வங்கிகளில் உங்கள் பெற்றோர் விட்டுச் சென்ற பணத்தை நீங்கள் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
சதீஷ் தனது தந்தை வங்கியில் பெரிய அளவில் டெபாசிட் செய்து வைத்திருந்ததாகவும், இந்த விவரங்களை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளாமல் இறந்துவிட்டதாகவும் நீண்ட காலமாக சந்தேகித்து வந்தார். இருப்பினும், அவர் எந்த வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகிறார்.
சதீஷ் மட்டுமல்ல, பலர் இந்த குழப்பத்தில் உள்ளனர். மறுபுறம், கடந்த காலத்தில் அவர்கள் செய்த வைப்புத்தொகையைப் பற்றி மறந்துவிட்டவர்களும் இருக்கலாம்.
மத்திய நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, நீண்ட கால உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மொத்த மதிப்பு ரூ .75,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 2023 -ல் UDGAM- (உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் - துரிதப்படுத்தப்பட்ட தகவலுக்கான நுழைவாயில்-Unclaimed Deposits – Gateway to Accelerated Information) என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், நாட்டில் உள்ள 30 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை இந்த இணையதளத்தின் கீழ் கொண்டு வந்தது. உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளில் 90 சதவீதம் வரை இந்த வங்கிகளில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஒரே தளத்தில் பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையைத் தேடுவது சாத்தியமாகியுள்ளது.
இந்த இணையதளத்தின் உதவியுடன், நீங்கள் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் கணக்குகளை தேட மட்டுமே முடியும், மற்றும் அவற்றை அடையாளம் காண முடியும்.
அவ்வாறு அடையாளம் கண்ட வைப்புத்தொகைகளை அந்தந்த வங்கிக் கிளைகளில் சென்று உரிமை கோர வேண்டும். ஜூலை 2025 நிலவரப்படி, உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை கண்காணிக்க 8.5 லட்சம் பேர் இந்த போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்று CA-ALLE தளம் தெரிவித்துள்ளது.
செயலற்ற கணக்கு
செயலற்ற கணக்கு என்பது நீண்ட காலத்துக்கு எந்தவொரு பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாத ஒரு வங்கிக் கணக்காகும். அதாவது, ஏடிஎம்கள் மற்றும் நெட் பேங்கிங் வடிவில் பண வைப்பு, திரும்பப் பெறுதல் அல்லது எந்த பரிவர்த்தனைகளும் இல்லாத கணக்கு. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வங்கிகள் அத்தகைய கணக்குகளை ரிசர்வ் வங்கியின் ஆதரவின் கீழ் டி.இ.ஏ (வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி) க்கு மாற்றுகின்றன.
பொதுவாக, பத்து வருடங்களுக்கு மேல் கொடுக்கல் வாங்கல் இல்லாத கணக்குகள் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகின்றன. டி.இ.ஏ.வின் கீழ் சென்ற உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் கணக்குகளின் விவரங்களை UDGAM இணையதளத்தில் தேடலாம். இதற்காக, UDGAM (உத்கம்)தளத்தில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- தனிப்பட்ட கணக்கு விவரங்களுக்கு...
கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கி பெயர் (ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளைத் தேர்ந்தெடுக்கலாம்) தேர்ந்தெடுத்து, பின்வருவனவற்றில் ஒன்றின் விவரங்களை வழங்கவும்:
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அட்டை
- பாஸ்போர்ட்
- பிறந்த தேதி
- நிறுவன கணக்கின் விவரங்களுக்கு...
பின்வரும் விவரங்களில் ஒன்றை வழங்க வேண்டும்.
- நிறுவனத்தின் பெயர்
- வங்கி விவரங்கள்
- அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / சட்ட பிரதிநிதி (அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்)
- பான் கார்டு
- கார்ப்பரேட் அடையாள எண் (CIN)
- நிறுவனம் இணைக்கப்பட்ட தேதி
இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால் நபர் அல்லது நிறுவனத்தின் முகவரியை உள்ளிடுவதன் மூலம் விவரங்களைத் தேடலாம்.
உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மற்றும் கணக்குகள் பற்றிய விபரங்களை மட்டுமே இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அவற்றிற்கு உரிமை கோர, சம்பந்தப்பட்ட வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும். DEA க்கு மாற்றப்படும் ஒவ்வோர் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை / கணக்கிற்கும் UDRN எண் ஒதுக்கப்படுகிறது. (உரிமை கோரப்படாத வைப்பு குறிப்பு எண்)
'உங்கள் பணம்-உங்கள் உரிமை' என்ற முழக்கத்துடன் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் உத்கம் சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை குறித்த தங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
"உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் காகிதத்தில் உள்ள எண்கள் மட்டுமல்ல, அவை சாதாரண குடும்பங்களின் கடின உழைப்பால் சம்பாதித்த சேமிப்பைக் குறிக்கின்றன" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் .
விழிப்புணர்வு, எளிமையான நடைமுறை மற்றும் தொடர் நடவடிக்கைகள் ஆகிய மூன்றின் அடிப்படையில் கோரிக்கைகளை விரைவாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 2025-க்குள் நாடு முழுவதும் ரூ .75,000 கோடி உரிமை கோரப்படாத வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நிதிச் சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜூ தெரிவித்தார். ரூ.13,800 கோடி மதிப்பிலான காப்பீட்டு வைப்புத்தொகை, ரூ.3,000 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ரூ.9,000 கோடி மதிப்பிலான ஈவுத்தொகை ஆகியவை கோரப்படாமல் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
உரிமை கோருவது எப்படி?
ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற தனலட்சுமி வங்கி தனது இணையதளத்தில் அடையாளம் காணப்பட்ட வைப்புத்தொகையை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியுள்ளது.
- தனிப்பட்ட கணக்குகள்
உரிமை கோரலுக்காக அந்தந்த வங்கிக் கிளைகளுக்குச் செல்லும் தனிநபர்கள், வாரிசுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உத்கம் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட UDRN எண்ணை வங்கி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கியின் KYC விதிப்படி, அவர்கள் தங்கள் முகவரி அடையாளத்தை வழங்க வேண்டும்.
கடந்த காலத்தில் டெபாசிட் செய்தவர்கள் மற்றும் அவற்றைப் பற்றி மறந்துவிட்டவர்கள் வங்கி பாஸ்புக்கின் நகல், கணக்கு அறிக்கைகளின் நகல்கள் மற்றும் மீதமுள்ள காசோலை புத்தகங்கள் போன்ற தங்கள் உரிமைகோரலுக்கு பொருத்தமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, அந்த சேவைக்கான படிவத்தை நிரப்ப வேண்டும். எல்லாவற்றையும் ஆய்வு செய்த பிறகு வட்டியுடன் சேர்த்து பணத்தை வங்கி தரும். கணக்கு வைத்திருப்பவர் மீண்டும் கணக்கைத் தொடர விரும்பினால், அவர் மீண்டும் KYC விவரங்களை அளிக்க வேண்டும்.
இறந்த போன நபரின் கணக்கிலிருந்து அவரது வாரிசுகள் அல்லது நியமனதாரர்கள் உரிமைகோர விரும்பினால், அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வங்கி தொடர்பான பிற நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- நிறுவனங்கள் தொடர்பான கணக்குகள்
நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்ற தனிநபர் அல்லாத கணக்குகளுக்கான உரிமைகோரல்களுக்கு, நிறுவனத்தின் சட்டப்பூர்வ பெயர், வணிகம் மற்றும் முகவரி ஆகியவற்றின் ஆதாரத்தைக் காட்டும் தேவையான ஆவணங்கள் நிறுவன லெட்டர்ஹெட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்கள் உரிமைகோரல் கோரிக்கையுடன் அவர்களின் கையொப்பங்கள் மற்றும் KYC விவரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிமை கோரும் விண்ணப்பம் கிடைத்ததும், தேவைப்பட்டால் தகுந்த விசாரணைகளை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.
உரிமைகோரலின் மொத்த மதிப்பு 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், பணம் ரொக்கமாக வழங்கப்படும். அதற்கு அதிகமாக இருந்தால் , டிமாண்ட் டிராஃப்ட் (DD), NEFT, RTGS மூலம் மாற்றப்படும்.
இந்த தொகைக்கான வட்டியும் சேர்த்தே வழங்கப்படும்.

புதிதாக வங்கிக் கணக்கை தொடங்கும் போது, அனைத்து விவரங்களும் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். நியமனதாரர் விவரங்கள் எழுதப்பட வேண்டும்.
கடந்த காலத்தில்,வேலை மற்றும் தொழில் நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த பலரும் வங்கி உள்ளிட்ட நிதிநிறுவனங்களில் செய்த சேமிப்பு மற்றும் முதலீடுகள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களது முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரம் தெரியாததால் அந்த கணக்குகளிலேயே அந்த பணம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆதார் மற்றும் தொலைபேசி வந்த பிறகு நிலைமை மாறிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு













