காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள் - "ஏழைக் குழந்தைகளுக்குத் தான் பாதிப்பு"

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காகவும் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிட்டது, அரசியல் ரீதியான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், ஏழைக்குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் இருப்பதாக விளையாட்டு அமைப்பினர் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கோவையில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் காலியிடத்தை ஏலம் விடும் நடவடிக்கையை வீட்டு வசதி வாரியம் நிறுத்திவைத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவைப்புதுார் பகுதியின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

இதற்காக கோவை மாநகராட்சி சார்பில், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

விளையாட்டு மைதானத்திற்காக அரசியல் மோதல்!

அதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த இடத்தில் கிரிக்கெட், கால்பந்து, பேட்மின்டன் விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் நிரம்பி வழியும்.

மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களும் பராமரித்து வந்த இந்த மைதானத்தில் நிறைய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடப்பது வழக்கமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த காலியிடத்தை ரூ.76 கோடிக்கு ஏலம் விடுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று டெண்டர் நோட்டீஸ் விட்டது. இதன்படி நவம்பர் 12 அன்று ஏலம் நடப்பதாக இருந்தது.

பல ஆண்டுகளாக பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மேம்படுத்தித்தர வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நோட்டீஸ் அறிவிப்பு, கோவை தெற்கு பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மைதானமாகப் பயன்படுத்தும் அந்த இடம் மொத்தம் 10.79 ஏக்கர் என்பதும், அவற்றில் 4.54 ஏக்கர் இடம் (1,97,916 சதுரஅடி பரப்பு) மருத்துவமனை உபயோகத்துக்காகவும், 6.25 ஏக்கர் இடம் (2,72,403 சதுரஅடி பரப்பு) பள்ளிக்கூடம் கட்டுவதற்கான உபயோகத்துக்காகவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த ஏல அறிவிப்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்று கோவைப்புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில், இந்த மனைப்பிரிவை உருவாக்கியதன் அடிப்படையில், இந்த நிலத்தின் உரிமையாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பதால், வாரியமே அதை முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது.

கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படாத 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீண்டும் நில உரிமையாளர்கள் வசமே ஒப்படைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

இதே போன்று அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்பனை செய்யப்படாத இடங்களை விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காலியிடங்களை ஏலம் விடும் பணியை வாரியம் துவங்கியது.

நவம்பர் 12 அன்று ஏலம் விடுவதாக இருந்த நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே, திமுகவினர் இதுபற்றி துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசி, ஏலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதாக மக்களிடம் தெரிவித்தனர்.

கோவைப்புதுார் பகுதிகளில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்து, பட்டாசு வெடித்தனர். ஆனால் ஏலம் கைவிடப்பட்டதாகவோ, மைதானம் அதே நிலையில் நீடிக்குமென்றோ அரசு அல்லது வீட்டுவசதி வாரியம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர்
படக்குறிப்பு, மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர்

இதனால் ஏலத்துக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதியன்று, அதிமுக சார்பில் 'இந்த மைதானத்தை ஏலம் விடும் திட்டத்தைக் கைவிடவேண்டும்' என்ற கோரிக்கையுடன், குனியமுத்துார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''தமிழக அரசே இந்த மைதானத்தை ஏலம் விடுவதற்கு டெண்டர் விட்டநிலையில், அதை திமுகவினரே மீட்டு விட்டதாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த மைதானத்தை முழுமையாக மீட்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்றார்.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்
படக்குறிப்பு, மைதானம் ஏலம் விடப்படுவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

''மைதானமல்ல; மருத்துவமனை, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம்!''

ஆனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபின்பே, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்கிறார் கோவைப்புதுார் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் முரளி. இவர் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய முரளி, ''கடந்த மாதத்தில் மைதானத்தை ஏலம் விட டெண்டர் விட்டதுமே, மாவட்டச் செயலாளர் ரவியிடம் தெரிவித்தோம். அவரும் துணை மேயர் வெற்றிச்செல்வனும் இணைந்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசிவிட்டனர். அவரும் உரிய அதிகாரிகளிடம் பேசி, ஏலம் விடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறிவிட்டார். அது உறுதியானபின்புதான் நாங்கள் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்தோம். ஆனால் இதுதெரிந்ததும் அதிமுகவினர் அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'' என்றார்.

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், வேலுமணி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், இந்த மைதானத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேபோன்று அதிமுக ஆட்சியில்தான் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதிகளவில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்.

இந்த மைதானத்தை ஏலம் விடுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவைப்பிரிவு நிர்வாகப் பொறியாளர் ஜேக்கப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த இடம் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்திவந்தனர். இப்போது வாரியத்தின் இடங்களை மீட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

இந்த விளையாட்டு மைதானம் குறித்து அரசின் முடிவை தெரிந்து கொள்ள , துறையின் அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வணிக வளாகமாக மாறிய மைதானம்!

சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாறுவது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம். இவ்வமைப்பின் தலைவரான தியாகராஜன், இதுதொடர்பாக ஏராளமான ஆதாரங்களுடன் பெரும் பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அவர் காண்பித்தார். அதேபோன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மாஸ்டர் பிளானில் 60 சென்ட் இடம் விளையாட்டு மைதானமாகவும், 100 அடி ரோடாகவும் இருந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நடந்த முயற்சிகள், வழக்கு விபரங்களையும் வீரப்பத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பகிர்ந்தனர்.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்
படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன்

அங்குள்ள நுாறடி ரோட்டை 60 அடியாகக் குறைக்கவும், விளையாட்டு மைதானத்தை மனையிடமாக மாற்றவும் கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு நகர ஊரமைப்புத்துறையும் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிராக குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில், நுாறடி ரோடு, விளையாட்டு மைதானத்துக்கான ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இடம் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தப்படவில்லை.

''ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது அந்த மனைப்பிரிவில் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்களைக் காண்பித்து, அதன்படியே தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்பதுடன், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை அதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள் சட்டத்தில் (TAMIL NADU PARKS, PLAY-FIELDS AND OPEN SPACES (PRESERVATION AND REGULATION) ACT, 1959) உள்ளது.'' என்றார் தியாகராஜன்.

ஆனால் அதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செய்வதில்லை என்பதுதான் இவர் உட்பட பல குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. மதுரை மாநகராட்சி ஹார்வி நகரில் மதுரை மில் தொழிலாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனியாருக்கு ஒரு ஏக்கர் விளையாட்டுத் திடலை மோசடியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஜெகன்.

ஹார்வி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெகன், ''நகருக்குள் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு விளையாட்டு மைதானத்தை மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். பட்டா ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.'' என்கிறார்.

'ஏழை குழந்தைகளுக்கு மைதானம் இல்லை'

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும், பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை நடத்தி வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களில் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்குவதே குறைவு என்ற நிலையில், அப்படி ஒதுக்கப்படும் இடங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதால் ஏழைக்குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் ரஞ்சித், ''முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது நகரங்களில் பெரிய பெரிய ஸ்டேடியங்களை அரசு கட்டுகிறது. தனியாரால் நிறைய 'டர்ஃப்' போன்ற மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானங்கள் மாயமாகிவருகின்றன. அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.'' என்கிறார்.

தமிழகத்தில் பொது ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பராமரிக்க வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். ஆனால் நகர ஊரமைப்புத்துறையின் ஒப்புதலுடனே இந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர். இதுகுறித்து கருத்து கேட்க அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெறவே முடியவில்லை.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்
படக்குறிப்பு, தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக, தங்கள் அமைப்பினர் வாங்கிய தகவல்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று கூறும் தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், ''வசதி படைத்தவர்கள் பொழுதுபோக்குக்கும், உடற்பயிற்சிக்கும் எங்கேயும் செல்வார்கள். ஏழைகளுக்கு பூங்காக்களை விட்டால் வேறிடமில்லை. இந்த மைதானங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது.'' என்கிறார்.

மேலும் பிபிசி தமிழிடம் பேசிய அவர், கோவையில் மட்டும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த வழக்குகள் சார்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு