இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2005-ஆம் ஆண்டு தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் முனைவர் சுனில் பாஜ்பாய் பழங்கால திமிங்கலங்கள் பற்றிய ஆய்வு தொடர்பாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார்.
அங்கு ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் திமிங்கில புதைபடிவங்களை தேடிக் கொண்டிருந்தபோது, வேறொரு பிரமாண்ட உயிரினத்தின் முதுகெலும்புத் தொகுதியைச் சேர்ந்த பகுதியளவு எலும்புகளின் தொல்லெச்சங்கள் அவருக்குக் கிடைத்தன.
ஆனால், அது இந்திய நிலப்பரப்பில் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சுமார் 49 அடி வரை நீளம் கொண்ட பிரமாண்டமான பாம்பு ஒன்றின் தொல்லெச்சம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
ஆரம்பத்தில், "ஒரு முதலையின் தொல்லெச்சமாக இருக்கலாம் எனக் கருதி 18 ஆண்டுகளுக்கு அதை ஓரமாக வைத்துவிட்டோம். பிறகு திடீரென ஒருநாள், நானும் ஆய்வாளர் தெபாஜித் தத்தாவும், அதை எதேச்சையாக ஆராய்ந்து பார்த்த போதுதான் அதுவொரு பாம்பின் புதைபடிவம் என்பதைக் கண்டுபிடித்தோம்" என்று பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் முனைவர் சுனில் பாஜ்பாய்.
அதைத் தொடர்ந்து, அந்தப் புதைபடிவங்களை விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கிய அவர்கள் அதற்கு வாசுகி இண்டிகஸ் என்று பெயர் சூட்டினார்கள்.
இந்த வாசுகி பாம்பின் வாழ்வியல் எப்படி இருந்தது? அதுதான் உலகில் வாழ்ந்த பாம்பு இனங்களிலேயே நீளமானதா? அதுகுறித்து விரிவாக பிபிசி தமிழிடம் விளக்கினார்கள் தொல்லுயிரியல் ஆய்வாளர்கள் முனைவர் சுனில் பாஜ்பாய் மற்றும் தெபாஜித் தத்தா.

அலமாரியில் 18 ஆண்டுகள் கிடந்த புதைபடிவம்
வாசுகி பாம்பின் எலும்புகள் கிடைத்தபோது அதுவொரு முதலையின் எச்சமாக இருக்கலாம் என்று கருதிய சுனில் பாஜ்பாய் அதைத் தமது தொல்லெச்ச சேகரிப்பில் வைத்துவிட்டார்.
அதன் பிறகு, "18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் பழைய தொல்லெச்ச சேகரிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் முதலையின் எலும்புகள் என நினைத்த எச்சங்களை நானும் தத்தாவும் மீண்டும் பார்த்தோம். அப்போதுதான் அதிலிருந்த மிக நுட்பமான அடையாளங்களை, வடிவங்களை கவனித்தோம்.
அது ஏற்படுத்திய ஆர்வத்தால் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினோம். அதன் விளைவாக, வாசுகி பாம்பின் உடலமைப்பு, அதன் வாழ்வியல், தொல் உயிரியல் ரீதியாக அது எத்தகைய வாழ்விடச் சூழலில் இருந்திருக்கும் என்பன போன்ற பல தகவல்களைக் கண்டுபிடித்தோம்," என்று விவரித்தார் சுனில் பாஜ்பாய்.
அதுமட்டுமின்றி, இயோசீன் காலகட்டத்தில் வாழ்ந்த இந்தப் பாம்பின் தொல்லெச்சங்கள் 4.7 கோடி ஆண்டுகள் பழமையானவை என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அதோடு, இதுவரை உலகில் வாழ்ந்த மிகவும் நீளமான பாம்புகளில் அதுவும் ஒன்று என்பதையும் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், S. Bajpai, D. Datta & P. Verma
மலைப்பாம்பு போலவே வேட்டையாடிய வாசுகி பாம்பு
இந்திய நிலப்பரப்பில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தப் பிரமாண்டமான பாம்பின் வாழ்க்கை எப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது? அது உணவுக்காகத் தம் இரைகளை வேட்டையாட என்ன வழிமுறைகளைப் பின்பற்றியது?
இதுகுறித்து விவரித்த தொல்லுயிரியல் ஆய்வாளர் தெபாஜித் தத்தா, "நமக்குக் கிடைத்துள்ளது இந்தப் பாம்பின் மத்தியப் பகுதி எலும்புகளின் எச்சங்கள் மட்டுமே. அந்த முதுகெலும்புகளின் அளவு, தற்போதைய மலைப் பாம்புகளை ஒத்த உடல் அமைப்பு அவற்றுக்கு இருந்தததைக் காட்டுகின்றன.
எனவே அவற்றின் வேட்டை வடிவமும் இன்றைய மலைப் பாம்புகளின் வேட்டை வடிவமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கலாம் எனக் கருதுகிறோம்," என்று தெரிவித்தார்.
இன்றைய மலைப் பாம்பு வகைகளைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக இரையைத் துரத்தி வேட்டையாடும் பழக்கம் கொண்டவையல்ல. மாறாக, பதுங்கியிருந்து, இரை தமக்கு மிகவும் நெருக்கமாக வரும் வரை காத்திருந்து, அதைச் சுற்றி வளைத்து உடலை நொறுக்கி வேட்டையாடும் பழக்கம் கொண்டவை.
அதை ஒத்த வேட்டை அணுகுமுறையையே "வாசுகி இண்டிகஸ் இனத்தைச் சேர்ந்த பாம்புகளும் கையாண்டிருக்கலாம். அமைதியாகப் பதுங்கியிருந்து இரையைக் கைப்பற்றி, உடலைச் சுற்றி வளைத்து நொறுக்கி, விழுங்கக்கூடிய பாம்பாக வாசுகி இருந்திருக்கும்." என்றார் தெபாஜித் தத்தா.
அதுமட்டுமின்றி, "வாசுகி பாம்பு கிடைத்த இடத்தை ஆராய்ந்து பார்த்த ஆய்வாளர்கள், அதுவொரு சதுப்பு நிலப் பகுதியாக ஈரநிலமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, "இன்றைய மலைப் பாம்புகளைப் போலவே, தம்மால் சுற்றி வளைத்து வேட்டையாட முடிந்த எதை வேண்டுமானாலும் அவை உணவாகக் கொண்டிருக்கலாம்," என்று விளக்கினார் தத்தா.
இது நீர்நிலவாழ் உயிரினமாக இருந்ததா எனக் கேட்டபோது, பெரும்பாலும் நிலம் சார்ந்த வாழ்வியலையே கொண்டிருந்தாலும், நீர்த் தேக்கம், குளம், ஈரநிலம் போன்றவற்றைச் சார்ந்தும் அவை இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், S. Bajpai, D. Datta & P. Verma
இமயமலையை விடப் பழமையான பாம்பு
இந்தப் பாம்பு இனம், டைனோசர்கள் அழிந்து 1.8 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை வலம் வந்ததாகக் கூறுகிறார் சுனில் பாஜ்பாய்.
அதோடு, "மனித இனத்தின் பரிணாம வரலாற்றுடன் அவற்றுக்குத் தொடர்பு இருக்கவில்லை என்றாலும் பிரைமேட் என்றழைக்கப்படும் நம் மூதாதை உயிரினங்களை உள்ளடக்கிய பெரும் உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த சில உயிரினங்கள், அவை வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, இந்தப் பாம்பு வாழ்ந்த காலகட்டத்தில் இமயமலை முழுதாகத் தோன்றியிருக்கவில்லை என்றும் அதற்கான நிலவியல் செயல்முறைகள் நடந்து கொண்டிருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தப் பிரமாண்ட பாம்பினம் வாழ்ந்த காலத்தில் கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட இந்திய நிலப்பரப்பு ஆசியாவுடன் இணையும் செயல்முறை தொடங்கிவிட்டது. ஆனால், "அது முழுதாக முடிவடைந்து இருக்கவில்லை."
மட்சோய்டே உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்த வாசுகி பாம்பு வெப்பமண்டல சுற்றுச்சூழலில் வாழ்ந்ததாகக் கூறிய அவர், "கடல் பகுதி வெளியேறி, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த இந்திய நிலப்பரப்பு ஆசியாவுடன் கிட்டத்தட்ட இணைந்துவிட்ட காலம் அது. அதாவது, கோண்டுவானாவில் இருந்து பிரிந்த நிலப்பரப்பு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய கண்டத்தில் மோதியது. அதன் விளைவாகவே இமயமலை உருவாகத் தொடங்கியது. ஆனால் அதன் உருவாக்கம் முழுமையடைந்து இருக்கவில்லை. அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் வாசுகி பாம்பு குஜராத் பகுதியில் வாழ்ந்துள்ளது" என்று விளக்கினார்.
வாசுகியுடன் கிடைத்துள்ள தொல்லெச்சங்களில் பழங்கால திமிங்கிலங்கள், சுறாக்கள், முதலை வகைகள், ஆமைகள் உள்படப் பலவற்றின் எச்சங்களும் இருந்ததாக தெபாஜித் தத்தா கூறினார்.
சுனில் பாஜ்பாயின் கூற்றுப்படி, அந்தப் பகுதி முன்பு கடலாக இருந்தது என்பதை அதன்மூலம் புரிந்து கொள்ளலாம். அதன் காரணமாகவே, அதனுடன் பல கடல் உயிரினங்களின் தொல்லெச்சங்களும் கிடைத்துள்ளன என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
வாசுகி தான் உலகின் மிக நீளமான பாம்பு இனமா?
வாசுகி பாம்புதான் உலகிலேயே மிக நீளமான பாம்பு என்று கூறப்படுவது பற்றி சுனில் பாஜ்பாயிடம் கேட்டபோது, "இது நிச்சயமாக உலகின் மிகப் பிரமாண்டமான பாம்பு இனங்களில் ஒன்று. ஆனால், இதுதான் உலகிலேயே நீளமானது எனச் சொல்லிவிட முடியாது" என்று தெரிவித்தார்.
டைட்டனபோவா என்ற பழங்கால பாம்பின் புதைபடிவம், கடந்த 2004-ஆம் ஆண்டு கொலம்பியாவில் தோண்டி எடுக்கப்பட்டது. அதுதான் இதுவரை உலகின் மிக நீளமான பாம்பினம் எனக் கூறப்பட்ட நிலையில், "அதனுடன் போட்டியிடும் அளவுக்கு, கிட்டத்தட்ட அதற்கு நிகரான அளவில் வாசுகி இருந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது." என்று சுனில் பாஜ்பாய் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை அது எவ்வளவு நீளமாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஆய்வு செய்த இவர்கள், "11 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை இருந்திருக்கலாம்." என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது, 36 அடி முதல் 49.2 அடி வரை வாசுகி இருந்திருக்கலாம்.
டைட்டனபோவா தொடர்பான ஆய்வறிக்கைப்படி, அதன் நீளம் 42.7 அடி என்பதால், வாசுகி அதற்கு நிகரான ஒன்றாகவோ அல்லது அதைவிட நீளமானதாகவோ இருந்திருக்கலாம் என்ற அனுமானத்திற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
இருப்பினும், "அது குறைந்தபட்சமாக 36 அடி நீளத்திற்குக்கூட இருந்திருக்க வாய்ப்புள்ளது. நமக்குக் கிடைத்திருப்பது அந்தப் பாம்பின் நடுப்பகுதி எலும்புகள் மட்டுமே. அதை வைத்து வாசுகியின் நீளத்தை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. அதன் முழு அளவை உறுதியாகத் தெரிந்துகொள்ள மேலதிக புதைபடிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

பாம்பின் நீளம் ஒருபுறம் இருக்க, எடையைப் பொறுத்தவரை, "வாசுகி ஒரு டன்னுக்கு நிகரான அளவில் மட்டுமே இருந்திருக்கலாம். ஆனால், டைட்டனபோவா 1.25 டன் எடை கொண்டது. ஆகவே அதுதான் பெரியது" என்கிறார் சுனில் பாஜ்பாய்.
மேலும், "இந்தப் பாம்புகள் இந்திய துணைக் கண்டத்தில் எங்கெல்லாம் பரவி வாழ்ந்தன என்பதையும் அதுகுறித்த மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள இன்னும் அதிகமான தொல்லெச்சங்கள் வேண்டும். நாங்கள் மீண்டும் கட்ச் பகுதிக்குச் சென்று அதைத் தேடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
ஆனால் கவலைக்குரிய விஷயமாக, இந்தத் தொல்லெச்சம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு நிலக்கரிச் சுரங்கம். நில அமைப்பில் பல மாறுதல்கள் நடந்திருக்கும். எனவே அங்கு தேடுவதோடு, வேறு பல இடங்களில் இருந்தும் வாசுகி இண்டிகஸ் பாம்பின் தொல்லெச்சங்கள் சேகரிக்கப்பட்டால், மேலும் பல புதிய விஷயங்கள் நமக்குத் தெரிய வரலாம்," எனத் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி சமீபத்தில் இவர்கள் இருவரும், இதே இயோசீன் காலகட்டத்திலேயே வாழ்ந்த நீர்வாழ் பாம்பு ஒன்றின் தொல்லெச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
கூடுதலாக, இந்த இரு ஆய்வாளர்களும், இந்திய நிலப்பரப்பில் வேறு எங்கெல்லாம் வாசுகி பாம்புகள் வாழ்ந்தன என்பதைக் கண்டுபிடிக்கவும் அதன் பிற உடல் பாகங்களைக் கண்டுபிடிக்கவுமான பயணத்தைத் தொடர்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












