பாதாம், முந்திரி சாப்பிட்டால் விந்தணு சக்தி அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
பாதாம், முந்திரி போன்ற உலர் கொட்டை வகைகளை தொடர்ந்து உண்டு வந்தால் விந்தணுவின் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதாம், ஜாதிபத்திரி கொட்டைகளை இரு கைகள் நிறைய எடுத்துக்கொண்டு அதை 14 நாட்களுக்கு தினசரி உண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பாலுறவுத் திறனும் அதிகரிக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
மேற்கத்திய நாடுகளில்
சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, புகைப் பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் ஆகியவற்றால் மேற்கத்திய நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தால் கருத்தரித்தல் வாய்ப்பு உயரும் என்பதற்கு ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஏழில் ஒரு தம்பதிக்கு கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கிறது. இதற்கு 40-50% ஆண்களும் காரணம்.
மனித இனமே இல்லாமல்...
விந்தணுக்கள் குறைவது மனித இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடும்.
18 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான 119 ஆண்களை தேர்வு செய்து அவர்களை இரு பிரிவாக பிரித்தனர். அதில். ஒரு பிரிவுக்கு தினமும் வழக்கமான உணவுடன் 60 கிராம் கொட்டை வகைகள் வழங்கப்பட்டன.
மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான உணவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பிட்ட நாளுக்கு பிறகு இரு பிரிவினரின் விந்து சோதிக்கப்பட்டது. இதில் கொட்டை வகைகளை உண்டவர்களின் விந்தணு எண்ணிக்கை 14% வரை அதிகரித்திருந்திருந்தது. விந்தணுக்களின் திறன் 4%, நகரும் தன்மை 6% அதிகரித்துக் காணப்பட்டது. விந்தணுக்களின் அளவும் 1% அதிகரித்திருந்தது.
இது ஆரோக்கியமான விந்தணுக்கள் எப்படி இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையுடன் பொருந்திப் போகிறது.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டிஆக்சிடன்ட்டுகள், பி வைட்டமின் ஆகியவை மிகுந்த உணவுகளும் கருவுற வைக்கும் திறனை மேம்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
இவை அனைத்தும் கொட்டை வகைகளில் இருப்பதுடன் மற்ற சத்துகளும் உள்ளன.
முறையான உணவுப் பழக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளால் கருவுற வைக்கும் திறன் அதிகரிக்கும் என்பது அந்த ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் அதை நடத்திய டாக்டர் ஆல்பர்ட் ஹுட்டஸ். இவர் ஸ்பெயினின் ரோவிரா ஐ விர்கிலி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.
அப்படியே ஏற்க முடியுமா?
ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை அப்படியே ஏற்க முடியுமா என சந்தேகம் தெரிவிக்கின்றனர் சில ஆய்வாளர்கள்.
ஏனெனில் இந்த ஆய்வு ஆரோக்கியமான நபர்களிடம் மட்டுமே செய்யப்பட்டடது. எனவே கருத்தரிக்க வைக்கும் திறன் குறைபாடுள்ள ஆண்கள் உள்ளிட்ட மற்ற பிரிவு ஆண்களுக்கும் இது பொருந்துமா என்பது கேள்விக்குறியே என எச்சரிக்கின்றனர் அந்த நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
கொட்டை அளிக்கப்பட்ட பிரிவு ஆண்களுக்கு வாழ்க்கையில் சாதகமாக இருந்த மற்ற அம்சங்களை ஆய்வு செய்தவர்கள் கருத்தில் கொள்ள தவறியிருக்கும் வாய்ப்பும் உள்ளது என ஆய்வில் தொடர்பில்லாத ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்ட்ரலாஜி பேராசிரியர் ஆலன் பேஸி கூறுகிறார்.
இந்த ஆய்வு முடிவுகள் கருத்தியல் ரீதியாக ஆர்வமூட்டுவதாக இருந்தாலும் கருவுற வைத்தலில் இது எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உறுதியாக சொல்லமுடியாது என்கிறார் டாக்டர் விர்ஜினியா போல்டன். இவர் லண்டன் கய்ஸ் மருத்துவமனையின் முன்னாள் கிளினிகல் எம்பிரியாலஜிஸ்ட் ஆலோசகர் ஆவார்.
ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமுன் நமது நோயாளிகள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்தச் செய்வதுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வைக்க வேண்டும் என்கிறார் விர்ஜினியா.
ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் பார்ஸிலோனாவில் உள்ள மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் துறையின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












