இலங்கையில் பௌத்த மத அவமதிப்புக்காக கைதுகள் தொடருவதன் பின்னணி என்ன?

இலங்கையில் பௌத்த மத அவமதிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் அண்மை காலமாக மத அவமதிப்பு தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடாஷா எதிர்சூரிய என்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேடை நிகழ்ச்சியொன்றில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், நடாஷா எதிர்சூரிய கருத்து வெளியிட்டார் என தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நடாஷா எதிர்சூரிய பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

எனினும், நடாஷா எதிர்சூரிய மீது தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்;.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நடாஷா எதிர்சூரிய, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 7ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் போதகரான ஜெரம் பெர்ணான்டோ தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜெரம் பெர்ணான்டோ தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், தன்னை கைது செய்வதை தவிர்க்குமாறு முன் ஜாமீன் கோரியுள்ளார்.

இலங்கையில் பௌத்த மத அவமதிப்பு

பட மூலாதாரம், NATASHA EATHIRISOORIYA

“நடாஷாவை விடுதலை செய்ய வேண்டும்”

நடாஷா எதிர்சூரியவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

நடாஷா எதிர்சூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமது அமைப்பு தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

பௌத்த பிக்கு ஒருவரும் கைது

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ராஜாங்கனை சந்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பிக்குவை, எதிர்வரும் 7ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்த மத அவமதிப்பு

பட மூலாதாரம், RAJANGANE THERO - FACEBOOK

சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிட்ட வீடியோவின் வழியாக, இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், சில தரப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

சந்தேகநபருக்கு பின்னால் பெருந்திரளானோர் இருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளதுடன், பாரியளவிலான நிதி கொடுக்கல் வாங்கல் கைமாறியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனால், இந்த விசாரணைகளுக்காக பல வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளமையினால், வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்;.

இந்த சந்தேகநபர் தொடர்பில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டம் மற்றும் தண்டனை சட்ட கோவை மற்றும் கணினி குற்றத் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பகட்டத்தில் உள்ளமையினால் சந்தேகநபரான பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறும் போலீஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் பௌத்த மத அவமதிப்பு

பட மூலாதாரம், Getty Images

சந்தேகநபராக பிக்குவினால் வெளியிடப்பட்ட சில கருத்துக்களை தாமும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

''பௌத்த மதத்தை பின்பற்றுபவர் என்றால், தர்மத்தின் வழியில் நடந்துக்கொள்ள வேண்டும். அப்படியானால் மாத்திரமே பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும். கருத்தொன்றுக்கு எதிராக மற்றுமொரு கருத்து வெளியிடப்படும் போது, தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. வைராக்கியம் அதிகரிக்கக்கூடும்" என பிரதிவாதியின் சட்டத்தரணியை பார்த்து, நீதவான் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கருத்து வெளியிட்ட பிக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது மோதல்கள் ஏற்படும் வகையிலோ எந்தவொரு சாட்சியும் பிக்குக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

அதனால், சந்தேகநபரை எந்தவொரு நிபந்தனையின் கீழாவது பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பௌத்த மத அவமதிப்பு

பட மூலாதாரம், Getty Images

எனினும், சந்தேகநபரான பிக்குவை பிணையில் விடுவிப்பதன் ஊடாக, இனங்களுக்கு இடையில் மோதல் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால், அவரை விளக்கமறியலில் வைக்க தீர்மானித்துள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சில வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தனக்கு எந்தவித அரசியல், இனம் மற்றும் மத வேறுபாடுகள் கிடையாது என ராஜாங்கனை சந்தாரத்ன தேரர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தன்னால் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கை

மத நல்லிணக்கத்திற்கு தடை ஏற்படுத்தும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையிலான விசேட போலீஸ் பிரிவொன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அண்மை காலமாக வெளியிடப்படும் கருத்துக்கள் அதிகரித்துள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உட்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றதே தவிர, தற்செயலாக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை என ஜனாதிபதிக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ரணில்

பட மூலாதாரம், Getty Images

இந்த புலனாய்வு தகவல்கள் கிடைத்ததன் பின்னர், ஜனாதிபதி செயலணியின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிடம் இந்த ஆலோசனைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

போலீஸ் மாஅதிபருடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்கவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறான நாசகார செயற்பாடுகளை அவதானித்து, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கப்படுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள போலீஸ் பிரிவிற்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: