பத்து ஆண்டுகளில் தெலங்கானாவும் சந்திரசேகர் ராவும் சாதித்திருப்பது என்ன?

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், KCR/FACEBOOK

    • எழுதியவர், கர்லி ஸ்ரீநிவாஸ்
    • பதவி, ஓய்வுப் பெற்ற பேராசிரியர், உஸ்மானியா பல்கலைக்கழகம்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, நாட்டின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவெடுத்தது. இந்த மாநிலம் உருவாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தெலங்கானா மாநிலம், இதனை கொண்டாட ஆயத்தமாகி வருகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெலங்கானா எதிர்பார்த்த வளர்ச்சிகளை பெற்றிருந்தாலும் சில ஏமாற்றங்களையும் எதிர்கொண்டுள்ளது.

தெலங்கானா தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டங்களின்போது அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகள், மாநில மக்களின் எதிர்பார்ப்புகள், அரசின் செயல்பாடு மற்றும் சாதனைகள் உள்ளிட்டவை குறித்த ஓர் மீள்பார்வைக்கு இதுவே சரியான தருணம்.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா இயக்கம்… லட்சியங்களும், வாக்குறுதிகளும்

கடலோர ஆந்திராவுடன் ஒப்பிடும்போது தெலங்கானா பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற அடிப்படையில் தனி தெலங்கானா கோரிக்கை எழுந்தது. ஆனாலும் மாநில மக்களுக்கு இடையேயான கலாசார வேறுபாடுகளுமே இக்கோரிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருந்தன எனலாம்.

வட ஆந்திரா, ராயலசீமா போன்ற ஆந்திர மாநில பகுதிகளும் கூட பின்தங்கியவையாக தான் உள்ளன என்ற வாதம் இருந்தது. ஆனாலும் தனி தெலங்கானா கோரிக்கைக்கான காரணம், இந்த போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவு, பெருவாரியான மக்கள் இந்த போராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டதற்கான காரணிகள் ஆகியவை நுணுக்கமாக ஆராயப்பட வேண்டியவை.

தெலுங்கு மொழியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் உருவாகி (1956 -2014) அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகி இருந்தபோதும் உணர்வு, கலாசாரம் மற்றும் சமூக அடிப்படையில் மாநில மக்களுக்கு இடையே வேறுபாடுகள் நிலவி வந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

1960 களில் தனி தெலங்கானா இயக்கத்தின் ஆரம்ப நாட்களிலும், அதற்கு பிந்தைய காலத்திலும் இந்த வேறுபாட்டு உணர்வும், அதிருப்தியும் மாநில மக்கள் மத்தியில் வெளிப்பட்டு கொண்டிருந்தன.

விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பின்தங்கிய நிலை, நிதி ஆதாரங்களை ஒதுக்குவதில் புறக்கணிக்கப்படும் நிலை, வேலைவாய்ப்பில் உரிய முக்கியத்துவம் இல்லாதது, அரசியல், அதிகாரத்தில் உரிய பங்கு வழங்காதது உள்ளிட்டவை தான் தனி தெலங்கானா மாநில கோரிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

1960 மற்றும் 1990 களில் தனி மாநில கோரிக்கை எழுப்பப்பட்ட போதெல்லாம் இந்த காரணங்கள் முன்வைக்கப்பட்டன என்பதுடன், மாநில மறுசீரமைப்பு கமிஷனின் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், Getty Images

கட்சி மற்றும் கட்சி சார்பற்ற பங்களிப்பு உள்ளிட்ட சிக்கலான பரிமாணங்களை தெலங்கானா இயக்கம் கொண்டிருந்தது. பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார வளர்ச்சி தனி தெலங்கானா இயக்கத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன.

அரசியல் கட்சிகளின் அடிப்படையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) போராட்டத்தில் முன்னணி வகித்தது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர, பிற அனைத்து கட்சிகளும் தனி தெலங்கானா இயக்கத்திற்கு ஆதரவு அளித்தன.

அரசியல் கட்சிகளின் ஆதரவை தவிர சமூக, கலாசார, இலக்கிய மற்றும் மாணவர் அமைப்புகளும் போராட்டத்தை ஆதரித்தன. அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பல்வேறு கலைஞர்களின் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றன.

தனி தெலங்கானா இயக்கத்தில் பொதுமக்களின் பங்கு சீராகவும், தொடர்ச்சியாகவும் இருந்தது மட்டுமல்லாமல் மாறுபட்டதாகவும் இருந்தது. இறுதியில் மக்களின் விருப்பம் நிறைவேறியது.

போராட்டத்தின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கருத்தில் கொண்டு, தெலங்கானா மாநிலம் ஆரம்பத்தில் இருந்தே வளர்ச்சி் பாதையில் பயணித்து வருவது பாராட்டுக்குரியது.

மாநில சுயாட்சி, பிராந்திய அடையாளம், விவசாயம், நீர்ப்பாசன விரிவாக்கம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தெலங்கானா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், Getty Images

டிஆர்எஸ் கட்சியும், மாநிலத்தின் எழுச்சியும்

2014 இல் தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து டிஆர்எஸ் கட்சி இங்கு ஆட்சியில் உள்ளது. தெலங்கானா போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவற்றில் எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில், இந்க கட்சியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

தெலங்கானா மாநிலம் விவசாய சமூகத்தை உள்ளடக்கியது என்பதுடன், இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம். இதனை கருத்தில் கொண்டே தெலங்கானா போராட்டத்தில் நீர்ப்பாசனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஆதிக்க ஆந்திர அரசியல் மற்றும் பொருளாதார தலைவர்களின் பாரபட்சம் காரணமாக, தெலங்கானாவில் நீர்ப்பாசனம் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்த பிரச்னையை முன்வைத்து தெலங்கானா போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

14 ஆம் நூற்றாண்டில் காகத்தியர்கள் காலத்திலிருந்தே தெலங்கானாவில் பொது தண்ணீர் தொட்டிகள் இருந்தன. அத்துடன் அவை தெலங்கானா பகுதி முழுவதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. இவற்றின் நிர்வாகப் பொறுப்பு படேல், பட்வாரி போன்ற கிராம அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 1960 களில் பசுமைப் புரட்சி தொடக்கத்தின் காரணமாகவும், 1980 களில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியாலும் பட்வாரி -படேல் முறை ஒழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தண்ணீர் தொட்டிகள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம் கிட்டத்தட்ட சரிவதற்கு வழிவகுத்தது.

தெலங்கானா மாநிலம் உருவானதற்கு பிறகு, டிஆர்எஸ் அரசின் கொள்கைகள், சொட்டு நீர் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் பயிர் சாகுபடியை அசாதாரணமாக அதிகரிக்க வழிவகுத்தன.

மாநிலத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ‘மிஷன் காகதியா’ மற்றும் ‘மிஷன் பகீரதா’ திட்டங்களை மாநில அரசு முனைப்புடன் செயல்படுத்தியது.

தொட்டி நீர் பாசனத்துக்கு புத்துயிர் அளிப்பதை நோக்கமாக கொண்டது மிஷன் காகதியா திட்டம். இதேபோன்று மாநிலத்தின் அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் வழங்குவதை இலக்காக கொண்டது ‘மிஷன் பகீரதா’ திட்டம்.

இவை தவிர, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. விவசாய சாகுபடிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ரைது பந்து (Rythu bandhu) திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இரண்டு பயிர்களுக்கு இரண்டு தவணைகளாக நிதியுதவி அளிக்கப்படுகிறது.

18 - 59 வயதுக்குட்பட்ட விவசாயிகளுக்காக ரைது பீமா என்ற திட்டமும் (Rythu Bima) செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் மரணமடைய நேர்ந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ஆனால் இந்தத் திட்டங்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வோரை விட, நில உரிமையாளர்களுக்கே அதிக பலன் தருகின்றன என்பதுடன், அரசின் நிதிச் சுமையையும் அதிகரிக்க செய்கின்றன என்ற விமர்சனங்களும் இருக்கதான் செய்கின்றன.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், KCR/FACEBOOK

பட்டியல் சமூகத்தினருக்கு நிதி உதவி அளிக்கும் தலித் பந்து திட்டம் (Dalit Bandhu) மாநில அரசின் கொள்கையின்கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள சமீபத்திய திட்டமாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுப்படுத்தவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தலைநகர் ஹைதராபாத்தில் ஐடி துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை போன்று, பல்வேறு மாவட்டங்களில் மருந்து மற்றும் ஜவுளித் துறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், தனி தெலங்கானா போராட்டத்தின்போது வேலைவாய்ப்பு தொடர்பாக இருந்த எதி்ர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு விதியின் (Neoliberal Rule) விளைவாக அரசு வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டிருந்தால், அதற்கு ஈடாக தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கணிசமான அளவு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. சேவைத் துறையில் சில விரிவாக்கங்கள் இருந்தாலும், வேலை வாய்ப்புகள் பரவலாக அதிகரிக்கவில்லை. இதனால் தெலங்கானாவில் படித்த, வேலை இல்லாதவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், KCR/FACEBOOK

ஜனரஞ்சகமான திட்டங்கள்

கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை தவிர, தமது அடித்தளத்தை வலுப்படுத்த டிஆர்எஸ், ஜனரஞ்சகமான கொள்கையை ஏற்றுக்கொண்டது.

ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், முதியோர்கள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்தியம் போன்ற ஜனரஞ்சகமான திட்டங்களை ‘ஆசாரா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.

தொழில் மற்றும் சாதி சார்ந்த திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. பீடித் தொழிலாளர்கள் (பெரும்பாலானோர் பெண்கள்), கைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் கல் அறுப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த கொல்லா மற்றும் குர்மா சமூகத்தினருக்கு செம்மறி ஆடுகள் அளிக்கும் திட்டம், முத்தரசி, பெஸ்தா, கங்கபுத்திரா சமூகத்தினருக்கு மீன்கள் வழங்கும் திட்டம் போன்ற சமூகம் சார்ந்த திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்து பெண்களின் திருமணத்துக்கு உதவும் கல்யாண லெஷ்மி, ஷாதி திட்டங்கள், முஸ்லிம் சிறுபான்மையின குடும்பங்களுக்கு உதவும் முபாரக் என்று பல்வேறு திட்டங்களை தெலங்கானா மாநில அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. நாளுக்கு நாள் செலவினங்கள் அதிகரித்து வந்தபோதிலும், தலைநகர் ஹைதராபாத் நிதி நிலைமையில் சற்று சிறப்பாக இருந்ததால், அரசின் திட்டங்களை தொடர முடிந்தது.

இந்த நலத்திட்டங்களின் பயனாக, டிஆர்எஸ் கட்சியின் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்தது. இதன் காரணமாக அக்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

இருப்பினும் மாநில அரசுக்கு நிதி பற்றாக்குறை இல்லை என்று சொல்லிவிட முடியாது. நிலமற்ற எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தினருக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆளும் டிஆர்எஸ் கட்சி, எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி உள்ளது. இது அக்கட்சியை சிக்கலில் ஆழ்த்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், TRS

பொது இயக்கங்களால் உருவானாலும்…

மக்கள் இயக்கங்களின் நீண்ட போராட்டத்திற்கு பின் தெலங்கானா மாநிலம் உருவானது. ஆனால் ஓர் தனிமனிதனை மையமாகக் கொண்ட, எதேச்சதிகார கட்சி பத்தாண்டு காலம் ஆட்சி செய்து வருவது ஒருவகை முரண் என்றுதான் சொல்ல வேண்டும்.

பல மாநிலக் கட்சிகளைப் போலவே கே. சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தலைமையிலான டிஆர்எஸ் கட்சியும் ஓர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சியாகவே திகழ்கிறது.

ஆட்சியும், எல்லா அதிகாரமும் கேசிஆர் கையில் இருந்தாலும், மேட்டுக்குடியினருக்கு அரசு அடிபணிவது குறித்த கவலை டிஆர்எஸ் கட்சியினருக்கு இல்லை.

கேசிஆரின் மகன் கே.டி.ராமராவ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, டிஆர்எஸ்-இல் வாரிசு அரசியல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

டிஆர்எஸ் -இல் உட்கட்சி ஜனநாயகம் இல்லாதது, மாநிலத்தின் ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், KTR/FACEBOOK

ஓரங்கட்டப்படும் சிவில் சமூகம்

பொது நோக்கங்களுக்காக ஒன்றாக போராடும் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய சிவில் சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஏற்படும் நேர்முறையான மாற்றங்களை கொண்டு, ஒரு மாநிலத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று மேலும் கணிக்க இயலும்.

அத்துடன் இவர்களுக்கும், கட்சி அமைப்பு முறை மற்றும் தேர்தல் அரசியலுக்கும் இருக்கும் உறவு முறை ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஜனநாயகத்தின் இந்த வரையறைக்கு மாறாக தெலங்கானாவில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவில் சமூகத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குரல்வளையை நெரித்து, தெலங்கானா இயக்கத்தின் நோக்கங்களை சிதைப்பது முதல் எதிர்மறை மாற்றம்.

இரண்டாவதாக, சிவில் சமூகத்தினர் மீது அரசியல் ரீதியான ஆதிக்கம் செலுத்தப்படும் தவறும் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்த நிகழ்வுகள் தனி தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தை வலியுறுத்திய இயக்கங்களின் நோக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவையாக உள்ளன.

1990களில் தனி தெலங்கானா இயக்கம் சமூக, கலாசார சங்கங்கள், அமைப்புகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களால் பலப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்பட்டது.

மாணவர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊழியர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் தெலங்கானா இயக்கத்தில் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.

கட்சி மற்றும் கருத்தியல் ரீதியாக தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சாதி, தொழில், வர்க்க அடையாளங்களை களைந்து, மாநில மக்கள் அனைவரும் தனி தெலங்கானா என்ற ஒன்றை முழக்கத்துடன் அணி திரண்டனர்.

இத்தகைய சிறப்புமிக்க அசைக்க முடியாத சிவில் சமூகம் தனி மாநிலம் உருவான பிறகு நசுக்கப்பட்டது எப்படி?

சிவில் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் அனுசரிப்பு, அவர்கள் மீதான ஆதிக்கம் போன்ற டிஆர்எஸ் கட்சியின் உத்திகளே இதற்கு பதில்களாக உள்ளன.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா எனும் புதிய மாநிலத்தின் வருகை அந்த மாநில மக்களின் மனதில் புது நம்பிக்கையை விதைத்தது. ஒரு புதிய மாநிலத்தின் மறுசீரமைப்பு பற்றி மக்கள் கனவு கண்டனர். மக்களின் இந்த நம்பிக்கை மற்றும் கனவை டிஆர்எஸ் கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியை இருக்கும் இடம் தெரியாமல் செய்ததுடன், ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியை நினைவூட்டும் விதத்தில் ‘ஆகர்ஷ்’ எனும் வலையை வீசி, காங்கிரஸ்காரர்களை தன் பக்கம் இழுத்தது.

பதவி ஆசை உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இணைந்தனர்.

எதிர்க்க ஆள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாநிலத்தின் முழு அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியதால், டிஆர்எஸ் -இன் செயல்பாடுகளில் நடுநிலை இல்லாமல் போனது. இது தெலங்கானாவில் பாஜகவுக்கான கதவை திறந்துவிட்டது.

தெலங்கானா மாநிலம் பத்தாம் ஆண்டு உதயம்

பட மூலாதாரம், KCR/FACEBOOK

தெலங்கானா முன்னுள்ள சவால்கள் என்ன?

சாதிய மற்றும் பொருளாதார பாகுபாடு, சமத்துவமின்மை, ஆணாதிக்கம் போன்றவை நிலவும் இந்தியா போன்ற நாட்டில் ஒருவர் வாழ்வில் உயர்வதற்கு கல்வி மட்டுமே சிறந்த வழி.

ஆனால், தெலங்கானாவில் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை கல்வி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் பரிதாபகரமான நிலையை ‘வித்யா பரிரக்ஷன் சமிதி’ எனும் அமைப்பு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மாநிலத்தில் தரமான இலவச கல்வி வழங்கப்படும் என்று டிஆர்எஸ் உறுதியளித்தாலும், அரசுப் பள்ளிகளின் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது.

மனிதவள மேம்பாட்டுக்கு அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றுக்கிடையே ‘தங்க தெலங்கானா திட்டம்’ ஏறக்குறைய கைகழுவப்பட்டு விட்டதென்றே சொல்லலாம்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் தாமதம், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது ஆகியவை மாநில நலன் குறித்த தொலைநோக்கு பார்வையில்லாத தலைமைக்கு சான்றுகளாக உள்ளன.

மறுபுறம் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிப்பது மாநில அரசின் கொள்கைகள் பொது நலனில் இருந்து எந்த அளவுக்கு விலகி நி்ற்கின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்றும், கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் டிஆர்எஸ் வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மாணவர்கள், வேலையில்லா இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோர் இந்த ஆட்சியை வெறுக்கிறார்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் இருக்கதான் செய்கின்றன.

ஒரு கட்சி மாநில மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், அதே கட்சி ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்திறனுக்கும் இடையேயான இடைவெளியை உணர்த்துவதாக உள்ளன இந்த காரணிகள்.

(கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளாகும்)