ஒரு மாதத்தை எட்டிய மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - டெல்லியில் இதுவரை நடந்தவை

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம், ANI

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உள்நாட்டு, சர்வதேச போட்டிகள் பலவற்றில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது இப்போராட்டம்.

கடந்த ஜனவரி மாதத்தில் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அவர் கைது செய்யப்படும் வரை தத்தம் வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என்றும் இந்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பிரிஜ் பூஷண் சரண் சிங் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

“நான் யாரிடமும் முறைகேடாகவோ தவறாகவோ அநியாயமாகவோ நடந்து கொள்ளவில்லை. அவர்களை என் குடும்பத்தின் குழந்தைகளைப் போல நடத்தினேன். மிகுந்த மரியாதையையும் அன்பையும் பகிர்ந்து கொண்டேன்,” என்கிறார் பிரிஜ் பூஷண்.

இந்த நிலையில், போராட்ட களத்தில் இறங்கியுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல விவசாய அமைப்புகள் மற்றும் காப் பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் களமிறங்கியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹரியாணாவின் ரோஹ்தக்கில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக காப் பஞ்சாயத்து ஒன்று கூட்டப்பட்டது. அதில் விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத், "விவசாயிகள் போராட்டத்தைப் போலவே இதுவும் நீண்ட காலம் தொடரும்," என்று கூறினார்.

டெல்லியில் பெண்களின் மகா பஞ்சாயத்து மே 28ஆம் தேதி கூட்டப்படும் என்றும் அதில் மல்யுத்த வீராங்கனைகள் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்படும் என்றும் காப் பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது.

விவரம் என்ன?

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம், ANI

இந்த விவகாரம் இந்த ஆண்டு ஜனவரி 18 அன்று தொடங்கியது. நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராட்டத்தைத் தொடங்கினர்.

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது அவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

அடிப்படை வசதிகளில் குறைபாடு, நிதி முறைகேடுகள், வீரர்களை மோசமாக நடத்துதல் மற்றும் தன்னிச்சை போக்கு ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடக்கம். ஆனால் முக்கியமான குற்றச்சாட்டு பாலியல் தொல்லைகள் தொடர்பானது.

இது தொடர்பாக பேசிய வினேஷ் போகாட், "பிரிஜ் பூஷண் சிங்கும் பயிற்சியாளர்களுக்கான தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்கின்றனர்," என்று அழுதபடியே கூறினார்.

"அவர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள்," என்று போகாட் கூறியபோது இந்த விவகாரம் சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெற்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரிஜ் பூஷண் சிங், "எந்த வீராங்கனையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை. அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கத் தயார்," என்று கூறினார்.

ஆனால் வீரர்களின் கடுமையான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, இந்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீராங்கனைகளையும் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வீரர்களைச் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை ஜனவரி 23ஆம் தேதி அமைத்தார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

விசாரணை அறிக்கை கூறியது என்ன?

மேற்பார்வை குழுவில் முதலில் மொத்தம் ஐந்து பேர் சேர்க்கப்பட்டனர். இந்த குழுவின் தலைவராக மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தேர்வு செய்யப்பட்டார்.

இது தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை த்ருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இதில் அடங்குவர்.

பின்னர், மல்யுத்த வீரரும், பாஜக தலைவருமான பபிதா போகட்டும் இந்தக் குழுவில் இடம்பெற்றார்.

பிரிஜ் பூஷன் சிங், அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் மீதான துன்புறுத்தல், நிதி முறைகேடு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதே இந்தக் குழுவின் பணியாகும்.

இந்தக் குழு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாட்டை ஒரு மாதத்திற்குக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

விசாரணையை நான்கு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது, பின்னர் அதன் காலக்கெடு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகு தற்போது அந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்றும், அந்தக் குழு மேற்கொண்ட விசாரணயின் நிலை என்ன, அந்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் வெளியாகவில்லை என்றும் வீரர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுக் குழுவின் இந்த அறிக்கை பகிரங்கமாக இல்லாத நிலையில், விசாரணை அறிக்கையின் தகவல்கள் ஊடகங்களில் கசிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

போராட்டம் கடந்து வந்த பாதை

விசாரணை குழுவின் அறிக்கையால் அதிருப்தி அடைந்த வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தலைமையில் ஏப்ரல் 23 அன்று, மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லிக்கு வந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் அமர்ந்தனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரிஜ் பூஷண் சிங்

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 21- பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.

ஏப்ரல் 23 - இரண்டாவது முறையாக ஜந்தர் மந்தரில் தர்ணா தொடங்கியது.

ஏப்ரல் 24 - பாலம் 360 காப் தலைவர் சௌத்ரி சுரேந்திர சோலங்கி ஜந்தர் மந்தர் சென்று, போராட்டத்துக்கு ஆதரவளிக்க மற்ற காப்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 25 - பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி வினேஷ் போகட் மற்றும் 6 மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக, பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏப்ரல் 26 - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜந்தர் மந்தர் சென்று, "இந்தப் போராட்டம் நமது நாட்டின் மகள்களின் கௌரவத்துக்கான போராட்டம். டெல்லியில் அமர்ந்திருக்கும் வெட்கமற்றவர்கள், பிரிஜ் பூஷன் சிங்கைப் பதவி நீக்கம் செய்ய இத்தனை காலம் தேவையா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 27 - பிரிஜ் பூஷண் சிங் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்குக் கவிதை வடிவில் பதிலளித்தார்.

ஏப்ரல் 28 - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வினேஷ் போகட்டின் உரையாடலுக்குப் பிறகு, நாட்டின் பல பெரிய வீரர்கள் மற்றும் நட்சத்திரங்கள், இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர்.

இதில் ஒலிம்பியன் நீரஜ் சோப்ரா, ஸ்வரா பாஸ்கர், அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, வீரேந்திர சேவாக், இர்பான் பதான், கபில்தேவ், சோனு சூட் போன்ற வீரர்கள் அடங்குவர். பெரிய வீரர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பில் அமைதியாக இருக்கிறார்கள் என்று வினேஷ் கூறியிருந்தார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தனர். அதில் ஒரு எஃப்ஐஆர் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

டெல்லி போலீசார் இரவில் மின்சாரம் மற்றும் தண்ணீரைத் துண்டித்து, போராட்ட இடத்தைக் காலி செய்யும்படி அழுத்தம் கொடுத்ததாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரல் 29 - காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போராட்ட களத்துக்கு வந்து, "பெண்கள் சுரண்டப்படும்போது, ​​​​அரசு அமைதி காக்கிறது," என்றார்.

மே 3 - இரவு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல், போலீசாருடன் கைகலப்பு. மல்யுத்த வீரர்கள், "போலீஸ் நடவடிக்கையில்," தங்கள் தோழர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறினர். போராட்டத்துக்கு ஆதரவளிக்க வந்த தலைவர்கள் மற்றும் மக்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இரவு முழுவதும் சலசலப்பு நீடித்தது.

மே 7 - ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்தினர்.

மே 8 - பல மாநிலங்களின் விவசாயிகள் அமைப்புகள் ஜந்தர் மந்தர் சென்று போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.

மே 11 - மல்யுத்த வீரர்கள் தலையில் கருப்புப் பட்டை கட்டி கருப்பு தினத்தை கடைபிடித்தனர். மைனர் பெண் மல்யுத்த வீராங்கனை தனது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்தார்.

மே 20 - நடந்து வரும் ஐபிஎல் போட்டியைக் காண மல்யுத்த வீரர்கள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு வந்த போது, தங்களை மைதானத்திற்குள் நுழைய டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மே 21 - மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் காப் பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்தில், பிரிஜ்பூஷன் சரண் சிங்கைக் கைது செய்து, நார்கோ சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மே 22 - பிரிஜ் பூஷண் சரண் சிங், தனது நார்கோ, பாலிகிராஃப் மற்றும் பொய் கண்டறிதல் சோதனைக்கு உட்படத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் தன்னுடன் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இதற்கு ஒப்புக்கொள்வதாகக் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஹரியாணா மாநில வீரர்கள் மட்டுமா?

விளையாட்டுத் துறையின் மூத்த பத்திரிகையாளர் ஆதேஷ் குமார் குப்தா கூறுகையில், தர்ணாவில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான வீரர்கள் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் நிகழ்வுதான் என்று தெரிவித்தார்.

“ஹரியாணாவை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று வினேஷ் போகட் கூறியது உங்களுக்கு நினைவிருக்கும். அவருடன் மற்ற மல்யுத்த வீரர்கள் நாட்டுக்காக விளையாடி நாட்டிற்காக மட்டுமே பதக்கங்களை வெல்பவர்கள். அவரை ஹரியாணாவுடன் மட்டும் இணைத்துப் பார்க்கக் கூடாது. பிற மாநில வீரர்களின் ஆதரவு பிரிஜ் பூஷண் ஷரண் சிங்குக்கும் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்தில் பிற மாநில வீரர்களைப் பார்க்கவில்லை என்றாலும் இப்போது மெல்ல மெல்ல ஆதரவு கொட்டத் தொடங்கியுள்ளது,” என்ற அவர், கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் போன்றோரைச் சுட்டிக் காட்டுகிறார்.

பிரஜ்பூஷண்

பட மூலாதாரம், @B_BHUSHANSHARAN

பிரஜ் பூஷண் சரண் சிங் யார்?

பிரிஜ் பூஷன் சரண் சிங் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த இவர், கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.

மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங், தனது இளமையை அயோத்தியில் கழித்தார். ஒரு மல்யுத்த வீரராக, தன்னை "சக்தி வாய்ந்தவர்" என்று தன்னைத்தானே அவர் அழைத்துக் கொள்கிறார்.

கல்லூரி நாட்களில் மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். அவரது தீவிர அரசியல் வாழ்க்கை அதிலிருந்தே தொடங்கியது.

1988ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், 1991-ம் ஆண்டு முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று எம்.பி ஆனார்.

1999, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் ஆறு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் இணைந்த பிறகு, பிரிஜ் பூஷண் சரண் சிங் ஒரு இந்து மதத் தலைவராகவே தனது பிம்பத்தைக் கட்டியெழுப்பினார். மேலும் அயோத்தியில் பாபர் மசூதி கட்டடத்தை இடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 40 பேரில், இந்துத்துவா அரசியலின் ஆதரவாளரான பிரிஜ் பூஷன் சிங், பாஜக பிரமுகர் லால் கிருஷ்ண அத்வானியுடன் பெயரிடப்பட்டார். ஆனால், செப்டம்பர் 2020இல், நீதிமன்றம் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.

இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து விலகி, 2009 மக்களவை தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

பிரிஜ் பூஷண் சிங் 2011ஆம் ஆண்டு முதல் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். 2019இல், அவர் மூன்றாவது முறையாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற்காலத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதிக்கம் கோண்டாவிலும் பல்ராம்பூர், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அதிகரித்தது.

1999க்குப் பிறகு அவர் ஒரு தேர்தலில் கூட தோற்கவில்லை. இவர் மீது கடந்த காலங்களில் கொலை, தீவைப்பு மற்றும் நாசவேலை போன்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

சமீபத்தில், ஜார்கண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் போது, ​​அவர் மேடையிலேயே ஒரு மல்யுத்த வீரரை அறைந்தார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் பிரதீக் பூஷணும் அரசியலில் உள்ளார். கோண்டாவின் பாஜக எம்எல்ஏ பிரதீக் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: