தமிழக மலைப்பகுதிகளில் காட்டுத்தீ: பல்லுயிர் பெருக்கத்துக்கு பேராபத்து
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் பேச்சிப்பாறை, கோதையாறு, கொடைக்கானல், குன்னூர், அக்காமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ கடுமையாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பனி குறைந்து தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் 30.2 சதவீதம் காடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தாடகை மலை, மகேந்திரகிரி மலை, தெற்கு மலை, பொதிகை மலை, குலசேகரம், வீரப்புலி, வேளி மலை, கிளாமலை, அசம்பு மலை என 9 பாதுகாக்கப்பட்ட காடுகள் களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டிய புரம், பூதப்பாண்டி என 5 வனச்சரகங்கள் சுமார் 50,486 ஹெக்டர் பரப்பில் உள்ளன.
குமரி மாவட்டத்தில் ஈரம் நிறைந்த பசுமை மாறாக்காடுகள், வறட்சியைத் தாங்கி வளரும் முள் காடுகள் என 14 வகையான காடுகள் உள்ளது. இக்காட்டு பகுதியில் தேக்கு, ஈட்டி, சந்தனம், வேங்கை என 600க்கும் வகையான மரங்கள் உள்ளது.
யானை, சிறுத்தை, வரையாடு, கரடி, மிளா, காட்டுப்பன்றி, பெரிய அணில், கரு மந்தி, சிங்கவால் மந்தி என 30க்கும் மேற்பட்ட பாலூட்டும் விலங்குகள், 14 வகையான இடம் பெயரும் பறவைகள் உள்பட 100 வகையான பறவையினங்கள், ஊர்வன பிராணிகள், உயிரைக் காக்கும் மூலிகைகள் இக்காடுகளில் உள்ளன.
குமரி மாவட்ட வனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 48 காணி பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பர் கழக குடியிருப்புகள் உள்ளன.இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து காடுகளில் தீப்பற்றி பரவி வருகிறது.
கோதையாறு வனப்பகுதியில் பல இடங்களில் கடந்த நான்கு நாட்களாக தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று வனப்பகுதியில் ஒட்டிய ரப்பர் கழக பகுதிகளில் தீ பரவி வருகிறது. ரப்பர் கழக பகுதியில் தீ பரவி வருவதால் ரப்பர் மரங்கள் கருகி வருகின்றன இந்நிலையில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரப்பர் கழக தொழிலாளர் மற்றும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக செடி, கொடிகள், புல்வெளிகள், முட்புதர்கள், காய்ந்து வருகின்றன, இதன் காரணமாக ஆங்காங்கே, தனியார் தோட்டங்களிலும், அரசு வருவாய் நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் அவ்வப்போது தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி, கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி வருவதால் அருகில் உள்ள பிற தனியார் தோட்ட பகுதிகளுக்கும்,வனப்பகுதிகளுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே வனத்துறையினர் விரைவில் தீயை கட்டுப்படுத்த வனப்பகுதி அருகே தீ தடுப்பு எல்லைகளை அமைக்க வேண்டும் எனவும், வனத்துறையினர் அனுமதி இல்லாமல் தனியார் தோட்டங்களில் தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

குன்னூரில் காட்டுத்தீ
நீலகிரி மாவட்டம், குன்னூர், ஊட்டி, கூடலூர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், குன்னூரில் ஆங்காங்கே, கடந்த ஒரு வாரமாக, இரவிலும், பகலிலும் காட்டுத்தீ பரவுவது அதிகரித்து வருகிறது.
குன்னூர் அருகே பேரட்டி சாலையோர வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ குறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அங்கு விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பே தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தேனி விவசாயிகள் கோரிக்கை:
தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத்தீயால் வனவளம் பாதிப்படைகிறது. மேலும், பல்லுயிர் பெருக்கத்திற்கான சிக்கல் நிலவுகிறது. இதைத் தடுத்திட வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை தடுப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதிகளில் தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை உண்டாக்க வேண்டும். குரங்கணி தீ விபத்து போன்று மீண்டும் ஒரு முறை உயிர்ப்பலிகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, காட்டுத்தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திட்டமிடல் தயார் செய்யுமாறு வனத்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசம்
இது குறித்து குமரி மோதிரம் மலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தலைவர் ரகு பிபிசி தமிழிடம் பேசுகையில், ”காலம் காலமாக வனப்பகுதிகளில் கோடை நேரங்களில் காட்டுத் தீ பரவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காட்டு தீ அதிகளவு ஏற்பட்டு மரங்கள் காடுகள் எரிந்து மலைவாழ் மக்களின் குடியிருப்பு வரை தீ பரவி வருகிறது.
காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் பழங்குடியின குடியிருப்புக்குள் புகுந்து விடுவதால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ காரணமாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மூலிகைகள் அழிகிறது. இந்த மூலிகைகளை நம்பி பலரும் மருத்துவ தொழில் செய்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் எரிந்து நாசமாகியுள்ள மூலிகைகள் மீண்டும் வளருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மூலிகைகளை நம்பி இருக்கக்கூடிய பாரம்பரிய மருத்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காடுகளுக்குள் ஏற்பட்ட காட்டுத்தீ பரவி ரப்பர் மரங்களை அழித்து வருகிறது. ரப்பர் மரத்தை பொறுத்தவரை அதிக வெப்பம் ஏற்பட்டால் ரப்பர் பால் உறைந்து மரம் வெடித்து அதன் பின் மரம் வளராது. இது பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அடர்ந்த வனப் பகுதியை காட்டு தன்மைக்கு ஏற்றவாறு பகுதி வாரியாக பிரிக்க வேண்டும். இப்படி பிரித்து புல் மேடுகளை தனியாகவும் நீர் பிடிப்பு பகுதிகளில் வளரக்கூடிய குளிர்ச்சியான காட்டு பகுதிகளை தனியாகவும் பிரித்தால் நிச்சயம் வெயில் நேரங்களில் ஏற்படும் இதுபோன்ற காட்டுத்தீ பரவலை தடுக்கலாம். இதை தான் கேரள வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
வெயில் காலம் வருவதற்கு முன்பு புல் மேடுகளில் உள்ள புற்களை எரித்து விடுவதால் வெயில் நேரங்களில் மீண்டும் அந்த பகுதியில் புல் மேடுகள் உருவாகும். அது வன விலங்குகளுக்கு உணவாக அமையும்.
குமரி மாவட்டத்தில் புலிகள் காப்பகம், பல்லுயிர் பெருக்கம், வனவிலங்கு சரணாலயம் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தொடர்ந்து காட்டு வளங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் பழங்குடியின மக்களை இணைத்து கொண்டு அவர்களின் ஆலோசனையை பயன்படுத்தினால் காட்டுத்தீ பரவாமல் தடுக்கலாம்” என்கிறார் ரகு.
காட்டுத்தீ குறித்து ஜிபிஎஸ் எண்ணுடன் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி
காட்டுத்தீயை கட்டுப்படுத்த குமரி மாவட்ட வனத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், ”வனத்துறை காட்டுத்தீயை அணைப்பதற்கு இரவு, பகலாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காட்டுத்தீ பரவாமல் இருக்க நபார்டு நிதி உதவியில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடன் ஏற்கனவே இருந்த 5 தடுப்பணைகள் பராமரிக்கப்பட்டு அதில் முழுமையாக நீர் நிரப்ப பட்டுள்ளது.
தடுப்பணையில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரால் வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்டு காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் காட்டுத்தீ காரணமாக வெளியேறும் வனவிலங்குகள் தண்ணீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
குமரி மாவட்ட வன பகுதிகளில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், மின்சார வாரிய குடியிருப்பு, பழங்குடியின மக்கள் குடியிருப்பு என மக்கள் வாழும் பகுதிகள் இங்கு அதிகம் இருப்பதால், மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சாலைகள் தீத்தடுப்பு எல்லைகளாக செயல்பட்டு தீ பரவாமல் தடுக்க பயன்படுகிறது.
குமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் காட்டுத் தீயை அணைக்க தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். காட்டுத்தீ ஏற்படும் பகுதி சாட்டிலைட் மூலம் உடனடியாக கண்டறியப்பட்டு, குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி செல்போன் எண்ணிற்கு ஜிபிஎஸ் எண்ணுடன் மெசேஜ் வருவதால் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைத்து பரவாமல் தடுத்து வருகிறோம்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது. அடுத்த வருடம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வது நிறுத்தப்பட்டுவிட்டது.
வனப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் உதவியுடன் காட்டுத்தீ பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்கிறார் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரி இளையராஜா.
மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இயற்கை ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன், ”தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீ இயற்கையாக உருவாவது கிடையாது. இது வனப்பகுதிக்குள் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களால் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சில வனப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாயத்தை முடித்துவிட்டு மறு விவசாயத்திற்கு தயாராகும் போது அங்கிருக்கும் பழைய செடி கொடிகளை அப்புறப்படுத்தி தீ வைப்பதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது.

காட்டுத்தீ காரணமாக வனப்பகுதிகளில், தரையில் குழி பறித்து வாழக்கூடிய பறவைகளின் இனம் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறையினர் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக இருக்கும் நபர்களை அப்புறப்படுத்தி, பழங்குடியின மக்களுடன் இணைந்து கோடை காலத்தில் ஏற்படக்கூடிய காட்டுத் தீயை கட்டுப்படுத்தினால் பல்லுயிர் பெருக்கத்தை அழியாமல் பாதுகாக்கலாம்” என்கிறார் இயற்கை ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












