'முடிவெட்ட முடியாது...தேநீர் கிடையாது': திருவண்ணாமலையில் தொடரும் சாதி பாகுபாடுகள் - பிபிசி தமிழ் களஆய்வு

காணொளிக் குறிப்பு, முடி திருத்தும் கடை, டீக்கடையிலும் பாகுபாடு; கோவில் பிரவேசத்திற்குப் பிறகு அடக்குமுறையை சந்திக்கும் பட்டியலின மக்கள்!
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள தென்முடியனூர் கிராமத்தில் 2023 ஆம் ஆண்டு ஒரு பிரச்னை ஏற்பட்டது.

இங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பட்டியல் சாதியினரின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்தது.

ஆலய நுழைவு சம்பவத்துக்குப் பிறகு ஊருக்குள் பாகுபாடுகள் அதிகரித்துவிட்டதாகக் கூறுகின்றனர், தென்முடியனூரில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள். இதே போன்ற நிலை, அருகில் உள்ள மோத்தக்கல் கிராமத்திலும் நிலவுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டைப் பிற சாதி மக்கள் மறுக்கின்றனர்.

உண்மையில் பட்டியல் சாதி மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறதா? அங்குள்ள நிலவரத்தை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, பட்டியல் பிரிவு மக்களின் ஆலய நுழைவை விரும்பாத பிற சாதி மக்கள், தங்கள் பகுதியில் தனியாக கோவில் ஒன்றைக் கட்டிக் கொண்டனர்.

தென்முடியனூர் கிராமத்தில் விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளன. இங்கு ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பிற சாதி மக்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதியினரும் வசிக்கின்றனர்.

இங்கு சுமார் 80 ஆண்டுகள் பழைமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 12 நாள் திருவிழாவில், ஒருநாள் தங்களையும் விழா நடத்த அனுமதிக்குமாறு பிற சாதி மக்களிடம் பட்டியல் சாதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். 'அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதால், எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது' எனக் கூறிய அதிகாரிகள், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலய நுழைவை நடத்தினர்.

இதனை விரும்பாத பிற சாதி மக்கள், தங்கள் பகுதியில் தனியாக கோவில் ஒன்றைக் கட்டிக் கொண்டனர். முத்து மாரியம்மன் கோவிலுக்கு பிற சாதியினர் வழிபாடு நடத்துவதற்கு வருவதில்லை.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.

தென்முடியனூரில் என்ன நிலவரம்?

ஆகஸ்ட் 1 அன்று தென்முடியனூர் கிராமத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. முத்து மாரியம்மன் கோவில் பூட்டப்பட்டிருந்தது. அங்கு ராசாத்தி என்பவரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பல மாதங்களாக கோவில் பூட்டியே கிடக்கிறது. அறநிலையத்துறையில் இருந்து எப்போதாவது மதியம் 12 மணிக்கு மேல் ஒருவர் வந்து பூஜை செய்துவிட்டுப் போவார். எப்போது வருவார் என யாருக்கும் தெரியாது" எனக் கூறினர்.

"கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் எனக் கிராம மக்கள் நினைத்தாலும் திறந்து வைக்க மாட்டார்கள்." என்கிறார்.

"கோவிலைத் திறந்து தினமும் பூஜை செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் வருவார்கள். ஊருக்குள் சில குடும்பங்களில் பிரச்னை வரும்போது, அம்மனை மூடி வைத்திருப்பதால் பிரச்னை வருகிறதோ என நினைக்கின்றனர்" என்கிறார், கிராமத்தில் வசிக்கும் சௌபாக்கியம்.

ஆனால், "சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பில் இருந்தும் யாரும் வருவதில்லை" எனக் கூறுகிறார், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் அறநிலையத்துறை அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரியும் ரமேஷ்.

கடந்த எட்டு மாதங்களாக கோவிலைத் திறந்து தான் பூஜை செய்து வருவதாகக் கூறிய ரமேஷ், "கோவிலுக்கு வந்து சென்றால் 200 ரூபாய் செலவாகிறது. அறநிலையத்துறையில் இதற்கான செலவைக் கோர முடியாது. ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் கோவில் வந்தாலும் பூஜை செய்வதற்கு பூசாரிகள் யாரும் முன்வரவில்லை" என்கிறார்.

"செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டுமே கோவிலுக்கு வந்து செல்கிறேன். 2024 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கோவிலுக்கு ஊர்க்காரர்கள் கூடி செலவு செய்தனர். தற்போது அவர்கள் தனியாக கோவில் கட்டிக் கொண்டனர். கோவிலைப் பராமரிப்பதற்கு பட்டியல் சாதியினரும் முன்வரவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, பல நாட்களாக கோவில் பூட்டியே உள்ளதால் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர் என்கிறார் ராசாத்தி.

சலூன் கடை சம்பவம்

கோவில் நுழைவு சம்பவத்துக்குப் பிறகு ஊருக்குள் அடக்குமுறைகள் அதிகமாகிவிட்டதாகக் கூறுகிறார், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சத்யசீலன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " தேநீர் கடைகளில் டீ குடிக்க அனுமதியில்லை; சலூன் கடைகளில் முடிவெட்ட மாட்டார்கள்; உணவகங்களில் சாப்பிட அனுமதிப்பதில்லை" எனவும் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் சத்யசீலனுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. தன்னுடைய இரண்டரை வயது மகனுக்கு முடிவெட்டுவதற்காக கிராமத்தில் உள்ள சலூன் கடைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

"ஆனால், முடி வெட்டுவதற்குக் கடைக்காரர் மறுத்துவிட்டார். அங்கே ஊர்த் தலைவர் நல்லதம்பியும் இருந்தார். அவரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக தண்டராம்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்" என்கிறார் சத்யசீலன்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி சத்யசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 3(1)(r), குடி உரிமை பாதுகாப்புச் சட்டம் (PROTECTION OF CIVIL RIGHTS ACT) 1955 பிரிவு 6 ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஆனால், நான் கொடுத்த வழக்கு பொய்யானது எனக் கூறி வழக்கைக் கைவிடுவதாகக் காவல்துறை கூறியது. 'இதுதொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம்' என திருவண்ணாமலை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தது. நீதிமன்றம் சென்று எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வழக்கு நடந்து வருகிறது" என்கிறார் சத்யசீலன்.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, தற்போது பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து பிற சாதி மக்களுக்கு மட்டுமே முடிவெட்டப்படுவதாக சத்யசீலன் கூறுகிறார்.

சலூன் கடையில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளையும் அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். தற்போது பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து பிற சாதி மக்களுக்கு மட்டுமே முடிவெட்டப்படுவதாகவும் தங்கள் கிராம மக்கள் சுமார் 5 கி.மீ தொலைவு பயணித்து வேறு ஊரில் முடிவெட்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சத்யசீலன் குறிப்பிடும் சலூன் கடைக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கு யாரும் இல்லாமல் கடை மட்டும் திறந்துகிடந்தது.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, கிராமத்தின் மையப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது.

'மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை'

"அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர், ஆர்.டி.ஓ ஆகியோரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.செங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கிரியிடம் முறையிட்டோம். 'தனித்தொகுதி எம்.எல்.ஏ என்றாலும், என்னால் எதுவும் செய்ய முடியாது' எனக் கூறிவிட்டார்" என்கிறார் சத்யசீலன்.

கோவில் நுழைவு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் தங்களால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை எனவும் கூலி வேலை செய்து பிழைக்க வேண்டியுள்ளதால் வழக்குகளுக்காக அலைவதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமத்தின் மையப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் பள்ளியின் கட்டடம் முழுமையாக சேதமடைந்துவிட்டதாகக் கூறுகிறார், பள்ளி மேலாண்மைக் கமிட்டியின் தலைவராக உள்ள பிரகாஷ்.

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, பள்ளி மேலாண்மைக் கமிட்டியின் தலைவராக உள்ள பிரகாஷ்.

'பள்ளியை இடமாற்றம் செய்ய முயற்சி'

"இது 1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டம். கடந்த முறை பெய்த மழையால் முழுமையாக சேதமடைந்துவிட்டது. அரசியல் தலையீடு காரணமாக பள்ளிக் கட்டடம் புதிதாக கட்டப்படாமல் உள்ளது" என்கிறார் பிரகாஷ்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், " செங்கம் எம்.எல்.ஏ கிரியிடம் முறையிட்டோம். 'கட்டடம் கட்டுவதற்கு இடமில்லை' என்கின்றனர். ஆனால், 87 சென்ட் நிலம் உள்ளது. பட்டியல் சாதி மாணவர்கள் அதிகம் படிப்பதால், பள்ளியை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்" எனக் கூறினார்.

தற்போது பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள மரத்தின் நிழலிலும் தொடக்கப்பள்ளியின் வராண்டாவிலும் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

"பள்ளிக்கு முறையான கட்டடம் இல்லாததால் வேறு இடத்துக்கு சில ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றுவிட்டுச் சென்றுவிட்டனர். பள்ளி மேலாண்மைக் குழுவின் முயற்சியால் தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்" எனக் கூறும் பிரகாஷ், பள்ளி அமைந்துள்ள இடத்தில் நிழற்குடை அமைக்கும் வேலைகள் நடப்பதாகவும் வேதனைப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'எந்தப் பிரச்னையும் இல்லை'

பட்டியல் சமூக மக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் ஊரின் முக்கிய பிரமுகருமான நல்லதம்பியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தேநீர் கடையிலோ உணவகங்களிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போதும் போல ஊரில் இருக்கிறோம். எந்தப் பிரச்னையும் இல்லை. முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் தனியாக கோவிலைக் கட்டிக் கொண்டோம்" எனக் கூறுகிறார்.

பள்ளி கட்டடம் தொடர்பான சர்ச்சைக்குப் பதில் அளித்த அவர், "அங்கு போதிய இடம் இல்லை என்பதால் வேறு இடத்தில் நிலம் ஒதுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்னர். பள்ளிக்கு நிலம் போதாது என்பது மட்டும் தான் காரணம். வேறு யாரும் தடுக்கவில்லை" என்கிறார்.

செங்கம் தொகுதி எம்.எல்.ஏ மு.பெ.கிரியிடம் பிபிசி தமிழ் பேசியது. "அலுவல் பணியில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொண்டும் பதில் பெற முடியவில்லை.

இதேபோன்ற பிரச்னையை அருகில் உள்ள மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்களும் எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், அங்கு வசிக்கும் முனியப்பன்.

மோத்தக்கல்லில் என்ன நிலவரம்?

தென்முடியனூர் கிராமத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் மோத்தக்கல் கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்தக் கிராமத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிற சாதி மக்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி மக்களும் வசித்து வருகின்றனர்.

கிராமத்தைச் சேர்ந்த கிளியம்மாள் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக பொதுவழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்துள்ளது.

ஆனால், அதே வழியில் சடலத்தைக் கொண்டு செல்வதற்கு பிற சாதி மக்கள் அனுமதி மறுத்தனர். முன்னதாக, பட்டியல் சாதி மக்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் தெருவழியாகவே கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.

அந்தப் பாதையில் கொண்டு செல்வது சிரமமாக இருந்ததால் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முயன்றதால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.

சுமார் ஐந்து மணிநேரத்துக்கும் மேல் போராடியும் கிளியம்மாளின் உடலை பொதுவழியில் கொண்டு செல்ல முடியவில்லை. பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் நிலத்தை சமன்செய்து அவ்வழியாகவே உடலைக் கொண்டு செல்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

'பொதுவழியில் அனுமதிப்பதில்லை'

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையே உள்ளது என்கிறார் முனியப்பன்.

"கிளியம்மாளுக்குப் பிறகு இரண்டு பேர் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்களையும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை" என்கிறார், மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் முனியப்பன்.

தொடர்ந்து பேசிய அவர், " ஊருக்குள் பத்து சாதிகள் உள்ளன. பட்டியல் சாதியைத் தவிர மற்ற ஒன்பது சாதியினரும் பொதுவழியில் சடலத்தைக் கொண்டு செல்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தீர்ப்பு கிடைத்தும் எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை" என்கிறார்.

கிளியம்மாள் மரணத்துக்குப் பிறகு ஊருக்குள் வேறுவகையான பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய முனியப்பன், "தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையே உள்ளது. பிற சாதிகளுக்கு கண்ணாடி டம்ளரில் கொடுக்கின்றனர். பட்டியல் சாதியினருக்கு ப்ளாஸ்டிக் டம்ளர்களில் தேநீர் வழங்குகின்றனர். எதிர்த்துக் கேட்டால், 'கடைக்கு வர வேண்டாம்' எனக் கூறுகின்றனர்" என்கிறார்.

சலூன் கடைகள், தேநீர் கடைகள், இஸ்திரி கடைகள் ஆகியவற்றிலும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'உன் சாமி வேற... என் சாமி வேற'

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, 'உணவகங்களில் பாரபட்சம் காட்டுகின்றனர். அம்பேத்கர் படம் போட்ட சட்டைகளை இஸ்திரி போட மாட்டார்கள்.' என்கிறார் திருமால் வெங்கட்ராமன்.

ஆகஸ்ட் 1 அன்று காலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரித்தார், கட்டட வேலை பார்த்து வரும் திருமால் வெங்கட்ராமன்.

" பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டலுக்குச் சென்றேன். 'உள்ளே வரக் கூடாது. வெளியில் டேபிள் உள்ளது. அங்கு உட்காரு', எனக் கடைக்காரர் கூறினார். எங்களைத் தனியாக அமர வைக்குமாறு பிற சாதியினர் கூறியுள்ளதாகவும் கடைக்காரர் தெரிவித்தார்" என்கிறார்.

மேலும், 'உங்கள் சாமி வேறு...எங்கள் சாமி வேறு' எனக் கடைக்காரர் கூறியதாகப் பேசிய திருமால் வெங்கட்ராமன், "உணவகங்களில் பாரபட்சம் காட்டுகின்றனர். அம்பேத்கர் படம் போட்ட சட்டைகளை இஸ்திரி போட மாட்டார்கள். சலூன் கடையிலும் இதே பிரச்னை தான்" எனவும் தெரிவித்தார்.

உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக தனது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றையும் அவர் பிபிசி தமிழிடம் காண்பித்தார்.

'பிரச்னைகள் இருக்கவே செய்யும்'

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் மோத்தக்கல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசன்.

"கிராமம் என்றால் சிறிய அளவிலான பிரச்னைகள் இருக்கவே செய்யும். அவை முற்றிலும் தீர்ந்துவிட்டதாகக் கூற முடியாது. மற்றபடி, கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உணவகத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கேட்டபோது, " மிகவும் தவறான தகவல். கிராமத்துக்குள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், கட்டுப்பாடு உள்ளதாக அவர்களே தவறாக நினைத்துக் கொள்கின்றனர்" என்கிறார்.

அதேநேரம், "ஊருக்குள் பிரச்னை இல்லையென்று கூறவில்லை. அவை காலப்போக்கில் மாறிவிடும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்

திருவண்ணாமலை, சாதி பாகுபாடுகள், கோவில் நுழைவு, தமிழ்நாடு
படக்குறிப்பு, தென்முடியனூர் கிராம பிரச்னை தொடர்பான புகார் எதுவும் என்னுடைய கவனத்துக்கு வரவில்லை என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்.

தென்முடியனூர் மற்றும் மோத்தக்கல் ஆகிய கிராமங்களில் பட்டியல் சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தென்முடியனூர் கிராம பிரச்னை தொடர்பான புகார் எதுவும் என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. கிராம மக்கள் தரப்பில் இருந்து மனு கொடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

"மோத்தக்கல் கிராமத்தில் நிலவும் பிரச்னை என்ன என்பது எனக்குத் தெரியும். அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். உணவகத்தில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

ஊருக்குள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாக பிற சாதி மக்கள் கூறினாலும், பட்டியல் சாதியினர் மீதான பாகுபாடுகளை நேரில் பார்க்க முடிந்தது. "இதுபோன்ற பிரச்னைகளைக் களைந்து இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாழும் சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்," என்பதே பட்டியல் சமூக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு