கென்னடி படுகொலை ஆவணங்கள் ஆன்லைனில் வெளியீடு - மர்மங்கள் விலகுமா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், சேகரிப்பிலுள்ள 97 சதவீதத்திற்கும் அதிகமான பதிவுகள் இப்போது பொதுவெளியில் கிடைப்பதாக வெள்ளை மாளிகை கூறியது.
ஆவணங்களில் இருந்து பெரிய வெளிப்பாடுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டப்பட்ட கொலையாளியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடியுமென நம்புகிறார்கள்.
நவம்பர் 22, 1963ஆம் தேதியன்று டெக்சாஸின் டல்லாஸ் நகருக்குச் சென்றிருந்தபோது கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அவருடைய படுகொலை குறித்த அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்று 1992ஆம் ஆண்டு சட்டம் கூறியது.
வியாழக்கிழமையன்று, அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டார்.
ஆனால், “அடையாளம் காணத்தக்க தீங்கிலிருந்து” பாதுகாப்பதற்காகச் சில கோப்புகள் ஜூன் 2023 வரை மறைத்து வைக்கப்படும் எனக் கூறினார்.
515 ஆவணங்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் மேலும் 2,545 ஆவணங்கள் பகுதியளவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
1964ஆம் ஆண்டு வாரன் கமிஷன் எனப்படும் கென்னடி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட அமெரிக்க விசாரணை ஆணையம், சோவியத் யூனியனில் முன்பு வாழ்ந்த அமெரிக்க குடிமகன் லீ ஹார்வி ஓஸ்வால்டால் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் இதில் அவர் தனியாகச் செயல்பட்டார் என்றும் கண்டறிந்தது. அவர் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு டல்லாஸ் போலீஸ் தலைமையகத்தின் அடித்தளத்தில் கொலை செய்யப்பட்டார்.
ஜான் எஃப் கென்னடியின் மரணம் பல தசாப்தங்களாக சதிக் கோட்பாடுகளுக்கு வழிவகுத்தது. ஆனால், வியாழக்கிழமையன்று அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, அமெரிக்க புலனாய்வாளர்களிடமிருந்து அவரைப் பற்றிய தகவல்களை மறைக்கவில்லை எனக் கூறியது.

பட மூலாதாரம், Reuters
கென்னடி தொடர்பான நீண்டகால கல்வியாளர்கள், கோட்பாட்டாளர்கள் சமீபத்திய வெளியீடு, மெக்சிகோ நகரில், ஓஸ்வால்டின் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தும் என நம்புகிறார்கள். அங்குதான், 1963 அக்டோபரில் ஓஸ்வால்ட் சோவியத்தின் பாதுகாப்பு அமைப்பான கேஜிபியை சேர்ந்த ஓர் அதிகாரியைச் சந்தித்தார்.
சிஐஏ தனது சமீபத்திய அறிக்கையில், மெக்சிகோ நகரத்திற்கான அவருடைய பயணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் முன்பு வெளியிடப்பட்டதாகக் கூறியது. “2022 வெளியீட்டில் இந்தத் தலைப்பில் புதிய தகவல்கள் எதுவுமில்லை” எனக் கூறியது.
ஆனால், கோப்புகளை வெளியிடுமாறு வழக்குத் தொடுத்த லாப நோக்கமற்ற அமைப்பான மேரி ஃபெரெல் அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்கள், சிஐஏ மெக்சிகோவில் ஓஸ்வால்டின் நேரம் பற்றிய தகவல்களைத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறினர்.
சில சிஐஏ பதிவுகள் காப்பகங்களில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே அவை இப்போது வெளியிடப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக இல்லையென்று அறக்கட்டளை கூறியது.
புதிதாக வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆவணம், மெக்சிகோ அரசாங்கத்திலுள்ள மற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல் மெக்சிகோவில் உள்ள சோவியத் தூதரகத்தில் ஒயர்டேப் செய்ய மெக்சிகோ அதிபர் உதவினார் என்பதைக் காட்டுகிறது.

பட மூலாதாரம், AFP / GETTY
இந்தக் கோப்பின் முந்தைய பதிப்பில் உள்ள திருத்தங்கள் மூலம் இந்தத் தகவல் மறைக்கப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாண்மை செய்தி நிறுவனமான சிபிஎஸ் தெரிவிக்கிறது.
இந்தக் கோப்புகளை வெளியிடுவதன் மூலம் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொதுமக்களுக்கு அதிக புரிதல் கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிபர் பைடன் தனது உத்தரவில், “ஏஜென்சிகள் ஏற்கெனவே திருத்தப்பட்ட வடிவத்தில் வெளியிடப்பட்ட கிட்டத்தட்ட 16,000 பதிவுகளின் முழு தொகுப்பையும் மறுபரிசீலனை செய்ய ஒரு விரிவான முயற்சியை மேற்கொண்டுள்ளன. மேலும், அந்தப் பதிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இப்போது முழுமையாக வெளியிடப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு சட்டம் 2017க்குள் அனைத்துத் தகவல்களையும் வெளியிடுமாறு வற்புறுத்திய போதிலும், டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்களை வெளியிட்டாலும் தேசியப் பாதுகாப்பின் அடிப்படையில் மற்றவற்றை முடக்கியது.
அக்டோபர் 2021இல், பைடன் சுமார் 1,500 ஆவணங்களை வெளியிட்டார். ஆனால், மற்றவற்றை சீல் செய்து வைத்திருப்பதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடந்தது?
அமெரிக்காவின் 35வது அதிபரான ஜான் எஃப் கென்னடி, 1963ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அவர் ஒரு திறந்தநிலையில் இருந்த உல்லாச காரில் பயணம் செய்தார்.
அதிபருக்கு முன்னால் அமர்ந்திருந்த டெக்சாஸ் கவர்னர் ஜான் கோனலி காயமடைந்தார். ஆனால், உயிர் பிழைத்தார்.
ஒரு மணிநேரத்திற்குள், டல்லாஸ் போலீஸ்காரர் ஜே.டி டிப்பிட்டும் கொல்லப்பட்டார். விரைவில், லீ ஹார்வி ஓஸ்வால்ட் கைது செய்யப்பட்டார்.
12 மணிநேரத்திற்குள், அவர் அதிபர் கென்னடி, ஜே.டி டிப்பிட் ஆகியோரின் கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டார்.
நவம்பர் 24ஆம் தேதியன்று, டல்லாஸ் காவல்துறையின் அடித்தளத்தில் உள்ளூர் இரவு விடுதி உரிமையாளரான ஜாக் ரூபியால் ஓஸ்வால்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூடு தொலைக்காட்சியில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டது.
ஓஸ்வால்டை கொன்றதற்காகக் குற்றம் சாட்டப்பட்டு ரூபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால், மறு விசாரணைக்கு முன்பாக 1967இல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதிகாரபூர்வ விளக்கம் என்ன?
கென்னடி கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அதிபர் லிண்டன் பி ஜான்சன் இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஒரு ஆணையம் அமைத்தார்.
செப்டம்பர் 1964இல் வெளியிடப்பட்ட வாரன் கமிஷனின் அறிக்கை கூறிய தகவல்கள்
- டெக்சாஸ் பள்ளி புத்தகக் களஞ்சியத்தின் தென்கிழக்கு மூலையிலுள்ள ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
- லீ ஹார்வி ஓஸ்வால்ட் இந்தத் துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றினார்.
- “லீ ஹார்வி ஓஸ்வால்ட் அல்லது ஜாக் ரூபி உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”
மற்ற விசாரணைகளும் நடந்தன
- 1968ஆம் ஆண்டில், நான்கு மருத்துவர்களைக் கொண்ட குழு “வாரன் கமிஷனின் மருத்துவ முடிவுகளை ஆதரித்தது”
- 1975இல், ராக்ஃபெல்லர் கமிஷன் “சிஐஏ இதில் எந்தவிதத்திலும் ஈடுபட்டதாக நம்பகமான ஆதாரம் இல்லை” எனத் தெரிவித்தது.
- 1979இல், படுகொலைகளுக்கான ஹவுஸ் செலக்ட் கமிட்டி பெரும்பாலும் வாரன் கமிஷனை ஆதரித்தது. ஆனால், துப்பாக்கி ஏந்திய இரண்டு நபர்கள் அதிபர் கென்னடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான அதிக வாய்ப்புகள்” இருப்பதாகக் கூறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












