சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளை சட்டவிரோதமாக அனுமதியின்றி படகு சவாரி அழைத்துச் செல்வதால் உயிர் பலிகள் ஏற்படுகின்றன.

அண்மையில் கேரளாவில் படகு சவாரி சென்ற 22 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்ததை போல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் படகு சவாரிக்கு அழைத்து செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய கடலோர மாவட்டங்களில் ஒன்று என்பதால் இங்கு மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் நேரத்தை செலவிடும் சுற்றுலா பயணிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அப்படி வருபவர்கள் கடற்கரையில் குளித்து மகிழ்வது டன், பெரும்பாலானோர் கடற்கரை அருகே அமர்ந்து உணவு சாப்பிட்டு நேரத்ததை கழிக்கின்றனர். ஆன்மீக பயணம் வருபவர்கள், வழிபாட்டை முடித்து விட்டு அப்பகுதியில் உள்ள பிற சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர்.

ராமநாதபுரம் வரும் சுற்றுலா பயணிகளில் ஏராளமானோர் கடலில் படகு சவாரி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்காக ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பிச்சமூப்பன் வலசை, பாம்பு குருசடை தீவு, காரங்காடு, மண்டபம், பாம்பன், அரியமான் உள்ளிட்ட பகுதிகளில் படகு சவாரி செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று கடல் அழகை ரசிப்பதுடன் கடல் நீரின் கீழ்பகுதியில் வாழும் உயிரினங்களை பார்த்து மகிழ்கின்றனர்.

படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு உயிர் காக்கும் உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வனத்துறையால் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் சில நேரங்களில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்கு இருக்கக்கூடிய நாட்டுப் படகு மீனவர்களிடம் தங்களை படகில் கடலுக்குள் அழைத்துச் செல்லுமாறு பணம் கொடுத்து கேட்கின்றனர்.

பணத்தை பெற்ற கொண்டு சில மீனவர்கள் சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் அதிக நபர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

பணத்திற்கு ஆசைப்பட்டு படகில் அழைத்து செல்லும் மீனவர்கள்

சட்டவிரோதமாக அனுமதியின்றி கடலுக்குள் படகு சவாரி அழைத்துச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மரைன் போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் என அரசு அதிகாரிகள் முனைப்பு காட்டி வந்தாலும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி சில மீனவர்கள் படகுகளில் சுற்றுலா பயணிகளை அவ்வப்போது கடலுக்குள் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டினத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு தனியார் பேருந்தில் வந்த மதுரையைச் சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் குலதெய்வ வழிபாட்டை முடித்து விட்டு அங்கிருந்த மீனவர்களிடம் பணம் கொடுத்து படகு சவாரி சென்றனர்.

நாட்டுப்படகில் அதிகமான நபர்களை அழைத்து சென்றதால் கடல் சீற்றம் காரணமாக படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த வயதான பெண்கள் மூன்று பேர் கடலில் விழுந்து உயிரிழந்தனர். இதே போல் அவ்வப்போது விபத்துக்கள் நேரிடுகின்றன.

தற்போது கேரளாவில் நடந்த படகு விபத்தை போல ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னரே, இது போன்று சட்டவிரோதமாக படகில் அழைத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீனவர்களை பொறுத்தளவில், படகுகளில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்துச் செல்வதற்கு கூட வனத்துறையினர், மீன்வளத் துறையினர் அனுமதிக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்புவது டன், கடற்கரைக்கு மிக அருகே ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் பண்டிகை நாட்களில் அவர்களை அழைத்து செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வனத்துறை மீது நடவடிக்கை தேவை

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாம்பனை சேர்ந்த மீனவர் சகாயம், "என்னிடம் இரண்டு படகுகள் உள்ளன. நான் எனது படகுகளை மீன்பிடிக்க மட்டுமே பயன்படுத்துகிறேன். ஆனால் ஒரு சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படகுகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு பாம்பன் பாலம், கடலுக்கு நடுவே உள்ள தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதை மீனவர்களாகிய நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கவனத்துடன் இருக்கிறோம்.

ஆனால் பல நேரங்களில் வனத்துறை சார்பில் இயக்கப்படும் சூழல் சுற்றுலா படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணிவதில்லை, ஆபத்தை உணராமல் பாம்பன் பாலம் அருகே வரை அழைத்து செல்லப்படுகிறார்கள்.

அனுமதியின்றி நாட்டு படகுகளில் படகு சவாரி அழைத்து செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை போல் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாத வனத்துறை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எங்களுடைய படகுகளில் சுற்றுலா பயணிகளை தவிர்த்து எங்கள் உறவினர்களை சிறிது தூரம் அழைத்துச் செல்வதற்கு கூட அனுமதி மறுக்கின்றனர்.

வணிக ரீதியாக அழைத்துச் செல்வது குற்றம் - அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சந்தோஷத்திற்காக குடும்பத்தினரை கூட அழைத்துச் செல்ல முடியவில்லை .

வனத்துறை மற்றும் மீன்வளத் துறையினர் அறிவுறுத்துவது போல் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி குடும்பத்தை மட்டும் கடற்கரையில் இருந்து ஒரு நாட்டிகல் மைல் தூரம் வரை அழைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்," என மீனவ சகாயம் கேட்டுக்கொண்டார்.

சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

சட்டவிரோத படகு சவாரி, படகு பறிமுதல் அரசு மானியம் ரத்து

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாட்டுப் படகுகளில் சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தேவிபட்டிணத்தில் இருந்து சட்ட விரோதமாக கடலுக்குள் படகு சவாரி அழைத்து சென்ற போது நேர்ந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியபட்டிணம் அருகே 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்து சென்று ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு தெரியாமல் சிலர் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4,600 நாட்டு படகுகள் உள்ளன. இவை அனைத்தும் மீன் பிடி தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தபட வேண்டுமே தவிர சுற்றுலா அழைத்து செல்ல பயன்படுத்த கூடாது.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அரசால் வழங்கப்படும் மானிய டீசல் உட்பட அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் ரத்து செய்யப்படும்.

சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகு ஓட்டுநர் மற்றும் படகு உரிமையாளர்கள் மீது மரைன் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

படகு

படகு விபத்தில் மூன்று பெண்கள் பலி

இணை இயக்குநர் காத்தவராயன் தொடர்ந்து பேசியபோது, "தேவிபட்டினத்தில் நடந்த விபத்து தொடர்பாக படகு ஓட்டி மற்றும் படகின் உரிமையாளர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுற்றுலா பயணிகளை கடலுக்குள் படகில் அழைத்துச் செல்வதை தவிர்ப்பதற்காக மாதம் ஒருமுறை இந்திய கடலோர காவல் படை, மரைன் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து குழுவாக மீனவ கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையைப் பொறுத்தளவில் இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லை மிக அருகில் இருப்பதால் மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.

சாகர் மித்ரா என்ற திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 164 பட்டதாரிகள் பணி அமர்த்தப்ட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை மாவட்டங்களில் மொத்தம் 606 பட்டதாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொரு படகு உரிமையாளரிடம் நேரடியாக தொடர்பில் இருப்பார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது, எத்தனை பேர் செல்கின்றனர், அவர்களின் விவரங்கள், எத்தனை மீன்களை அவர்கள் பிடிக்கின்றனர், கரைக்குத் திரும்பிய பின் படகின் நிலை என விரிவான தகவல்களைப் பெற்று சம்பந்தப்பட்ட மீன்வளத்துளை உதவி அலுவலரிடம் அறிக்கையாக அளிக்க வேண்டும். இவர்களால் பல முறை மீனவர்கள் படகில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடல் சாகச விளையாட்டு படகு சவாரி உள்ளிட்டவைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதில் மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளை சுற்றுலாத்துறை பயன்படுத்த அனுமதி இல்லை," என்றார்.

படகு சவாரி அழைத்து செல்பவர்கள் சிறையில் அடைப்பு

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சுற்றுலாத்தலங்களில் மீன் பிடி படகுகள் மூலம் பயணிகளை படகு சவாரி அழைத்து செல்வது மட்டும் ஆபத்துக்குரியது அல்ல என்றும், சர்ஃபிங், ஸ்கூபா டிரைவிங், ஹைக்கிங் உள்ளிட்ட அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என்று சொல்லக்கூடிய நீர் விளையாட்டுகளும் ஆபத்தானவை," என்றார்.

மேலும் பேசுகையில், "இவற்றை முறைப்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு முதல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீர் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் விளையாட்டு நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் உயிர் பாதுகாப்பு உபகரணங்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் பாதுகாப்பு உபகரணங்களின் ஆயுட்காலம் முடிந்துவிட்டால் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் விளையாட்டு குழுவில் இருக்கும் ஆய்வாளர்கள், லைப் மேன் என்று சொல்லக்கூடிய நபர்கள் என அனைவருமே அனுபவம் வாய்ந்த, உரிய கல்வித் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். தகுதியான நபர்களை கொண்டு இயக்கப்படும் நீர் விளையாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஆறு நபர்கள் நீர் விளையாட்டு நிறுவனங்கள் நடத்தி வந்த நிலையில், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியதால் அவர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.

சட்டவிரோத படகு சவாரியால் பறிபோகும் உயிர்கள்: கடற்கரை கிராமங்களில் என்ன நடக்கிறது?

அரசால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சமூக வலைதளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருவதாகத் தெரிவித்த அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், மூக்கையூர் போன்ற பகுதிகளில் புதிதாக படகு சவாரி தொடங்க பலரும் அனுமதி கோரி விண்ணப்பிக்கின்றனர் என்றும், வனத்துறை சார்பில் முழுமையாக ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தகுதியான இடங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, சட்டவிரோதமாக படகு சவாரிக்கு அழைத்து செல்பவர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் ஆசைகளை பயன்படுத்தி பணத்துக்காக ஆபத்தான முறையில் கடலுக்குள் அழைத்துச் செல்லும் நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி அனுமதி பெற்று செயல்பட்டு வரும் நீர் விளையாட்டு நிறுவனங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: