10 நிமிட பயங்கரம்: பேனிக் அட்டாக் என்னும் பேரச்ச தாக்கை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

பேரச்சம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மரியா ஜோஸ் கார்சியா ரூபியோ
    • பதவி, நரம்பியல் துறை, வாலன்சியா சர்வதேச பல்கலைக்கழகம்

என்ரிக், திரையரங்கம் ஒன்றில் தனது நண்பருடன் படம் பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மன உளைச்சல், அதிகப்படியான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் சூடாகவும், குளிர்ச்சியாகவும் உணர்கிறார்.'தனக்கு மாரடைப்பு ஏற்படுகிறதா அல்லது பைத்தியம் பிடிக்கிறதா' என்று அவர் எண்ணத் தொடங்கினார்.

உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அவர் தண்ணீரை அருந்துகிறார். ஒரு மாதிரி குழப்பமாக உணர்கிறார். அருகிலுள்ள மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவுக்கு சென்ற அவர், 'எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறுகிறார்.

இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பிறகு, முடிவுகள் வருகின்றன. "உங்களுக்கு பேரச்சத் தாக்கு (panic attack) நடந்துள்ளது" என்று மருத்துவர் கூறுகிறார். என்ரிக் குழப்பமாகவும், செய்வது அறியாதும் உணர்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இதே நிலை மீண்டும் ஏற்படுமோ என்றும் அவர் அச்சம் கொள்கிறார்.

இது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக மக்கள் தொகையில் 30% பேர் பேரச்சத் தாக்குக்கு ஆளாகியுள்ளனர் அல்லது பாதிக்கப்படும் சூழலில் உள்ளனர். உண்மையில், 2019 ஆம் ஆண்டில், 30 கோடி மக்கள் அதிகமாக குழப்பிக் கொள்ளும் பிரச்னையால்(anxiety disorder) பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 கோடியே 80 லட்சம் பேர் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர்.

கணிக்க முடியாத குறுகிய நேர பாதிப்பு

பேரச்சத் தாக்கு(panic attack) என்பது தீவிரமான பயத்தால் பாதிக்கப்படுவது. இது எந்த காரணமின்றி ஆபத்தான எதிர்வினைகளை உடலில் தூண்டுகிறது.

'எங்கு, ஏன், எப்போது ஏற்படுகிறது என்பதை கணிக்க முடியாது' என்பது இதன் பண்புகளில் ஒன்று. மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு மாணவர் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பு இதனால் பாதிக்கப்படலாம். அதேபோல், பட்டமளிப்புக்கு பிறகு ஓய்வாக குளித்து கொண்டிருக்கும் போது கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.

குறுகிய காலம் என்பது அதன் மற்றொரு வரையறுக்கும் அம்சமாகும். பொதுவாக பதற்றம், குழப்பம் போன்ற பிற கோளாறுகள் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நீடிக்கும். ஆனால், பேரச்சத் தாக்கு என்பது 10 நிமிடம் வரை மட்டுமே நீடிக்கும்.

ஆனால் இதேபோன்று மீண்டும் அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள் என்ற மன அழுத்தம் காரணமாக அதன் பின்விளைவுகளை சில நாட்கள் கழித்தும் அனுபவிக்கக்கூடும்.

பாதிப்பின் போது என்ன நடக்கும்?

பேரச்ச தாக்கால் பாதிப்புக்குள்ளாகும் அனைவரும் ஒரே மாதிரியான பாதிப்பை எதிர்கொள்வதில்லை. இதயம் வேகமாக துடிப்பது, வியர்த்து கொட்டுவது, கை கால் நடுக்கம், குமட்டல், வயிற்றில் அசௌகரியம் ஏற்படுவது, தலைச்சுற்றல், தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியான உணர்வுகள் ஏற்படும்.

இவையனைத்தும் உடல் அல்லது உளவியல் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஒரு அச்சுறுத்தல் ஏற்படவுள்ளதாக உடலை எச்சரிக்கும் அறிகுறிகளே.

தலைச்சுற்றல், தலைவலி, மார்பு வலி

பட மூலாதாரம், Getty Images

உளவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஓர் உயிர் அது பிழைப்பதற்காக நடத்தும் வாழ்வியல் போராட்டமாக இது இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கார்டிசோல், அட்ரனலின், நோராட்ரனலின் போன்ற சுரப்பிகள் இந்த தாக்குதல் ஏற்படும் போது முடுக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு அறிவாற்றல் பற்றாக்குறையுடன் தொடர்புடையது. இந்த பாதிப்பின்போது ஒருவரின் கவனம், நினைவு(working memory), செயல்திறன் போன்ற செயல்பாடுகள் மோசமாகிறது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.

இதனால் குழப்பம் மற்றும் "தன்னிலை மறப்பது" போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பணக்கார நாடுகளில் மிகவும் அதிகம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு பேரச்சத் தாக்கு ஏற்படும்போது, பாதிப்புக்குள்ளாகும் நபர் தான் பைத்தியமாகி வருவதாகவும், இறக்கப் போவதாகவும் அல்லது ஏதோ ஒன்று தன்னை அச்சுறுத்துவது போலவும் உணர்கிறார். ஆனால் இது ஒரு கற்பனையான அச்சுறுத்தல்.

இந்த கற்பனை உணர்வுதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்று நரம்பியல் நிபுணரும் எழுத்தாளருமான ராபர்ட் சபோல்ஸ்கி கூறுகிறார். '

நமது அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், தண்ணீர், அன்பு தொடர்பாக 21ஆம் நூற்றாண்டின் பல மனிதர்கள் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர்,

உண்மையில், அதிக வருமானம் கொண்ட மேற்கத்திய நாடுகளில் பேரச்சத் தாக்கு என்பது மிகவும் பொதுவாக காணப்படுகிறது என்பதை பல தொற்றா நோய்த் தொடர்பான ஆய்வுகள் பிரதிபலிக்கின்றன.

அதிக பாதிப்புக்குள்ளாவது யார்?

ஒரு குறிப்பிட்ட மரபணு, பண்பு, குணாதிசயம் கொண்டிருப்பதற்கும் பேரச்சத் தாக்குதலுக்கு உள்ளாவதற்கும் இடையே எந்த உறவும் இல்லை. இருப்பினும், பரம்பரை வழியாக இந்த பாதிப்பு அடுத்த தலைமுறைக்கு ஏற்படுவது தெரிகிறது.

பிடிவாதமும் இதற்கு காரணமாகிறது. சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படும் நபர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேரச்சத் தாக்கால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பாலினமும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆண்களை விட பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்களுடன் தொடர்புடைய ஹார்மோன் சுழற்சி முறைகளில் இதற்கான விளக்கம் உள்ளது. மாதவிடாய் நிற்கும்போது பாதிப்பு ஏற்படுவதற்கான அதிகபட்ச வாய்ப்பு உள்ளது.

பேரச்ச தாக்கை தவிர்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

பேரச்ச தாக்கை தவிர்க்க முடியுமா?

பேரச்ச தாக்கை(panic attack) கணிக்க முடியாது என்பதால் அதைத் தடுப்பது என்பது கடினமாகிறது. ஆனால் இந்த பாதிப்பை குறைந்தது ஒரு முறையாவது அனுபவித்த நபர்கள் புதிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் முன் ஏற்படும் மன அழுத்த அளவைக் குறைக்கலாம்.

மேலும், பேரச்சத் தாக்கு மீண்டும் ஏற்பட்டால் அதனை கையாளும் புதிய திறன்களையும் அவர்கள் பெறமுடியும்.

உளவியல் சிகிச்சை, மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இப்படிச் செய்ய முடியும்.

ஆனால் நமது சுகாதார அமைப்புகள் இது போன்ற பிரச்னைகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. அவை அவசர கால நிகழ்வுகளின் போது குறிப்பிட்ட நெறிமுறைகள் மற்றும் உத்திகளை பயன்படுத்தி சிகிச்சைகளை வழங்கவே பணிக்கப்பட்டுள்ளன.

தொழில்முறை பயிற்சி பெற்ற நிபுணர்கள் மூலம் பேரச்சத் தாக்கத்தின் பண்புகள், வகைகள், சிகிச்சை முறைகள் குறித்த தகவல்கள் பரவலாக்கப்பட வேண்டும். அனைத்து சிகிச்சை மையங்களிலும் இதற்கான சிகிச்சை முறைகள் குறித்து முறையாக வழிகாட்டு நெறிமுறைகள் செயல்பாட்டில் கொண்டு வரவேண்டும்.

இது நிகழும் பட்சத்தில் பேரச்சத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபர் அடுத்த முறை தனக்கு என்னவாகும் என்ற அச்சமின்றி வாழ முடியும்.

கட்டுரையாளர் மரியா ஜோஸ் கார்சியா ரூபியோ, வாலன்சியா சர்வதேச பல்கலைக்கழகத்தின் 'நரம்பியல் மற்றும் சமூக மாற்றம்' துறையின் இணை இயக்குநராக இருக்கிறார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: