இந்த ஒருபாலின ஈர்ப்பு பெங்குவின் பறவையின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பது ஏன்?

பட மூலாதாரம், Sea Life Sydney Aquarium
- எழுதியவர், டிஃபனி டர்ன்புல்
- பதவி, பிபிசி செய்திகள்
ஆஸ்திரேலியாவில், ஸ்ஃபென் என்ற ஒரு 11 வயதான ஜெண்டூ பெங்குவின் சமீபத்தில் இறந்துள்ளது.
இந்த இறப்பு குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காரணம், இறந்த பெங்குவினுக்குப் பின் ஒரு கதை உள்ளது.
அது, உலகளவில் பிரபலமான ஒருபாலின ஈர்ப்பு பெங்குவின் தம்பதியில் ஒரு பெங்குவின் ஆகும்.
ஸ்ஃபென்னும் அதன் இணையான மேஜிக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சீ லைஃப் சிட்னி’ கடல்வாழ் உயிரியல் காட்சியகத்தில் காதலில் விழுந்து, பின்னர் இரண்டு குஞ்சுகளைத் தத்தெடுத்து வளர்த்து, உலக அளவில் பிரபலமடைந்தன.
இந்தப் பெங்குவின்களின் காதல், ஆஸ்திரேலியாவின் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ‘ஏடிபிக்கல்’ என்ற நெட்ஃபிக்ஸ் தொடரில் இடம்பெற்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘சமத்துவத்தின் சின்னம்’
‘சீ லைஃப் சிட்னி’ கடல்வாழ் உயிரியல் காட்சியகம், ‘ஸ்ஃபென் சமத்துவத்தின் சின்னமாகவும், பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்புக்கான சின்னமாகவும், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது’ என்று கூறியது.
இந்தப் பெங்குவின் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு அதன் உடல்நிலை மோசமடைந்தது. இந்த மாத துவக்கத்தில், காட்சியகத்தின் கால்நடை மருத்துவக் குழு ஸ்ஃபெனின் வலி மற்றும் அசௌகரியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அதனைக் கருணைக்கொலை செய்யும் கடினமான முடிவை எடுத்தது.
இந்தப் பெங்குவினின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தை மருத்துவக் குழு விசாரணை நடந்து வருகிறது.
இந்தக் கடல்வாழ் உயிரியல் காட்சியகத்தின் பொது மேலாளரான ரிச்சர்ட் டில்லி வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ஸ்ஃபெனின் இழப்பு காட்சியகத்தின் பென்குவின்களுக்கும், ‘ஸ்பென் மற்றும் மேஜிக்-கின்’காதல் கதையால் ஈர்க்கப்பட்ட, அவர்கள் மூலம் நேர்மறையான தாக்கத்தை உணர்ந்த அனைவருக்கும் ஒரு துயரமான செய்தி,” என்று தெரிவித்தார்.
"ஸ்ஃபென்னின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவும், கொண்டாடவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். ஸ்ஃபென் எப்படிப்பட்ட ஒரு சின்னமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள விழைகிறோம்,” என்றார்.

ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் பெங்குவின்கள்
அண்டார்டிகாவில் வசிக்கும் ஒரு துணை இனமான, ஜென்டூ பென்குயின்கள், சராசரியாக 12 முதல் 13 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. இவை வாழ்க்கை முழுதும் ஒரே துணையுடன் வாழ்வதற்குப் பிரசித்தமானவை.
ஸ்ஃபென்னின் துணை மேஜிக்குக்கு 8 வயது. காட்சியகத்தின் பணியாளர்கள், ஸ்ஃபெனின் உடலைப் பார்க்க மேஜிக்கை அழைத்துச் சென்றனர். அதன் துணை இனி திரும்பி வராது என்பதை மேஜிக்குக்குப் புரியவைக்க உதவினர்.
மேஜிக் உடனடியாகப் பாடத் துவங்கியது, அதைத் தொடர்ந்து அங்கிருந்த பெங்குவின் கூட்டமே பாடத் துவங்கியது என காட்சியகம் தெரிவித்தது.
"எங்கள் அணியின் கவனம் இப்போது மேஜிக் மீது உள்ளது. விரைவில் அது, ஸ்ஃபென் இல்லாமல் தனது முதல் இனப்பெருக்க காலத்திற்கு தயாராகவிருக்கிறது," என்று டில்லி கூறினார்.
ஸ்ஃபென் மற்றும் மேஜிக் தம்பதி தத்தெடுத்து வளர்த்த இரண்டு பெங்குவின் குஞ்சுகளான ‘லாரா என்ற ஸ்ஃபெஞ்சிக்’ மற்றும் ‘கிளான்சி’யை ஸ்ஃபென் விட்டுச் சென்றுள்ளது.

பட மூலாதாரம், www.visitsealife.com
ஆறு ஆண்டுகள் தம்பதி வாழ்க்கை
மேஜிக் மற்றும் ஸ்ஃபென் ஆறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தன. அவை இரண்டும் குனிந்து வணக்கம் சொல்வதைக் கண்ட காட்சியகத்தின் ஊழியர்கள் அவற்றுக்கு இடையே ஒரு ஈர்ப்பு இருப்பதை முதலில் கவனித்தனர். குனிந்து வணங்குவது ஜெண்டூ பெங்குவின் இனத்தில் ஈர்ப்பின் அடையாளம்.
காட்சியகத்தின் இணையதளத்தில் உள்ள ஓர் இரங்கல் செய்திப் பலகையில் ஸ்ஃபெனுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்பலகையில் "ஸ்ஃபென் மற்றும் மேஜிக் சமத்துவத்தின் சின்னங்கள். அவற்றைப் பராமரித்தவர்களுக்காகவும், முழு சீ லைஃப் சிட்னி அணிக்காகவும் என் இதயப்பூர்வமான இரங்கல்கள்," என்று அவற்றின் நீண்டகால ரசிகரான மார்க் எழுதியிருக்கிறார்.
"நீங்கள் உலகிற்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள், நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம், 'ஹபீபி'" என்று, ராச் என்ற மற்றொரு பயனர், பாசத்திற்கான அரபு வார்த்தையைப் பயன்படுத்தி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












