ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த இந்தியாவால் முடியுமா? புதினை குறிப்பிட்டு மோதி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமைதியை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக, மோதி அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
யுக்ரேன் தலைநகர் கீயவில் கடந்த மாதம் பெரிய குழந்தைகள் மருத்துவமனை உட்பட, ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்திய நாளில், மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த மோதி, அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை கட்டியணைத்ததை ஸெலன்ஸ்கி விமர்சித்திருந்தார்.
பிரச்னைகளைப் போர்க்களத்தில் சரிசெய்ய முடியாது என்று தாம் புதினிடம் கூறியதாக பிரதமர் மோதி கூறியிருந்தார்.
“இரு தரப்பினரும் அமர்ந்து இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்,” என்று கீயவில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் மோதி தெரிவித்தார்.
போலாந்தில் இருந்து ரயில் மூலமாக யுக்ரேன் தலைநகர் கீயவை மோதி அடைந்தார். யுக்ரேனிய படைகள் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் நுழைந்ததில் இருந்து யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் சர்வதேச தலைவர் மோதி.
குர்ஸ்க் பிராந்தியத்தில் 1,250 சதுர கி.மீ.க்கும் அதிகமான பகுதியைக் கைப்பற்றியதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நரேந்திர மோதி, ரஷ்ய அதிபரை ஆரத்தழுவியதைக் கண்டு தாம் “பெருத்த ஏமாற்றம் அடைந்ததாக” ஆறு வாரங்களுக்கு முன்பு யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
“ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். இதில் மூன்று குழந்தைகளும் அடக்கம். யுக்ரேனில் உள்ள மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா தாக்கியது. அந்த நாளில், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், மாஸ்கோவில் உலகின் மிகப் பெரிய ரத்தம் தோய்ந்த குற்றவாளியை ஆரத் தழுவுவது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று அந்த நேரத்தில் ஸெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணம் சமநிலைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல் குறித்து மோதிக்கும் ஸெலன்ஸ்கிக்கும் இடையே என்ன நடந்தது என்று விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23) யுக்ரேன் அதிபரை மோதி ஆரத்தழுவினார்.
மோதி - ஸெலன்ஸ்கி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோதி, ஸெலன்ஸ்கியை கட்டிப்பிடித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், யுக்ரேன் தேசிய அருங்காட்சியகத்தில் பல்லூடக கண்காட்சியை பிரதமர் மோதி பார்வையிட்டார்.

பட மூலாதாரம், @narendramodi
பிரதமர் மோதி பேசுகையில், “முக்கியமாக குழந்தைகளுக்கு மோதல்கள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவர்கள் பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களின் நினைவாக அங்கு பொம்மை ஒன்றை பிரதமர் மோதி வைத்தார்.
நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோதியின் யுக்ரேன் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
விவசாயம், உணவுத் தொழில், மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
அப்போது, விரைவான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலான பீஷ்ம் (BHISHM) திட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியிடம் வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், உயிரைக் காப்பாற்றவும் அவை உதவும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு பெட்டகத்திலும் அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளைச் சமாளிக்க அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
அடிப்படை அறுவை சிகிச்சை அறைக்குத் தேவையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இதில் இருக்கும். இதில் ஒரு நாளில் 10-15 அறுவை சிகிச்சைகள் செய்யலாம்.
இவை, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் அல்லது ரத்தப்போக்கு போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில் 200 பேரைக் கையாளும் திறன் கொண்டது.
அந்தப் பெட்டகங்கள், தாமாகவே மின்சாரம் மற்றும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
சந்திப்பின் தாக்கம் என்ன?
கீயவில் ஸெலன்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தியதாக பிரதமர் மோதி கூறினார். யுக்ரேனுடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது.
“விவசாயம், தொழில்நுட்பம், மருந்து மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் விவாதித்தோம். கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம்” என்று பிரதமர் மோதி கூறினார்.
'இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும்'
யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் மோதலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, பேச்சுவார்த்தை மூலம்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்று யுக்ரேன் அதிபரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
“இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்." குறிப்பாக, யுக்ரேனிய மண்ணில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதை குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் யுக்ரேனிய அதிபரிடம் மோதி கூறினார்.

பட மூலாதாரம், @narendramodi
"அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தீவிரமாகப் பங்கு வகிக்கத் தயாராக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் இதற்கு பங்களிக்க முடிந்தால், அதை நிச்சயமாகச் செய்ய விரும்புகிறேன். ஒரு நண்பராக, இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று ஸெலன்ஸ்கியிடம் கூறினார்.
"இது இந்தியாவின் அர்ப்பணிப்பு என்பதை உங்களுக்கும் முழு உலக சமூகத்திற்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை எங்களுக்கு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் அதை ஆதரிக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் விவாதித்தது என்ன?
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு முன்பாக ஸெலன்ஸ்கி அமர்ந்துள்ளார்.
ஸெலன்ஸ்கி முன்னிலையில் பிரதமர் மோதி, "மனிதாபிமான அணுகுமுறைதான் இந்த விவகாரத்தில் எங்களுடைய முதன்மையான பங்கு. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் அதற்கு நிறைய தேவை உள்ளது. மனிதாபிமான அணுகுமுறையை மையமாக வைத்து அதை நிறைவேற்ற இந்தியா முயன்றுள்ளது" என்றார்.
“மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எந்த வகையான உதவி தேவைப்பட்டாலும், இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று மோதி கூறினார்.

பட மூலாதாரம், @narendramodi
ஸெலன்ஸ்கி முன்னிலையில் ரஷ்ய அதிபர் புதினையும் மோதி குறிப்பிட்டார்.
ரஷ்ய பயணத்தின்போது அதிபர் விளாதிமிர் புதினுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, இது போருக்கான நேரம் அல்ல என்று புதினிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
“எந்தவொரு பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியிலான முடிவுகள் மூலம்தான் தீர்வு கிடைக்கும் என்றும், நேரத்தை வீணடிக்காமல் அந்தத் திசையில் செல்ல வேண்டும் என்றும் நான் தெளிவாகக் கூறியுள்ளேன்” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.
ஸெலன்ஸ்கி கூறியது என்ன?
பிரதமர் மோதியுடனான சந்திப்பு குறித்து ஸெலன்ஸ்கி கூறுகையில், “இது மிகவும் சிறப்பான சந்திப்பு, இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோதியின் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இதுவொரு நல்ல தொடக்கம் எனவும் கூறிய யுக்ரேன் அதிபர், "அவருக்கு (பிரதமர் மோதி) அமைதி குறித்து ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் பற்றி பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்றார்.
மேலும், “புதினைவிட பிரதமர் மோதி அமைதியை விரும்புகிறார். புதின் அதை விரும்பவில்லை என்பதுதான் பிரச்னை” என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா என்ன செய்ய முடியும்?
சமநிலையை எட்டுவது குறித்த கேள்விக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஐரோப்பிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் பஸ்வதி சர்கார் பதிலளித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், "24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியதில் இருந்து இந்தியா இந்த விவகாரத்தில் சமநிலையைப் பேணி வந்திருக்கிறது. இந்தியா ரஷ்யாவுடன் ஆழமான உறவைக் கொண்டுள்ளது, அதை நாம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை. வெகுகாலமாக அந்நாடுகளுடன் இந்தியா அந்த உறுதிப்பாட்டை வைத்துள்ளது” என்றார்.
அவர் கூறுகையில், "இந்தியா ஐரோப்பாவில், குறிப்பாக அமெரிக்காவில் தனது உறவை ஆழப்படுத்த முயல்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன" என்றார்.

பட மூலாதாரம், @narendramodi
போரை நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்த கேள்விக்கு, “இது போருக்கான நேரம் அல்ல என்று பிரதமர் மோதியால் மட்டுமே புதினிடம் கூற முடியும் என்பது உண்மை. எந்த ஐரோப்பியரும் இதைப் பேச முடியாது. பேச்சுவார்த்தை இல்லாமல் தீர்வு கிடைக்காது என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்” என்றார்.
"போரை நிறுத்தப் பலர் முனைப்பு காட்டுகின்றனர். சீனாவும் அதையே செய்தது. சுவிட்சர்லாந்தில் நடந்த உலக அமைதி மாநாட்டிலும் இது நடந்தது. ஆனால் ரஷ்யா இதில் பங்கேற்கவில்லை. சண்டையிட்டுக் கொள்ளும் இரு நாடுகளும் அமர்ந்து பேசாமல், இதில் முடிவை எட்ட முடியாது. இரு நாடுகளையும் ஒன்றிணைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும்” என்கிறார் அவர்.
அதே நேரம், ரஷ்ய விவகாரங்களில் நிபுணரும், ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியருமான ராஜன் குமார், “இது நிச்சயமாக மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சமிக்ஞை” என்று பிபிசியின் பாட்காஸ்டில் கூறினார்.
பிரதமர் மோதி வருகையின் அர்த்தம் என்ன?
இது மோதியின் அடையாளப் பயணமா அல்லது இதற்கு ஆழமான அர்த்தம் உள்ளதா?
ஏனெனில் மோதி இந்த ஆண்டு மாஸ்கோவுக்கும் சென்றிருந்தார். இது குறித்து பேராசிரியர் ராஜன் குமார் கூறுகையில், "இந்தப் பயணம், இந்தியா சமநிலை வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பது குறித்து, மேற்கத்திய நாடுகளுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞை. இது துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கை" என்றார்.
"யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக மாறிய பிறகு இத்தகைய அளவில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை.
போரின்போது, யுக்ரேன் சில பகுதிகளை ஆக்கிரமித்ததாக சமீப காலமாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இது முதல் முறையாக நடந்தது. மோதி முதலில் ரஷ்யா சென்றார், இதனால் மேற்கத்திய நாடுகள் கோபமடைந்தன” எனக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
குவாட் அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளதாகவும், இருந்த போதிலும் ரஷ்யாவை ஆதரிப்பதாகவும் பேராசிரியர் ராஜன் குமார் கூறினார்.
“ஒருவகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சமநிலையானது என்பதைக் காட்டும் முயற்சியே இந்தப் பயணம். இது ஒருபுறம் சமநிலைப்படுத்தும் முயற்சி, மறுபுறம், இது இருநாடுகளிடையே 'பாலமாகச் செயல்படும்’ முயற்சி” என்றார்.
ரஷ்யாவையும் யுக்ரேனையும் எப்படி இணைப்பது என்பது முதல் முயற்சி என்றும், ‘தெற்குலக’ பிரதிநிதியாக உள்ள இந்தியா, யுக்ரேனை தெற்குலகத்துடன் இணைப்பது எப்படி என்பது இரண்டாவது முயற்சி என்றும் அவர் கூறினார்.
“ஏனெனில், தெற்குலகில் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 'புத்தரின் நேரம், போருக்கான நேரம் அல்ல' என்றும், இந்த சுற்றுப் பயணம் அமைதிக்கான முயற்சி என்றும் பிரதமர் இந்த சுற்றுப் பயணத்தில் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் பங்கு என்ன?
ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையில் இந்தியாவின் பங்காக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “பனிப்போருக்குப் பிறகு, அதாவது 1991ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் என எந்த நாட்டு விவகாரத்திலும் மத்தியஸ்தம் பற்றிப் பேச இந்தியா எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என பேராசிரியர் ராஜன் குமார் கூறினார்.
“இரு தரப்பையும் முன்னோக்கிக் கொண்டு வருவதைப் பற்றி இந்தியா பேசுகிறது என்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் காண்கிறோம் என்று சொல்லலாம். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை” என்கிறார் பேராசிரியர் ராஜன் குமார்.

பட மூலாதாரம், Getty Images
ராஜன் குமார் கூறுகையில், "போர்நிறுத்தம் பற்றிப் பேசும் அளவுக்கு அரசியல் சூழல் இல்லை. சீனா, துருக்கி போன்று இந்தியாவும் அமைதித் திட்டத்தைப் பற்றி பேசவில்லை. மத்தியஸ்தம் குறித்த பேச்சு எழுந்தால் இந்தியா எந்த மாதிரியாகப் பங்கு வகிக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என்றார் அவர்.
கடந்த 1991ஆம் ஆண்டு யுக்ரேன் சுதந்திர நாடாக மாறிய பிறகு, இந்திய பிரதமர் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா யுக்ரேனை தாக்கியது. அன்று முதல் இன்று வரை இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் இந்த சண்டை, எப்போது நிற்கும் என்பதைக் காலம்தான் சொல்லும். ஆனால், ஸெலென்ஸ்கி, புதின் ஆகிய இருவரிடமும் சமாதானம் மட்டுமே தீர்வு என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












