கரூரில் ஊருக்குள் புகுந்து பட்டியலின மாணவரை தாக்கிய ஆதிக்க சாதி மாணவர்கள் - நடந்தது என்ன?

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இரண்டு வாரத்துக்கு முன்பு, 17 வயது பட்டியல் சாதி மாணவரை சாதி ரீதியிலாக வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரையும் அவரது தங்கையையும், சக மாணவர்கள் 6 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தின் தாக்கம் நீடித்து வருகையில், கரூரில் ஊருக்குள் புகுந்து பட்டியல் சாதி மாணவரை ஆதிக்க சாதி மாணவர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
என்ன நடந்தது கரூரில்?

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர், கடந்த, 24 ஆம் தேதி பேருந்தில் பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். பின்பு 25ம் தேதி அவரது ஊருக்குள் புகுந்த சில ஆதிக்கச் சாதி மாணவர்கள், மாணவரையும் அவரது பாட்டியையும் தாக்கியுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளியணை போலீஸார், இரு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர். அதேபோல, சட்டத்திற்கு முரண்பட்ட இரண்டு பள்ளி மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரின் பாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?
சிகிச்சையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவரின் பாட்டியை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘‘பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். நான் தான் அவரை (பாதிக்கப்பட்ட மாணவரை) வளர்த்து வருகிறேன்.
24ம் தேதி வியாக்கிழமை அவர் பள்ளிக்கு செல்லும் சமயத்தில், பேருந்தில் சக மாணவர்களோட பேசி சிரித்து கொண்டு வந்துள்ளார். பின்பு, பேருந்திலிருந்த சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், (பாதிக்கப்பட்ட மாணவர்) தங்களை கிண்டல் செய்ததாகக் கூறி, சாதிப்பெயரைச்சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர்,’’ என்றார்.
சம்பவம் குறித்து மேலும் தொடர்ந்த அவர், ‘‘பேருந்தில் நடந்தவை குறித்து மாணவர்களிடம் பேசியபோது, அங்கு வந்த போலீஸார், எங்களிடம் நடந்ததைக்கேட்டு அந்த மாணவர்கள் மீது புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர்" என்றார்.
ஆனால் புகார் கொடுப்பதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட மாணவரின் ஊருக்குள் வந்த ஆதிக்க சாதி மாணவர்கள் அவரை தாக்கியதாகவும் தடுக்க வந்த தன்னையும் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவரின் பாட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“முழுமையாக விசாரித்து வருகிறோம்”

பட மூலாதாரம், Getty Images
இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கரூர் டவுன் டி.எஸ்.பி சரவணன், ‘‘பாதிக்கப்பட்ட மாணவரை தாக்கிய மாணவர்கள், 15 கிலோ மீட்டர் வரையில் பயணித்து அவரின் கிராமத்துக்கு வந்து தகராறு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்புடைய இருவர் சிறார் என்பதால் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளோம். மீதமுள்ள இரு கல்லூரி மாணவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம்.
சாதி வன்கொடுமை, மகளிருக்கு எதிரான வன்கொடுமை, அடிதடி, தகாத வார்த்தைகளால் திட்டியது ஆகிய வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.
பள்ளிகளில் அதிகரிக்கும் சாதிய பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ‘‘ஆண்டுதோறும் தமிழகத்தில் சாதிய பாகுபாடு மனநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கு வெளியில் சண்டையிட்டுக்கொள்வது அதிகரித்து வருகிறது.
நாங்கள் செய்த ஆய்வின்படி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி ரீதியான தகராறு தொடர்பாக, தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு, 50 – 60 வழக்குகள் பதிவாகின்றன. முன்பு நாங்குநேரியில் சாதிய பாகுபாட்டால் மாணவரை, சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. தற்போது கரூரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் தமிழக அரசு மாணவர்களுக்கு சமத்துவம், சாதியத்தால் ஏற்படும் பாதிப்புகள், அடிப்படை மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியாக எழும் பிரச்னைகளின் புகார்களை பெற, IAS தலைமையிலான அதிகாரியுடன் தனி குறைதீர்ப்பு அமைப்பும், இலவச சேவை எண்ணும் உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு முதலில் மாநிலம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து, சாதி ரீதியான பிரச்னைகள் உள்ள பள்ளி, கல்லூரிகளை அடையாளப்படுத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு












