தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் தடுக்கப்பட்ட 7000 குழந்தைத் திருமணங்கள் - நீடிக்கும் சவால்கள்

குழந்தை திருமணங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் கல்வியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்னேறியிருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது ஏன்?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த தகவல் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு 6 மாததிற்குப் பிறகே கிடைத்தது. இதுபற்றிய தகவல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மாரியம்மாளுக்கு அளிக்கப்பட்டது.

அவர் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரசு அலுவலர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் கணவர், சிறுமியின் தாய், சித்திகள் ஆகியோர் மீது கடந்த ஜூன் மாத இறுதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் விவாதப் பொருளாகியுள்ளன. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணத் தடை சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? குழந்தை திருமணம் தொடர்ந்து தடுக்க முடியாமல் இருப்பது ஏன்? அரசு தரப்பு கூறும் விளக்கம் என்ன? இங்கு விரிவாகக் காண்போம்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 49.5% ஆக இருக்கிறது. இது மாணவர்களைவிட ஒரு சதவீதம் மட்டுமே குறைவு என அகில இந்திய கணக்கீடு சொல்வதாக மாநில அரசு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை' கோப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மாநில அரசின் இலவசக் கல்வி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவை பெண்கள் உயர் கல்வியைத் தொடர முக்கியக் காரணியாக இருப்பதாக அரசு கூறியுள்ளது.

அதே வேளையில் தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 குழந்தைத் திருமணங்களுக்கான முயற்சி நடைபெற்று அது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக சமூக நலத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021- 2024 வரை நடந்த குழந்தைத் திருமணம்

வழக்கறிஞர் பிராபகரன்
படக்குறிப்பு, வழக்கறிஞர் பிராபகரன்

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பிரபாகரன் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற குழந்தைத் திருமணங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவலை தமிழ்நாடு சமூக நலத்துறையிடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

அதன்படி, 2021ஆம் ஆண்டில் 2,638 குழந்தை திருமணங்கள், 2022இல் 2,401, 2023இல் 1,961 மற்றும் 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 347 என 7,347 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக இருந்ததை சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தடுத்திருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் திண்டுக்கல், சேலம், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

‘குழந்தைத் திருமணத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை’ பொற்றோரிடம் பேசி, எழுதி வாங்கி அனுப்பி வைப்பதால் தொடர்ச்சியாக நடைபெறுகிறது எனக் கூறுகிறார் தோழமை அமைப்பைச் சேர்ந்த குழந்தைகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் சி.பிரபாகரன்.

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதில் குழந்தைப் பாதுகாப்பு நல அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே அரசு சமூக நலத்துறையின் வாயிலாக வழங்குகிறது.

“எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடைபெற்ற பின்னர் தகவல் கிடைத்துள்ளது, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்வியைப் பலமுறை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வியாகக் கேட்டாலும் அதற்கு அரசிடமிருந்து பதில் இல்லை,” என்கிறார் பிரபாகரன்.

தமிழ்நாடு அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006இன் படி குழந்தைத் திருமணம் நடந்தால் அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தரவேண்டும். ஆனால் பல இடங்களில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் '18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டேன்' என எழுதி வாங்கி அந்தக் குழந்தையைப் பெற்றோருடன் அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார் அவர்.

'குற்றமெனத் தெரிந்தே செய்கிறார்கள்’

குழந்தை திருமணங்கள்

பட மூலாதாரம், EYESWIDEOPEN

தேனி மாவட்டம் கம்பம், சின்னமன்னூர், ஆண்டிப்பட்டி பகுதியில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலர் சியாமலா கூறினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ''தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை குறிப்பட்ட பகுதியில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அது குறித்த தகவல் கிடைத்தவுடன் குழந்தைப் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை மற்றும் சமூக நல அதிகாரிகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் விழிப்புணர்வு செய்கிறோம்.’’

“பலர் குழந்தைத் திருமணம் சட்டபடி குற்றம் எனத் தெரிந்தே செய்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது காதல்." சிறுமிகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணுடன் காதலித்துச் சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலன இடங்களில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக சியாமலா தெரிவிக்கிறார்.

மேலும், "பெற்றோரின்றி தாத்தா அல்லது பாட்டியின் வளர்ப்பில் வளரும் குழந்தைகளுக்கு பராமரிக்க ஆட்கள் இல்லாமல் இருப்பதாலும் திருமணங்கள் நடக்கின்றன. தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் இடங்களில் அதுகுறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறோம்'' என்றார்.

இளம் வயது பெண்கள் பிரசவம் அதிகரிப்பு குழந்தைத் திருமணத்தின் பிரதிபலிப்பு எனக் குற்றம் சாட்டுகிறார் வழக்கறிஞர் பிரபாகரன்.

தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரம் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தியிருப்பதாகத் தகவல் அளித்துள்ளது. ஆனால், அது சரியான தகவல் இல்லை என்கிறார் அவர்.

"கடந்த மூன்று ஆண்டுகளில் 34,497 இளம் பெண்கள் 18 வயதிற்குக் கீழ் கர்ப்பம் தரித்துள்ளனர். இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதத்தில் மட்டுமே 1,637 பேர் கர்ப்பமாகியுள்ளனர். இதுவே எத்தனை குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன என்பதைக் காட்டுகின்றன. அரசு உண்மையான தகவலைப் பொது வெளியில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அவர்.

குழந்தைத் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

குழந்தை திருமணங்களைத் தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் எனக் கூறுகிறார் தமிழ்நாடு சமூக நலத்துறையில் இணை இயக்குநர் ரூத் வெண்ணிலா.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவடங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நிகழும் பகுதிகள் கண்டறியப்பட்டு அதைத் தடுப்பதற்காக குழந்தை நல இயக்குநரகம், சமூக நலத்துறை களப் பணியாளர்கள் வாயிலாக அதிகமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம்'' எனக் கூறினார்.

‘குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புது திட்டம்’

“தமிழ்நாட்டில் பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளன. இளம் சிறார், சிறுமியர் காதலால் திருமணம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதற்கு குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகள் மீது போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும் ஒரு காரணம்," எனத் தெரிவிக்கிறார் இணை இயக்குநர் ரூத் வெண்ணிலா.

எனவே, மாவட்டம் தோறும் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்குச் சென்று குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அதேபோல் இனி வரும் காலங்களில் குழந்தைத் திருமணம் தொடர்பாக வரும் அனைத்துப் புகார்களுக்கும் வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் ரூத் வெண்ணிலா. இதன் வழியாக குழந்தைத் திருமணத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சுகாதாரத்துறையின் வாயிலாக இளம் பெண்கள் கர்ப்பமாகும் நிகழ்வையும் கண்காணித்து அதில் குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்குமாறு அலுவலர்களுக்குக் கூறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

''அதோடு மாணவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்துப் பள்ளிகளின் வாயிலிலும் விரைவாக குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வு பலகை வைக்கப்படும்'' எனக் கூறினார்.

குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியாதது ஏன்?

கீர்த்தி பாரதி

இந்தியாவில் வெவ்வேறு கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு குழந்தைத் திருமணங்கள் பல்வேறு காரணங்களுக்காக நடக்கின்றன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கலாசாரமாகவே குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் வறுமை அடிப்படையில் குழந்தைத் திருமணத்தை நடத்துகின்றனர்.

'ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கடந்த 1929ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்காக சார்தா(Sarda Act) என்கிற பெயரில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு முறை மாற்றம் செய்யப்பட்டு கடைசியாக இந்திய தண்டனை சட்டம் 2006இன் படி குழந்தைத் திருமணம் குற்றமாகக் கருதப்பட்டது.

"இந்தச் சட்டத்தின்படி திருமணத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்ப சட்டம் வகை செய்கிறது. ஆனால், அப்படி நிகழ்வது கிடையாது. பல வழக்குகளில் இதைக் குற்றமாகப் பார்க்காமல் குழந்தையின் பெற்றோரிடம் பேசி, எழுதி வாங்கி அனுப்பி வைப்பதால்தான் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டத்தை உருவாக்கி நூறு ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்ற முடியாமல் நாம் போராடி வருகிறோம்'' என்று விளக்குகிறார் குழந்தைத் திருமண தடுப்பு செயல்பாட்டாளர் கீர்த்தி பாரதி.

என்ன தீர்வு?

குழந்தைத் திருமணத்தை குற்றமாகவும் அதைச் செய்து வைப்பவர்களைக் குற்றவாளியாகவும் பார்க்க வேண்டும் என வலியுறுத்தும் பாரதி, அதே வேளையில் குழந்தைத் திருமணம் நடைபெற்றால் அதை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

"இதுவே ஒரே தீர்வு. குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்படும் எனத் தெரிந்தால் அதைச் செய்யத் தயங்குவார்கள் இதன் வழியாக இந்தியா போன்ற நாட்டில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முடியும்’’ என்கிறார் பாரதி.

குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் தண்டனை என்ன?

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006, இந்தியாவில் நாடு முழுவதும் நடைபெறும் திருமணங்களுக்குப் பொருந்தும்.

இந்தச் சட்டத்தின்படி 21 வயது நிறைவடைந்த ஆண் 18 வயதிற்குக் குறைவான பெண்ணைத் திருமணம் செய்தால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார்.

அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் திருமணம் செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஒரு பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் நடக்கிறது என்றாலும் அல்லது குழந்தைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தாலும் அதை உடனடியாக யார் வேண்டுமானாலும் காவல்துறையிடம் புகார் கூறலாம். 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து தகவலைத் தெரிவிக்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)