"காலிஸ்தான் பிரிவினை, இந்திய அரசியலமைப்பு" - அம்ரித்பால் சிங் சொல்வது என்ன?

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், Getty Images

'காலிஸ்தான்' என்ற 'சீக்கியர்களுக்கான தனி நாடு' கோரியதற்காக அறியப்பட்ட 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

நான் என்னை இந்தியனாக கருத மாட்டேன், தற்போது என்னிடம் இருக்கும் 'இந்திய கடவுச்சீட்டு' என்னை இந்தியனாக்காது, அது வெறும் பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என சமீபத்தில் அம்ரித்பால் சிங் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்தை மாலைவரை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகையின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 அதிகாரிகள் காயமடைந்ததாக பஞ்சாப் காவல்துறை கூறியது.

தாக்குதல் வழக்கில் கைதான லவ்பிரீத் சிங் துஃபானை விடுவிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பஞ்சாப்பின் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் சீக்கிய மத போதகர்.

இந்த அமைப்பு தீப் சித்து என்பவரால் தொடங்கப்பட்டது. இவர், விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீப் சித்து சாலை விபத்தில் இறந்ததையடுத்து, கடந்த செப்டம்பரில் அம்ரித்பால் சிங் அதிகாரப்பூர்வமாக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அம்ரித்பால் சிங் அமிர்தசரசின் ஜல்லுபூர் கெடாவில் பிறந்து வளர்ந்தவர். இதற்கு முன் இவர் துபாயில் வசித்து வந்தார்.

சமீபத்திய நாட்களில் அம்ரித் பஞ்சாப்பில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

அஜ்னாலா மோதலுக்குப் பிறகு பிபிசியின் அரவிந்த் சாப்ரா அம்ரித்பால் சிங்கை அவரது சொந்த கிராமத்தில் பேட்டி கண்டார். அவரது பேட்டியில் இருந்து...

உங்களுக்கு ஏன் காலிஸ்தான் வேண்டும்?

நாம் விரும்பும் விஷயங்கள் பல உள்ளன. காலிஸ்தானைப் பற்றி பேசுவது தீய விஷயமல்ல. இது எங்கள் சுதந்திரம் மற்றும் இந்த இடத்தை ஆட்சி செய்வது குறித்தது. நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்பது பற்றியது. காலிஸ்தான் என்ற கருத்தை குற்றமாக்கக் கூடாது. இது வரவேற்கப்பட வேண்டும். காலிஸ்தான் பற்றி எங்களுடன் விவாதிக்க யாரும் வரலாம்.

நீங்கள் காலிஸ்தான் சுதந்திர நாடு பற்றி பேசுகிறீர்கள். உங்கள் மீது ஏன் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கூடாது?

அமைதியான முறையில் கோரும் போது உங்களால் வழக்குப் பதிய முடியாது. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாக உள்ளது. காலிஸ்தான் கோரிக்கையை அமைதியான முறையில் வைக்கலாம், அதில் எந்தக் குற்றமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம்கூட கூறியுள்ளது. அதற்கான தேவையும் உள்ளது. எனவேதான், சிரோமணி அகாலி தளம் கட்சி கடந்த ஆண்டு சங்கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது. தேர்தல் முறை மூலம் காலிஸ்தானின் இலக்கை அடைய விரும்புவதாக சிரோமணி அகாலி தளம் கூறுகிறது. எவ்வாறாயினும், தேசத்துரோகம் போன்ற சட்டங்கள் நாட்டில் இருக்கக்கூடாது. அத்தகைய சட்டம் சர்வாதிகார நாட்டில் இருக்கலாம். இது காலனித்துவ ஆட்சி அல்ல. நான் இங்கு என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை. தேசத்துரோக வழக்கு யார் மீதும் பதியக்கூடாது. ஏனெனில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும்.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், ANI

சீக்கியர்கள் அடிமையாக இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நீங்கள் அஜ்னாலா காவல் நிலையத்தில் நுழைந்த பிறகும் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை. நீங்கள் சுதந்திரமாக வெளியே சுற்றுகிறீர்கள், இது அடிமைத்தனம் இல்லையே?

ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தண்டனை முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர் என்பதுதான் உண்மை. என்னைப் பற்றி மட்டும் நாம் பேசக்கூடாது. அஜ்னாலா காவல் நிலையத்திற்கு போராடச் சென்றோம். நான் எதுவும் செய்யவில்லை. போராட்டத்திற்குச் செல்லும் போது பல விஷயங்கள் நடக்கும். இவை அனைத்தும் தவறான முதல் தகவல் அறிக்கை பதிவுக்குப் பிறகே நடந்தன. இதுதான் அடிமைத்தனத்திற்கான அடையாளம். தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டு என்னுடைய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அப்பாவி என்றால் அவரை ஏன் கைது செய்தார்கள்? அவர் குற்றவாளி என்றால் அவரை ஏன் விடுதலை செய்தார்கள்? நாங்கள் போராடச் சென்றோம். அஜ்னாலா செல்ல முடியாதபடி ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். தடுப்புகள் வைத்தனர், எங்கள் மீது தடியடியும் நடத்தினர். அனைவரும் அமைதியாக இருக்கும்படி மக்களிடம் நான் எவ்வளவோ கூறினேன்.

அஜ்னாலா சம்பவத்தை யாரும் வன்முறையாக பார்க்கக் கூடாது. உண்மை என்னவென்றால் போலீசாருடன் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன் பிறகு எங்கள் ஆள் தவறாக கைது செய்யப்பட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். நீதிமன்றம் அவரை விடுவிக்க முடிவு செய்தது. நாங்கள் பொற்கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினோம். வன்முறை நடந்த 8 நொடிகளை வைத்து மட்டுமே மொத்த சம்பவத்தையும் பார்க்கக் கூடாது.

நீதிமன்றம் மற்றும் சட்ட முறைப்படி இந்த விவகாரத்தை அணுகியிருக்கலாமே?

நாங்கள் நீதிமன்றம் மூலமாகத்தான் சென்றோம். அப்பாவி சிறையில் இருப்பதை நீங்கள் ஆதரிக்கிறார்களா? பிறந்து எட்டு நாளே ஆன தன்னுடைய குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது தீவிரவாதி போல அவரை போலீஸ் அழைத்துச் சென்றதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அதன் பிறகு அவரை பல ஆண்டுகள் துன்புறுத்தினர். எத்தனை சீக்கியர்கள் இதே போன்ற விதியை அனுபவிப்பது? செய்யாத குற்றத்திற்காக அப்பாவி ஒருவரை சிறையில் வைப்பதுதான் மிகப்பெரிய வன்முறை.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், ANI

இந்திய அரசியலைமைப்புச் சட்டம் மீது உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறதா?

இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதைப் பற்றியதல்ல, எங்கள் அடையாளத்தின் மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதைப் பற்றியது. அரசியலமைப்பின் 25பி பிரிவு சீக்கியர்கள் இந்துக்களின் ஒரு பிரிவினர் என்றும் நாங்கள் சுதந்திரமான மதம் இல்லை என்றும் கூறுகிறது. அங்குதான் முரண் உள்ளது. என்னுடைய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நடக்காது என்றால் இந்தக் கேள்வி பொருத்தமற்றதாக இருக்கும்.

அஜ்னாலா வீடியோவை ஆய்வு செய்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளதே, அவ்வாறு நடந்தால் நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

தொடர்ச்சியான அநீதி நிறுத்தப்பட வேண்டும். தன்னுடைய கடமை என்ன என்பதை மட்டுமே பஞ்சாப் காவல்துறை தலைவர் கூறிவருகிறார். ஆனால், அவர்கள் முதலில் பொய்யான முதல் தகவல் அறிக்கையைத் தவிர்த்திருக்க வேண்டும். அவர்கள் வேறொரு வழக்குப் பதிவு செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை உண்டு. என்னைக் கைது செய்வதன் மூலமோ அல்லது என்னைத் தனிமைப்படுத்துவதன் மூலமோ இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. நான் பிறப்பதற்கு முன்பே இருந்த காலிஸ்தான் கருத்தியலைத்தான் நான் முன்வைக்கிறேன். அது தொடர்ந்து இருக்கும், நாளுக்கு நாள் வலுப்பெறும்.

குரு கிராந்த் சாஹிப்பைக் கேடயமாக பயன்படுத்தியது கோழைத்தனமான செயல் என்று காவல்துறைத் தலைவர் கூறுகிறாரே?

அது பொய், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அங்கு குரு சாஹிப் இல்லையென்றால் மக்களை கொன்றிருப்பார்களா? மற்றொரு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை உருவாக்க நினைக்கிறார்களா?

அஜ்னாலா சம்பவத்தை நாம் வேறு மாதிரியாக கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இந்த மோதலை நாம் வித்தியாசமாக கையாண்டிருக்க முடியுமா என்று சிந்திக்கிறோம். காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டுமா? தடுப்புகள் வைத்து எங்கள் மீது தடியடி நடத்தியிருக்க வேண்டுமா? ஆனால் அதைப் பற்றி யோசிப்பது தற்போது பொருத்தமாக இருக்காது. இது மீண்டும் எவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வது என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வாறு தொடர்ந்து நடப்பது, நமக்கு உதவாது. மக்களை பல ஆண்டுகளாக சிறையில் வாட அனுமதிக்க முடியாது.

அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், ANI

உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது உங்களுக்கு ஏதேனும் அரசியல் ஆதரவு இருக்கிறதா என்று மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளதே?

எனக்கு அரசியல் ஆதரவு இருந்தால் என் மீது பொய் வழக்குப் பதியப்பட்டிருக்குமா? எனக்குப் பின்னால் அரசியல் ஆதரவு இல்லை, குரு சாஹிப்பின் ஆதரவு உள்ளது. அது எப்போதும் இருக்கும். உங்களுக்கு மேலும் ஒன்றைச் சொல்கிறேன், அஜ்னாலா சம்பவத்திற்குப் பிறகுதான் எனக்கு ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர்.

தொடர்ந்து 'காலிஸ்தான்' கேட்கிறீர்கள், அனைத்து சீக்கியர்களும் அதற்கு ஆதரவாக உள்ளார்களா? சீக்கியர்கள் அல்லாதவர்களின் நிலை என்ன?

பெரும்பாலான சீக்கியர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சீக்கியர்கள் அல்லாதவர்களும் ஆதரிக்கிறார்கள். அஜ்னாலா போராட்டத்தில் சீக்கியர்கள் அல்லாத பலர் கலந்து கொண்டனர். 'காலிஸ்தான் கருத்தியல்' எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. கல்சா ராஜ் என்றால் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு என்று பொருள். இது பெரும்பான்மைவாதம் அல்ல. என்னை சிலர் எதிர்க்கலாம். அவர்களின் கருத்தையும் மதிப்போம். இவை அனைத்தும் விவாதத்திற்குரியது.

அஜ்னாலா சம்பவத்திற்குப் பிறகு பஞ்சாப்பில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. 1980களில் இருந்த வன்முறைச் சூழலுக்குள் பஞ்சாப் தள்ளப்படுகிறதோ என்று மக்களிடம் பயம் தெரிகிறதே, அது உங்களுக்கு கவலையளிக்கவில்லையா?

அந்தச் சமயத்தில் தீவிரமான வன்முறைகளை நாங்கள் எதிர்கொண்டோம் என்பது கவலையளிக்கிறது. போலியான என்கவுண்டரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதை வெளிக்கொண்டுவந்த செயல்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவும் கொல்லப்பட்டார். தற்போது மாநிலத்தை அந்தச் சூழலுக்குள் தள்ளுவது யார்? எங்களுக்கு சில கோரிக்கைகள் உள்ளன. சீக்கியர்களுக்கு அடையாளப் பிரச்னை உள்ளது. அதைக் காது கொடுத்து கேட்க அரசு தயாராக இல்லை. அடிப்படை உரிமைகளைக் கேட்க நாம் போராட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அதிகாரம் அரசிடம் உள்ளது. சிறையில் வாடும் கைதிகளை மத்திய அரசு விடுவிக்கலாம். மக்களிடம் பயம் இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களை ஒடுக்குவது தீர்வைத் தராது. அவர்கள் என்னைக் கொல்லலாம், ஆனால், இறையாண்மை கொள்கையைக் கொல்ல முடியாது.

காலிஸ்தானின் தேவை குறித்து சீக்கிய அமைப்புகளுடன் பேசுகிறீர்களா? மக்களுக்கு காலிஸ்தான் வேண்டுமா?

அகல் தக்த் உள்ளிட்ட அனைத்து சீக்கிய அமைப்புகளும் ஒரே கருத்தில் உள்ளன. அனைத்து சீக்கியர்களும் "ராஜ் கரேகா கல்சா..." என்பதுடன் உடன்படுகிறார்கள், சீக்கியரல்லாதவர்கள் இதை ஏற்கிறார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. பிரதான அரசியலில் உள்ள கட்சிகளைத் தவிர, பொதுமக்களுக்கு காலிஸ்தான் என்பது தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: