வந்தே பாரத்: பெட்டிகளை பாதியாக குறைத்தும் மூன்றில் ஒரு பங்கு கூட நிரம்பாத இருக்கைகள் - என்ன காரணம்?

வந்தே பாரத்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாடே
    • பதவி, பிபிசி இந்தி

கடந்த வாரம் புதிதாக இரண்டு வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, நடுத்தர மக்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில் மிகவும் பிரபலம் அடைந்திருப்பதாகவும், நாட்டின் ஒவ்வொரு மூலையையும் வந்தே பாரத் ரயில் இணைக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15, 2021இல் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

2023, ஆகஸ்ட் 15இல் சுதந்திர இந்தியா 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதையொட்டி, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

ஆனால், சமூக வலைதளங்களில் காணப்படும் வந்தே பாரத் ரயில் குறித்த மோகமும், ரயில்வேயின் தரவுகளும் வேறாக உள்ளன.

அதாவது, வந்தே பாரத்தின் பல்வேறு வழித்தடங்களில் மிகக்குறைவான மக்களே பயணிக்கின்றனர்.

எனவேதான் பயணிகளை ஈர்க்க கட்டணச் சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது என்று நம்பப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலின் புதிய தோற்றம்

2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன.

இந்த மாத இறுதிக்குள் இன்னும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

வந்தே பாரத் ரயிலின் வேகம் குறித்த கேள்விகள், இந்த ரயிலுக்கான தேவை உண்மையில் அதிகமாக உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டாலும், அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

போபாலின் ராணி கம்லாபதி நிலையத்திலிருந்து ஜபல்பூருக்குச் செல்லும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. எனினும், இந்த ரயிலில் 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஜூன் 29 வரை சராசரியாக 32 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

அதே ரயில் 36 சதவீத பயணிகளுடன் மட்டுமே போபால் திரும்பியது.

வந்தே பாரத் நவீனமாகவும் ஈர்க்கும்விதமாகவும் இருந்தாலும் கூட பயணிகள் அதனை பெரிதாக நாடாததற்கு அதன் கட்டணம் காரணமாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்

பட மூலாதாரம், ANI

ஒருசில வழித்தடங்களில் பயணிகள் அதிகம் பயணிக்கின்றனர்

வந்தே பாரத் பயணிக்கும் அனைத்து பாதைகளிலும் பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒருசில வழித்தடங்களில் பயணிகள் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

ஏப்ரல் 1, 2023 முதல் ஜூன் 29, 2023 வரையிலான காலத்தில்,

காசர்கோடு- திருவனந்தபுரம் வழித்தடத்தில் 182 சதவீதம் பயணிகள் பயணித்துள்ளனர். ரயில் மீண்டும் காசர்போடு திரும்பியபோது 176 சதவீதம் பேர் பயணித்துள்ளனர். அதாவது ரயில் முழு கொள்ளவை எட்டியுள்ளது. 82 சதவீதம் மற்றும் 76 சதவீதம் பேருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை.

இதேபோல், மும்மை செண்ட்ரல்- காந்திநகர் வந்தேபாரத் ரயிலில் 129 சதவீதம் பயணிகளும் திரும்பி வந்தபோது 134 சதவீதம் பயணிகளும் பயணித்துள்ளனர்.

செகந்திராபாத்-விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரயிலில் 114 சதவீதம் பேர் பயணித்துள்ளனர். இந்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலுக்கு அதிக தேவை உள்ளது.

கேஎஸ்ஆர் பெங்களூரு - தார்வாட் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ரயிலிலும் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான பயணிகளுடன் அந்த ரயிலில் பெங்களூரு திரும்பியது.

உச்சபட்சமாக, இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில்தான் மிகக் குறைவான பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. 21 சதவீத பயணிகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் பயணித்துள்ளனர். ரயில் மீண்டும் இந்தூர் திரும்பிய போது 29 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

டெல்லி காண்ட் முதல் அஜ்மீர் நோக்கி செல்லும் ரயில் 61 சதவீத பயணிகளுடன் மட்டுமே பயணித்துள்ளது.

மும்பையில் மட்கான் முதல் சிவாஜி டெர்மினஸ் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் 55 சதவீத பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர்.

இந்த வகையில், பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் குறைவான பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர்.

புதிய ரயில் எப்படி இயங்குகிறது?

இந்தியாவில் புதிய ரயில் இயக்கப்படுவதற்கு முன்பாக பல விஷயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

அரசியல் கோரிக்கை தவிர்த்து, எந்த வழித்தடத்தில் ரயில்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்பதையும் ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொள்ளும் என்கிறார் ரயில்வே வாரிய முன்னாள் உறுப்பினர்.

குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் முன்பதிவு மற்றும் பயணிகள் கூட்டம் மட்டுமின்றி, ரயில்வே தினசரி பயணிகள் ஆலோசனை குழு உள்ளூர் மட்டத்தில் கோட்ட ரயில்வே மேலாளருடன் ஆலோசனை நடத்தும். பின்னர் மண்டல ரயில்வேயில் இது விவாதிக்கப்பட்டு, ரயில்வே அமைச்சக கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

பல சந்தர்ப்பங்களில் தேவையைப் பொறுத்து, ஏற்கனவே இயங்கும் ரயில்களின் பெட்டி எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து இருக்கிறது. எனினும், தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது புதிய ரயில்கள் இயக்கப்படும்.

இவை தவிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை அடிப்படையிலும் ரயில்கள் இயக்கப்படும்.

ஆனால், அதற்கு முன்பாக அந்தப் பகுதியில் புதிய ரயிலுக்கான தேவை மற்றும் இயக்குவதற்கான சாத்தியம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும்.

தேவை குறித்த ஆய்வு போன்றவற்றை தாண்டி தற்போது தேர்தலுக்கு ஏற்ப ரயில்கள் தொடங்கவும், இயக்கவும்படுவதாகக் கூறுகிறார் அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஷிவ் கோபால்.

வந்தே பாரத்தின் அதிகப்படியான கட்டணம்

சதாப்தி ரயிலுக்கு ஒத்ததாக கருதப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் மிக அதிகம். இதன் காரணமாகவே, வந்தே பாரத் ரயிலை பல வழித்தடங்களில் மக்கள் தவிர்ப்பதாக நம்பப்படுகிறது.

சதாப்தி விரைவு ரயிலின் chair car பெட்டியில் 100 கிமீ-க்கான அடிப்படை கட்டணம் ரூ.215. ஆனால், வந்தே பாரத் ரயிலில் இதே தூரத்திற்கான கட்டணம் ரூ.301.

இதே தூரத்திற்கு சதாப்தி ரயிலின் executive பெட்டி கட்டணம் ரூ.488. ஆனால், வந்தே பாரத் ரயிலில் இதற்கான கட்டணம் ரூ.634.

சதாப்தி ரயிலின் chair car பெட்டியில் 500கிமீ-க்கான அடிப்படை கட்டணம் ரூ. 658. ஆனால், வந்தே பாரத் ரயிலில் இதற்கான கட்டணம் ரூ.921.

வந்தே பாரத்

பட மூலாதாரம், ANI

சதாப்தி ரயிலின் executive பெட்டியில் 500கிமீ-க்கான அடிப்படை கட்டணம் ரூ.1,446. ஆனால், வந்தே பாரத் ரயிலில் இதற்கான கட்டணம் ரூ.1,880.

இதனோடு, முன்பதிவு கட்டணம், விரைவு கட்டணம், ஜி.எஸ்.டி தொகை ஆகியவை தனிக்கட்டணங்கள்.

'’வந்தே பாரத் ரயிலின் கட்டணம் அதிகமாக உள்ளது. நான்கு பேர் பயணிக்க வேண்டுமென்றால் ரயிலைவிட குறைவான கட்டணத்தில் அவர்களால் காரில் பயணிக்க முடியும். சாதாரண மக்களுக்கான ரயிலை இயக்குவதைவிட விலை உயர்ந்த ரயிலை இயக்குவதில்தான் ரயில்வேயின் கவனம் உள்ளது'' என்கிறார் சிவ்கோபால் மிஷ்ரா.

வந்தே பாரத் vs சதாப்தி

வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எஃப்பில் உருவாக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டதால் Train-18 என்று முதலில் பெயரிடப்பட்டது.

இது தவிர, இதே தொழில்நுட்பத்தில் 2020ஆம் ஆண்டில் Train-20 தொடங்கப்பட இருந்தது.

Train-20இல் ஏ.சி படுக்கை பெட்டிகள் இருக்குமென ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இந்த வகை ரயில் சேவை 2024, மார்ச்சுக்குள் தொடங்கப்பட உள்ளது.

இந்த ரயிலின் பெயரும் வந்தே பாரத் போன்றே இருக்குமென நம்பப்படுகிறது.

சதாப்தி

பட மூலாதாரம், Getty Images

வந்தே பாரத் சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் சதாப்தி விரைவு ரயில் 1988, ஜூலை 10இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடக்கத்தில் குவாலியர் வரை இயக்கப்பட்ட இந்த ரயில், பின்னர் போபால் வரை நீட்டிக்கப்பட்டது.

மூத்த பத்திரிகையாளரும், 'இந்தியன் ரயில்' இதழின் ஆசிரியருமான அரவிந்த் குமார் சிங், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தில் பயணித்தவர்.

“அப்போது ரயில்வே அமைச்சராக மாதவ் ராவ் சிந்தியா இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்த விழாவையொட்டி அந்த ரயில் இயக்கப்பட்டது. ஆனால், நேருவின் புகைப்படம் கூட ரயிலில் இல்லை. இந்த ரயில் நவீன மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் ரயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது’’ என்கிறார் அரவிந்த் குமார் சிங்.

தற்போது, வந்தே பாரத் இந்தியாவின் நவீன ரயிலாக விளம்பரப்படுத்தப்படுகிறது. தற்போதுவரை அனைத்து வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோதியே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கடந்த 35 ஆண்டுகளில் 19 வழித்தடங்களில் மட்டுமே சதாப்தி ரயில் இயங்குகிறது. தற்போது சதாப்தி ரயிலைவிட இந்திய ரயில்வேயின் கவனம் வந்தே பாரத் மீதே அதிகம் உள்ளது.

16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை உருவாக்க ரூ.100 கோடியை செலவழிக்கும் இந்திய ரயில்வே, 20 பெட்டிகள் கொண்ட சதாப்தி ரயிலை உருவாக்க 55 கோடியை செலவழிக்கிறது.

வந்தே பாரத் ரயில் அதன் வேகத்திற்காக பெயர் பெற்றது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்திய ரயில்வே தடத்தில் வந்தே பாரத் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர்.

இரு ரயில்களின் சராசரி வேகம் இதைவிட குறைவாக இருந்தாலும், சதாப்தி எக்ஸ்பிரஸைவிட வந்தே பாரத் குறைவான நேரத்தில் பயண இலக்கை சென்றடையும்.

மிகக் குறுகிய நேரத்தில் வந்தே பாரத் ரயில் உச்ச வேகத்தை தொடுவதும், பிரேக் பிடித்ததும் உடனடியாக நிற்பதுமே இதற்கு காரணம்.

சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்று இன்ஜின் உதவியுடன் வந்தே பாரத் ஓடுவதில்லை.

வந்தே பாரத்தில் ஒவ்வொரு பெட்டிக்குப் பிறகும் இரண்டாவது பெட்டியில் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக சக்தியுடன் ரயிலை தள்ளுகிறது. எனவே ரயில் விரைவாக வேகம் எடுத்து, பிரேக் பிடித்தவுடன் உடனடியாக நிற்கிறது.

ரயில்வேயின் புதிய சலுகை

ரயில்வேயின் புதிய சலுகை

பட மூலாதாரம், ANI

நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும் வந்தே பாரத் ரயிலை பயணிகள் பலர் தவிர்க்கும் நிலையில், புதிய சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் சுற்றறிக்கைபடி, பயணிகள் வருகை 50%க்கும் குறைவாக இருக்கும் வந்தே பாரத் வழித்தடம் மற்றும் பெட்டிகளில் அதிகபட்சம் 25% கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

இதற்காக, கட்டணச் சலுகையை நிர்ணயிக்கும் உரிமை மண்டல ரயில்வேக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா பிபிசியிடம் கூறுகையில், “இந்த திட்டம் 2019ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கோவிட் காரணமாக செயல்படுத்த முடியவில்லை. இதே திட்டத்தை மீண்டும் ரயில்வே கொண்டு வந்துள்ளது. இது புதிய திட்டமோ அல்லது வந்தே பாரத் ரயிலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டமோ அல்ல’’ என்றார்.

வந்தே பாரத் ரயில் நகரங்களை இணைக்கிறது. இந்தியாவில் சாலை வசதிகள் தற்போது சிறப்பாக உருவாக்கப்பட்டு வருவது நிறைய மக்களை சாலை வழியாக பயணிக்க ஊக்குவிக்கிறது. எனவே அந்த வகையிலும் புதிய ரயில்களை இயக்குவதில் ரயில்வே நிர்வாகம் சிரமங்களை எதிர்கொள்ளலாம்; இது போன்ற புதிய கட்டணச் சலுகைகளை அளிக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: