பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார்- அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

@AIADMKOfficial/Twitter

பட மூலாதாரம், @AIADMKOfficial/Twitter

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். தனது விலகல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன் வைத்துள்ளார்.

சிடிஆர். நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து, இன்று நான் பா.ஜ.க-வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி, இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாக பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்.

தன்னை நம்பி இருக்கும் தொண்டர்களையும், கட்சியையும் ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை எப்படி நம்பி பயணிக்க முடியும்?" என தமிழக பாஜக தலைமைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

பாஜகவில் இருந்து விலகியதையடுத்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராகவும் சிடிஆர். நிர்மல்குமார் இணைந்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக நிர்மல்குமார் கருத்தை அறிய பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, `இந்த விவகாரம் தொடர்பாக தற்போது எதையும் விரிவாக பேசுவதை தவிர்க்கிறேன். கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவே அறிக்கை வெளியிட்டேன்` என்று முடித்துகொண்டார்.

பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை வந்தபிறகு அக்கட்சியினர் நெருக்கடியான சுழலை எதிர்கொள்கின்றனர் என இந்நிகழ்வு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் கூறுகிறார். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், `அண்ணாமலை தலைவரான பிறகு அவரை சுற்றி ஒரு கும்பலை உருவாக்கியுள்ளார். அந்த கும்பலின் பிடியில் அவர் இருக்கிறாரா அல்லது அந்த கும்பலை அவர் நிர்வகிக்கிறாரா என்பது தெரியவில்லை. சிடிஆர் நிர்மல்குமார், காயத்ரி ரகுராம் விலகல், திருச்சி சிவா- டெய்சி இடையேயான உரையாடல் தொடர்பான ஆடியோ ஆகியவற்றையெல்லாம் பார்க்கும்போது அண்ணாமலையை சுற்றி ஒரு அணி இருப்பதாகவே தோன்றுகிறது` என்றார்.

"ஒரு தோழமை கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு தோழமை கட்சியில் சேர்வதை பொதுவாக ஏற்கமாட்டார்கள். தற்போது, பாஜகவிற்கு எதிரானவர் தாங்கள் என்ற தோற்றத்தை கொடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிடிஆர். நிர்மல்குமாரை கட்சியில் சேர்த்துகொண்டிருக்கலாம். பாஜகவில் இருந்து தாங்கள் விலகியே இருக்கிறோம். தனித்து இயங்குகிறோம் என்ற தோற்றத்தை கொடுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவை பிரிக்க முடியாது," என்று குறிப்பிட்டார்.

"தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சனத்தை வைக்கின்றனர். இந்த விவகாரத்தில் பாஜக மத்திய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன். இதேபோல், தொடர்ந்து பலரும் கட்சியில் இருந்து விலகினால், தேர்தலில் நிச்சயம் அது எதிரொலிக்கும்" என்றார்.

இந்நிலையில், நிர்மல்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எங்கு சென்றாலும் அவரது பணி சிறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்