அதானி, நரேந்திர மோதியை லண்டனில் தாக்கிப் பேசிய ராகுல் காந்தி - பாஜக தலைவர்கள் பதிலடி

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @SRINIVASIYC

ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒருமுறை தாக்கிப் பேசியுள்ளார். இந்த முறை லண்டனில்.

லண்டனில் நடைபெற்ற இந்திய பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்ச்சியில், பாரத் ஜோடோ யாத்ரா, சீனா மற்றும் ரஷ்யா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை, க்ரோனி கேப்பிடலிசம் மற்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

'அரசியல் மற்றும் மக்கள்: ஏற்பிலிருந்து அரங்கேற்றம் வரை' என்ற நிகழ்ச்சியில், ராகுல் காந்தி ஊடகங்களுடன் உரையாடினார். இந்த நிகழ்ச்சியின் நெறியாளராக இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJA) தலைவர் டேனிஷ் கான் பங்கெடுத்தார்.

பார்வையாளர்களில் பெரும்பாலும் இந்தியா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருந்தனர்.

ஒரு நாள் முன்னதாக, அதாவது மார்ச் 3ஆம் தேதியும், இங்கிலாந்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமுமான கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி விரிவுரை நிகழ்த்தினார். அதிலும் இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுவதாகவும் அது ஆபத்தில் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு நரேந்திர மோதியின் ஆளும் பாஜக அரசுதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்ஸாத் பூனவல்லா, ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி எமர்ஜென்சியை விதித்ததாகவும் அவர், ஜனநாயகத்தைப் போதிக்கிறார் என்றும் கிண்டல் செய்தார்.

அதே நேரத்தில், புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானால் நடத்தப்பட்டது என்று ராகுல் காந்தி கூறவில்லை என்று மற்ற பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @SRINIVASIYC

இந்தியாவில் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறை

"இந்தியாவில் எங்கும் குரல் நசுக்கப்படுகிறது, இதற்கு உதாரணம் பிபிசி ஆவணப்படம்" என்று ராகுல் காந்தி கூறினார். அரசுக்கு எதிராக பிபிசி செய்தி வெளியிடுவதை நிறுத்தினால், அதன் மீதான வழக்குகள் மறைந்துவிடும் என்றார்.

இந்தியாவில் பிபிசி இந்த அடக்குமுறையைத் தற்போது அனுபவித்து வருவதாகவும் ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

"செய்தியாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள், அரசு குறித்துச் சிறப்பித்துப் பேசும் செய்தியாளர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது" என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @SRINIVASIYC

இந்தியாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு பற்றி?

ராகுல் காந்தி வெளிநாடு சென்று இந்தியாவுக்கு அவப் பெயரை ஏற்படுத்த முயல்வதாக பாரதிய ஜனதா கட்சி நீண்ட நாட்களாகக் குற்றம்சாட்டி வருகிறது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதி வெளிநாட்டுப் பயணங்களின்போது ஆற்றிய உரைகளைக் குறிப்பிட்டார்.

"அந்த உரைகளில் பிரதமர் மோதி, 60 ஆண்டுகளில் இந்தியா எதையும் செய்யவில்லை என்றும் தனது அரசு வருவதற்கு முன்பு நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும் பிரதமர் மோதி கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம், இந்தியாவை வலிமையாக்கப் பங்காற்றிய கடின உழைப்பாளிகள் அனைவரையும் பிரதமர் மோதி அவமதித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை அவதூறு செய்பவர் இந்திய பிரதமர். எனது நாட்டை நான் ஒருபோதும் அவமதிக்கவில்லை, அவ்வாறு செய்யமாட்டேன்" என்று ராகுல் காந்தி தெளிவாகக் கூறினார்.

மேலும், தான் எதைச் சொன்னாலும் அதை பாஜக திரித்துக் கூறுகிறது என்றும் கூறினார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மார்ச் 3ஆம் தேதியன்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி

'எதிர்க்கட்சிகளின் போராட்டம் கட்சிக்கு எதிரானதன்று, அமைப்புக்கு எதிரானது'

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, உறுதியாக இணைந்து செயல்படுகின்றன என்று ராகுல் காந்தி கூறினார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராகப் போராடி அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது.

எதிர்க்கட்சிகள் சில விஷயங்களில் பிளவுபட்டுள்ள போதிலும், அவர்கள் ஒன்றிணைந்து அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முயல்வதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இனி எந்த அரசியல் கட்சியுடனும் போராடுவதில்லை, மாறாக நாங்கள் இந்தியாவின் நிறுவனக் கட்டமைப்பை எதிர்த்துப் போராடுகிறோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்தியாவின் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம், இவர்களின் கைப்பற்றலால் சமமான களம் இல்லாமல் போய்விட்டது.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

அதானி பற்றிய குறிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் பற்றிக் குறிப்பிடவும் மறக்கவில்லை. அதானி குழுமம் தொடர்பாக இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசுக்கு எதிராகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் 609வது பெரிய பணக்காரராக இருந்து 2வது பெரிய பணக்காரர் என்ற பெருமையை கௌதம் அதானி பெற்றுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவருக்கு நல்ல உறவு இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட 5 மில்லியன் டன் லித்தியம் இருப்பு மற்றும் அதன் ஏல அறிவிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அதானி குழுமத்தைச் சுட்டிக்காட்டினார். "பங்கேற்கும் ஒவ்வொரு ஏலத்திலும் அதானி வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்ல முடியும். வணிகத்தில் நுழைவதற்கு அவருக்கு அனுபவம் தேவையில்லை. அதனால் லித்தியம் தொழில் அதானி கைவசமாகும் என்று என்னால் கணிக்க முடியும்," என்றார்.

பிரிட்டன் பயணத்தின்போது ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்ஸாத் பூனாவாலா பதிலடி கொடுத்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ராணுவத்தையும், தியாகிகளையும் அவமதிப்பதே காங்கிரஸின் அடையாளம் என்றார் அவர். புல்வாமா தாக்குதலை முதலில் கார் வெடிகுண்டு என்று கூறி மூடி மறைத்தார் ராகுல் காந்தி. பின்னர் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு புல்வாமா தியாகிகளின் குடும்பங்கள் தங்கள் உரிமையைக் கோரியபோது அவர்களை அவமதித்தது என்று பூனாவாலா கூறினார்.

ராகுல் காந்தி குறித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "ராகுல் காந்தி மீண்டும் அந்நிய மண்ணில் சென்று அழும் வேலையைச் செய்து வருகிறார். முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் பெகாசஸ் பிரச்சினை அவரது மனதிலும் இதயத்திலும் குடிகொண்டுள்ளது," எனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: