட்ரீத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் "வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சமையலறை அலமாரிகள், குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படுகிறது. கூடுதலாக சோபா போன்றவற்றுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்து இந்த பொருட்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இது அநியாயம், தேசிய பாதுகாப்புக்காக தயாரிப்புத்துறையை நாங்கள் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

கனரக வாகனங்கள் மீதான வரி குறித்து கூறுகையில், "அநீதியான வெளிநாட்டு போட்டிகளிடம் இருந்து எங்கள் லாரி உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக வரும் 1-ஆம் தேதி முதல் உலகின் மற்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது" என்றார்.

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

இந்திய மருந்துகளும் அமெரிக்காவிற் விற்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

மருந்துத் துறைதான் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஏற்றுமதி துறை என உலக வர்த்தக ஆய்வு முயற்சி (GTRI) என்ற வணிக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

ஆனால், இந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்துகள் ஆகும்.

ஒரு புதிய மருந்தை கண்டறிந்த நிறுவனம் அதற்கான உரிமையைப் பெற்றிருக்கும். இதுவே, பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகள் எனப்படும். இந்த மருந்தை அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே தயாரித்து சந்தையில் விற்க முடியும். இந்த உரிமைக்கான காலம் சுமார் 20 ஆண்டுகள்.

ஜெனரிக் மருந்துகள் என்பது, காப்புரிமை காலம் முடிந்த பிறகு தயாரிக்கப்படும் மருந்துகள். இதை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து சந்தையில் விற்கலாம்.

அமெரிக்காவிற்கு பிராண்டட் மருந்துகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் ஜெனரிக் மருந்துகளின் எண்ணிக்கையை விட இது குறைவுதான்.

டாக்டர் ரெட்டிஸ், லுபின், சன் ஃபார்மா போன்ற இந்திய நிறுவனங்களின் மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்தபோது, அமெரிக்காவில் பிராண்டட் மற்றும் ஜெனரிக் மருந்துகள் மீதான விலை உயரும் என GTRI தெரிவித்திருந்தது.

இந்திய மருந்து நிறுவனங்களுக்கு வட அமெரிக்காதான் வருமானத்திற்கான பெரிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நிறுவனங்களின் வருவாயில் இந்த ஏற்றுமதி பெரும்பகுதியில் பங்களிக்கிறது. மேலும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது என GTRI கூறுகிறது.

அயர்லாந்து மீது குறி?

அயர்லாந்தில் இருந்து மில்லியன் கணக்கிலான மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அயர்லாந்தில் இருந்து மில்லியன் கணக்கிலான மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மருந்துகள் மீது வரி விதிப்பது அயர்லாந்துக்கு வைக்கப்படும் குறியா?

உண்மையில் பிராண்டட் மருந்துகள் உற்பத்தியில் அயர்லாந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

12-க்கும் மேற்பட்ட உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் அயர்லாந்தில் தொழிற்சாலை அமைத்துள்ளன. அதில் சில நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்கு மருந்து தயாரித்து கொடுக்கின்றன.

ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஃபைசர் போன்ற அமெரிக்க நிறுவனங்களை தொழிற்சாலை தொடங்க குறைந்த நிறுவன வரி விகிதங்களுடன் கவருவதாக அயர்லாந்து மீது டிரம்ப் பலமுறை குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அதிக மருந்துகள் விநியோகம் செய்யும் இந்தியா

இந்தியாவில் தயாராகும் பொது மருந்துகள் அமெரிக்க சந்தையில் விற்பனையாகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் தயாராகும் ஜெனரிக் மருந்துகள் அமெரிக்க சந்தையில் விற்பனையாகின்றன.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட ஜெனரிக் மருந்துகள் இந்தியாவில் இருந்து செல்கின்றன. இந்த ஜெனரிக் மருந்துகள் பிரண்டட் மருந்துகளை விட விலை குறைவானது

இத்தகைய மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் 10 மருந்துச் சீட்டுகளில் 9-ல் இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மருத்துவ துறையில் அமெரிக்காவிற்கு இது பில்லியன் கணக்கில் டாலர்களை சேமிக்க உதவுகின்றன.

2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜெனரிக் மருந்துகள் அமெரிக்காவுக்கு 219 பில்லியன் டாலர் வரை சேமிக்க உதவியதாக IQVIA நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால், டிரம்பின் வரிகள் காரணமாக ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் சில இந்திய நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது அமெரிக்காவின் மருந்து தட்டுப்பாட்டை மேலும் மோசமாக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு