யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை - போராட்டத்தில் களமிறங்கிய தமிழர்கள்

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிலைகள் இடித்தொழிக்கப்பட்டதாக அண்மையில் கூறப்பட்டு, பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
இந்தியா மற்றும் இலங்கை எல்லையிலுள்ள கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னணியில், அதற்கு பாரிய எதிர்ப்புக்கள் இரு நாட்டிலிருந்தும் எழுந்திருந்தன.
இந்த பிரச்னை வலுப் பெற்ற நிலையில், குறித்த 'நிலை' அகற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதேபோன்று, இலங்கையின் பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவமும் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறு கடந்த சில மாதங்களாகவே சிங்கள பௌத்தர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது அடையாளங்களை ஸ்தாபித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அவ்வாறான மற்றுமொரு பாரிய பிரச்னையொன்று தற்போது எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதியின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடமே தையிட்டி.
இந்த தையிட்டியில் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் இன்றும் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மக்களுக்கு சொந்தமான இடங்களை அக்கிரமித்து, படையினர் பௌத்த விகாரையொன்றை அமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
வலுக்கும் போராட்டம்

மக்களின் நிலங்களை அக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தது.
இந்த விகாரையை நிர்மாணிப்பதற்காக ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை நிறுத்துமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் கையிட்டி - கலைவாணி வீதியிலிருந்து ஆரம்பமான போராட்ட பேரணி, விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதி வரை சென்று, அங்கு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை அடுத்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு போலீஸார் நேற்றிரவு முயற்சித்த சந்தர்ப்பத்தில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், காணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு, கட்சி பேதமின்றி ஆதரவை வழங்கியிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நேற்று முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஸ்ரீதரன், எம்.ஏ.சுதந்திரன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
அரசாங்கத்தின் பதில்

யாழ்ப்பாணம் - கையிட்டி பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ், புத்தசாசன, சமய மற்றும்; கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வினவியது.
இந்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் பதிலளித்தார்.
எனினும், சமயமொன்றை பின்பற்றுவது அவரவர் உரிமை என அவர் கூறுகின்றார்.
வடக்கிலுள்ளவர்களுக்கு, தெற்கில் வருகைத் தந்து இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை என குறிப்பிட்டார்;.
''சமயத்தை பின்பற்றுவது அனைவரது உரிமை. வடக்கிலுள்ளவர்கள், தெற்கிற்கு வருகைத் தந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை. அதற்கு நடைமுறையொன்று காணப்பட வேண்டும். அந்த நடைமுறையிலிருந்து வெளியேறினால் மாத்திரமே பிரச்னை ஏற்படும். வெடுக்குநாறி பகுதியில் காணப்பட்ட பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கச்சத்தீவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது. எனது தலைமையில் கிளிநொச்சியில் இரண்டு ஆலயங்களை நாம் நிர்மாணிக்கின்றோம். அது தொடர்பில் யாரும் பேசுவதில்லை. இது அனைத்தும் எமக்கு சொந்தமானவை. நான் பொதுவாக இருந்து, பக்கச்சார்பின்றி செயற்பட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவேன்." என தமிழ், புத்தசாசன, சமய மற்றுமு; கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












